: 30

மூன்றாவது சிலுவை: காமரூபத்தின் நியாயங்கள்

மூன்றாவது சிலுவை: காமரூபத்தின் நியாயங்கள்

                இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.                 
                     பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத்தூண்டும்
என்றொரு அட்டைக் குறிப்புடன் காலச்சுவடு பதிப்பகம் ஒரு நாவலை  வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு மூன்றாவது சிலுவை. இந்த நாவலை எழுதியுள்ளவர் பெயர் உமா வரதராஜன்இவர் ஓர் ஆண் என்ற குறிப்பும் அந்த நாவலைப் படிப்பவர்களுக்காகத் தரப்பட்டுள்ளது.
52 வயதைத் தாண்டிய வங்கித் தொழில் சார்ந்த ஓர் ஆண் அதிகாரியின் கூற்றாக- தன்னிலையுரைத்தல் என்பதாக -  அமைந்துள்ளது அந்நாவல்.  2000-க்குப் பின் தொடங்கி, 2008 இல் முடிந்து போன கால கட்டத்தில் விஜயராகவன் என்ற மையப்பாத்திரம்ஜூலி என்ற30  வயது யுவதியோடு கொண்ட உறவுகளின் நிலையைத் தனது நோக்கில்  நியாயப் படுத்தும் தன்மை கொண்டதாக நாவல் எழுதப்பட்டுள்ளது. தன் வயதில் பாதி வயதே உள்ள ஒரு பெண்ணுடன் ஆணுக்கு ஏற்பட்ட உறவின் பரிமாணங்கள் எதற்குள்ளும் செல்லாமல் காமம் சார்ந்த உறவை
மட்டுமே  விவாதிக்கும்  மூன்றாவது சிலுவை நாவல் ஒரு பக்க நியாயங்களை மட்டுமே பேசும் நாவல் என்று சொல்வதற்கு முழுத் தகுதியும் கொண்டது.
இந்த நாவலில் கதைசொல்லியாக இருக்கும் மையப் பாத்திரமான விஜய ராகவனுக்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள்மூன்று மகள்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களோடு சுமுக உறவோகுடும்ப உறவின் மீதான பிடிமானமோ இல்லாதவராக இருக்கிறார். அப்படி இருப்பதற்கான காரணங்கள் எதுவும் நாவலில் இடம் பெறவில்லை.  இந்த உறவுகளைத் தாண்டி மூன்றாவதாக ஒரு உறவு உண்டாகிறது . இந்த உறவு தானாக உண்டான உறவு என்பதை விட அவரே ஏற்படுத்திக் கொண்ட உறவு. தனது அதிகாரம் செல்லுபடியாகும் அலுவலகத்தில் பணிபுரிய வந்த ஜூலியின் உறவுபரிவில் தொடங்கிஉடல் கலப்பில் முன்னேறிய மூன்றாவது பிணைப்பு. ஆதரவற்ற நிலையில் எல்லாமுமாக இருந்த விஜயராகவனிடம் தனது உடலைப் பல தடவை விரும்பிக் கொடுக்கிறாள். அவளிடம் கிடைத்த உடல் சுகத்திற்காக விஜயராகவன் பயன்படுத்தியது வெறும் அலுவலக அதிகாரத்தை மட்டுமல்ல. தேவைப்படும் போது பணம் கொடுக்கிறார்வீட்டுக்குத் தேவையான பொருள்கள் வாங்கிக் கொடுக்கிறார்.
கொடுப்பதையெல்லாம் வாங்கிக் கொண்டு அவருக்குத் தன் உடலைக் கொடுத்த ஜூலியின் செயல்பாடுகளை அவளது அம்மாவும் அறிந்திருந்தாள். அம்மா மட்டுமல்லஅவளைச் சார்ந்த பலரும் அறிந்தே இருந்ததாக விஜயராகவன் நினைக்கிறார். தான் விரும்பும் வரை அவள் தன்னோடு இருப்பாள்: தனக்கெனத் தன்னுடலைத் தருவாள் என அவர் நினைத்திருக்கிறார். ஆனால் ஜுலிக்கு அந்த உறவு என்ன வகையான உறவுஎன்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் பாதுகாப்பின்மையை உணர்ந்ததில் ஆச்சரியமில்லை. அவரும் அவளுக்குப் பாதுகாப்பான உறவொன்றைத் தரமாட்டார் என்ற நிலை தோன்றிய போது திருமண வாய்ப்பொன்று வருகிறது. அதை ஏற்றுக் கொள்ள அவள் மனமும்அவளது உறவினர்களும் விரும்புகின்றனர்விஜயராகவனை விட்டு விலகுகிறாள். விலகும் ஜூலியைக் கட்டாயப்படுத்துகிறார். அவள் அவரை உதாசீனப்படுத்துகிறாள்.
இருவரிடையே ஏற்பட்ட உறவு குடும்ப வாழ்க்கையை உண்டாக்குவதற்கு முன்பு உண்டாகும் காதல்அன்பு போன்ற அரூபமான சொல்லாடல்களுக்குள் நுழையாமல் காமம் என்ற நேரடி நடவடிக்கையால் உண்டான உறவு என்பதை நாவலில் பல பகுதிகள் தருகின்றன. காமம் சார்ந்து ஆணுடலும் பெண்ணுடலும் இணையும் தருணங்களைத் திகட்டத் திகட்ட எழுதிக் காட்டியுள்ள இந்த நாவலின் பல பக்கங்கள் போர்னோ வகை எழுத்தின் மிக அருகில் இருக்கிறது. அதுவும் ஆண் நோக்கு நிலையிலிருந்தே எழுதப்பட்டுள்ளது. போர்னோவிலிருந்து விலகி நாவல் இலக்கியம் எழுப்பும் விவாதம் ஒன்றை உண்டாக்குவன விஜயராகவன் பாத்திரத்தின் வழியாக எழுப்பபடும் ஒருபக்கச் சார்பான கேள்விகள் மூலம் தான். தன்னிடமிருந்து விலகிச் செல்லும் ஜூலியின் செயல்களைத் துரோகம் எனத் தூற்றுகிற நிலைப்பாடு அந்தக் கேள்விகளின் மையமாக இருக்கிறது. அந்த மையம் ஜூலி என்ற ஒரு பெண்ணின் குணமாக இல்லாமல் பெண்களின் பொதுவான குணமாக முன் வைக்கப்படும் தொனியையும் நாவல் கொண்டுள்ளதுஅந்தத் தொனி தான் இந்த விசயம் யோசிக்க வேண்டிய ஒன்று தானோ என்று நினைக்கத் தூண்டுகிறது..
விஜயராகவனின் கோணத்திலிருந்து மட்டுமே எல்லாவற்றையும் பேசும் நாவல் தன்னை விட 22 வயது மூத்த- ஏற்கெனவே திருமணமான-   ஓர் ஆணுக்கு பெண்ணொருத்தி  ஒல்லியான தனது உடம்பிற்குள் இருந்து உடல் இன்பத்தை வழங்கித் தன்னை  ஒப்படைக்க நேர்ந்த சூழல் பற்றி எதுவும் பேசவில்லை.  பின்னர் அதிலிருந்து விடுபட விரும்பிய போது அவளது மனத்திற்குள் எழும்பிய வினாக்கள் அல்லது குற்ற உணர்வு குறித்தும் நாவலின் பக்கங்களில் எங்கும் இல்லை. ஆணைச் சார்ந்தே பெண்களை வாழ வைத்துள்ள சமூகத்தின் மீது பெண் வைக்க விரும்பும் விமரிசனம் என்பதாகக் கூட நாவலாசிரியர் எதையும் எழுதிக் காட்டவில்லை.
நாவலை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் இந்த நாவலில் இடம் பெற்றுள்ள சம்பவங்களும் பெயர்களும் கற்பனையே என்ற குறிப்பையும் தந்துள்ளது. ஆனால் இதனைப் போகிற போக்கில் தரப்படும் பொதுவான குறிப்பு எனச் சொல்ல முடியாது. தேர்ந்த வாசகன் இதனை நிச்சயம் ஓர் எச்சரிக்கைக் குறிப்பு என்றே நினைக்க வேண்டும். இந்த எச்சரிகைக் குறிப்பு பல நேரங்களில் மறந்து போகும் வாய்ப்பை நாவலின் எழுத்து முறை உண்டாக்குகிறது. இதில்  தேர்ந்த வாசகன்சாதாரண வாசகன் என்ற வேறுபாடுகள் இருக்காது என்றே நினைக்கிறேன்.
பின் அட்டையில் இடம் பெற்றுள்ள நாவலாசிரியரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு 125 பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள இந்த நாவலை வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகர் தன் வரலாற்று நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் அதனைப் பெரிய வாசிப்புப் பிழை என்று சொல்லி விட முடியாது. காரணம்  அந்த அளவுக்கு நாவலில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகளும் கூற்று முறையும் அமைந்துள்ளன.தன்மைக் கூற்றுக் கதை சொல்லல் முறையும்குறிப்பான தேதிகள் இட்ட நாட் குறிப்புகளும்நாவலில் இடம் பெறும் சம்பவங்கள் நடந்ததாகச் சொல்லப்படும் இடங்களும் என எல்லாமே நாவலைப் புனைவு சார்ந்த எழுத்து என்ற நிலையை மாற்றி,‘உண்மைஉண்மையைத் தவிர வேறல்ல’ என்று உரக்கக் கூறும் தொனியைக் கொண்டிருக்கின்றன.
பெண்களின் மனம்உடல் சார்ந்த பெண்ணியச் சொல்லாடல்களும் குரல்களும் பதிவான இந்த நேரத்தில் இப்படியொரு நாவலை எழுதவும் வெளியிடவும் நேர்ந்துள்ளதை எப்படிப் புரிந்து கொள்வது என்ற கேள்வியை வாசிக்கிறவர்களுக்கு விட்டு விடுவதே சரியாக இருக்கும். தனியொரு மனிதனின் அனுபவம் மற்றும் சிந்தனையிலிருந்தே படைப்பு உருவாகின்றது என்றாலும்அதனைப் பொதுவான நியாயங்களுக்குள் வைத்துப் பேசுவதற்கான வாய்ப்பை எழுத்தாளன் உருவாக்க வேண்டும் என எதிர்பார்ப்பதைத் தவறான எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது.
விஜயராகவனின் காமம் சார்ந்த நியாயங்கள் எல்லாவற்றையும் முன் மொழியும் இந்த நாவல் பொதுத்தள விவாதம் எதற்குள்ளும் செல்லவில்லை. அதற்கு மாறாகப் பிடிவாதமான ஆண் மைய நோக்கில் எல்லாவற்றையும் நியாயப் படுத்தப் பார்க்கிறது. அந்த நியாயங்களும் காமரூபத்தின் நியாயங்களாக இருப்பதால் நல்ல இலக்கியப் படைப்பொன்றின் பொதுக்குணத்தை இழந்து நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்நாவலுக்கு நேர்மறையான குறிப்பொன்றைத் தர வேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம். ஆண்நோக்கு எழுத்துக்குச் சரியான உதாரணமாக மூன்றாவது சிலுவை உள்ளது என்பதே அந்தக் குறிப்பு.  

மூன்றாவது சிலுவை - உமா வரதராஜன்பக்.128,விலை ரூ.90,வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669, கேபி சாலைநாகர்கோவில்629001; தொலைபேசி : 04652 278525


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை