: 118

தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?


பட்டப்படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் முடித்து விட்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்புகள் தொடங்கி இரண்டு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. எனக்கொரு கடிதம் வந்திருப்பதாக வகுப்புத் தோழி சொன்னவுடன் அதை எடுப்பதற்காகத் துறைக்கு வரும் கடிதங்கள் போடப்படும் பெட்டிக்கு அருகில் போய்க் கடிதங்களைப் புரட்டினேன்.  எனக்கு வந்த கடிதத்தைத் தேடிக் கொண்டிருந்த போது எனது பெயரைச் சொல்லி அவர் அழைத்தார். அவருடன் இன்னும் நான்கு பேர் இருந்தார்கள். அருகில் போன போது எனது பெயருக்கு வந்த தபால் அட்டை அவர் கையில் இருந்தது. அழைத்தவர் மற்றவர்களை விட நல்ல உயரம்.  தயங்கித் தயங்கி அவரருகில் சென்றேன். காரணம் ’ராகிங்’ செய்யப்போகிறார்கள் என்ற பயம்.


கேள்விகள் கேட்கத் தொடங்கி நான் பதில் சொல்வதும் தொடர்ந்த போது ராகிங் பயம் கொஞ்சம் விலகியது. காரணம் அவர் கேட்ட கேள்விகள் அப்படி.
”கலை இலக்கியப் பெருமன்றத்தில உறுப்பினரா?. கார்டு வந்திருக்கு” என்று சொல்லி அந்த அட்டையைத் தந்தார். ”இதுவரைக்கும் இல்ல; இனிமேல் தான் முடிவு பண்ணனும்”
அவர் ராகிங் செய்யப்போவதில்லை என்பது உறுதியான பின்பு சகஜமாக அவரது கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே போனேன்.
”தாமரையைத் தொடர்ந்து எத்தனை வருசமா படிக்கிறீங்க?” ”தொடர்ந்து படிக்கிறேன்னு சொல்ல முடியாது.. ரெண்டு வருசத்துக்கு முன்னால படிக்க ஆரம்பிச்சுட்டேன்.”
 “வேற என்ன பத்திரிகையெல்லாம் படிப்பீங்க?” ”கெடைக்கிறதெல்லாம் படிப்பேன்: கைக்காசு போட்டு தீபமும் கணையாழியும் வாங்கிப் படிச்சுட்டுப் பத்திரமா வச்சிருக்கேன்”.
”எதாவது எழுதியிருக்கீங்களா?” ”கணையாழியில கவிதைகள் எழுதியிருக்கேன்; அதுக்கு முன்னாடி ஆனந்த விகடன் பொன்விழாக் காலத்தில் மாணவர் பக்கத்திலயும் எழுதியிருக்கேன் ”
திருவிளையாடல் படத்துத் தருமிபோல கேள்விக் கணைகளைத் தொடுத்து எனது இலக்கிய அறிவை முழுமையாக அறிந்து கொள்ள அவர் முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அவருடன் இருந்த மற்ற மூவரும் போய்விட்டார்கள். நாங்கள் இருவர் மட்டும் நின்று பேசிக் கொண்டிருந்தோம்.
அவர் அப்போது என்னிடம் கேட்ட கேள்விகளுள் ஒன்று. “தமிழில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது?” ” கொஞ்சமும் யோசிக்காமல் நான் சொன்ன பதில் கி.ராஜநாராயணின் கோபல்ல கிராமம்”
என்னைக் கேள்விகளால் துளைத்து எடுத்தவர் ந.முருகேசபாண்டியன். அப்போது மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் எம்.ஃபில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகும் வாய்ப்புகள் இருந்த போதும் அதைப் புறமொதுக்கி விட்டு ஒரு கல்லூரியின் நூலகராக இருப்பதில் சுகம் காண்பவர். அதன்  முழுப்பயனையும் அனுபவிக்கும் ந.முருகேசபாண்டியனே நானறிய தமிழில் அதிகப்படியான நூல்களுக்கு மதிப்புரை எழுதியவர். ஏராளமான நாவல்களுக்குக் கதைச் சுருக்கமும் சொல்லியிருக்கிறார். தமிழகமெங்கும் ஏராளமான இலக்கிய நண்பர்கள் வாய்க்கப்பெற்றவர். அவருக்கு மூன்று தலைமுறையிலும் இலக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அது எனக்கு எப்போதும் ஆச்சரியமான ஒன்று. 
நானும் அவரும் இலக்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. அதற்குப் பதிலாக ஒருசாலை மாணாக்கர்கள் என்று சொல்லலாம். எம்.ஃபில் படிப்பில் அவருக்கு வழிகாட்டியாக இருந்த தி.சு.நடராசன் தான், எனது முனைவர் பட்ட வழிகாட்டி. முன்னும்பின்னுமாக ஒரே ஆசிரியரிடம் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். மார்க்சிய முறையியல் சார்ந்த இலக்கியப் பார்வையை தி.சு.நடராசனிடமிருந்துதான் கற்றுக் கொண்டோம். என்றாலும் அவரும்சரி நானும்சரி படிக்கிற காலத்தில் ஆசிரியர் சொல் கேளாத மாணவர்கள் தான்.
வழிகாட்டி தந்த ஆய்வுப் பொருளுக்குத் தேவையான தரவுகளைத் தேடுவதை இரண்டாவது அல்லது மூன்றாவது பட்சமாகக் கருதி ஒதுக்கி வைத்து விட்டு முன்னுரிமையாக வேறு சங்கதிகளை நினைத்தவர்கள். என்னைப் பொறுத்தவரை முதல் இடம் நாவல் வாசிப்புக்கு;இரண்டாமிடம். நாடகத்துக்கு. மூன்றாமிடம் தான் நான் செய்த ஆய்வுக்கு என்று ஒதுக்கியிருததாகவே இப்போது உணர்கிறேன். இந்தக் குற்றச்சாட்டை எனது நெறியாளர் தி.சு.நடராசன் அடிக்கடி சொல்வார். அது உண்மையில்லை என்று கோபமாக வாதிட்டு விட்டு வேகமாக வந்த நாட்கள் நினைவில் இருக்கின்றன.  அந்த நேரத்தில் தான் மு.ராமசுவாமி நிஜநாடக இயக்கத்தைத் தொடங்கித் தீவிரமாக இயங்கும் வேலைகளைச் செய்வதாக அறியப் பட்டார். எனக்கு முன்பே மு.ரா.வோடு சேர்ந்து நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த முருகேச பாண்டியன் என்னையும் நிஜநாடக இயக்கக்காரனாக ஆக்கி விட்டார் என்பதில் அவர் மீதும் நெறியாளருக்குக் கோபம் உண்டு.
இந்தத்தொடரில் நான் படித்த அல்லது பார்த்த நாடகங்களைப் பற்றி எழுதப்போவதில்லை.  படித்த நாவல்களில் எனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி எழுதலாம் என நினைத்துள்ளேன். காரணம் நாவல் இலக்கிய வகைதான் நமது காலத்தின் செவ்வியல் இலக்கிய வகை  என்பது என் அபிப்பிராயம். எந்த மொழியிலும் எல்லா வகையான இலக்கிய வகைமைகளிலும் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றி விடுவதில்லை. தமிழின் பழந்தமிழ்க் கவிதைகளில் ஒருவிதச் செவ்வியல் பண்புகள் வெளிப்பட்டன. அவற்றின் தோற்றக் காலத்தில் அவைகளையொத்த கவிதைகள் உலக மொழிகள் எவற்றிலும் இல்லை என்பது உலக இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்த பேராசிரியர்களின் மற்றும் திறனாய்வாளர்களின் கருத்து.
உலக இலக்கியங்களுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கித் தந்த  அரிஸ்டாடிலின் கவிதையியலை ஒத்த இலக்கியக் கோட்பாடாகத் தொல்காப்பியமும், அது முன் வைத்த கோட்பாடுகளை ஏற்றும் விலகியும் தனித் தன்மைகளை வெளிப்படுத்திய அகக்கவிதைகளும் புறக்கவிதைகளும் தமிழ் மொழி உலக இலக்கியத்திற்கான தமிழர்களின் கொடை.  அவைகளையடுத்து அத்தகைய கொடையைக் கணிசமாக வழங்கிய இலக்கியவகையாகத் தமிழின் நாவல்கள் தான் விளங்குகின்றன. இடையில் ஒரேயொரு விதிவிலக்கு சிலப்பதிகாரம் மட்டுமே.
ஒரு மொழியில் பல்வேறு  கால கட்டத்தின் செவ்வியல் இலக்கியங்களைத் திரும்பத் திரும்பப் பேசுவதன் மூலம் தான் இலக்கிய வாசிப்பின் நுட்பங்களையும், வாசகர்களின் மன அமைப்புகளையும் வளர்த்தெடுக்க முடியும். வாசகர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை மக்களாக ஆகும் போது சமூகத்தின் மன அமைப்பே வளர்ச்சி பெற்றதாக ஆகும் வாய்ப்புகள் உண்டு.  நமது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இருக்கும் இலக்கியப் பாடத்திட்டமுறையில் இத்தகைய வாய்ப்புகள் மிகவும் குறைவு. கொஞ்சமும் இல்லை என்பதைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கான காரணங்களைத் தேடிச் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏறத்தாழ முடிவுக்கு வந்து விட்டது. இந்த நிலையில் வேறு வெளிகளைத் தேடுவதைத் தவிர வேறு வழியில்லை.
நானெழுதிய சினிமாக் கட்டுரைகளுக்கு நான்கு பக்கம், ஐந்து பக்கம் என ஒதுக்கித் தந்த இலக்கிய மையப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள், தமிழ் நாவல்களைப் பற்றி எழுதவும் பக்கங்களை ஒதுக்கித் தருவார்கள் என நான் நினைத்ததுப் பொய்த்துப் போகவில்லை. குழு சார்ந்த அடையாளங்களை எப்போதும் உருவாக்கிக் கொள்ளாத தீராநதியில் இப்படியொரு கட்டுரைத் தொடர் வருவது மிகவும் பொருத்தமானதும்கூட.
இதற்கு முன்பும் நாவல்கள் பற்றி விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் என்றாலும், அவையெல்லாம், அவை வெளி வந்த நேரத்தில் முதல் வாசிப்பிலேயே எழுதப் பட்ட அறிமுக –விமரிசன-கட்டுரைகள். இந்தத்தொடர் அத்தகைய நோக்கம் கொண்டதல்ல. இத்தொடரில் நான் பேசும் நாவல்களை ஏற்கெனவே வாசித்து முடித்து அதைப் பற்றிய வாசகக் குறிப்பையோ, திறனாய்வுக் குறிப்பையோ தயாரித்து வைத்திருப்பவர்களுக்கு இந்தத்தொடரில்  எதையும் புதியதாகச் சொல்லவில்லை என்று தோன்றலாம். அதற்காக நான் வருத்தப் பட மாட்டேன். இது புதிய வாசகர்களை நோக்கிப் பேசும் ரசனை அல்லது விருப்பக் குறிப்புகள்  தான்.
35 ஆண்டுக்காலம் இலக்கியப் பத்திரிகைகளோடு தொடர்பு கொண்டவனாகவும் ஒரு பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை ஆசிரியராகவும் இந்தத் தேவை இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தமிழில் நவீன இலக்கியங்கள் பற்றி எழுதும்போது பலரும், எதை ஒதுக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விலாவரியாக எழுதுகிறார்கள். ஆனால் வாசிக்க வேண்டியவை இவை எனச் சொல்லும்போது வெறும் பட்டியல்களை மட்டுமே தருகிறார்கள். இவையிரண்டையுமே நான் எதிர்மறைப் போக்குகள் என்றே நினைக்கிறேன். இந்த நிலையில் தான் நான் வாசித்தவற்றில் பிடித்துப் போனவற்றை ஏன் எனக்குப் பிடித்தது எனச் சொல்லலாம் என நினைத்து இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். நமது கடந்த காலத்தைப் பாரதியின் பாடல் வரியொன்று ’காலப் பெருங்களம்’ எனச் சொல்லிச் சென்றுள்ளது. நாவல்களில் வரும் அந்த மனிதர்களின் பிம்பங்களோடு உறவாடிப் பார்க்கலாம். காலப் பெருங்களத்துப் பிம்பங்களைச் சந்திக்க விருப்பமுள்ளவர்கள் என்னோடு வருக.
நாம் வாசிக்கும் நாவல் மட்டும் அல்ல; இலக்கியத்தின் எந்த வகையாக இருந்தாலும் பிடித்துப் போவதற்கும், பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் இருக்கவே செய்கின்றன. முருகேச பாண்டியன் உங்களுக்குப் பிடித்த நாவல் எது? எனக் கேட்ட அந்தக் கேள்விக்கு நான் சொன்ன பதில் “ கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்”
கோபல்ல கிராமத்தை விடவும் சிறந்த நாவல்களாக நான் மதிக்கும் பல நாவல்களை அதற்கு முன்பே வாசித்திருந்தாலும் முருகேச பாண்டியனின் கேள்விக்கு, எனக்குப் பிடித்த நாவல் “கோபல்ல கிராமம்” என்று சொன்ன பதில் இப்போதும் நினைவில் இருக்கிறது. ஏன் பிடிக்கிறது என்று அடுத்தொரு கேள்வியை, அவர் கேட்டபோது  காரணங்களைச் சொல்லவில்லை. தெரிந்திருந்தும் சொல்லவில்லை என்பதுதான் உண்மை.  அந்தக் காரணத்தைச் சொல்லலாமா? என்ற தயக்கம் இருந்தது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு வாசகர் வட்டத்தின் வெளியீடுகள் என்ற இன்னொரு பரப்புக்குள் அன்று தாவிக் கொண்டேன்.
வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். அதன் நாவல் வெளியீடுகளில் எனக்குப் பிடித்தமானதாக இருப்பது கோபல்லகிராமம் தான் எனப் பதில் சொன்ன போது வாசகர் வட்டம் வெளியிட்ட மற்ற நாவல்கள் ஏன் பிடிக்கவில்லை என்று அவர் கேட்டிருந்தால் நான் கொஞ்சம் திணறிப்போயிருப்பேன். ஆ.மாதவன் –புனலும் மணலும்,  க.சுப்பிரமணியன்-வேரும் விழுதும், சா.கந்தசாமி-சாயாவனம், ஆர்.சண்முக சுந்தரம்-மாயத்தாகம், எம்.வி.வெங்கட்ராம்-வேள்வித்தீ, லா.ச.ராமாம்ருதம்-அபிதா, தி.ஜானகிராமன் –அம்மா வந்தாள், நீல.பத்மநாபன் – பள்ளிகொண்டபுரம் எனத் தமிழின் நாவல் வரலாற்றில் முக்கிய இடத்தைத் தனதாக்கிக் கொண்ட நாவல்களை வாசகர் வட்டம் தான் வெளியிட்டது என்பதை நினைக்கும்போது அதன் உரிமையாளரின் இலக்கியப்பார்வையும் நோக்கமும் வியப்பூட்டுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி தான் அதன் உரிமையாளர். தன் விருப்பம் சாராது எல்லா வகையான இலக்கியப் போக்குகளும் தமிழுக்குத் தேவை என நினைத்த ஒரு மனத்தின் குறியீடு வாசகர் வட்டம். அது வெளியிட்ட நாவல்கள் எல்லாம் அந்தந்த எழுத்தாளர்களின் முதல் நாவல்கள் என்பது கூடுதல் தகவல்.
முதல் நாவல் என்ற வரிசையில் தான் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்தையும் வாசகர் வட்டம் வெளியிட்டது   இவைகளில் ஆர்.சண்முக சுந்தரத்தின் மாயத்தாகம் தவிர எல்லா நாவல்களுமே நான் வாசித்த நாவல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை. அந்தக் காரணத்தாலேயே அவைகளெல்லாமே எனக்குப் பிடித்த நாவல்களும் கூட. வாசகராக நுழையும் ஒருவருக்கு மொழியின் வழியாக அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நிலவியல் பின்னணிக்குள் இழுத்துச் செல்பவை. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு படைப்பு மையத்தைக் கொண்டவை என்றாலும் அக்காலகட்டத்து நாவல்களில் ஒரு பொதுத்தன்மை இருந்ததாக இப்போது எனக்குத் தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றாலும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், வாழ நேர்ந்த வெளியின் இருப்போடு உறவு கொண்டவை என இந்தப் படைப்பாளிகள் நினைத்தார்களோ என எண்ண வைக்கிறது. வாசகர் வட்டம் வெளியிட்ட பெரும்பாலான நாவல்களில் வெளிசார்ந்த படைப்பு மையம் பொதுத்தன்மையாக இருக்கிறது என்றாலும் கோபல்ல கிராமம் தான் அவற்றுள் உச்சம்.
நன்றி: தீராநதி,ஏப்ரல், 2011


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை