: 36

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்

கி.ரா.வின் கோபல்ல கிராமம்: நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும்நான் அறிந்த மனிதர்களும்
 எனக்குத் தெரிந்த கதைகளும்

நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எதுஎன்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும்  இல்லாமல் கி.ராஜநாராயணனின்  கோபல்ல கிராமம் ”  என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல்பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கிஅவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும்நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும்நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன.
ஆனால் அவை எதுவும் இல்லாத கோபல்ல கிராமம் எனக்குப் பிடித்த நாவலாக அப்போது தோன்றியதற்கு முக்கியக்  காரணம் அதன் நிகழ்வுகளும்அந்நிகழ்வுகளில் இடம்பெற்ற பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர் களாகத் தோன்றினார்கள் என்பது மட்டும் தான்.


இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே அந்நாவலை நான் விரும்பி வாசித்திருந்தால் முதல் பதிப்பான வாசகர் வட்ட வெளியீட்டை மட்டும் வாசித்து விட்டுத் திரும்பவும் படித்திருக்க மாட்டேன். அதற்கு மாறாக கோபல்ல கிராமத்திற்கு நான்கு விதமான பதிப்புகள் *  வந்த போதும் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்.  புதுப்புது வடிவங்களில் அச்சான போது எழுப்பப்பட்ட விமரிசனங்களும்தமிழ்ப் புனைகதைப் பரப்பில் அந்நாவல் உருவாக்கிய புதிய சொல்லாடல்களும் என்னை மட்டுமல்லஅதனை விரும்பி வாசித்த பல வாசகர்களையும் திரும்பத் திரும்ப வாசிக்க வைத்தது என்பதை மறுக்க முடியாது.  

கோபல்ல கிராமத்தின் மீது தொடக்க நிலையில் வைக்கப்பட்ட விமரிசனங்கள், ‘நாவல் என்னும் வடிவத்திற்குள்’ பொருந்தாமல் இருப்பதாகப் பேசின. சொல்லப்பட்ட கதைகளும் சொன்ன முறையும் நவீன இந்தியக் காலகட்டத்திற்கு முந்தியனவாக இருக்கின்றன என்பதை மையப்படுத்தி அத்தகைய விமரிசனங்கள் எழுதப்பட்டன எனச் சொல்லலாம். அவரது காலத்தில் நாவல் எழுதிய மற்றவர்கள் எல்லாம் சமகால மனிதர்களின் -இந்திய சுதந்திரத்திற்குப் பிந்திய மனிதர்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள் இருக்கும் சாதாரணத் தன்மைகளையும் புதிர்களையும் எழுதிக் காட்டினார்கள். ஆனால் கி. ரா.வின் கோபல்ல கிராமம்,சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியத்துக்குச் சொந்தக்காரியான விக்டோரியா மகாராணியாரின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா காலனி நாடாக ஆக்கப்பட்ட 1858 ஆம் ஆண்டைத் தொட்டுக் கதையை முடித்திருந்தது.  இந்திய நிலப்பரப்பிற்குள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி பரவத் தொடங்கிய காலகட்டத்துக்கு முந்திய கால கட்டத்தில் தென் தமிழகத்தில் புதிதாகத் தோன்றிய கிராமம் ஒன்றின் தோற்ற வரலாற்றைச் சொல்வதாகவும்அக்கிராமத்தின் நிர்வாகத்தைக் கோட்டையார் வீட்டு மனிதர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதைச் சொல்வதாகவும் விரியும் கோபல்லகிராமம் நாவலின் எந்தவொரு நிகழ்வும் நாவலாசிரியரின் நேரடிப் பார்வையில் நிகழ்ந்தவையாக இருக்க முடியாதவை. எல்லாம் அவர் கேள்விப் பட்டவையாகவே இருக்க முடியும்அவருக்குச் சொல்லப்பட்டவைகளே நாவலின் நிகழ்வுகள் . 

கோபல்ல கிராமம் நாவலில் கி.ராஜநாராயணன் உருவாக்கிய கதைசொல்லி கூறும் நேர்கதையை ஒரு நிகழ்வும்அதன் தொடர்ச்சியான சில குறிப்புகளும்” எனச் சொல்லி விடலாம். தனது புருசனுடன் சண்டை போட்டுக் கோவித்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பி வந்த ஆசாரி வீட்டுப் பெண்ணொருத்தியின் நகைக்காக ஆசைப்பட்டுக் குளத்தில் அழுத்திக் கொலை செய்த திருடன் ஒருவனைக் கோட்டையார் வீட்டுக் கிருஷ்ணப்ப நாயக்கர் பிடித்துக் கட்டி விசாரணைக்கு ஏற்பாடு செய்ததே அந்த நிகழ்வு. அந்நிகழ்வு எப்படி நடந்தது என விவரிப்பதில் தொடங்கும் நாவல்அதனைத்தொடர்ந்து தரும் விவரங்கள் வழியாகக் கோட்டையார் வீட்டின் கூட்டுக்குடும்ப அமைப்புஅந்தக் குடும்ப உறுப்பினர்களால் கிராமத்தின் பொது வாழ்வுக்கு ஏற்படும் நன்மைகள் என விரிகிறது. அப்படி விவரிப்பதின் வழியாகக் கோபல்ல கிராமத்தின் முக்கியக் குடும்பமாக விளங்கிய கோட்டையார் வீட்டுக் குடும்பத்தைப் பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்த பிரிட்டானிய ஆட்சியாளர்கள் தொடர்பு கொண்டார்கள். அந்தக் கிராமத்தின் நிர்வாகத்தோடுஅந்தக் கிராமத்தின் வழியாகச் செல்லும் முக்கியச் சாலையின் காவல் பொறுப்பையும் தந்தார்கள்அதனைக் கோட்டையார் வீட்டாரும் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்ட கிராமமும் ஏற்றுக் கொண்டது எனச் சரித்திர நிகழ்ச்சிகளை விவரிப்பதுபோல விவரித்துச் செல்கின்றன நாவலின் அத்தியாயங்கள். குற்றவாளியை விசாரிப்பதற்காகக் கிராமம் கூடியதைப் பல அத்தியாயங்களின் வழியாகச் சொல்லும் கி.ரா.அதன் வழியாக அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த மனிதர்களின் முகங்களைவாசகர்களின் முன்னே வட்டமாகச் சுழலும் காமிராவின் வழியாகப் படம் பிடிப்பது போல நகர்த்திக் காட்டுகின்றார். ஒவ்வொருவருக்கும் வழங்கும் பட்டப்பெயரை விளக்குவதின் வாயிலாக அவர்களின்  குணங்களை வாசகர்களுக்குச் சொல்லி விடும் வாய்ப்பாக அதைக் கையாண்டுள்ளார். 

அந்தக் காலத்தில் ஒருநாள்… “ எனக் குறிப்பிட்ட காலம் எதையும் சொல்லாமல் ஒரு கிராமத்தைக் கவித்துமான மொழியில் அறிமுகப்படுத்தும் கோபல்ல கிராமத்தின் முதல் அத்தியாயம் தரும் சில குறிப்புகளைக் கொண்டு நாவலின் கதை நிகழ்வுகளின் காலத்தை ஊகித்து விடலாம். “ நாட்டில் அப்போது பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து கும்பினியானின் ஆட்சி சரியாக அமுலுக்கு வராத நேரம். இடைவெளியான அந்த நேரத்தில் எங்கே கண்டாலும் ஒரே கலவரம்பீதிதீவட்டிக் கொள்ளைவழிப்பறி,களவுகள் இப்படியாக ஒழுங்கு குலைந்து விட்டிருந்தது. எந்த அரசும் அமுலில் இல்லாததால் மக்களே கூடி தங்களையும் உடமைகளையும் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. போக்கிரிகளையும் திருடர்களையும் மக்களே பிடித்து மக்கள் நீதி மன்றங்களில் விசாரித்துத் தண்டனையும் வழங்கினார்கள் என  வழக்குகளும் கிராமமும் என்பதாகவே முன்னிறுத்துகிறார். 

நாவலின் கடைசி அத்தியாயங்கள் விக்டோரியா மகாராணியாரின் நேரடி அதிகாரத்தின் கீழ் இந்தியா வந்ததை விமரிசனப் பார்வையோடு சொல்லி வைக்கிறது. கோட்டையார் வீட்டுக் குடும்பம் இருக்கும் கோபல்ல கிராமம் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே இருக்கும் ஒரு கிராமம் என்ற குறிப்பைத் தரும் நாவல் வெள்ளைக்காரர்களை எதிர்த்த கட்டபொம்முஊமத்துரை போன்றவர்களின் மரணத்தையும் செய்தியாகச் சொல்லிவிட்டுஆங்கிலேயர்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் என இரட்டை மனநிலையோடு இந்திய மனிதர்கள் இருந்தார்கள் என முடிக்கிறது. அந்த மனநிலையை புயலுக்கான  அமைதி’ எனக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

நாவல் முடியும் காலமும்அதற்குள் சொல்கதையாகச் சொல்லப்படும் கதைகள் நிகழ்ந்ததாக அறியப்படும் காலமும் சேர்ந்து கோபல்ல கிராமம் நாவலைவரலாற்று நாவல் என்ற வகைப்பாட்டிற்குள் அடக்கிக் காட்டுவதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்த போதிலும். எந்தத் திறனாய்வும் கோபல்ல கிராமத்தை அவ்வாறு வகைப்படுத்தவில்லை அவ்வாறு வகைப்படுத்தவிடாமல் தடுப்பது அந்நாவலின் கதை சொல்லும் முறையே எனலாம். தமிழில் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல்கள் பலவற்றிலும் இடம்பெறும் பாத்திரங்கள் வரலாற்றில் இருந்தவர்களாக அறியப் படுவார்கள்ஆனால் அவர்கள் பங்கு பெற்றதாகக் காட்டப்படும் நிகழ்வுகள் கற்பனை நிகழ்வுகளாக அமைந்திருக்கும். இதற்கு மாறாகக் கோபல்ல கிராமத்தில் அதன் எதிர்நிலையைக் காண்கிறோம். நிகழ்வுகள் கற்பனை யானவை என்று சொல்லும்படி இல்லாமல் உண்மையான நிகழ்வுகள் போலத்தோற்றம் தரபாத்திரங்களின் பெயர்கள் வரலாற்றில் அறியப்படாத சாதாரண மனிதர்களாக இருக்கின்றனர். இந்த அம்சம் தான் கோபல்ல கிராமம் நாவலை வரலாற்று நாவல் என்று நினைக்க விடாமல் சமகால மனிதர்களைப் பற்றிய நாவல் என்னும் வகைப்பாட்டிற்குள் நிறுத்தியுள்ளன. 
விக்டோரியா மகாராணியாரின் நேரடி ஆளுகைக்கு முந்திய நிகழ்ச்சிகளைச் சொல்ல கண்ணுக்குப் புலப்படாத கதைசொல்லி ஒருவரை உருவாக்கிக் கொண்டு கி.ராஜநாராயணன் சொல்லும் மொத்தக் கதையும் சொல் கதைதான் என்றாலும் அவ்வாறு தோன்றாத வகையில் சொல்லி யிருக்கிறார். கோட்டையார் வீட்டுக் குடும்பம்கோபல்ல கிராமத்தின் நிர்வாகக்குடும்பமாக- அதிகாரம் நிரம்பிய குடும்பமாக ஆன கதையை நிகழ்காலக் கதையாகச் சொல்ல கண்ணுக்குப் புலப்படாத கதை சொல்லியை உருவாக்கியதுபோலஅதற்கும் முந்திய கதைகளைச் சொல்ல ஒரு பாத்திரத்தை-மங்கத்தாயாரம்மாள்-உருவாக்கிய உத்தி கி.ராஜநாரா யணனின் சிறப்பான உத்தி எனலாம். ஆந்திர தேசத்திலிருந்து தெலுங்கு பேசும் ஒரு கூட்டம் தென் தமிழ்நாட்டை நோக்கிக் குடிபெயர்ந்து வரக் காரணமான சென்னாதேவியின் கதையையும்அவளது மரணத்தை அடுத்து உருவாக்கப்பட்ட கோபல்ல கிராமத்தின்  உருவாக்கத்தையும் 137 வயதான மங்கத்தாயாரம்மாள் என்ற பாத்திரத்தை உருவாக்கிச் சொல்வதன் மூலம் மொத்த நாவலையும் நிகழ்காலக் கதையாக ஆக்கிக் காட்டியுள்ளார் கி.ரா. 

நாவலின் வடிவத்திற்குள் பொருந்தாமல் இருக்கிறது என்ற விமரிசனத்தைத் தொடக்க நிலையில்  எதிர் கொண்ட கோபல்ல கிராமம் நாவல் பின்னர் வட்டார நாவல் எனவும்இனவரைவியல் நாவல் எனவும்,பலதள வாசிப்புக்கான நாவல் எனவும்புதுப்புது விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்கித் தந்துள்ளது. இத்தகைய விமரிசனச் சொல்லாடல்கள் அனைத்தும் முழுமையான காரணங்களோடும்அதற்கான ஆதாரங்களை நாவலின் உள்ளிருந்து எடுத்துப் பொருத்திக் காட்டிச் சொல்லப்பட்ட விமரிசனக் குறிப்புகள் எனச் சொல்ல முடியாது. நாவலுக்குள் இருப்பதாக நம்பும் எதாவது ஒரு கூறினை மையப்படுத்திப் பேசும் ஆய்வாளர்களும் திறனாய்வாளர்களும் இத்தகைய அடையாளங்களை உருவாக்கி விடுகிறார்கள் என்றே தோன்றுகிறது
அப்படி உருவாக்குவதைத் தவறெனச் சொல்ல முடியாது. திறனாய் வாளர்களின் முக்கியமான வேலையே அடையாளங்களை உருவாக்கித் தருவதுதானே. ஆனால் அவ்வாறு உருவாக்கப்பட்ட அடையாளங்கள் பொருத்தமானவை தானாஎன்பதைத் திரும்பவும் பரிசீலனை செய்வதில் தவறொன்றும் இல்லை என்றே நினைக்கிறேன்.

கதையின் ஆதாரமான வாழ்க்கைச் சிக்கலும்அதனை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களின் உரையாடல் மொழியும்  வட்டாரத்தன்மையோடு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு வட்டாரச் சிறுகதைகள் என வகைப்படுத்தும் முறையை நாவல் இலக்கியத்திற்கும் பொருத்துவது அவ்வளவு பொருத்தமானது அல்ல என்ற தோன்றுகிறது. முழுக்க முழுக்க வட்டார மொழியிலேயே எழுதப்பட்டதாக இருந்த போதிலும் நாவல் இலக்கிய வடிவம்அதன் வெளி மற்றும் காலம் சார்ந்து வட்டாரத்தன்மையை மிகச் சுலபமாக மீறிவிடுவதையே காண்கிறோம். கூட்டம் கூட்டமாக இடம் பெயர்தல் என்னும் பெருநிகழ்வுகள் இந்தியத்துணைக்கண்டத்தின் பொதுப் போக்காக இருந்ததைப் பண்பாட்டு வரலாறுகள் பேசுகின்றன. சமய நம்பிக்கைகள் சார்ந்தும்வாழ்விடம் தேடியும் மக்களின் இடப் பெயர்ச்சி இருந்ததை இந்தியச் சமய வாழ்க்கையின் ஒரு கூறான குல தெய்வ வழிபாட்டின் தொன்மைகளில் நாம் தேட முடியும். அரசியல் நெருக்கடிகளாலும்அதிகாரப்பரவலாலும் கூட மக்கள் கூட்டத்தின் இடப் பெயர்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்திய தேசத்தின் அரசியல் வரலாற்றை வட்டாரம் சார்ந்த வரலாறாக எழுதும் போது அறிய முடியும்.  

கோபல்ல கிராமத்தில் மங்கத்தாயாரம்மாள் சொல்லும் சென்னாதேவியின் கதையை ஒத்த ஒரு கதையை எனது பாட்டி தும்மக்கம்மாள் எனக்குச் சொல்லியிருக்கிறாள். எனது அம்மாவின் குலதெய்வமாகக் கருதப்படும் அவளது பெயர் வீரசெவ்வம்மாள். மதுரைமாவட்டத்தில் சிந்துபட்டி என்னும் கிராமத்தில் இருக்கும் வீரசெவ்வம்மாள் கோயிலுக்கு அவளோடு பிறந்த ஏழு சகோதரர்களின் வாரிசுகளும் ஒரு சகோதரியின் வாரிசுகளும் கோயில் கட்டிப் பெட்டி தூக்கிதீ மிதித்து இப்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து குடி பெயர்ந்த தெலுங்கு பேசும் இனக்குழுக்களிடம் மட்டுமே இத்தகைய கதை இருக்கிறது என்றில்லை. தமிழ் நாட்டில் வாழும் கன்னடம்சௌராஷ்டிரம்குஜராத்தி எனப் பல்வேறு மொழிபேசும் இனக்குழுக்களிடமும் இத்தகைய கதைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டிற் குள்ளேயே இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களில் போய்க் கூட்டமாக வாழ நேரும் குழுவினர் பிடிமண்’ எடுத்துக் கொண்டு போய் வாழ நேரும் போது இத்தகையதொரு கதையை உருவாக்கிக் கொள்ளவே செய்கின்றனர். பெண் தெய்வங்களாக இருக்கும் குலசாமிகளுக்குக் கற்பைக் காக்கும் புனிதம்’ கற்பிக்கப்படுவதுபோலஆண் தெய்வங்களுக்குக் காவல் செய்ததால் கொலை செய்யப்படும் புனிதம்’ கற்பிக்கப்படுகிறது. இது இந்தியா முழுவதும் காணப்படும் ஒரு பொதுக்கூறு. 

மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு தேசங்கள் போல முரண்பட்டு நிற்கும் இந்திய மாநில இனக் குழுக்களின் இடப்பெயர்வில் குலதெய்வ உருவாக்கம் என்னும் பொதுக் கூறு இருப்பதோடுஇடம் பெயர்ந்து தங்க நேரிட்ட பகுதியை வாழிடமாக மாற்றித் தங்களுக்கான தொழில்களையும் கண்டுபிடித்து உற்பத்தியைப் பெருக்கிகுடிமைச் சமூகமாக மாறிபுதிய இடத்தையே சொந்த இடமாக மாற்றிக் கொள்ளும் வாழ்க்கை முறையும் கூட எல்லா இடப் பெயர்வுகளிலும் காணப்படும் பொதுத் தன்மையே. இப்பொதுத்தன்மையே இந்திய மனிதர்களை தொடர்ந்து சாதிய அடையாளத்தோடு தொடர்படுத்தும் வேலையையும் செய்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. 

தொழில் மயமாதலும்நகர்மயமாதலும் தந்த நெருக்கடிகளின் விளைவாகத் தோன்றிய புதுவகை மனிதர்களின்  வாழ்க்கையை வகைமாதிரி கதாபாத்திரங்கள் என்னும் ஒற்றைப் பரிமாண எல்லைக்குள் நிறுத்திக் காட்டிய நாவல்களை எழுதுவதே 1970-களின் பொதுப் போக்கு,  எதிர்முரண் கொண்ட வகைமாதிரிகளின் போராட்டத்தை முடிவை நோக்கி நகர்த்திச் செல்ல நேர்கோட்டுக் கதைசொல்லலே அப்போக்கிற்கு ஏற்ற கதை சொல்லும் உத்தியாக நம்பப்பட்டுச் சமூகநாவல்களும் முற்போக்கு நாவல்களும் அக்காலகட்டத்தில் எழுதப்பட்டன.

கோபல்ல கிராமத்தை எழுதியதன் மூலம் அப்போக்கிலிருந்து விலகிமனிதர்களை முன்னிறுத்துவதற்கு அங்கதத் தன்மை நிரம்பிய மொழியைப் பயன்படுத்துதல்கால வரிசையற்ற கதைநிகழ்வுகளின் தொகுப்பாக அமையும் கதை கூற்று முறையை உத்தியாக்குதல்நாவலின் மைய விவாதம் இதுதான் என்பதாக அடையாளப்படுத்தாத பாங்கு எனத் தனது தனித்த அடையாளத்தை முன் வைத்தார் கி.ராஜநாராயணன். இடப்பெயர்வு என்னும் இந்தியப் பொதுத்தன்மையை- இந்தியத்தனம் நிரம்பிய உள்ளடக்கத்தை எழுதிய முதல் தமிழ் நாவலாசிரியர் கி.ரா,. என இப்போது சொல்லத் தோன்றுகிறது. இந்தப் பின்னணியில் அவரது கோபல்ல கிராமம் நாவலை வட்டார நாவல்’ எனச் சொல்லாமல் இந்தியத்தனம் நிரம்பிய தமிழ் நாவல்என்று சொல்லத் தோன்றுகிறது .
================================================================================================
** வாசகர்  வட்ட வெளியீடாக முதலில் வெளிவந்த கோபல்ல கிராமம் பின்னர்கி.ரா.வின் எல்லா எழுத்துக் களையும் வெளியிட்ட மீராவின் அன்னம் பதிப்பகத்தின் வழியாக இரண்டு விதமான பதிப்புகளை -நூலக வடிவத்தில் ஒரு பதிப்பையும்பையடக்க வடிவில் ஒரு  பதிப்பையும்- கண்டது. இவ்விரு வடிவங்களும் தான்  1980 களிலும் 90 களிலும் புத்தகச் சந்தையில் கிடைத்தன. இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள கிளாசிக் வரிசைப் பதிப்பு (2006) சந்தையில் கிடைக்கிறது. 
=========================================================== நன்றி : தீராந்தி/ஜூன்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை