: 37

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்

சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதை : முன்னிலைச் சொல்முறையின் சாத்தியங்களும் பலவீனங்களும்


இலக்கியப்பிரதிகள் செய்யுளைக் கைவிட்டு உரைநடைக்கு மாறியதின் வழியாகவே இக்கால இலக்கியங்கள் தோன்றின. அவற்றுள் நிகழ்காலத்தின் வாசிப்புத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவது புனைகதை வடிவமே. புனைகதையின் அழகியல் கூறுகளுள் முதன்மையானது சொல்முறை உத்தி. சொல்முறையின் வழியாகவே புனைகதையாசிரியன் புனைவுவெளியையும்,புனைவுக்காலத்தையும் புனையப்பட்ட மனிதர்களையும் உருவாக்குகிறான்.
அவற்றின் முக்கூட்டு ஓர்மையில் கதை இலக்கியம் உருவாகிறது என்றாலும் சொல்முறையே படைப்பாளியின் நோக்கத்தையும் பார்வைக் கோணத்தையும் உருவாக்கும்.  
கதை சொல்லியின் இடம் கதைக்குள் என்னவாக இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு சொல்முறைகள் தன்மைமுன்னிலைபடர்க்கை என இடம் சார்ந்து மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன.அம்மூன்றில் படர்க்கைக் கூற்றே புனைகதை இலக்கியத்தின் ஆகக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட சொல்முறை என நம்பப்படுகிறது.  ஆசிரியர்  சொல்முறை ( Author’s Narrative) என அழைக்கப்படும் அதற்குக் கடவுளின் நிலைநின்று கதை சொல்லல் (Omniscient Narrative ) என்ற சிறப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. தற்சார்புநிலை தவிர்க்கப்பட்டு புறநிலையில் கதை சொல்லும் வாய்ப்புகள் அச்சொல்முறையில் தான் அதிகம் என்பது இந்நம்பிக்கையின் பின்னுள்ள கருத்து. ஆனால் எல்லாவகைச் சொல்முறைகளுமே படைப்பாளியின் மனவோட்டமும் தொழில் நுட்பமும் இணைந்த ஒரு வினை என்பதால் ஆசிரியரின் சார்புநிலை படைப்புக்குள் வெளிப்படாது எனச் சொல்வது ஒரு பிரமை மட்டுமே.
பிரதாப  முதலியார் சரித்திரம் தொடங்கி  நீளும் தமிழ் நாவலின் வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சொல்முறை கூடுதல் கவனம் பெற்றதாக இருப்பதை புனைகதை வரலாற்றை அறிந்தவர்கள் உணர்ந்திருக்கக் கூடும்.  ஒரே எழுத்தாளரும் கூட மூவகைக் கதைசொல்லல் முறையிலும் தனது பிரதிகளைத் தந்திருப்பதைக் காணலாம். தனது கதைகள்கட்டுரைகள்கவிதைகள்நாடகங்கள்,நேர்காணல்கள்உரைகள் எனப் பல்வேறு முறையிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட எழுத்தாளர் சுந்தரராமசாமி. அவரது கருத்துலகமும் படைப்புலகமும் வையெல்லாவற்றின் வழியாகவும் உருவாக்கப் பட்டவை என்றாலும் அவரது முதன்மையான பங்களிப்பாகப் பலரும் நினைப்பது நாவல் வடிவத்தைத் தான். இத்தனைக்கும் அவர் எழுதிய நாவல்கள் மூன்றே மூன்று தான்.  மூன்று நாவல்களும் ஒரேவகைச் சொல்முறையில் அமையவில்லை. கடைசியாக எழுதப்பட்ட குழந்தைகள் பெண்கள் ஆண்களில் தன்மைக்கூற்றுக் கதைசொல்லல் தூக்கலாக இருக்க, இரண்டாவது நாவலான ஜெ.ஜெ.சில குறிப்புகளில்படர்க்கைக் கூற்றுத் தன்மையே மேலோங்கி நிற்பதைக் காணலாம். ஆனால் முதல் நாவலான புளியமரத்தின் கதை முற்றிலுமாக முன்னிலைச் சொல்முறையில் அமைந்த நாவல்.
தன்மைக்கூற்று கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வரும் கதையைச் சொல்வதற்கு ஏற்றது என்றால்,படர்க்கைக்கூற்று காலப் பிரக்ஞைக்கு முக்கியத்துவம் தராத வாழ்க்கை விசாரணைக்கும் மனப் போராட்டங்களின் பதிவுகளுக்கும் ஏற்றது எனச் சொல்லலாம். ஆனால் நிகழ்காலத்தின் நகர்வைச் சொல்ல ஏற்ற முறையாக முன்னிலைக் கூற்றே கையாளப்படுகிறது. தமிழில் அதற்குச் சரியான எடுத்துக்காட்டாகச் சுந்தரராமசாமியின் புளிய மரத்தின் கதையையே நான் சொல்வேன். ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஒரு முறை சுந்தரராமசாமி, ”என்னைப் புரிந்து கொள்ளவும் நான் இயங்கும் வெளியை விளங்கிக் கொள்ளவும் வேண்டிஎழுதிப் பார்த்தனவே எனது  கதைகளும்கவிதைகளும்கட்டுரைகளும் எனச் சொல்லியுள்ளார். அப்படிச் சொன்னதால் வாசகர்கள் பற்றிய அக்கறை இல்லாமல் தன்னை மையப்படுத்திப் பேசிய பேச்சாக இதனைக் கருதிக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் இந்தக் கூற்று சுந்தரராமசாமி என்னும் படைப்பாளிக்கு மட்டுமே பொருந்தக் கூடிய கூற்று அல்ல. தன் காலத்தைப் புரிந்து கொண்டு தனது படைப்புகளைத் தரும் எல்லாப் படைப்பாளிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்று
1959- இல் புளியமரம் என்ற பெயரில் தொடங்கிய தொடர்கதை 1966 - இல் ஒரு புளிய மரத்தின் கதை நாவலாக அச்சேறியுள்ளது. அதனை ஒரு சமுதாய நாவல் என்றும்வட்டார நாவல் என்றும்குறியீட்டு நாவல் என்றும் வகைப் படுத்தியதைப் பலரும் படித்திருக்கக் கூடும். இப்படி வகைப் படுத்துவதற்கான ஆதாரக் கூறுகள் நாவலுக்குள் இருக்கின்றன. இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் இயங்குவெளியாகக் கொண்டிருப்பது தனது பரப்பை விரித்துப் பெருகும் ஒரு நகரம். சிறு நகரத்தின் கூறுகளை இழந்து பெருநகரமாக - நகராட்சியாக மாறிவிட்ட ஒரு வெளியின்  பரப்பிற்குள் இயங்கும் வியாபாரிகளின் பிரதிநிதிகளும்அந்நகரத்தை நிர்வகிக்க முயலும் நிர்வாக அமைப்பின் தன்மைகளும்அதில் பொறுப்புக்கு வருபவர்களின் நடவடிக்கைகளும்அதனால் ஏற்படும் முரண்பாடுகளும் என அந்த வெளியை விரித்துள்ளார் நாவலாசிரியர். நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தைத் தனதாக்கிக் கொண்ட பின்னணி அதற்குரியது.
புளியமரம் அழிக்கப்பட்டது. புளியமரம் வாழ்ந்து அழிந்த கதைதான்”, என்று புளிய மரத்தின் கதையைச் சொல்லத் தொடங்குமுன் எழுதப்பட்டுள்ள ஒரு பக்க அளவிலான எழுத்துக் கூட்டம் ஏராளமான விளிப்புகளை வரிகளாக்கியுள்ளன என்பதை நாவலை வாசித்தவர்கள் அறிந்திருக்கக்கூடும். அந்த விளித்தல் மொழியில் தொடங்கி ஆசானிடம் கதை கேட்கும் சிறுவனாக நின்று கேட்டுச் சொல்லும் சு.ரா., கடைசிவரை முன்னிலைச் சொல்முறையை மாற்றாமலேயே கதையைச் சொல்கிறார். நாவலில் புளிய மரத்தின் கதையைச் சொல்லும் சுந்தரராமசாமியின் அனுபவங்கள் இரண்டு வகைப்பட்டவை. அவரது குழந்தமைப்பருவத்திற்கு முந்திய நிகழ்வுகள் எல்லாம் கேள்விப் பட்டவை.  இரண்டாவது வகை அனுபவங்கள் அவரே பார்த்தவை. 15 அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலில் மூன்று தளங்கள் உண்டு. முதல் மூன்று அத்தியாயங்களில்  தாமோதர ஆசான் சொல்லும் கதைகள் ஒரு தளம். அடுத்த மூன்று அத்தியாயங்களில் - புளியமர ஏலம் நின்று போகும் வரை -சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாம் இன்னொரு தளத்தவை. அடுத்து நடப்பவையெல்லாம் மூன்றாவது தளம்.
முதல் தளம் -தாமோதர ஆசான் சொல்பவைகள். அது அமானுஷ்யமும்ராஜரீக நிர்வாகமும்,போட்டிகளற்றதுமான உலகம். காளியப்பனின் மகள் செல்லத்தாயியின் கதை தரும் அமானுஷ்யமும்பூரம் திருநாள் ராஜாவின் பவனியில் வெளிப்படும் ராஜரீக பக்தியும்அதன் காரணமாகப் புளிக்குளம் மூடப்பட்டதும் எனத் தொடங்கும் கதைஇரண்டாவது தளத்திற்குள் நுழைய வழி வகுப்பது காற்றாடி மரத்தோப்புநவீனப் பூங்காவாக உருமாறும் நடவடிக்கைகள். இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு நீண்ட கால இடைவெளி. இவ்விடைவெளியின் போது தாமோதர ஆசானின் மரணமும்,கதை சொல்லியின் அனுபவ ஞானப்புரிதலும் நிகழ்ந்து விடுகிறது. பால் பவுடர் வசீகரத்தில் வரிசையாக ராணித் தோட்டத்திற்குள் நுழையும் சிறுவர்களும்,புளியம்பழ ஏலத்தை நிறுத்தி விடக் காரணமான தோட்டிகளின் ஒன்றிணைவும் கதைசொல்லியால் புரிந்து கொள்ளப்படுகிறது.
புளியம்பழ ஏல  நிறுத்தத்திற்குப் பின்கதை நிகழ்வுகள் நகரநிர்வாகம் என்கிற நிகழ்கால அரசியல் தளத்திற்குள் நுழைகின்றன. அதுவரை முக்கியப் புள்ளிகளாக இருந்த வடசேரி பிரமானந்த மூப்பனார்,அப்துல் அலி சாயபுஐயம்பெருமாள் கோனார்தாழக்குடி மூத்தபிள்ளை போன்ற நாசுக்கான மனிதர்களின் - தனிமனித அறம் சார்ந்து இயங்கும் பழைய மதிப்பீடுகள் நிரம்பிய மனிதர்களின் காலம் முடிந்து விடுகிறது. புளியமர ஏலம் நின்று போனதற்குக் காரணம் தோட்டிகளும் தோட்டிச்சிகளுமே என்று பிராது கொடுப்பதுடன் முடித்துக் கொள்ளும் மூப்பனார்சாயபுகோனார்பிள்ளைகளின் காலம் முடிந்து புதிய நடைமுறைகளின் மூலம் முன்னுக்கு வரத் துடிக்கும் அப்துல் காதர்வெற்றிலை பாக்குக்கடைச் சங்கத்தின் காரியதரிசி தாமு,தனது பத்திரிகையாள மூளையின் அதீத வேலைப்பாடுகளை நம்பும் இசக்கி ஆகியோரது காலமும் இயக்கமும் வரும்பொழுது நாவல் மூன்றாவது தளத்திற்குள் நுழைகிறது.
இம்மூன்றாவது தளத்தை இயக்கும் பின்னணியாகக் கதை சொல்லி கருதுவது ஜனநாயக நடைமுறைகளை. ஜனநாயக நடைமுறையை முன்வைத்துக் கொண்டு நுழையும் முதலாளியப் பொருளாதார முறையால் தனிமனிதனின் நேர்மைநியாயம்வியாபார நியதிகள்நுகர்வோரின் நலன்கள் முன்னிறுத்தப்படுதல் போன்றவை பழைய மதிப்பீடுகளாகிவிடதந்திரம்மோசடிதிட்டமிட்டு ஏமாற்றுதல்தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி நன்றி மறத்தல் என நகர்ந்து போட்டிக்குள் நுழைகிறார்கள் மனிதர்கள். போட்டி,போட்டி மேலும் போட்டி என்பதற்குள் தள்ளி மனிதர்களுக்கு தற்காலிக அடையாளங்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. தனிமனிதனை இவ்வாறு அலைக்கழிக்கும் பொருளாதார உறவுகளின் பெருங்கதையாடலாக வெளிப்படும் தேர்தலோ பணம்சாதிமதம்போன்றவற்றின் விளையாட்டுக் களனாக இருப்பதோடு தற்காலிகமாகத் தோன்றும் இரக்க உணர்வுபச்சாதாபம்அறியாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே இருக்கிறது என்னும் விமரிசனத்தைக் கதை சொல்லியாக வரும் சு.ரா முன்வைக்கிறார். இந்தப் பின்னணியில் தான் சுந்தர ராமசாமி விரிக்கும் அப்துல் காதர்தாமு ஆகியோரது வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஓர் ஓட்டலில் வேலை பார்த்த காதர்வள்ளிநாயகம் பிள்ளை கடைச்சிப்பந்தி-கோபால அய்யர் கடை மானேஜர்-காதர் கடை முதலாளி -ஜனாப் அப்துல் அஸிஸின் மருமகன் என வளர்ந்ததின் பின்னணியில் தனிமனிதனது உழைப்பிற்கும் மேலாகத் தந்திரங்களும்ஏமாற்றுகளும்சுயமதிப்பீடுகளையும் விருப்பங்களையும் இழக்கத் தயாராகுதலும் இருக்கின்றன. அதே போல் தாமுவின் வளர்ச்சியில் இருந்தவைகளும் எந்தவித அரசியல் கொள்கை சார்ந்த நடைமுறைகள் அல்ல. பிரிட்டிஷ் அதிகாரத்திற்குப் பணியாத - தலைப்பாகையைக் கழற்ற மறுத்து அடிவாங்கிய ஆகஸ்டுத் தியாகி தாமுவுக்குப் பின்னர் சோசலிஸ்டு முகம்சாதித் தலைவனின் முகம்முரட்டு அரசியல்வாதிமுகம்புளிய மரத்தில் குடிகொண்ட அம்மனின் இரட்சகன் முகம் எனப் பல முகங்கள்  தோன்றி மறைகின்றன. இந்த அடையாளங்களையெல்லாம் அவனுக்குத் தேடித்தந்தவை அவனது நேரத்திற்கேற்றபடியான பேச்சு,இடத்திற்கேற்றபடி எடுத்த முடிவுஅடியாட்களின் உதவி ஆகியன  தான் என்கிறார் கதை சொல்லி.
போட்டி வியாபாரம்போட்டி அரசியல் ஆகியவற்றின் பின்னணியில் பத்திரிகைகளின் பணி அவற்றோடு ஒத்துப் போவதாகவே இருக்கிறது என்பதை இசக்கியின் மூலம் புரிய வைக்கிறார் நாவலாசிரியர். ஆபிஸ் பெருக்கியவள் முதலாளியாகிஆணையிடுவதை எந்தவிதமறுப்புமின்றிக் கேட்டு அடி பணியும் இசக்கி - தனது மூளையை எழுத்துக் களாக மாற்றிதிருவிதாங்கூர் நேசனின் தலையங்கங்களாகவும் கட்டுரைகளாகவும் எழுதும் பொழுது அவனது சுயம் அழிவது பற்றி அவனுக்குக் கவலை கிடையாது. தனது சுயத்தை அங்கே அழித்துவிட்டுதேர்தல் களத்தில் தூக்கி நிறுத்த முயல்கிறான். அவனால்,போட்டிக்களத்தின் முக்கியக் கேந்திரமான தேர்தலில் புளியமரம் மையப் பிரச்சினை யாக்கப்படுகிறது.
முனிசிபாலிட்டி புளிய மரத்தை வெட்டிவிடத் தீர்மானிக்கும் பொழுதுஅதனை எதிர்ப்பவர்கள் இந்துமதச் சடங்கின் குறியீடாக அதனை முன்னிறுத்துகின்றனர். வெட்டிவிடத் தீர்மானிப்பவர்கள்  கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எனக்காட்டிசமயப்பூசலுக்கு விதை தூவப்படுகின்றது.  தேர்தல் காட்சிகள் பலப்பலவாய் மாறிவிளையாட்டாய்த் தேர்தலில் நின்ற கடலைத் தாத்தா முக்கிய வேட்பாளராக மாறுகிறார். புளியமரம் அப்படியே பட்டுப்போகும்படி செய்கிறான் தாமுவின் கையாளான கூலி அய்யப்பன். ஆனால் இப்பொழுது அவன் காதரின் கையாளாகச் செயல்படும் சூழல். விளைவு காதரும் தாமுவும் கைது செய்யப் படுகின்றனர். அரசியல் ஞானமும்நிர்வாக அறிவும்ஜனநாயக உணர்வும் என ஏதுமறியா கடலைத்தாத்தா தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
புளியமரத்தின் கதையைச் சொல்வதின் ஊடாக ஒரு நகரத்தின் பரிமாணங்களில் ஏற்பட்ட வளர்ச்சியைச் சொல்ல சு.ரா. தேர்ந்தெடுத்த முன்னிலைச்சொல்முறை  ’சித்திரித்துக் காட்டுதல்’ என்னும் அம்சத்தைக் கவனமாகப் பயன் படுத்தியுள்ளது. வாசகனிடம் நம்பிக்கையை ஊட்டுவதற்கு அதிகமும் புனைகதைகளில் இடம்பெறும் எழுத்துமுறை சித்திரிப்பைக் கையாள்வதாகும். எல்லாவகைக் கதை சொல்லலிலுமே சித்திரிப்பு என்பது வாசிப்பவனை நம்பும்படி செய்யும் ஓர் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. சித்திரம் தீட்டுதலை முன்னிரண்டையும் விடப் படர்க்கைச் சொல்முறை அதிகம் பயன்படுத்தி வாசகனை நம்பச் செய்யும். தான் சொல்லும் கதையை உண்மையென வாசகன் நம்ப வேண்டாம்எனது நம்பிக்கைகளும் அபிப்பிராயங்களும் என்று புரிந்து கொண்டால் அதுவே போதும் என நினைத்த சுந்தர ராமசாமி தன்னுணர்வுடனேயே தான் படர்க்கைக் கூற்றைத் தவிர்த்து விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாமோதர ஆசானிடம் கதை கேட்டுச் சொல்லும் பொழுது வெளிப்படும் கதை சொல்லியின் தன்னிலைபின்னர் அவனே கண்டவற்றைச் சொல்லும் பொழுது கொஞ்சமும் வெளிப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய எழுத்துமுறையையே பிரக்ஞை பூர்வமான எழுத்து முறை எனச் சொல்வர். இந்தப் பிரக்ஞையும் தெளிவும் 28 வயதில் தனது முதல் நாவலை எழுதும்போதே சுந்தரராமசாமிக்கு இருந்துள்ளது.
தொடர்ந்து நாவலில் வெளிப்படும் கதைசொல்லியின் அபிப்பிராயங்கள் பல நேரங்களில் தேர்ந்த சமூகவிமரிசகனின் கோணத்திலிருந்தும்நடப்பனவற்றின் மேல் கடும் அதிருப்தியிலிருப்பவனின் தொனியுடனும் வெளிப்பட்டுள்ளது. தீர்மானமான முடிவு எதுவும் இல்லாதவனாகவும் கதை சொல்லி வெளிப்பட்ட இடங்களும் கூட உண்டு. காற்றாடி மரத்தோப்பு நகரப்பூங்காவாக மாறுவதில் கதை சொல்லிக்கு தீர்மானமான விருப்பு வெறுப்புகள் இல்லை.  ஆனால் காதரும் தாமுவும் வியாபார  வெளியில் செயல்பட்ட விதத்தை தந்திரங்களின் வெற்றியாக மட்டுமே சொல்லிச் செல்லும் கதை சொல்லி அரசியல் வெளிக்குள் புகுந்து கலக்க நினைக்கும் போது இயலாமையின் மொழிக்குள் நுழைந்து விடுவதைக் கணிக்க முடிகிறது. விருப்பு வெறுப்பற்ற நிலை காரணமாகவே பூங்கா உருப்பெற்ற நிலை ஒவ்வொன்றைப் பற்றியும் அபிப்பிராயங்கலந்த வாக்கியங்களை எழுதிவிட வேண்டும் எனத் தீர்மானித்து அப்பகுதியைக் கட்டுரையொன்றின் தன்மையில் எழுதியுள்ளார்.  அதே போல் புளியமரம் அழிந்த சோகத்தைச் சொல்லும் போது ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை இழந்துவிட்ட ஒருவனின் மொழி கதை சொல்லியைத் தொற்றிக் கொண்டுள்ளது என்பதையும் காணமுடிகிறது. இவையெல்லாம் முன்னிலைக் கதை சொல்லலில் ஏற்படக்கூடிய சில பலவீனங்கள் மட்டுமே. அத்தகைய பலவீனங்கள் அதற்கு உண்டு எனத் தெரிந்தே -பிரக்ஞைபூர்வமாக அறிந்தே புளிய மரத்தின் கதையைச் சொல்ல சுந்தரராமசாமி அதனைத் தேர்வு செய்துள்ளார். அதில் ஆகக் கூடிய சாத்தியங்களையும் உண்டாக்கியுள்ளார்.
தீராநதி, ஜூன்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை