: 152

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை

இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை


எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’  அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.
நேரடியாக நூலாக அச்சிடப்பட்டு வாசகத்தளத்திற்கு வந்த போதிலும் பலதரப்பட்ட விவாதங்களை எழுப்பியதன் மூலம்  பரந்த கவனத்தை பெற்ற  அந்த நாவல், நவீனத் தமிழ் இலக்கிய  வரலாற்றில்¢ ஒரு திருப்பம் என்பது  மறந்திருக்க வாய்ப்பில்லை.

கோவேறு கழுதைகள், நாவல் வரலாற்றில் ஒரு திருப்பமாக அமைந்ததற்குப் பல  காரணங்கள் உண்டு. சில காரணங்கள் நாவலுக்கு வெளியில் இருந்தன; சில காரணங்கள் நாவலுக்கு உள்ளேயே இருக்கின்றன. நாவலுக்கு உள்ளே இருந்த காரணங்களில் முக்கியமானது அந்நாவலின் மையக் கதாபாத்திரம்  படைக்கப்பட்ட விதம் தான். ஒரு கதாபாத்திரத்தை முழுமையடையச் செய்ய நாவலாசிரியன் அதன் உடல் அடையாளம், சமூகப் பின்புலம், உளவியல் சிக்கல்கள் ஆகிய முப்பரிமாணங்களில் வளர்நிலைகளை உண்டாக்கி வாசகனுக்குத் தரவேண்டும். அப்படியான வளர்நிலைகளை வாசிக்கும் வாசகனிடம் தோன்றும் நம்பகத்தன்மைகள் தான், அந்தப் பாத்திரத்தை வாழ்க்கையிலிருந்து உருவாக்கப்பட்ட பாத்திரம் என்றோ , வாழ்க்கையை விசாரிக்கின்ற பாத்திரம் என்றோ கருதி ஏற்கச் செய்கின்றன. கோவேறு கழுதைகளின் மையக் கதாபாத்திரம் ஆரோக்கியத்திற்கு அத்தகையதொரு ஏற்பு வாசகர்களிடம் ஏற்பட்டது.அதனால்  அந்நாவல் பேசப்பட்ட நாவலாக மாறியது.

கோவேறு கழுதைகளில் ஆரோக்கியத்தின் வாழ்க்கையை அவள் வாழ்ந்த ஒரு கிராமம் சார்ந்து முன்னிறுத்திய இமையம், மூன்றாவது நாவலான செடலில் ஆரோக்கியத்தின் வார்ப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இன்னொரு பெண்ணின்  வாழ்க்கையை , வட தமிழ் நாட்டுக் கிராமங்களின் - குறிப்பாகப் பழைய தென்னார்க்காடு மாவட்டக் கிராமங்களின்-மதிப்பீடுகளுக்குள் நிறுத்திக் காட்டுகிறார். கிராமத்தின் துணிகளை வெளுத்துத் தரும் வண்ணார் என்னும் சேவைச்சாதிப் பெண்ணான ஆரோக்கியத்தின் அடையாளம்  ஒரு தாயின் அடையாளம் என்றால், செடலின் அடையாளம் தாயாக ஆகவே முடியாத - கன்னித் தன்மையையே வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு விட்ட பெண்ணின் அடையாளம்  எனலாம். 

நாவலின் மையக்கதாபாத்திரத்தின் பெயர் தான் செடல். கோயிலுக்குப்  பொட்டுக் கட்டப்படுதல் என்னும் ஐதீகத்தில் தொடங்கும் நாவல், ‘தேவதாசிப் பெண்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன்  கொடுத்த சாபம்’ என்னும் தொன்மைத்தைத் தெரிந்து கொள்வதுடன் முடிகிறது. ஊரின் நன்மைக்காகப் பொட்டுக் கட்டப்பட வேண்டிய பெண் கோபால்-பூவரும்புவின் எட்டாவது பிள்ளையான செடல் தான் என்று ஊர்ப் பெரியவர்கள் முடிவு செய்கின்றனர். அதன்படி அவளது சொந்த ஊர்ச்  செல்லியம்மன் கோயிலுக்கும், சுத்திப்பட்டிலுள்ள பத்துக் கிராமங்களின் கோயில்களுக்கும்  பொட்டுக் கட்டி விடப்பெற்ற பறச்சேரிக் கூத்தாடிக் குடும்பத்துப் பெண்ணான செடலின் குழந்தைமைப் பருவத்துடன் நாவலின் முதல் பாகம் நிறைவு பெறுகிறது.மஞ்சள் கலந்த நீரைத் தலையில் ஊற்றியவுடன் அந்நீரை உதறும் கிடாயின் தலையசைப்பை வெட்டுவதற்குத் தெரிவிக்கப்படும் சம்மதம் என்று சொல்லி கோயிலின் முன்னால் வெட்டுவார்கள். அப்படிப் பட்ட சம்மதத்தைக் கூட அவளிடம் பெறாமல், ‘கிராமத்து வழக்கம்’ என்ற  முறைமையை ராமலிங்க அய்யரின் வாய் வார்த்தை வழியாக நிறைவேற்றும் நடராஜ பிள்ளையின் அதிகாரம், செடலின் உடலைத் தெய்வம் ஏறிய உடலாக மாற்றிக் குடும்பத்திலிருந்து பிரித்துக் கோயிலோடு சேர்த்துப் பிணைக்கிறது.  தீட்டுப் பட்ட மனிதர்கள் கோயில்  சார்ந்த வெளிகளில் நுழைய அனுமதி இல்லை என்ற கிராமத்து நம்பிக்கையின் படி,  அவள் பெரிய மனுஷியாகி உதிரம் பெருகிய ஒரு பெருமழை நாளில் ,கொட்டும் மழைக்கு ஒதுங்கி  உட்கார ஓரிடம் இல்லாமல் தவித்த நிலையில் தனது சொந்த ஊரையும் தெய்வப் பெண்ணாக அவளைக் காத்து வரும் கோயிலையும் விட்டுவிட்டுப் போக நேர்ந்தது என முடிகிறது முதல் பாகம்.

24 இயல்களைக் கொண்ட அம்முதல் பாகத்தின் நிகழ்வுகள் நடைபெறும் வெளி முழுவதும் அவளது சொந்த ஊர்தான்.பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறுமியின்  தனிமைத் துயரம்,  வறட்சி, பஞ்சம், பட்டினி , இடப் பெயர்ச்சி என நீண்ட கிராமத்தின் துயரம் என நிகழ்வுகளை அடுக்கிக் காட்டும்  நாவல் பொட்டுக் கட்டப்பட்டதின் பலனை- பெருமழையை - கிராமம் அனுபவிக்கத் தொடங்குகிறது என்று காட்டுகிறது. ஆனால் செடலுக்குக் கிடைத்த பலனோ சொல்லிக் கொள்ளும் படியானதல்ல. ‘தெய்வப்பொறப்பு, சாமிப்புள்ளெ’ என்று பாராட்டப்படும் பொட்டுக் கட்டப்பெற்ற பெண்ணின் வாழ்க்கையின் மறுபக்கம்  வஞ்சிக்கப்படும் பெண்ணின் வாழ்க்கைதான். கோயில் திருநாவுக்குக் காப்புக்கட்டும்போது, முகூர்த்தக் கால் நடும்போது, மூன்று எல்லையிலும் காவு கொடுக்கும்போது, துயிலெழுப்பும்போது  என்று ஒவ்வொன்றுக்கும் பள்ளுப்பாடப் போவதையும்¢, அப்படிப் பாடப்போகிறபோது அந்த ஊர் ஆண்களிடம் சிரிச்சுப் பேசுவதையும் இடுப்பில் கிள்ளு வாங்குவதையும் வெறுப்பின்றி வாழ்ந்து நீட்டிக்க வேண்டும் . அப்படி வாழ்ந்து நீட்டித்த ஏழாண்டிற்குள்¢ செடலின் பெற்றோர்களே அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் வாழ வழி தேடி கண்டிக்குப் போனதும், அவளைப் பார்த்துக் கொள்ள நியமிக்கப்பட்ட சின்னம்மாக் கிழவியின் சாவும் நடந்து விட்ட போது  தனிமையின் குரூரங்களை வாழ்ந்து பார்க்கிறாள் செடல். 

நாவலின் இரண்டாவது பாகம், அவளின் 18 ஆண்டு வாழ்க்கையைப் பற்றியது. சொந்த  ஊரைப் பிரிந்து மழைநாளில் கிளம்பிய செடலைப் பொன்னன் என்னும் கூத்துக்காரன் சந்தித்து அழைத்துப் போனதும், அவளை ஒரு தேர்ந்த கூத்துக்காரியாக மாற்றியதுமாக விரிகிறது. பொன்னன் அவளை விட வயதில் மூத்த தெருக்கூத்துக் கலைஞன். இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன். ஒருவிதத்தில் செடலின் தூரத்துச் சொந்தம் என்பது தான் அவளை அவன் பொறுப்பில் இருக்கும்படி செய்தது. பெண் வேஷம் கட்ட வேண்டியவன் வராத போது பொன்னனின் வேண்டுகோளை ஏற்றுக் கூத்தாடிச்சியாக்கியது. ‘ பொன்னன் செட்டு ‘ என்ற பெயர் மாறி ‘ செடல் செட்டு ‘ என்ற பெயர் வந்த போது வருமானமும் வந்தது; சிக்கல்களும் வந்தன. உடல் வனப்பு மிகுந்த பெண்ணான செடல், தேர்ந்த பாட்டுக்காரியாகவும் ஆட்டக்காரியாகவும் திகழும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் வந்தன.

கூத்துப் பார்க்க வரும்  விடலைப் பையன்கள் என்றில்லாமல் பொன்னனே அவள் மீது காமம் சார்ந்த விருப்பத்தோடு இருப்பதை ஒரு முறை வெளிப்படுத்துகிறான்; அந்தக் குழுவில் ராஜபார்ட் வேஷம் கட்டும் ஆரான் முரட்டுத் தனமான தனது காதலை அவளிடம் சொல்கிறான். பொன்னனின் சாவுக்குப் பின்னால் ஆரான் காட்டிய காதல் விருப்பம் கூத்துக் குழுவையே இரண்டாக்குகிறது. பொன்னன் நடத்திய கூத்துச் செட்டின் தலைமைப் பொறுப்பை அவள் ஏற்றுக் கொள்கிறாள்.  ரெக்கா டான்ஸ் நடத்துபவனின் அழைப்பு, அவளது சொந்த ஊர் ஒடயாரு பையன் வீரமுத்து வைப்பாட்டியாக வைத்துக் கொண்டு நிலபுலன்கள் எழுதித் தருவதாகச் சொன்னது என அவள் சந்தித்த பிரச்சினைகள் ஒரு தனி மனுஷியாகக் கடக்க முடியாத மேடுகள்¢.பெண்ணாகப் பிறக்க நேர்வதில் உள்ள துயரம் என்று கருதிக் கொண்டு எல்லா மேடுகளையும் தாண்டுகிறாள் செடல். தான் தெய்வத்திற்கு சேவை செய்ய நேர்ந்து விடப்பட்ட பெண் என்ற நினைப்பின் மூலம் அந்த மேடுகளைக் கடந்ததோடு, மற்றவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறாள்¢. இந்நிகழ்வுகள் அனைத்தும் பொன்னனின் கிராமமான நெடுங்குளத்தில் நிகழ்வனவாக 17 இயல்களில் எழுதிக் காட்டியுள்ளார் இமையம்.

நாவலின் மூன்றாவது பாகம் 14 இயல்களைக் கொண்டது. செடல் நெடுங்குளத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப வந்து , பொட்டுக்கட்டிய தெய்வப் பெண், தெருக்கூத்தாடும் கூத்துக்காரி என்ற இரட்டை அடையாளங் களுடன்  வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை விவரிக்கிறது. அவளது உறவுக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக வனமயிலும் அவளது மகன் பரஜ்ஜோதியும் இருக்கின்றனர்.  செல்லியம்மனின் கோயிலையே சிதைய விட்ட அவளது சொந்த ஊர், முதலில் அவளைப் பழைய மரியாதைகளோடு ஏற்க மறுத்ததை விரிவாகவும் ,கிறிஸ்தவப் பாதிரியாரின் அரவணைப்பால் வேதப் பறையர்களின் ஆதிக்கம் கூடி வருவதைக் குறிப்பாகவும் காட்டும் நாவலாசிரியர், அந்த மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற கூத்தாடிச்சியான பாஞ்சாலியைச் செடல்  சந்திக்கும் நிகழ்வைக் கடைசி நிகழ்வாக வைத்துள்ளார். இடையில் செடலின் உடல் வனப்பு மீது வெறியாக இருந்த வீரமுத்து ஒடையாரின் உதவியை ஏற்றுக் கொண்டதையும் ஒரு கணம் அவளை இழந்து  அவனிடம் தன் உடலைத் தந்துவிடும் தருணம் ஏற்படும் சூழல் நேர்ந்ததையும் காட்டுகிறார்.பாஞ்சாலியுடனான சந்திப்பு, செடலின்  கடந்த கால வாழ்க்கைக்கும், நிகழ்கால இருப்புக்கும் , இனித் தொடரப்போகும் நிகழ்வுகளுக்கும்  அர்த்தங்களைச் சொல்வதாக அவள் உணர்கிறாள் என்பதாக முடிகிறது நாவல்.

ஒரு அப்பாவிச் சிறுமியாகக் கிராமத்தில் ஓடித் திரிந்த செடலின் உடல் மீது  கிராமீய நம்பிக்கை எனும் ஐதீகம் நுழைந்து உண்டாக்கிய மாற்றங்கள் எதற்கும் அவள் பொறுப்பானவள் இல்லை என்பதை விவரிக்கத் தொடங்கும் நாவலாசிரியர் இமையம், கீழ்த்திசை வாழ்வின் சமூகப் பொருளாதார முரண்பாடுகளைக் கவனமாகப் பரிசீலனை செய்வதுடன், அதன் மீது கட்டியெழுப்பப் பட்ட புனித மதிப்பீடுகளை ஆழமான விசாரணைக்குள்ளாக்கவும் செய்துள்ளார். நாவலின் கதைப் போக்கை விவரிக்கும் நோக்கத்தினூடாக ஒரு சமூக வரலாற்று ஆய்வாளனின் நுட்பமான அறிவுடன் கிராமத்து வாழ்வின் உறவுகளைப் படம் பிடித்துள்ளார். அவர் படம் பிடிக்கும் கிராமங்கள்¢ இப்போதுள்ள இந்திய அல்லது தமிழ் நாட்டுக் கிராமங்கள்¢ அல்ல.கதைக்குள் கிடைக்கும் தகவல் குறிப்புக்கள் தமிழ் நாட்டில்  காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக் கட்டத்தையும் தி.மு.க.வின் எழுச்சிக் கட்டத்தையும் நாவலின் காலப்பின்னணியாகக் காட்டுகின்றன. என்றாலும் நேரடியாக அந்தக் காலகட்டத்து நிகழ்வுகள்தான் இவை எனச் சொல்லிவிட முடியாது. அதற்குப் பதிலாக அந்தக் கிராமங்களை இப்படி அடையாளப்படுத்தலாம்: இந்திய தேசத்தில் பிரிட்டாணியர்களின் ஆட்சியதிகாரம் முந்நூறு ஆண்டுகள் நடந்திருந்த போதும், அவர்களின் நிர்வாக முறைகளையும் சமூக உறவுகள் குறித்த விதிகளையும் உள்ளே நுழையவிடாமல்  மூடுண்ட அமைப்பைக் கொண்டிருந்த  கிராமங்கள். அதாவது வேளாண்மைச் சமூக அடித்தளத்திலிருந்து விடுபடாமல் இருந்த கீழ்த்திசைச் சமூகத்தின்[ Oriental Society] அலகுகளாகவே நீடித்துக் கொண்டிருந்த கிராமங்கள் என்பதுதான் அவற்றிற்குப் பொருத்தமான அடையாளம். 

ஒரு கிராமத்தின் இயங்குநிலைக்குள் ஆண்டானாகவும் அடிமைகளாகவும் வாழ நேர்ந்த மனிதர்களும், பொருளாதார அதிகாரம் சார்ந்த இவ்விரு பிரிவுகளுக்கும் இடையே சேவைக் குழுக்களாகவும், அறிவு , கலை மற்றும் புனிதம் சார்ந்த குழுக்களையும் கொண்டது பாரம்பரியமான கீழ்த்திசைக் கிராமங்கள் என்றும், இவை ஒவ்வொன்றும் வெவ்வேறாகவும், முரண்பாடுகள் கொண்டதாகவும் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றின் தேவைகளையும் அதன் எல்லைக்குள்ளேயே பூர்த்தி செய்து கொள்ளும் இயல்புடையனவாகவும்   இருந்தன என்றும் சமூகவியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். சுயச்சார்புடைய அலகுகளாக இந்தியக் கிராமங்கள் விளங்கின என்பது ஓரளவு உண்மை என்றாலும்,  அவ்வமைப்புக்குள் கண்ணுக்குப் புலப்படாத சர்வாதிகாரத்தின் கண்ணிகளும் இருந்தன என்பதையும் அதே சமூகவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. ஆனால் நிகழ்காலத்தில் இந்திய/தமிழ்ப் பழைமைக்குச் செல்ல விரும்பும் அரசியலை முன்வைக்கும் பலர் அதனைக் கண்டு கொள்வதில்லை. மரபு , பண்பாடு போன்றவற்றில் காணப்படும் நேர்மறை அம்சங்களை மட்டும் முன்னிறுத்திப் போற்றுகின்றனர்.

கீழ்த்திசைச் சர்வாதிகாரம், மதத்தின் பெயராலும், புனிதத்தின் பெயராலும், கலையின் பெயராலும் விளிம்புநிலை மனிதர்கள் மீது செலுத்திய துயரங்கள் காத்திரமான பதிவுகளாக இலக்கியங்களில் பதிவு செய்யப்படவில்லை. மேற்கத்திய அறிவுவாதத்திற்கு எதிராக நிறுத்தப்படும் கீழ்த்திசைப் பழைமையின் புனிதம் பற்றிய சொல்லாடல்கள், அதன் சரியான அர்த்தத் தளத்தில், படைப்புகளில் இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் இந்திய மொழி இலக்கியங்களில் சில பத்தாண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டன என்பதும் கூட உண்மைதான் . ‘வட்டார எழுத்துக்கள’¢ என்றும் , ‘மண்சார்ந்த படைப்புகள் ‘ என்றும் ,’ கிராமீய நாவல்கள்’ என்றும் சொல்லப் பட்¢ட படைப்புக்களில் அதற்கான சாத்தியங்கள் இருந்த போதிலும் அதன் படைப்பாளிகள் அதைத் தவறவிட்டு விட்டனர்  என்பதுதான் நமது சமீபத்திய கடந்தகாலம். தவற விட்டதோடு மட்டுமல்லாமல், பண்பாடு, மரபு என்ற பெயரில் பின்பற்றப்பட்ட பழைய வாழ்க்கைமுறைகள் மீது ஒருவிதப் புனிதத் தன்மையை உண்டாக்குவதற்குக் காரணிகளாகவும் கூட ஆகி விட்டனர். அந்தப் பொதுப் போக்கிலிருந்து விலகி நிற்பதன் மூலம் தான் இமையம்  தனது தனித்தன்மையை நிறுவிக் கொண்டு வருகிறார்.

செடலின் வாழ்க்கையில் நேர்ந்த ஒவ்வொன்றும் அவளுக்கு வாய்த்த வரம் என்றே மற்றவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அவளுக்கு அது பற்றிய தீர்மானமான அபிப்பிராயங்கள் எதுவும் இல்லை. மற்றவர்களின் பார்வையில் வரம் போலத் தோன்றும் எல்லாமும் அவளுக்குச் சாபம் போலத் தான் தோன்றுகிறது. என்றாலும் அவள் சலித்துக் கொள்வதில்லை; பயந்து ஒதுங்கிக் கொண்டதுமில்லை. மிகுந்த தயக்கங்கள் இருந்த போதும் தப்பிக்க முடியாது என்ற நிலையில் ஏற்றுக் கொள்கிறாள். வாழ்ந்து பார்க்கிறாள். இந்த மனோபாவம் தான் கீழ்த்திசை மனிதர்களின் ஆதாரமான மனோபாவம். ஆனால் அவர்கள் அப்படியே தான் இருப்பார்கள் என்றும் சொல்லி விட முடியாது. தனக்காக இல்லையென்றாலும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருப்பார்கள். நாளைக்கென்று எதையும் சேர்த்துக் கொள்ளத் தெரியாத வாழ்க்கைக்குள்ளிருக்கும் செடல், தனக்குக் கிடைக்கும் தானியங்களை, பணத்தை, பொருட்களை அவளது உறவினர்களுக்குத்  தந்ததும்¢, தன்னை உடம் பொறப்பாக கருதிய கூத்துக்காரன் விட்டத்திற்குச் செய்த உதவிகளும் அந்த ரகத்தில் சேர்ந்தன தான். இறுதியில் பாஞ்சாலியின் கூத்துக் குழுவிற்குப் ‘பயிற்சி அளித்து அரங்கேத்தம் செய்து தருவேன் என்று தலையில் அடித்துச் செய்யும்¢ சத்தியம் ‘ கூட வரையறைகள் எதையும் உருவாக்கித் திட்டமிட்டுக் கொள்ளத் தெரியாத மனதில் தோன்றும் ஒன்றுதான்.

தர்க்கம் சார்ந்த அறிவின் படி செயல்படாமல், மரபு, பண்பாடு, ஐதீகம்,நம்பிக்கை ஆகியவற்றின் பெயரில் செயல் படும் செடல் மாதிரியான பாத்திரங்களை நுட்பமாகப் படைத்துக் காட்டும் இமையத்தின் படைப்பு நோக்கம் திரும்பவும் கேள்விக்குள்ளாக்கப்படும் வாய்ப்புக்கள் உண்டு. மரபு மீறலையும் , அடங்க மறுப்பதையும் ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலையின் அடையாளங்களாக முன்னிறுத்தும் இந்தச் சூழலில், இந்த நாவலில்¢ இடம் பெறும் கதாபாத்திரங்களும், அவை  எழுதப்பட்டுள்ள முறையும் உவப்பானதாகக் கருதப்படாமல் எதிர்மறைப் பாவனையுடன் கணிக்கப்படும் வாய்ப்புகள் இல்லை என்று சொல்ல முடியாது. அப்படித்தான் பார்க்க வேண்டும் என்பவர்களின் அணுகுமுறையை யாரும் மாற்றி விடவும் முடியாது.

ஐதீகத்தில் தொடங்கி, தொன்மத்தில் முடியும் கட்டமைப்பிற்குள் செடலின் வாழ்க்கைக் கதையை மொத்தம் 55 இயல்களில் கிராமீயத் தமிழின் இயல்பு மாறாமல் வாசகர்கள் முன் பரப்பும் நாவல் பேச்சு வழக்கு , கொச்சை, சொலவடை, பழமொழி, புதிர், பாட்டு, பொதுமொழி என்ற வேறுபாடுகளையெல்லாம் தெரிந்து பயன்படுத்துகிறோம் என்ற  உணர்வுகளே இல்லாத மனிதர்களின் அலுக்காத பேச்சுக்களின் ஊடாக விரிகிறது. ஆர்க்காடு மாவட்டக் கிராமங்களின் பரப்பில்,கதை சொல்லியின் இடையீடற்ற மொழிநடை வழியாக கிராமத்தின் குடித்தெரு, பறத்தெரு, கூத்தாடித் தெரு, நாடோடிகள், வழிப் போக்கர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களின் ஆசாபாசங்கள், கோபதாபங்கள், கனவுகள், நினைவுகள், ஆணவங்கள். அடிமைத்தனங்கள், ரகசியங்கள், காதல் வெளிப்பாடுகள் எனப் பல்வேறு உணர்வுகள் சார்ந்த  மனிதர்கள்  வந்து போகிறார்கள். பெயர் உள்ள கதாபாத்திரங்களாகவும் பெயரற்ற கதாபாத்திரங்களாகவும் வந்து போகும் பாத்திரங்களில் அரைச் சதம் பேராவது தங்களின் அடையாளங்களை வாசகர்களிடத்தில் பதிக்கும் முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

பொதுவாக ஒரே நாவலைச் சில பாகங்களாக எழுதும் எழுத்தாளர்கள் அப்பிரிப்பிற்குக் கால இடைவெளியைக் காரணமாக்குவர்.கால இடைவெளியற்றுத் தொடரும் செடல் நாவல் பாகப்பிரிப்பிற்கு வெளியைக் காரணமாக்கியுள்ளது. காப்பிய ஆசிரியர்களும் நாடக ஆசிரியர்களும் முறையே காண்டப் பிரிப்பிற்கும் அங்கப்பிரிப்பிற்கும் பின்பற்றிய அடிப்படை வெளி [Space] தான். நாவலில் அந்த உத்தியைப் பின்பற்றி மூன்று பாகங்களைப் பிரித்துள்ள இமையம், நாடகங்களில் இடம் பெறும் உரையாடல் உத்திகளைக் கூட வெற்றிகரமாக நாவலின் பகுதிகளாக்கியுள்ளார். எதிரில் உள்ள கதாபாத்திரத்தின் மறுமொழி என்னவாக இருக்கும் என்பதை வாசகனின் யூகத்திற்கு விட்டுவிட்டு ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே பேசும்  உரையாடல் வடிவத்தைப் பல இடங்களில் பயன் படுத்தியுள்ளார். அதே போல் ஒரு தேர்ந்த கூத்துக்காரியாக மாறிய செடல்,  நெடுங்குளத்தில் கொடி கட்டிப் பறந்தாள் என்பதை எழுதிக் காட்ட முயலும் போது இமையத்தின் எழுத்தாளுமை ஆச்சரிய மூட்டுவதாக இருக்கிறது.

செடல் கூத்தைக் கற்றுக் கொண்டாள் என்று காட்டவும், திறம்பட ஆடிக் களித்தாள் எனச் சொல்லவும் விரும்பிய இமையத்தின்  எழுத்து இது வரை தெருக்கூத்தைப் பற்றி அச்சில் வந்துள்ள எல்லாவற்றையும் விட மேலானதாக இருக்கிறது. எழுபதுகளிலேயே தமிழ் நாட்டின்  நவீன நாடகக்காரர்களின் கவனத்தைப் பெற்ற தெருக்கூத்தைப் பற்றி நாடகக்காரர்களும் ஆய்வாளர்களும் சில நூல்களை எழுதியுள்ளனர். [ந.முத்துச்சாமி, மு.ராமசுவாமி, அ.அறிவு நம்பி, வெ.சாமிநாதன், கோ.பழனி எனச் சில தமிழர்களின் பெயர்களும், ரிச்சர்ட் ப்ராஸ்கா, ஹென்னா போன்ற மேற்குலகப் பெயர்களும் உடனடியாக நினைவில் வருகின்றன] நாடகத்தில் செயல்பட்டவன் என்ற வகையில் நானே சில கூத்துக்களை அதன் நிகழிடத்திற்கே சென்று பார்த்திருக்கிறேன். எழுதவும் செய்திருக்கிறேன்.  நாடகக்காரர்களின் கவனிப்பையும் பதிவுகளையும் தாண்டிய கவனிப்பாகவும் பதிவாகவும் இமையத்தின் எழுத்து அடையாளப்படுத்துகிறது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அப்படிச் சொல்லும்போதே இந்த வேறுபாட்டிற்கான காரணத்தையும் கூட கூற முடியும் என்றே தோன்றுகிறது. நாடகக்காரர்களின் அணுகு முறை, வெளியிலிருந்து  பார்த்த பார்வையாளர்களின்  பார்வைக் கோணத்தில் [ Outsider’s Approach ] இருக்க,  இமையத்தின்  அணுகுமுறை கூத்தை அதன் உள்ளிருந்து பார்க்கும் அணுகுமுறையாக [ Insider’s Approach] இருக்கிறது என்பது தான் அந்தக்  காரணம். ஆட்டக்காரி செடலின் உடல் வனப்பின் மீது மோகம் கொண்ட  ரசிகனாக இருந்து எழுதிச் செல்லும் இமையம், தெருக்கூத்தின் ஆன்மாவையும் அழகியலையும் கற்றுணர்ந்த ஒரு கலை மாணவனாக  இருந்து எழுதியுள்ளார் என்று கூறுவது மிகையான கூற்று அல்ல. தமிழின் முக்கியப் படைப்பாளிகளின் நாவல்கலையுடன் பலவிதங்களிலும் போட்டியிட்டுத் தனது தனி இடத்தை உறுதி செய்துள்ள இமையத்தின் நாவல்கலை,  பலவிதங்களில் விரித்துப் பேசவேண்டிய ஒன்று.

தனது இருப்புக்கான காரணங்களை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள்பால் இந்தச் சமூகம் கொண்டிருக்கும் அக்கறைகளும் , அந்த நிலையைத் தொடரவைக்க நடக்கும் முயற்சிகளும்  விசாரணைக் குள்ளாக்கப் பட வேண்டும் என்பதை உரத்துப் பேசும் எந்தப் படைப்பையும் விட வெளிப்படையாகப் பேசாமலேயே, செடல்¢ அந்த வேலையைச் செய்துள்ளது. நமது சமூகம் பின்பற்றும்  மதிப்பீடுகள் மீதும்,கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் மீதும்  விசாரணைகளும் விவாதங்களும் நடத்தப்பட வேண்டும் என்பதை நேரடியாக நாவலின் எந்தப் பக்கங்களிலும் எழுதிக் காட்டாமலேயே வாசகர்களிடம் அந்த உணர்வை எழுப்பியதில் தான் இமையத்தின் படைப்பு நுட்பம் தங்கி இருக்கிறது. கோவேறு கழுதைகளில் வெளிப்பட்ட அந்த நுட்பம் அதைவிடக் கூடுதலாகச் செடலில் வெளிப்பட்டுள்ளது  என்பதை நாவலை வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி உணரும் வாசகன் தமிழின் முன்வரிசைப் படைப்பாளி  இமையம் என்பதை திரும்பவும் உறுதி செய்து கொள்வான்.

அவருடைய முதல் நாவலை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு (1994) முன்னாள் வெளியிட்ட அதே க்ரியா பதிப்பகம் தான் செடல் நாவலையும் வெளியிட்டுள்ளது. நூலாக்கத்தில் க்ரியாவின் கவனம் தமிழ் வாசகர்கள் அறிந்த ஒன்று. எழுத்துருக்களைத் தேர்வு செய்வது,கோர்ப்பது, அச்சிடுவது, பிழைகளை நீக்குவது, (கணினி வழியாகக் கோர்க்கப்பட்ட வார்த்தைகள் பிரிக்கக் கூடாத இடத்தில் பிரிக்கப்படுவதால் உண்டாகும் பிழைகள் அதிகம் உள்ளன) முகப்போவியத்துடன் கட்டுமானம் செய்வது ,நூலில் இடம் பெறவேண்டிய தகவல்களைத் தருவது என அனைத்திலுமே நூறுசதவீதத் தொழில் முறைத்திறனை வெளிப்படுத்தும் நிறுவனம் அது. தனது பதிப்பகத்தின் வழியே அச்சிடப்பட வேண்டிய ஆசிரியர்களின் தேர்விலும் கூட க்ரியாவிற்கென்று சில அளவுகோல்கள் உள்ளன . அந்த அளவுகோலை சரியாகத் தொடுபவர் இமையம் என்று கருதுகிறேன். அவரது மூன்று நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும்  க்ரியாவின் வெளியீடுகளாகவே வந்துள்ளன. தரமான நூலாக்கமும் விவாதிக்கப்படும் எழுத்தும் ஒருசேரக் கிடைப்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்று. செடல் அந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

செடல், இமையம்,க்ரியா, எச்.18,ஃப்ளாட்  3 தெற்கு அவென்யூ ,
திருவான்மியூர்,சென்னை-600041 பக்.285/விலை.ரூ.250/-


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை