: 82

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்

கூகை: முன்மாதிரிகளைத் தகர்க்கப் போகும் நாவல்


ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது என்பது எல்லாத் துறையிலும் நடக்கின்ற ஒன்றுதான்.இலக்கியத் துறையில் செயல்படும் ஒருவன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு, "நிகழ்கால இலக்கியப்பரப்பில் எனது இடம் என்ன ?" என்ற கேள்வியை தனக்குத் தானே கேட்டு விடை தேட வேண்டும். திருப்தியளிக்கும் பதில் அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் வாசகர்களுக்கு அல்லது இலக்கிய வரலாற்றுக்குப் புதுவகையான படைப்பு கிடைக்க வேண்டும். தூர்வை என்ற நாவல் மற்றும் மூன்று சிறுகதைத் தொகுதிகள் வழியாகத் தமிழ்ப் புனைகதைப் பரப்பில்
ஓரிடத்தை உறுதி செய்து கொண்ட சோ.தர்மன், கிடைத்துள்ள இடத்தில் திருப்தி அடை யாமல் மேலும் கேட்டுக்கொண்டதின் விளைவு அவரது இரண்டாவது நாவல் கூகையாக உருவாகியுள்ளது.

கி.ராஜநாராயணனை முன்னோடியாகக் கொண்ட கோயில்பட்டி வட்டாரக் கரிசல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தொடக்கூடியது. கரிசல் எழுத்தாளர்கள் எல்லோரும் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயன்றார்கள் என்றாலும் வெற்றி கண்டவர்களாக பூமணி, பா.செயப்பிரகாசம், கோணங்கி எனச் சிலரைத் தான் இலக்கியப்பரப்பும் அதில் இயங்கும் வாசக மனமும் அங்கீகரித்துள்ளது. அந்த அங்கீகாரத்தின் பின்னணியில் அவர்கள் காட்டிய தனி அடையாளங்கள் இருந்துள்ளன. கச்சிதமான சிறுகதை வடிவத்தின் வழியாகவும், கவனத்திற்கு வராத கரிசல் காட்டு மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் இயலாமையையும் பதிவு செய்த தன் மூலமும் பூமணியும், பா.செயப்பிரகாசமும் தனி அடையாளம் காட்ட, கோணங்கியோ வெளியையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டாத மொழியுடன் புதுவகை எடுத்துரைப்பு, புதுவகைப் படிமம் என எழுதிக் காட்டியதன் மூலம் தன்னடை யாளத்தை நிறுவிக் கொண்டுள்ளார். அப்படியானதொரு தனித்த அடையாளத்தை இதுவரை உருவாக்கிக் காட்டத் தவறிய சோ. தர்மன், ஒரே பாய்ச்சலில் இவர்கள் அனைவரையும் கடந்து முன்மாதிரியே இல்லாத படைப்பாகக் கூகையைத் தந்துள்ளார். 

கூகைக்கு முந்திய சோ.தர்மனின் எழுத்துக்கள் கரிசல் வட்டாரக் கதைகள் என்ற பொது அடையாளத்திற்குள் ஒரு சிறு வித்தியாசத்தைக் கொண்டிருந்தன என்பது உண்மை தான். அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களில் எண்ணிக்கை யில் அதிகமானவர்கள் தலித்துகள் என்பதுதான் அந்த வித்தியாசம். அவரது கதைகளின் வழி, சோ.தர்மன் கடைப்பிடித்து வந்த இலக்கியக் கொள்கை இந்திய சமூகத்தின் மேல் கட்டுமானங்களைத்  தீர்மானிக்கும் சாதி என்னும் அடித்தளத்தைத் தனியாக விமரிசிக்க வேண்டிய ஒன்று என்று பார்க்கத் தவறியதாக இருந்தது. அதனால் சாதி அமைப்பு தரும் ஆதிக்க மற்றும் அடிமை மனநிலைகளும், செலுத்தப்படும் வன்முறை களும் குறிப்பாக விவாதிக்கப்பட வேண்டியன அல்ல என்றும் கருதியது. இந்தக் கருத்து இந்தியாவில் ஒடுக்கப் பட்டோருக்கான போராட்டம் சாதி மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டமாக இருக்க வேண்டியதில்லை ; பொருளாதார மேம்பாட்டிற்கான போராட்டமாக அமைந்தால் போதும் என்ற கருத்தியலுடன் உடன்பாடு கொண்டது. இடதுசாரி இயக்கங்களின் கோணத்துடன் ஒத்துப் போகும் இக்கருத்தியல் தொண்ணூறு களில் விவாதிக்கப் பட்ட தலித் இலக்கியக் கருத்தியலுக்கு எதிரான கருத்து என்பது சொல்லப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது வந்துள்ள கூகை நாவலோ அவரை அந்தக் கருத்தியலைத் தொலைத்து விட்டவராக அடையாளப் படுத்தியுள்ளது.அது மட்டுமல்லாமல் தலித் எழுத்தின் விவாதங்களைப் பொதுத் தள விவாதங் களுக்குள் நகர்த்தி விடும் சாத்தியப்பாடுகளையும் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.

கூகை என்னும் பறவையைப் பற்றிய தமிழர்களின் பொதுப்புத்தி சார்ந்த நம்பிக்கைகளையும் தொன்மங்களையும் தனது கதைத் தளத்திற்கான கருத்தியல் ஆதாரமாகக் கொண்டு நாவலைக்  கட்டமைத்துள்ளார் சோ. தர்மன். கூகையின் ஒவ்வொரு குரலுக்கும் உள்ள அர்த்தங்களைத் தமிழ் நாட்டுக் கிராமிய மனிதர்கள் அறிவார்கள். மிகுந்த உடல் வலிமை கொண்ட அப்பறவை பகலில் எல்லாப் பறவைகளின் தாக்குதலுக்குள்ளாகக் கூடியதாக வாழ்கிறது. காரணம் அதன் உருவத்தில் முக்கியப் பங்காற்றும் கண்கள் பகலில் செயலற்றவையாக இருப்பது தான். பறவையினங்களுள் பெரும்பாலானவை பகல் நேரத்தையே வாழ்தலுக்கான காலமாகக் கொண்டிருக்க, கூகை மட்டும் இரவில் வாழும் பறவையாகவும் ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளத் தயங்கும் சாவின் வருகையை முன்னறிவிக்கும் பறவையாகவும் நம்பப்படுகிறது. கூகையைப் பற்றிய இந்தப் பொது நம்பிக்கை யோடு அப்பறவையின் உடல் அமைப்பு சார்ந்த நிறம், வலிமை மற்றும் வலிமையின்மை போன்றவற்றை  நாவல் முழுக்க விவரித்துக் காட்டி, அப்பறவையைத் தங்களின் குல தெய்வமாக வணங்கிய சமூகக் குழுவின் நிகழ்காலப் போராட்டத்தையும் இருப்பையும் நாவலின் விவாதப்பொருளாக ஆக்கியுள்ளது தர்மனின் எழுத்து.

இந்தியச் சாதி அமைப்பின் இயங்கு நிலையைத் துல்லியமாகக் கணித்து, அதற்குள் செயல்படும் அதிகாரக் கூட்டு, சுயநலக் கூட்டம், ஒன்றிணைய மறுக்கும் அடிமைகளின் மனநிலை, அதன் பின்னணியாககிராமங்கள் சிதைய நகரங்களுக்கு இடப்பெயர்ச்சி, அங்கும் தொடரும் சாதியத்தின் நிழல் என ஒவ்வொன்றையும் சரியாக அடையாளங் காட்டுவது என்பது இந்நாவலை எழுதுவதற்கான திட்டமாக இருந்திருக்கிறது. திட்டமிட்டுக் கொண்ட சோ.தர்மன், அதனை நாவல் வடிவமாக்குவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார். சித்திரம்பட்டி எனும் கிராமத்தின் சிதைவும் அங்கு குடியிருந்த பள்ளக்குடி, சக்கிலியக்குடி, பறக்குடி ஜனங்கள்  கோயில்பட்டி எனும் நகரத்திற்கு இடம் பெயர்ந்ததும்  என்பதாக நாவலை வாசிக்கலாம் என்றாலும் கிழக்கே விளாத்திகுளம் தொடங்கி மேற்கே சங்கரன் கோயில், தென்காசிவரையிலான ஒட்டுமொத்தக் கரிசல் பிரதேசத்தின் சமூக முரணும் நெருக்கடியுமாகவே நாவல் விரிந்துள்ளது. நாவல் முடியும் போது ஒற்றைக்கதாபாத்திரத்தின் நினைவுகளை மட்டும் வாசகனின் மனதில் அலைய விடாமல் ஒரு கூட்டத்தின் அலைக்கழிப்பையே நினைவில் ஆடச் செய்வது நாவலின் நோக்கமாக இருக்கிறது; அது நிறைவேறியும் இருக்கிறது. நாவலின் இடம் மற்றும் காலப் பின்புலம், சொல்முறை, முன்வைக்க நினைத்த சமூக அசைவியக்கம், எழுப்ப நினைத்த உணர்வுகள் என அனைத்திலும் தர்மன் ஓரு தேர்ந்த நாவலாசிரியராக மட்டுமல்லாமல் சரியான சமூக ஆய்வாளனாகவும் வெளிப் பட்டுள்ளார் என்பதை நாவலை வாசிக்கும் தேர்ந்த வாசகர்கள் உணரக்கூடும்.

சித்திரம்பட்டியிலிருந்து வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டை சகிதம் பக்கத்து ஊரில்  துட்டிக்குப் போய்விட்டு,  கோயில்பட்டியில் உள்ள  நாச்சாரம்மா களப்புக் கடை என்னும் நாயக்கர் ஓட்டலில், முக்கால் ரூபாயில் வயிரு நிறைய அரிசிச் சோற்றைப் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்த மூக்கனுக்கும் முத்துக்கருப்பனுக்கும் அவர்கள் ஊரில் முத்தையாபாண்டியன் (தேவர்சாதியைச் சேர்ந்த ஊர்க்காவல்காரர்) கொடுத்த அடி உதை, சாதி சார்ந்த வசவு என்ற தொடக்கத்துடன்  நாவல் தொடங்குகிறது. அவர்களுக்காகக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அவர்களிருவரையும் காப்பாற்றும் சீனிக்கிழவனின் அறிமுகமும் நாவலின் தொடக்கத்திலேயே வைக்கப் பட்டுள்ளது. இந்தத் தொடக்கம் நாவலின் நோக்கத்திற்கேற்பக் மிகக் கவனத்துடன் செய்யப்பட்ட தொடக்கம். நிலவுடைமையாளர்களாகிய பிராமணர்கள், ஜமீன்கள் மற்றும் மேகலக்குடி குடியானவர்களின் நிலத்தோடு குடிச் சுதந்திர உரிமை, பண்ணையாள், பதிவாள் எனப்பல பெயர்களின் வழி பிணைக்கப்பட்ட விவசாயக் கூலிகளான சித்திரம்பட்டிப் பள்ளர்களின் தெய்வம் கூகை. கூகைச் சாமியைத் தெய்வமாக வணங்குவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஊர்ப் பெரியவனான சீனிக்கிழவனின் சொல்லை மீறாமல் மேகலக்குடி ஆண்டைகளின் சொல்லுக்கு அடிபணிந்து நடந்த காலம் முடிந்து சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பு தந்த உரிமைகளை அவர்கள் ருசித்துப் பார்க்க நினைத்த விருப்பத்தின் தொடக்கம் என்பதைக் குறியீடாக்கிக் காட்டும் தொடக்கம்.

கூகைச்சாமிக்கும் சீனிக்கிழவனுக்குமான பந்தத்தை விவரிக்கும் விதமாகக் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத் திற்குமாகப் பயணம் செய்யும் நாவல் , கடந்த காலத்தில் அவர்கள் அடைந்த துயரங்களையும்  நிகழ்காலத்தில் நடக்கும் மாற்றங்களையும் விளக்குவதாக விரிந்துள்ளது. மனிதர்களாக மதிக்கப்படாத கடந்த காலம் சாதியமைப்பில் இருந்த ஒருவித அதிகாரம் சார்ந்த அன்பால் பிணைக்கப்பட்ட காலம் என்பதைக் காட்டுவதோடு, நிகழ்காலம் எல்லா அதிகாரங்களும் துடைத்தெறியப்படுதலை விரும்புவதாக மாறிக் கொண்டிருக் கிறது என்பதையும் சித்திரித் துள்ளது. பள்ளக்குடி மனிதர்களின் வேளாண்மை சார்ந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆதிக்க சாதிகளின் அதிகார எல்லை வரன்முறை அற்றதாக விரிந்திருந்தது என்பதைக் காட்டி, அவற்றிலிருந்து விடுபட நடந்த நிகழ்வுகளாக நாவல்களின் காட்சிகள் அடுக்கப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த பொதுவெளியில் நடந்த அதிகாரத்தைத் தாங்கிக் கொண்ட அவர்கள், குடும்பம் சார்ந்த- தனிமனித வெளியில் நடந்த- கொடூரமான குறுக்கீடுகளால் ஏற்பட்ட நிகழ்வுகள் தாங்கிக் கொள்ள முடியாதவை களாக இருந்தன. தங்கள் சாதிப்பெண்களின் உடல் மீது ஆதிக்க சாதியினர் எடுத்துக் கொள்ளும் கேள்விகளற்ற அதிகாரம், மகளுக்கான மாப்பிள்ளையைத் தீர்மானித்தலில் தலையிடுதல், மனைவிக்கு மருத்துவம் பார்த்தலை விட்டு விட்டு வேலை செய்ய வேண்டிய அவலம், ஆண்டையின் சாவின் போது அவனைப் புருசனாகப் பாவித்து அம்மிக்கல்லைத் தூக்கிப் போக வேண்டிய சடங்கு சார்ந்த செயல்கள், எல்லா நேரமும் இவர்களையே தண்டிக்கும் காவல்துறையினரின் அத்து மீறல் என நிகழும் ஒவ்வொன்றும் தாங்க முடியாத வன்முறை மட்டுமல்ல; திருப்பித் தாக்க வேண்டியனவாகவும் இருந்தன எனக்காட்டுகிறது நாவல்.

திருப்பித் தாக்கியதின் விளைவுகளால் நடந்த இடப்பெயர்ச்சி அவர்களைச் சித்திரம்பட்டியை விட்டு வெளியேற்றிக் கோயில்பட்டி நகரத்தின் புறநகர்ச் சேரிகளின் வாசிகளாக்கியதுதான் நடந்த மாற்றம். நகரச்சேரிகளில் உதிரித் தொழிலாளாக அவர்கள் மாறியபோதிலும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் சுரண்டலும் அடக்குமுறையும் வேறு வடிவத்தில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமத்தில் பண்ணையார்களாக அதிகாரம் செலுத்தி யவர்கள் நகரத்தில் தீப்பெட்டிக் கம்பெனி முதலாளிகளாகவும் ஆலைத்தொழிலின் அதிபர்களாகவும் மாறியிருக் கிறார்கள். ஜமீந்தார்களின் வாரிசுகள் அரசியல் வாதிகளாக மாறி பொய்யான வாக்குறுதிகளோடு சேரிகளின் தெருக் களுக்குள் வர அவர்களின் பரிவாரங்களாகவும் தளபதிகளாகவும் அதே ஆதிக்க சாதிகளின் முகங்கள் பின் தொடர்கின்றன என்பதை அடையாளங் காட்டுவதுடன்  நாவல் முடிகிறது.
கூகைச்சாமியை வணங்கியவர்கள் கோபங்கொப்பளிக்கும் காளியை வணங்கு பவர்களாக மாறிக் கொண்டிருந்த காட்சிகள் தானாக நிகழ்ந்தன அல்ல என்பதையும்  அதன் பின்புலமாக நிலவுடைமையில் ஏற்பட்ட மாற்றங்களும் அதனால் ஏற்பட்ட பொருளாதார மேம்பாடுகளும் இருந்தன எனக் காட்டுகிறது நாவல். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் நிலவுடைமையோடு தங்களுக் கிருந்த தொடர்பை- அனுபோக உரிமையை- பிராமணர்கள் எந்தவிதத் தயக்கமுமின்றிக் கைமாற்றிவிட்டு நகரத்திற்குப் போனார்கள் எனக் காட்டும் நாவல், அவர்களின் மீது எந்தவித விமரிசனத்தையும் நேரடியாக வைக்க வில்லை. அப்படி விமரிசனம் வைக்காமல் நிகழ்வைப் படம் பிடிப்பதன் வழியாகப் பிராமணர்களின் உள்நோக்கத்தைக் காட்டிவிட முடியும் என நாவலாசிரியர்கள் கருதியிருப்பது புலப்படுகிறது.

நெருக்கடிகள் வருகிற போது பொது நலத்தின் பெயரால் சுயநலத்தை மறைத்துக் கொண்டு வினையாற்றுவதும், அதன் வழி தங்களது முன்னேற்றம், அரசதிகாரத்தில் முதனிலைப் பங்கு என நகர்வதில் இந்தியப் பிராமணர்கள் கவனமாக இருந்துள்ளனர் என்பது வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு கண்ணியாகவே இந்நாவலில் வரும் நடராஜய்யர்கள் படைக்கப்பட்டுள்ளனர். மாறி வரும் கிராமீய வாழ்வில் பிராமணர்களுக்கான முதன்மை இடம் கேள்விக் குள்ளாக்கப்பட்டது இந்த நூற்றாண்டின் தொடக்க நிகழ்வுகள். அந்நிகழ்வு களின் பின்னணியில் இருந்த வர்கள் கிராமங்களில் இருந்த ஆதிக்க சாதி நிலவுடையாளர்களும் அவர்களின் ஏவலை ஏற்று வன்முறையில் ஈடுபட்ட இடைநிலைச் சாதியினரும் தான். பிராமணர்களின் நிலங்களை வாங்கு வதற்கான வசதிகள் அவர்களிடம் இருந்த போதும் அவர்களுக்கு  விற்காமல் நிலத்தில் கூலிகளாக வேலை செய்தவர்களிடமே நிலத்தை முதலில் குத்தகைக்கும் பின்னர் கிரயமாகவும் விற்றுவிட்டுப் போகிறார் நிலச் சுவாந்தாரர் நடராசய்யர். அவரின் செயலில் மனிதாபிமானம் வெளிப் படுவதாகப் பள்ளக்குடி மக்கள் கருதினாலும், மற்றவர்கள் அவ்வாறு கருத வில்லை. தங்களிடம் அடிமைகளாக இருந்தவர்களுக்கு தங்களை எதிர்த்து நிற்பதற்கான வலிமையைக் கொடுத்தவர் நடராசய்யர் தான் எனக் கருதுகின்றனர். அதேபோல் நகரத்திற்குக் குடி பெயர்ந்து சுப்பிரமணிய புரவாசிகளான சேரி ஜனங்களுக்குக் குறைந்த பணத்தை வாங்கிக் கொண்டு வாதாடும் வக்கீல் நடராசய்யரின் செயல்பாடுகளும் பாதிக்கப் பட்டோரின் 'பக்கம் நிற்றல்' என்பதாகக் காட்டப்பட்டாலும் தமிழகத்தில் நடந்த சமூக முரண்பாடுகளின் பின்னணியில் பிராமணரல்லாத - இடைநிலை- சாதிகளுக்கெதிராகப் பிராமணர்கள் இருந்தார்கள் என்பதை அடையாளப் படுத்தும் விதமாக உள்ளது.

பள்ளக்குடி மனிதர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் ஆன கதையையும் அதனால் உண்டான மோதல்களையும்  விவரிக்கும் நாவல், அதன் சமகாலத்தில் பறையர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதையும் பகடைகள் எதிர்ப்பு மனநிலையின்றி அடங்கிப் போகிறவர்களாக இருந்ததையும் விமரிசனப் பார்வையுடன் பேசுகின்றது. அந்த விமரிசனங்கள் தென் தமிழ் நாடு - குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டம்- என்ற பிரதேச எல்லைக்குள் சரியானதாக இருக்கலாம். ஒட்டுமொத்தத் தமிழ் நாட்டிற்கும் அது பொருத்தமான விமரிசனமா? என்பது கேள்விக்குரிய ஒன்று.

இரண்டு பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் முன் பகுதியின் மைய அச்சாக இருக்கும் கதாபாத்திரம் சீனிக் கிழவன் என்றால் பின்பகுதியின் மைய அச்சாக இருக்கும் கதாபாத்திரம் முத்துப் பேச்சி என்ற பேச்சி. சீனிக் கிழவனிடமிருந்து நாவலின் நிகழ்வுகளைப் பேச்சியிடம் கடத்திக் கொண்டு வருகிறவர்கள் அப்பு சுப்பனும் அவரது மகன் அய்யனாரும் தான். சீனிக்கிழவனிடம் வெளிப்படுவது அடக்கத்துடன் கூடிய புத்திசாலித்தனம் என்றால், பேச்சியிடம் வெளிப்படுவது தைரியத்துடன் கூடிய நிதானம் எனச் சொல்லலாம்.

சீனிக்கிழவனின் பாத்திரவார்ப்பு ஒருவிதத்தில் கூகையுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை. வன்முறை அற்ற வழிகளில் தந்திரமாக தனது கூட்டத்தை விடுவிப்பதும் பொருளாதார ரீதியாக மேம்படுத்தித் தலை நிமிரச் செய்து அவர்களைச் சித்திரம்பட்டியிலேயே இருக்கச்செய்வதுமான நோக்கம் கொண்டது. சாதியப்படிகளின் வேறுபாடுகளை ஒத்துக் கொண்டு மனிதர்களாக நடத்தும் அன்புக்கு ஏங்கும் மனம் அவருடையது. அத்தகைய அன்பை வெளிப் படுத்திய உப்பத்தூர் கெங்கைய நாயக்கர் குடும்பத்திற்கு ஏற்பட்ட சாபத்தை இரக்கத்துடனும் ஏக்கத்துடனும் எண்ணிப்பார்ப்பவர் அவர். சீனிக்கிழவனின் பூர்வீகக் கிராமமான உப்பத்தூரிலிருந்து தான் கூகையைப் பிடிமண்ணாக எடுத்துக் கொண்டு வந்தவர் அவர். அந்தக் கூகைக்கே சித்திரம்பட்டியில் இடமில்லாமல் கோப வெளிப்பாட்டின் கடவுளான காளி கோயில் கட்டிய போது அந்தக் கிராமத்தை விட்டே வெளியேறிப் போய் விடுகிறார். 

ஆசைக்கிணங்கிய தனது வனப்பில் கட்டுண்டு கட்டிய மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு அழகனேரியிலிருந்து கிளம்பிய கோபக்காரக் காளித்தேவரின் இரண்டாம் தாரமாகக் கோயில் பட்டிக்கு வந்து சேர்ந்தவள் பேச்சி, பள்ளக்குடி பெண்தான்.காளித்தேவருடன் கிளம்பியதால் இருவரும் பட்ட கஷ்டங்களும் கற்றுக் கொண்ட பாடங்களும் சேர்ந்து அவளது செயல்பாடுகளைத் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் போராளியின் நிலைக்கு உயர்த்துவதாக உள்ளது. காளித் தேவரின் மறைவுக்குப் பின் அவளது வாழ்க்கை முழுவதும் பொதுவெளிக்குள் பயணம் செய்யும்  ஒருத்தியின் சாகசங்களாக அமைந்துள்ளன. சாகசங்கள் என்பதால் நம்பமுடியாத காரியங்கள் செய்யும் பாத்திரம் என்று கருத வேண்டியதில்லை. சாதாரண மனுசியின் இயல்பான குணங்களிலிருந்து கொஞ்சமும் விலகிவிடாமலேயே அத்தகைய எண்ணத்தைத் தோற்று வித்துள்ளார் நாவலாசிரியர்.  அடக்குமுறைக் கெதிராகக் கொலைகள் செய்து விட்டுத் தலைமறைவு வாழ்க்கையில் இருப்பவர் களுக்கு உதவுவது, சட்ட வரம்புக்குள் போராடு வதற்கான யோசனைகளை முன்வைப்பது, பாதிக்கப் பட்ட மனிதர்களின் பக்கம் சாதி வேறுபாடுகள் பார்க்காமல் இரக்கம் காட்டுவது (கோமதி விலாஸ் ராமையா பிள்ளையின் மீது காட்டும் கரிசனம்), தனது புருசன் காளித் தேவரின் மகன் அருணாசலம் அவளைச் சித்தியென்று ஏற்று வந்தபோது பாசம் காட்டும் அன்னை யாக மாறுவது என அந்தப் பாத்திரம் முழுமையின் உருவகமாக வடிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கிழவனையும் பேச்சியையும் மையக் கதாபாத்திரங்களாக வைத்துக் கொண்டு தர்மன் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்கள் பல.பெரும்பாலானவை சாதி அடையாளங்கள் கொண்டவை. ஆதிக்க சாதி அடையாளங் களோடும் அடங்கிப் போவதில் தயக்கம் காட்டும் மனிதர்களாகவும் வரும் அவர்களின் உலகம் வெக்கை தகிக்கும் கரிசல் பூமியின் மொத்தப்பரப்பு தான்.தலித் கதாபாத்திரங்களை எழுதிய பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகள் அவர்களை இரங்கத் தக்க மனிதர்களாகச் சித்திரிப்பது, இல்லையென்றால் போராட்டத்தின் தலைவர்களாகப் படைப்பது என்பதைக் கொள்கையாகக் கடைப்பிடித்து வரும் போக்கில் தர்மனின் கதாபாத்திர உருவாக்கம் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. வகைமாதிரிப் பாத்திரங்களால் நாவலை உருவாக்கும் நிலையிலிருந்து விலகி முழுமைப் பாத்திரங்களின் வழி (Total characters) நடப்பு வாழ்வின் வெளிப்பாடு என்று நம்ப வைக்க முயன்றுள்ளார். அந்த வகையில் பிறகு, வெக்கை நாவல்களை எழுதிய பூமணியையும், கோவேறு கழுதைகளை எழுதிய இமயத்தையும் தொட்டு நிற்கிறார். ஆனால் பயன்படுத்தியுள்ள மொழி நடை மற்றும் சொல் முறை மூலம் அவர்களையும் தாண்டிச் செல்கிறார் என்பதுதான் உண்மை.

சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்னால் 1990 -களின் மத்தியகாலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரங்களின் பின்னணியில், கொடியங்குளம் போன்ற குறிப்பான கிராமங்களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்கள் தான் இருந்தன என்று அச்சு ஊடகங்களும், கள ஆய்வுகளின் முடிவுகளும், அறிவுஜீவிகளின் அறிக்கைகளும் சொல்லிக் கொண்டிருக்க, அவற்றையெல்லாம் மறுத்து ஒதுக்குவது போல அமைந்துள்ளது சோ.தர்மனின் நாவல். சுதந்திர இந்தியாவில்- ஜனநாயகக் குடியரசு என அறிவித்துக் கொண்ட சுதந்திர இந்தியாவில் - தொடரும் நிலமானிய உறவுகளையும், தீண்டாமையை அடிப்படையாகக் கொண்ட அதன் ஈவு இரக்கமற்ற அதிகாரத்தையும் காரணமாக்கிக் காட்டி, அதிலிருந்து விடுபட எத்தனித்த அடிமைச் சாதிகளின் போராட்டமே அந்தக் கலவரம் எனக் காட்டுகிறது. இப்படிச் சொல்வதால் தென்மாவட்டக் கலவரங்களின் யதார்த்தப் பதிவாக நாவல் அமைந்துள்ளது எனச் சுலபமாக முடிவு கட்டிவிட வேண்டியதில்லை. நடப்பியல் பதிவின் எந்தத் தடயமும் இன்றி நிகழ்காலத்திற்கும் கடந்த காலத்திற்கும் இடையே மிக எளிதாகப் பயணம் செய்துள்ளது தான் இந்நாவலின் தனிச் சிறப்பு. நிகழ்வுக்கும், நம்பிக்கை சார்ந்த அமானுஷ்யத்திற்கும் இடையே  பயணம் செய்யும் நாவலாசிரியர் தர்க்கம் சார்ந்த வெளிகளைத் தாண்டிய அதர்க்க உலகத்திற்குள் கேள்விகள் இன்றி வாழும் மனிதர்களாகக் கிராமத்து மனிதர்களைப் படைத்துக் காட்டியிருப்பதன் மூலம் மேஜிகல் ரியலிசத்தின் எல்லைகளுக்குள் மிகச்சுலபமாகப் பயணம் செய்துள்ளார்.

கூகை என்னும் பறவையைக் குறித்த நம்பிக்கை மற்றும் தொன்மங்களோடு, கெங்கைய நாயக்கர் மகள் ஆண்டாளம்மாளின் கதை, ஜமீந்தார் தோட்டங்களில் மட்டும் படையெடுத்த வெட்டுக்கிளிக் கூட்டம்,   நச்சாடலிங்க ஸ்தபதி, ரசவாத சித்தன் சார்ந்த அமானுஷ்யக் கதைகள்,நிகழ்காலத் தமிழக அரசியலை உருவகமாகக் காட்டும் வனத்தின் கதை எனத் தர்மன் நாவலுக்குள் வைத்திருக்கும் பகுதிகள் தமிழ்ப் புனைகதைப் பரப்பிற்குள் இதுவரை எழுதப்படாத பகுதிகள் மட்டுமல்ல; புதிய சொல்முறைகளும் கூட.அச்சொல் முறைக்கேற்ற மொழியைக் கண்டடைந்து பயன்படுத்தியுள்ளதும் கவனிக்கத் தக்கதாக இருக்கிறது. [இந்நாவலில் வாசிப்புச் சுவாரசியம் மட்டுமே தரக் கூடிய இரண்டு பகுதிகள் உள்ளன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. நிகழ்காலத் தமிழகத்தின் தேர்தல்  அரசியலை உருவகமாகக் காட்டும் வனத்தின் கதையும் கிறிஸ்தவ மதப் பிரசங்கியின் தொனியை வெளிப் படுத்தும் பத்துத்தூதர்களின் வசனங்களும்  நாவலின் நோக்கத்திற்கும் இயங்கு தளத்திற்கும் எந்தவிதத்திலும் தொடர் பில்லாத பகுதிகள்]

சோ.தர்மன்  இதுவரை எழுதி வந்த மொழி நடையிலிருந்து விலகி புதுவகை உரைநடையை இந்நாவலுக்கெனக் கண்டடைந்துள்ளார்.உரைநடையில் கவித்துவத்துவத்தையும், இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்ற நம்பகத்தன்மையையும் ஒருசேர உருவாக்கிக் காட்டியுள்ளது அம்மொழிநடை.. நாவல் தனது இயங்குதளத்தை விரிக்கத் தொடங்கும் நிலையில் தொடர்ந்து வினா வாக்கியங்களை அதிகம் பயன்படுத்தியுள்ளார். அவ்வினாக்களைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ள ஒவ்வொன்றும் தனிக் கவிதைகள். ஒன்றிரண்டு உதாரணங்களை வாசித்துப் பார்க்கலாம்: 
தலைவழி இறங்கி
சடையெனத் தொங்கும் விழுதுகள்
தொங்காட்டிக் காட்டி ஆடின.
(விழுதுகள் சடையென்றால்,
தலை எது?
மரமே தலையா?
தலையே மரமா?)    -ப.22

எறி பந்தாய் நீருக்குள் பாய்ந்து மீனைக் கொத்தி,
சிறகசைத்து நீர் உதறி
மரத்தின் மேல் அமரும் மீன்கொத்தியை
ஒதுக்கித் தள்ளிவிட்டு
பறந்தது நாரைக் கூட்டம்.
குளமிறங்கும் நாரைக்கு
விஸ்வரூபமெடுக்கும் கலைவித்தை
கற்றுத் தந்தது யார்?
நாரையின் உயரம் குளத்தின் ஆழமல்ல.
குளத்தின் ஆழம் நாரையின் உயரம்
குளத்தின் தரை நாரையின் காலுக்குள் அடக்கம்.
நாரையின் கால்தொடா ஆழம் கடலின் பிரபஞ்சம்.
பிறந்த உன் முன்னால்
திறந்து கிடக்கிறது வாழ்க்கை.
திறந்ததில் தேடியடைய முடியாதது .
இறந்த பின் இருண்ட
திறக்காத ஏதுமற்ற
சூன்யப் பாழ்வெளியில்
தேடியடைவது எதை?
நாரைக்குத் தெரியும்
குளத்தின் ரகசியம்.
நாரைக்கூட்டம் தரையிறங்கியது நடுக்குளம்.
புல் முளைத்த தீவு.   - ப.71

விழுங்கக் காத்திருக்கும்
காலடி மண்ணை மறந்துவிட்டு
நாலு கால் பாச்சலில்
நீ தேடியலைவது எதை?
ஆணி வேரும் சல்லி வேரும்
பூமியினுள் புகுந்து
உறிஞ்சிச் சேர்க்கும் ஜலம்
சென்றடையுமிடம் உச்சி - ப.87

வெப்பம் தகிக்கும் இக்கவிதைகள் விடைகள் அற்ற மனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன என்பதை  வாசகன் சுலபமாக அறிந்து கொள்ள முடியும். [நாவல் முழுக்கத் தேடி கவிதைகளைத் தொகுத்தால் ஒரு  தொகுப்பே கொண்டுவரலாம்] . கவிதையின் நெருக்கம் புனைகதையின் திசைகளை மாற்றும் அபாயம் கொண்டது என்பதை அறிந்து அவற்றைக் கதைசொல்லியின் கூற்றுக்கு மட்டும் பயன்படுத்தியுள்ளது தேர்ந்த கலைஞனின் வெளிப்பாடு. தங்களது மொழிநடையில் இத்தகைய எத்தனிப்புகளைச் செய்யும் சமகாலப் புனைகதை எழுத்தாளர்களான  எஸ்.ராம கிருஷ்ணன், கோணங்கி போன்றோரிடம் வெளிப்படத் தயங்கும் ஒன்று சோ.தர்மனுக்கு இந்நாவலில் சுலபமாகச் சாத்தியமாகியுள்ளது.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு நிலவிய நிலமானிய உறவில் இருந்த சாதிக் குழுக்களின் அடையாளங் களையும் உரிமைகளையும் கறாராக வரையறுக்கூறுவதில்  தேர்ந்த சமூக ஆய்வாளனாலும் கூடத் துல்லியத்தைக் கொண்டுவரமுடியாது. தமிழகத்தின் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப சாதிக் குழுக்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன. என்றாலும் ஓரளவு வரையறுத்துச் சொல்லலாம். நிலத்தின் உரிமையாளர்களாக இருந்தவர்கள் பிராமணர் களும், ஜமீந்தார்களும் தான். இந்த உரிமை அவர்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த நிறுவனங்களை முறையே  சமய அதிகாரமும், அரசதிகாரமும் எனச் சுட்டலாம். நேரடி உழைப்பின்றி அனுபோக உரிமை பெற்ற பிராமணர்களிடமிருந்தும்,ஜமீந்தார்களிடமிருந்தும் நிலங்களைப் பெற்று உழுவித்து வாழும் அதிகாரத்தைப் பெற்றவர்களாக இருந்தவர்கள் தான் இன்றைய சொல்லாடலில் முன்னேறிய  சாதிகளாக அறியப்படுபவர்கள். அந்த நிலங்களில் உழுது பயிரிட்டு உற்பத்தி செய்துவிட்டுத் தங்களின் அன்றாட உணவு, உறையுள், உடைத் தேவை களுக்குக் கூடப் போதிய வருவாயை எடுத்துக் கொள்ள உரிமையற்றவர்களாக இருந்தவர்கள் இன்று தலித்துகளாக அல்லது அட்டவணை சாதிகள் என அறியப்படும் சாதியினர். இத்தகைய நிலமானிய உறவில் நிலத்தோடு நேரடித் தொடர்பில்லாமல் பண்ணைவிசாரிப்பான், காவல்காரன், எனப் பணி செய்து பின்னர் அப்பணிகளின் தேவை இல்லாமல் போன நிலையில்  வேறு வகைத் தொழில்களுக்குள் நுழைந்த சாதிகளும் தமிழக வரலாற்றில் உண்டு. இன்று மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அச்சாதிகள் இடம் பிடித்துள்ளன. சுதந்திரத்திற்குப் பிந்திய அரசதி காரத்தின் மையங்களுக்குள்ளும் வெளியிலும் பணம் சார்ந்த அதிகார உறவுகளைப் பெற்றுள்ளன.

வேளாண்மையோடு தொடர்பற்ற பலவகைத் தொழில்கள் தோன்றிய போது மிகச் சுலபமாக மற்ற சாதிக்குழுக்கள் அவற்றைத் தேர்வு செய்யவும் வாய்ப்பளித்த இந்திய சாதி அமைப்பு தலித்துகளுக்கு மட்டும் அந்த வாய்ப்பை மறுத்தே வந்துள்ளது. அவர்களின் தேவைகளுக்காகக் கூடத் தொடக்கத்தில் தங்கள் பகுதியில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி இல்லை; இன்று இந்நிலைமை மாற்றம் கண்டுள்ளது. ஆனால் பொதுவெளியில் ஒரு சிறிய பெட்டிக் கடை நடத்தவும் தேநீர்க் கடை நடத்தவும் அவர்களால் முயற்சி செய்ய முடியாது. அந்த நிலைமை இன்றும் மாறி விடவில்லை. இதற்குக் காரணமாக இருப்பது தீண்டாமையை மனதில் தேக்கிய சாதிய மனோபாவம் அல்லாமல் வேறெதுவுமில்லை. அந்த மனோபாவத்தின் மீது விசாரணைகள் எழுப்பும் கூகை நாவலை வெறும் நாவல் என்ற அளவிலேயே வாசித்து விவாதிக்க முடியும் என்றாலும் தமிழகத்தின் சமூக வரலாற்றின் பின்னணியில் வைத்து வாசித்தால் அது எழுப்ப முயன்றுள்ள விசாரணைகளின் எல்லைகள் விரியக் கூடும்.அந்த வரலாறு நிகழ்காலத்தின் வரலாறு மட்டுமல்ல; ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு. சொல்லப் போனால் தமிழில் பள்ளு நூல்கள் எழுதப்பட்ட காலத்தின் தொடர்ச்சியைக் கொண்ட வரலாறு அது. 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை