: 60

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

ஹெப்ஸிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு:பெண்ணெழுத்தின் முதல் அடையாளம்

தமிழில் புனைகதை இலக்கியம் தொடங்கிய காலந்தொட்டே இந்த வேறுபாடு உண்டு. இலக்கியத்தின் நோக்கம் சார்ந்த இந்த வேறுபாடு தமிழுக்கு மட்டும் உரியதல்ல. உலக இலக்கியம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒன்று தான். அதிலும் உழைப்புஓய்வு என அன்றாட வாழ்க்கையைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து வாழப் பழகிக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் தோற்றத்தோடு தொடர்புடைய புனைகதை எழுத்தின் வரவிற்குப் பின் இந்த வேறுபாடுகள் இருப்பது ஆச்சரியம் எதுவுமில்லை.
தீவிர எழுத்துக்காரர்கள் ( Serious literature ) வணிக எழுத்துக்காரர்கள் (Commercial ) என்பதாக அணி பிரிந்து போட்ட சண்டைகளே ஒரு காலகட்டத்தில் தமிழின் திறனாய்வாகக் கருதப்பட்டது.
அதிகமான வாசக எண்ணிக்கையை நோக்கமாகக் கொண்ட வணிக எழுத்தைக் கறாராக வெறுப்பவர்களாகக் க.நா.சுப்பிரமணியம்சி.சு. செல்லப்பா போன்றவர்கள் அறியப்பட்டாலும்,அவர்களுக்கெல்லாம் முன்னோடி புதுமைப்பித்தன் தான். புதுமைப்பித்தன் அவரது காலத்துக் கல்கியை வணிக எழுத்தின் ஆதரவாளராக நிறுத்திஇலக்கியத்தில் கல்கி வகையறா எழுத்துக்களுக்கு இடமில்லை எனச் சொல்வதற்காகத் தனது எழுத்தையும்தன்னைப் போலவே நிகழ்காலத்தின் மீது அக்கறையும்நிகழ்கால மனிதர்களின் பிரச்சினை களுக்கூடாகச் செயல்படும் சமூகதனி மனித உளவியல் விவாதங்களை முன் வைத்த எழுத்துக்களைத் தீவிர எழுத்து எனப் பேசி நிலைநாட்ட முயற்சி செய்தார். அத்தகைய எழுத்துக்கள் மணிக்கொடி பத்திரிகையில் அதிகம் வந்ததால்ம்மணிக்கொடி தீவிர எழுத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்பட்டது. 
விற்பனை நோக்கத்தை முதன்மையாகக் கருதாமல்சமகாலத்தின் மீதான அக்கறையை முக்கியமானதாகக் கருதிய மணிக்கொடியின் வாரிசுகளாகச் சிறுபத்திரிகைகள்  இன்றளவும் சொல்லிக் கொள்வது ஒரு நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றின் மையம். எழுத்துத் துறைக்குள் வந்த ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும்  கூட இவ்விரு அடையாளங்கள் ஒன்றின் வழியாகவே அறியப்பட்டார்கள். விதிவிலக்குகள் மிகக் குறைவு. மூவலூர் ராமாம்ருதம் தொடக்கக் கால விதி விலக்கு என்றால் அவரின் நீட்சியாகச் சொல்ல வேண்டியவர் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.
ஹெப்ஸிபா ஜேசுதாசன் அறுபதுகளின் மத்தியில் புத்தம் வீடு’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரவேசம் செய்தவர். தான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் இலக்கியச் சூழலில் நிலவிய இவ்விரு போக்குகளுக்குள் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் இயங்கியவர். மாறிக் கொண்டிருக்கும் சமூகப் போக்கில் பெண்களின் நம்பிக்கைகளும் நடைமுறை வாழ்க்கையும் பெருமளவு மாற்றங்களைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதைத் தொடர்ச்சியாகத் தனது படைப்புகளில் உள்ளீடாக வைத்தவர். ஹெப்ஸிபாவின் புத்தம் வீடுடாக்டர் செல்லப்பா என்ற இரண்டு நாவல்களும் சிறிது இடைவெளியோடு 1964,1967 களில் வெளிவந்துள்ளன. அடுத்த இரண்டு நாவல்களான அனாதைமானி என்ற இரண்டும் முறையே 19781982 களில் வெளி வந்துள்ளன. இந்த நான்கு நாவல்களையும் ஒருசேர வைத்து வாசிக்கும் ஒருவருக்கு நான்காவது நாவலான மா-னீ  முற்றிலும் விலகிய தன்மையும்முதல் மூன்று நாவல்களிலும் ஒருவிதத் தொடர்ச்சியும் இருப்பது புலனாகலாம். 
பனைவிளை’ என்ற தென் தமிழ் நாட்டின் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்த ஒரு சில மனிதர்கள் இம்மூன்று நாவல்களிலும் வருகின்றனர். புத்தம் வீட்டின் முக்கியப்பாத்திரமான ‘ லிஸியும் அவளது கணவரான தங்கராஜுவும்அவனது தம்பி ‘ செல்லப்பனும் மூன்று நாவல்களிலும் வருகின்றனர். தங்கராஜூவின் தம்பியான செல்லப்பனே, ‘ டாக்டர் செல்லப்பா’ வாகப் பரிணாமம் கொள்கிறான். தங்கராஜுவின் உறவுக் காரனும் நண்பனுமான தங்கையனின் மகன் தங்கப்பன் தான் அனாதை நாவலின் நாயகனான ‘ அனாதை தங்கப்பனா’ கப் பரிணாமம் பெற்றுள்ளான். புத்தம் வீட்டின் நிகழ்வுகள் கூடப் பின்னிரண்டு நாவல்களிலும் நினைவு கூரப்பட்டுள்ளன. இந்தப் பாத்திரத் தொடர்ச்சியினையும்நிகழ்வுகளின் நினைவு கூர்தலையும் கொண்டு இம்மூன்று நாவல்களையும் ஒருநாவலின் மூன்று பாகங்கள் என்றும் சொல்லலாம். அதே நேரத்தில் மூன்று நாவல்களின் பின்னணிகள் வேறானவைபாத்திரங்களின் குணங்கள் வேறானவைசமூகப் பொருளாதாரச் சூழல்கள் வேறானவை. இம்மூன்று நாவல்களிலும் இடம் பெறும் பாத்திரங்களே கூட ஒவ்வொன்றிலும் வேறு வேறான குணங்களைக் கொண்டவைகளாகவே சித்திரிக்கப் பட்டுள்ளன. எனவே தனித்தனி நாவல்கள் எனவும் வாசிக்கலாம். டாக்டர் செல்லப்பா’ வின் பதிப்பக உரையில் காணப்படும் ‘ இந்த டாக்டர் செல்லப்பா புத்தம் வீட்டின் இரண்டாம் பாகம் போன்றது’ என்ற குறிப்பு கூட இப்படியொரு சிக்கலை நினைவில் கொண்டே போடப்பட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.
தனித்தனி நாவல்களாக வாசித்தாலும் மூன்றும் ஒரே நாவல் என வாசித்தாலும் ஹெப்ஸிபாவின் படைப்புலகம் குடும்ப அமைப்பு’ என்ற உலகத்தைத் தாண்டி வெளியில் செல்லவில்லை என்பதை உறுதியாகச் சொல்லி விடலாம். இந்தியக் குடும்ப அமைப்பின் ஆதாரக் கண்ணி ‘ திருமணம்’ என்ற பந்தம்.  திருமண பந்தத்தை மையமாகக் கொண்டே ஹெப்ஸிபாவின் எழுத்து யதார்த்தமான பாத்திரங்களை உருவாக்கித் தந்துள்ளன. இயல்பான குணங்களோடு வெவ்வேறு பின்னணியில் இயங்கும் அவரது பாத்திரங்களில்யாருடைய செயல்பாடுகளையும் நேரடியாகக் குறைசொல்லாமல்ஆனால் தன் சார்புநிலை எந்தப் பாத்திரத்தின் மேல் உள்ளது என்பதை ஒவ்வொரு நாவலிலும் வெளிப்படுத்துகிறார். சில படைப்பாளிகள் சொல்வது போல் எல்லாப் பாத்திரங்களும் அதனதன் போக்கில் பிறந்து உலாவுகின்றனஅவற்றின் செயல்பாடுகளுக்கு நான் பொறுப்பாளியல்ல என்று தட்டிக் கழித்து விடாமல் சில பாத்திரங்களின் வழி தனது வாழ்க்கை பற்றிய கோட்பாட்டைக் குறிப்பிட்டுச் செல்கின்றார்.
பனைவிளைக் கிராமத்தில் பாரம்பரியச் செல்வாக்கோடு நின்ற புத்தம் வீடுபாரம்பரியப் பெருமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருப்பதையோஅந்த வீட்டின் ஆண்கள் அந்தப் பெருமையை மீட்டெடுப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லையென்றோஅந்த வீட்டின் மருமகள்கள் அடுப்படியிலும்வீட்டுச் சுவர்களுக்குள்ளும் முடங்கிப் போனது பற்றியோ ஹெப்ஸிபா கவலைப் படவில்லை. கவலைப்பட்டு இவற்றில் ஏதாவதொன்றின்பால் தன்சார்பை வெளிப் படுத்தியிருந்தால் புத்தம் வீடு கவனத்துக்குரிய நாவல்களுள் ஒன்று என்று கணிக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. பழைய சமூக மதிப்புக்களில் ஊறிப்போனவர்களின் செயல் பாடற்ற தன்மையை வெளிப் படுத்திய ஒரு நாவலாக நின்று போயிருக்கும். ஆனால் பாரம்பரியச் செல்வாக்கை இழந்து கொண்டிருப்பதோடுமாறிவரும் சமூக மதிப்புகளை ஏற்றுக் கொள்ளத் திராணியற்ற புத்தம்வீட்டுப்  பெண்ணொருத்தியின்பால் தன் சார்பை வெளிப்படுத்தியதின் மூலம்தன் நாவலுக்கு நேர இருந்த விபத்தைத் தவிர்த்துள்ளார் ஹெப்ஸிபா ஜேசுதாசன்.
புத்தம் வீட்டு லிஸி தன் குடும்பத்தில் தனக்கு மறுக்கப்பட்ட சுதந்திரத்தை அடைய விரும்பும் பெண்ணாக மாறுவதே புத்தம் வீட்டின் முக்கிய நிகழ்வுகள். தான் விரும்பும் சின்னச் சின்ன ஆசைகளுக்கும் தடை போடுவதாகத் தனது குடும்பத்தின் கௌரவமும்அதன் உறுப்பினர்களின் மனங்களும் உள்ளன என்பதை உணர்ந்து கொண்டவளாக மாறும் லிஸி அவற்றையெல்லாம் மீறுவது என எடுக்கும் முடிவே நாவலின் விவாதம். தான் விரும்பிய ஆடவன் ஒருவனைபுத்தம் வீட்டிற்கு இருப்பதாகக் கருதிக் கொண்ட அந்தஸ்துக்குக் குறைவானஆனால் வாழ்க்கையை-உழைப்பை நேசித்த ஒருவனைபனையேற்றத் தொழிலாளியின் மகனான தங்கராஜுவை  காதலித்துத் திருமணம் செய்து கொள்வதைச் சித்திரிப்பதன் மூலம்,  புத்தம் வீடு நாவலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாவல் என்ற இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார் . இந்தச் சித்திரிப்பின்போது கூட புத்தம் வீட்டு லிஸிதன் காதலுக்காக உயிரை விடவும் தயாரானகாதலை அடைய வீர சாகசங்கள் செய்பவளாகக் காட்டாமல்செயல்பாடுகளின் இயல்போடு சென்று தன் விருப்பத்தை அடைபவளாகக் காட்டியுள்ளார்.
பாரம்பரியமான குடும்ப அமைப்பைக் காக்கும் பொறுப்புத் தங்களுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதும்  பெண்களை எழுதிக் காட்டும் பொதுப் போக்கிலிருந்து விலகிய நிலை தான் ஹெப்ஸிபாவின் தனித்துவம்.  புத்தம் வீட்டின் லிஸியின் மீது தன் சார்பை வெளிப்படுத்தி மாறிவரும் சமூகத்தின் பிரதிநிதியாக அவளை முன் நிறுத்தியதன் மூலம் ஹெப்ஸிபா தனது வாழ்க்கை பற்றிய புரிதலைத் தெளிவு படுத்திக் காட்டினார் பழைய சமூக மதிப்புகளும் வாழ்க்கை முறைகளும் மாறிக் கொண்டிருக்கின்றனமாறிக் கொண்டிருக்கும் போக்கில் லிஸியைப் போன்றவர்களே தனது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை எழுதிக் காட்டியதின் மூலம் மாற்றத்தை எதிர்கொள்பவர்களே நிகழ்காலத்தின் மனிதர்கள் என்பதையும் அவர் சொன்னார். மாற்றத்தை எதிர்கொள்பவர்களின் பக்கம் நிற்காமல் பழைமையின் பக்கம் நின்று கண்ணீர் விடுவதோகுடும்பப் பாரம்பரியம் தகர்ந்து விட்டது என்று புலம்புவதோ சரியான இலக்கியமன்று. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்பவர்களின் பக்கம் நிற்பதே சரியான இலக்கியவாதியின் கடமை என்ற நிலைபாட்டோடு அதையே தனது இலக்கியக் கோட்பாடாகக் கொண்டிருந்தார்  என்பதைப் புத்தம் வீடு நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
ஹெப்சிபாவின் முதல் நாவலான புத்தம் வீட்டில் வெளிப்படும் வாழ்க்கை பற்றியஇலக்கியம் பற்றிய இந்தக் கோட்பாடுகள் பிந்திய நாவல்களிலும் தொடர்ந்து வந்துள்ளன. பனைவிளைக்கிராமத்தின் பனையேறிக் குடும்பத்து முதல் தலைமுறைப் படிப்பாளியான செல்லப்பா தன் திருமண உறவுகளை அமைத்துக் கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். மருத்துவப் படிப்பைத் தொடங்கிய முதல் வருடமே திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகிறான். அந்த வட்டாரத்தில் இருந்த குறிப்பிடத்தக்க பணக்காரர்களில் ஒருவரும் எஸ்டேட் ‘ ஓணருமான ஜஸ்டின் ராஜின் மகள் எமிலியைத் திருமணம் செய்து கொள்ள நேருகிறது. அவனது மருத்துவப் படிப்புத் தொடர வேண்டுமானால்அதைத் தவிர வேறு வழியில்லை. அவனும் ஒத்துக் கொள்கிறான். ஆனால் திருமணத்தைத் தொடர்ந்து அவனது தந்தை இறக்கஅதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் மணமக்கள் பிரிக்கப்படுகின்றனர். பணத்தையும் எமிலியையும் கொடுத்து செல்லைப்பனை விலைக்கு வாங்கிவிட்டதாக நினைத்த ஜஸ்டின்ராஜ் அதிர்ச்சியடையும்படி செல்லப்பன் நடந்து கொள்கிறான். எமிலியை முழுவதுமாக விலக்கி விடுவது என்று முடிவு செய்கின்றான்.  பழைய சம்பிரதாயங்களும் கற்கோயில் மாதா முன்னால் கொடுத்த திருமண ஒப்புதல்களும் அவனை ஒன்றும் செய்யவில்லை.
படிப்புத் தொடர்கிறதுமனம் புதிய ரசனைக்குசமூக மதிப்புகளுக்குத் தாவுகிறதுபுதிய வாழ்க்கையைத் தேடுகிறதுதேர்ந்தெடுக்கிறது. கல்லூரி வாழ்க்கையின் போது இசை மூலம் தனது மனதில் இடம் பிடித்த கமலாவையொத்தஇசையில் விருப்பமுடையபாடுவதில் வல்லமையுடைய வசந்தாவை மனைவி யாக்குகிறான். இடையூறாக நின்ற சாதிமதம்அம்மாபடிக்க வைத்த அண்ணன்அண்ணி முதலான அனைத்து உறவுகளையும் ஒதுக்கி விடுகிறான். தன் விருப்பம்போல மனைவியைத் தேடிக் கொண்ட செல்லப்பன்டாக்டர் செல்லப்பாவாக மாறி நடுத்தர வர்க்கத்துக் கணவன் - மனைவிகளுக்கிடையே ஏற்படும் சகலவிதமான சந்தேகத்தோடும்சுகதுக்கங்களோடும் செத்துப் போகிறான்.
இந்த நாவலிலும் ஹெப்ஸிபா தன் சார்பைச் சரியான புரிதலிலேயே வெளிப்படுத்தியுள்ளார். தான் செய்வது இன்னதென்று தெரியாமலமேயேதந்தையின் சொல்கேட்டு கணவனை உதாசீனப் படுத்திய எமிலியைச் செல்லப்பன் அறவே ஒதுக்கி விட்டபொழுது அவனை ஆசிரியர் நிந்திக்கவில்லை. அந்த அறியாப்பருவத்துப் பெண்ணின் சார்பாளராக மாறவில்லை. கிராமத்துச் சமூகத்திலிருந்து விடுபட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கைச் சூழலுக்கு மாறும் மனிதர்களின் வாழ்க்கை மாற்றத்தில் இத்தகைய பிடிவாதமும்சுதந்திரமானமனம் விரும்பியபடி - துணையைத் தேடிக் கொள்ளத் தூண்டும் போக்கும் நிலவும் என்கின்ற சமூகநிகழ்வைச் சரியாகப் புரிந்து கொண்டவராக ஹெப்ஸிபா தன்சார்பை செல்லப்பாவின் பக்கமே வெளிப்படுத்துகின்றார். செல்லப்பன் வசந்தாவை மணந்து கொண்டதைப் பற்றி எமிலி என்ன நினைத்தாள்அவள் வாழ்க்கை என்னவாக ஆனதுஎன்பது பற்றிக் கூட ஹெப்ஸிபா தம் நாவலில் எழுதவில்லை. அவருடைய நோக்கமெல்லாம் முதல் தலைமுறைப் படிப்பாளி ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளைப் படம் பிடிப்பது மட்டுமாகவே இருக்கிறது.
பெண்ணியம் என்னும் கருத்தியல் நிலைபாடும்போராட்டத்திற்கான முன் மொழிவுகளும் பல கட்டங்களைத் தாண்டி பெண் ஆணைச் சார்ந்து வாழத்தான் வேண்டுமாஎன்ற கேள்விக்கு வந்து விட்டது. தான் தனித்து வாழ்வது பற்றியும்உடலுறவு கொள்வதில் தனது விருப்பம் உள்பட எல்லாவிதச் சுதந்திரத்தோடும் பெண்ணை ஏற்றுக் கொள்ளும் ஆணோடு சேர்ந்து வாழ்வது பற்றிய நிலைபாட்டை முன் நிறுத்தும் பின்னைப் பெண்ணியம் வரை அறிந்துள்ளவர்களுக்குகாதலித்தவனை மணந்து கொள்ளப் போராடும் லிஸியின் வாழ்க்கையும்தன்னைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்பட்ட மணவாழ்வை உதறும் தங்கராஜுவின் வாழ்க்கையும் பெண்ணெழுத்தாகத் தோன்றாமல் போகலாம். ஆனால் காதலை ஏற்கச் செய்வதும்விவாகரத்து உரிமையும் குடும்ப  அமைப்பின் நெகிழ்ச்சியின் இரண்டு முக்கியமான கட்டங்கள் என்பதை நாம் மறுத்து விட முடியாது. இவ்விரண்டையும் தனது நாவலில் யதார்த்தம் மீறாமல் எழுதிக் காட்டியவர் ஹெப்ஸிபா ஜேசுதாஸன் என்பதே நாவல் வரலாற்றில் அவரது இடம்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை