: 95

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு

பூமணியின் வெக்கை : தமிழ் நாட்டுக் கிராமங்களின் தகிப்பு


1960- களுக்குப் பின்பு எழுதத் தொடங்கிக் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படும் பலரும் அவர்களின் முதல் நாவலின் வழியாகவே திரும்பத் திரும்ப அடையாளப்படுத்தப் படுகிறார்கள். பூமணியும் அதற்கு விலக்கில்லை அவரது முதல் நாவலான பிறகுவோடு சேர்த்தே அடையாளம் காணப்படுகிறார். வட்டாரம் சார்ந்த எழுத்தாளர்களாக அறியப் படும் பலரும் அத்தகைய அடையாளம் பெறாமல் தப்பிக்க முடியாது.
ஆனால் ’முதல் படைப்பே முதன்மையான படைப்பு’ என்ற மனோபாவம் விமரிசன அடிப்படைகள் அற்று உருவாக்கப்படும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் எனக்கில்லை.
முதல் நாவல் மீதான மோகத்திற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். முதன் முதலாக எழுதிக் காண்பிக்கும் வெளியும் மனிதர்களும் அதுவரை எழுத்தில் பதிவாகாமல் இருப்பது முதன்மையான காரணம். கவனிக்கப் படாத மனிதர்களைக் கவனிக்கப்படாத மொழியில் எழுதிக் காட்டிய புதுமையை ஒரு முறை தானே தர முடியும். புதுப்புது மனிதர்களை வெவ்வேறு கால கட்டங்களில் நிறுத்திக் காட்டுவதன் மூலம் புதுப்புது படைப்புகளைத் தர முடியும். அதற்காகப் புதுப்பிரதேசம் ஒன்றிற்குள் நுழைந்து புதுவகை மொழி அடையாளத்தை உருவாக்கும் போது அவனது வட்டாரம் சார்ந்த அடையாளம் காணாமல் போய்விடும். அப்போது அவன் பொதுத்தள எழுத்தாளன் என்னும் அடையாளத்துக்குள் வந்து சேர்ந்து விடுவான். அப்படி வந்து சேர்ந்த தமிழ்ப் புனைகதையாசிரியர்களுக்கு உதாரணங்கள் வேண்டும் என்றால் எஸ்.ராமகிருஷ்ணனனையும், ஜெயமோகனையும் தான் சொல்ல வேண்டும். வட்டாரம் சார்ந்த எழுத்தாளன் என்னும் அடையாளமே தீவிர இலக்கிய அடையாளமா? பொதுத் தளத்திற்குள் நுழைந்து கலக்குவதே தீவிர இலக்கியத்தின் வேலையா? என்பதைப் பிறிதொரு முறை விவாதிக்கலாம். இப்போது பூமணிக்கு வரலாம்.
இயல்புவாத எழுத்தின் ஆகச் சிறந்த தமிழ் அடையாளமாக பூமணியின் பிறகு நாவல் இருக்கிறது இந்திய சுதந்திரத் திற்குப் பிந்திய மாற்றங்கள், சமூகத்தின் அடித்தள மக்களுக்கு நினைப்பாகக் கூடப் போய்ச் சேரவில்லை என்ற காத்திரமான அரசியல் விமரிசனத்தை- பெருங்கோபத்தை- ஆவேசமற்ற மொழியில் எழுதிக்காட்டிய சாதனை பூமணியின் பிறகு நாவல். ஆனால் நான் பிறகைக் காட்டிலும்,வெக்கை நாவலையே அவரது முக்கியமான நாவலாகக் கருதுகிறேன். அப்படிக் கருதுவதற்கு இலக்கியம் பற்றிய எனது நிலைபாடு மட்டுமே காரணம் அல்ல; எழுத்தின் நோக்கம் மற்றும் வெளிப்பாட்டு முறை குறித்த பொதுவான பார்வையும் காரணமாக இருக்கிறது. மனிதர்களின் அறிவு சார்ந்த விழிப்புணர்வினூடாக சமூகத்தில் நடக்கும் மாற்றங்களையும், முரண்பாடுகளையும் எழுதிக் காட்டுவதே நவீன எழுத்தின் முக்கியப் போக்காக இருக்க முடியும். தனக்குள் இருக்கும் எதிர்வுகளாலும், தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்திலுள்ள முரண்களாலுமே மனிதன் தன்னை உணர்கிறான்; தன்னைச் சூழ்ந்துள்ள மனிதர்களை உணர்கிறான். தன்னை அறிய உதவுவதே எழுத்தின் –வாசிப்பின் வேலை என்பதற்குள் தன்னைச் சுற்றியுள்ள சூழலை ஒதுக்கி விட முடியாது.
தான் எழுதும் எழுத்துக்குள் தனது இருப்பைக் கொஞ்சமும் காட்டிக் கொள்ளாமல், தான் உருவாக்கும் பாத்திரங்களின் இயல்பான மொழிக் கூறுகளை மட்டுமே தருவதே பூமணியின் எழுத்து முறை. அதனை வாசிப்பது கவனமாகத் தொகுக்கப் பட்ட ஆவணப் படத்தைப் பார்க்கும் அனுபவத்தை தரக்கூடியது. அவரது நாவல்களின் காட்சி அடுக்குகள் வெளியையும் காலத்தையும் மாற்றும் நாடக உத்தியின் வழியாகவே மாறுகின்றன.  காலத்தை அதிகமும் குழப்பாமல் நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குள் போய் விட்டு நிகழ்காலத்திற்குத் திரும்பி விடும் ஒற்றை வளைவுகளே அவரது எழுத்தில் உள்ளன. அதனால் தான் அவரது நாவல்கள் எளிய கதை சொல்முறை கொண்டதாகத் தோன்றுகின்றன. அவரது விவரிப்பு முறையை வாசித்துக் கொண்டே போகும்போது கதை நிகழும் களனின் அனைத்துப் பரப்பும் கண் முன் விரிவதோடு, பாத்திரங்களின் இருப்பும் அசைவும் கூட அதனதன் அளவில் எழுதப்பட்டுள்ளன என்பதை முதல் வாசிப்பிலேயே புரிந்து கொள்ள முடியும்.
இந்தத் தன்மை அவரது முதல் நாவலான ’பிறகு’வில் காணப்படுவதைக் காட்டிலும் ’வெக்கை’யில் கச்சிதமாக வெளிப் பட்டுள்ளது. மொழிநடை சார்ந்த கச்சிதத் தன்மையை உருவாக்க அவருக்குப் பயன்படும் முக்கியமான மொழிக் கூறாக இருப்பன உரையாடல் களே. இதுவும் நாடக இலக்கியத்தின் அடிப்படைகளில் ஒன்றுதான். குறிப்பிட்ட சூழலில் இருக்கும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பாத்திரங்கள் ஒன்றோடொன்று பேசிக் கொள்வதை கதை சொல்லியின் இடையீடின்றி எழுதிக் காட்டியதில் தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில் பூமணியே மிக முக்கியமானவர். அவரது பல சிறுகதைகள் கதைசொல்லும் நபரே இல்லாமல், வெறும் உரையாடல்கள் வழியாக நகர்ந்து முடிந்து போவதாக அமைந்துள்ளன. சிறுகதைகளில் பாத்திரங்களின் முரண்பாட்டை வெளிப்படுத்த உதவும் உரையாடல் வடிவம் மொழிசார்ந்த கச்சிதத் தன்மையைத் தாண்டி கதை நிகழும் கால எல்லையை உணர்த்தும் விதமாக நகர்த்தப் பட்டுள்ளதை வெக்கை நாவலை வாசிக்கும்போது உணர முடியும்.
அதிகாரத்தின் குறியீடாக நாவல் முழுக்கச் சுட்டப்படும் வடக்கூரான் கொலை செய்யப்படும் நிகழ்வோடு தொடங்கும் வெக்கை நாவல் சிறுவன் சிதம்பரமும், அவனது அய்யாவும் அடுத்த எட்டு நாட்களுக்கு எவ்வாறு போலீஸ்காரர் களிடமிருந்து தப்பித்துத் தலைமறைவாக இருந்தார்கள் என்பதைத் தான் காட்சிப் படுத்துகிறது. அத்துவானக் காட்டில் இருக்கும் இடிகிணறு, கமலைத்திட்டு, மலைப் பாறை இடுக்கு, பன்றி ஒரு பக்கம் உருமிக் கொண்டே இருக்கும் கரும்புத் தோட்டம், கண்மாய்க்குள் இருக்கும் திட்டு, ஆள் நடமாட்டமில்லாத கோயில், அதன் பக்கத்தில் இருக்கும் மரம் என ஒவ்வொரு நாளும் ஓரிடமாக அலைந்து எட்டாம் நாள் கோர்ட்டில் ஆஜராவதற்குத் தயாராகிறார்கள்., அப்படி அலையும் போது பழைய நினைவுகளையும் குடும்ப வரலாற்றையும் தந்தையும் மகனுமாகப் பேசிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் அலைவதாக நாவல் நகர்கிறது. அந்த எட்டு நாட்கள் தான் நாவலின் கால அளவு. ஆனால் நாவலை வாசிக்கும் ஒருவருக்கு சிதம்பரத்தின் மூன்று தலைமுறைக் கதையைப் பல பத்தாண்டுகளின் கதையை வாசித்த அனுபவம் கிடைக்கிறது என்பதும், அந்த மூன்று தலைமுறையிலும் உறைந்து கொண்டிருக்கும் வெக்கையின் வெடிப்பே சிதம்பரத்தின் செயல்பாடு எனக் காட்டியதும் தான் பூமணியின் எழுத்து சாதனை. .
நாடகத்தன்மை சார்ந்து சிறப்பான கூறுகள் என நான் கருதும் இந்த அம்சங்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கிய வகைக்கும் தனித்தனியான சொல் முறையும் கட்டமைப்பும் இருக்கிறது என நம்பும் விமரிசகர்கள் வெக்கை நாவலின் கட்டமைப்பை சினிமாத் தனமானது எனச் சொல்லக் கூடும். சினிமாத் தனத்திலும், அதிர்ச்சிக் காட்சியில் தொடங்கி ஆர்வத்தைத் தக்க வைக்கும் உத்தியில் அமைந்த சினிமாத்தனம் நிரம்பிய சாதாரணக் கதை என்று கூடச் சொல்லலாம். ஆரம்பம், முரண், முரண் வளர்ச்சி, உச்சநிலை என வளரும் நாடகம் போல அல்லாமல், உச்சநிலையில் தொடங்கி அதன் விளைவுகள், பின் விளைவுகள், முன் காரணங்கள் என அமைக்கப்படும் ஆர்வமூட்டும் திரைக்கதை அமைப்பைப் போன்ற கட்டமைப்பையே வெக்கை நாவல் கொண்டிருக்கிறது என்பதை நானும் மறக்கவில்லை.ஆனால் அந்த அமைப்பு வலிந்து உருவாக்கப்படும் நாயகத்தனத்தை நோக்கியோ, நம்ப முடியாத முடிவை வாசிப்பவர்களிடம் திணித்துவிடும் நம்பிக்கையோடோ அமைக்கப் படவில்லை. அப்படி அமைக்கப் படுவது வெகுமக்கள் சினிமாவின் தந்திரம் அல்லது சூத்திரம். அத்தகைய கூறு எதுவும் வெக்கையில் இல்லை என்பதே நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒன்று.
ஆர்வத்தைத் தூண்டும் வன்முறைக் காட்சியொன்றைச் சித்திரித்துக் காட்டுவதன் மூலம் வாசகனைத் தன் எழுத்தின் பால் ஈர்த்துக் கட்டிப்போட வேண்டும் என்னும் நோக்கம் நாவலாசிரியருக்கு இல்லை. அப்படியொரு நோக்கம் இருந்திருந்தால், அதிர்ச்சையை அளித்து ஆர்வமூட்டும் அந்தக் காட்சியை-வடக்கூரான் கொலை செய்யப்படும் காட்சியை- ரத்தமும் சதையுமாக ஆசிரியர் கூற்றில் சொல்லியிருப்பார். அப்படிச் சொல்ல முனையும் போது அதற்கான வார்த்தைகளை உருவாக்கிப் புனைவுமொழியொன்றைக் கட்டியெழுப்பவும் வாய்ப்புகளுண்டு. ஆனால் அப்படிச் செய்வதை கவனமாகத் தவிர்த்து விட்டு, வன்முறையில் ஈடுபட்டவனின் நினைவோட்டமாக அந்தக் காட்சியை எழுதிக் காட்டியுள்ளார் பூமணி. ஒரு மனிதனின் மனவோட்டத்தில் ஐயங்களும் எண்ணங்களும் மாறிமாறி உருவாகிக் காட்சிப் படுத்தலைத் தவிர்த்து விடும் வாய்ப்புகளே அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
வடக்கூரானை வெட்டிச் சாய்த்த செலம்பரம் (சிதம்பரம்) என்னும் பதினைந்து வயதுச் சிறுவனின் நினைவின் வழியாக அந்தக் காட்சி சொல்லப்படுகிறது. கையை மட்டும் துண்டாக்க நினைத்ததற்கு மாறாக அரிவாள் நுனி, வடக்கூரானின் விலாவிலும் மாட்டிக் கொள்ள, அவன் வெட்டப்பட்ட கிடாயைப் போலக் கத்திய காய்ச்சியும், தன்னைத் துரத்தியவர்களைக் கையெறி குண்டுகள் மூலம் புகையெழுப்பித் தப்பித்து வந்து ஊரை விட்டு வெளியேறித் தப்பித்ததையும் அவனே நினைத்துக் கொள்ளும் விதமாகவே நாவல் தொடங்கப்பட்டுள்ளது.  குரூரமான கொலைக் காட்சி ஒன்றைக் காட்சிப் படுத்தும் வாய்ப்பு இருந்த போதும் அதனைத் தவிர்த்து விட்டு நினைவோட்டமாகச் சொல்வதை -எச்சரிக்கையாகக் கையாண்டுள்ளதைச் சாதாரணமாகக் கருதி விடக்கூடாது. இந்த எச்சரிக்கை வாசகர்களிடம் உணர்ச்சி வசப்படச் செய்தலைத் தவிர்க்கச் சொல்லும் எச்சரிக்கையாகும். அத்தோடு கதாபாத்திரத்தின் மன ஓட்டம் எழுப்பும் நியாயங்களுக்குள் சேர்ந்து வாசகர்களும் இயங்க வேண்டும் என எதிர்பார்க்கும் நோக்கம் கொண்டதும் கூட.
வாசகர்களை உணர்ச்சி வசப்படும் செயல்பாட்டுக்குள் தள்ளாமல் மன ஓட்டத்தோடு சேர்ந்து சிந்திக்கும்படி தூண்டும் எழுத்தே தேர்ந்த எழுத்தின் அடையாளம் தனது அண்ணன் கொலை செய்யப்படக் காரணமான வடக்கூரானைக் கொன்று பலி வாங்கிய சிதம்பரத்தின் மனதுக்குள் இருந்த வெக்கையைப் பழிக்குப் பழி வாங்கும் தனிநபர் வன்முறை சார்ந்த உணர்வு என நினைக்கும் வாசிப்பனுபவத்தைச் சிலர் அடையக்கூடும். தன் பூர்வீகக் கிராமத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் ஒருவனைக் கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனையை அனுபவித்திருக்கும் சிதம்பரத்தின் அய்யாவுக்குள் இருந்த அதே கொலைவெறியும், வன்முறை உணர்வுமே சிதம்பரம் என்னும் பதினைந்து வயதுச் சிறுவனிடமும் வெளிப்பட்டுள்ளது என்பதையே பூமணி எழுதிக் காட்டியுள்ளார் என நாவலின் நிகழ்ச்சிக் கோர்வைகளைக் கொண்டு ஒருவித எதிர்மறை வாசிப்பனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.
நிலவுடைமையாளர்களின் சொத்து சேர்க்கும் ஆசைக்கு எதிராக இருக்கும் நபர்களை ஆள் வைத்து அடிக்கும் நிலக்கிழார்களைப் பழி வாங்குவதற்குக் கொலையை தவிர வேறென்ன வழி இருக்க முடியும்? என்று கேட்கும் தனிநபர் அழித்தொழிப்பை நியாயப்படுத்தும் விதமாகவே பூமணியின் வெக்கை நாவல் அமைந்துள்ளது எனச் சொல்பவர்கள் இருக்கக் கூடும். அப்படிச் சொல்வதைச் சிலர் பாராட்டாகவும் நினைக்கலாம்; இன்னும் சிலர் வன்முறையை ஆதரிக்கும் எழுத்து என்ற எதிர்மறையை அதனோடு இணைத்துக் குறையாகவும் சொல்லலாம். பாராட்டானாலும்சரி, குறை கூறலானாலும்சரி அப்படிச் சொல்பவர்கள் நாவலின் ஒரு அம்சத்தை மட்டுமே வாசித்திருக்கிறார்கள் என்பதே சொல்லப்பட வேண்டிய ஒன்று. சிதம்பரமும் அவனது அய்யாவும் அலையும் தலைமறைவு வாழ்க்கையும், அவர்கள் நினைத்துக் கொள்ளும் பழைய நிகழ்ச்சிகளும் மட்டுமே அவர்களின் வாசிப்புக்கான கூறுகளாக இருந்துள்ளன. அவ்வாறு வாசிக்காமல், அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் உரையாடல்களையும், அதனூடாக ஓடும் நினைவோட்டங்களையும், அவற்றில் வெளிப்படும் நியாயங்களையும் சேர்த்தே வாசிக்க வேண்டும். அவ்வாறு வாசிக்கும்போதே வடக்கூரான் என்ற நபரைப் பூமணி எத்தகைய பாத்திரமாக வாசகர்கள் முன் வைக்க விரும்பியுள்ளார் என்பது புரிய வரும்.
தொடக்கத்திலேயே வெட்டிச் சாய்க்கப்பட்டு விட்ட பாத்திரமாக இடம்பெறும் வடக்கூரான் என்னும் அந்தப் பாத்திரம் பாரம்பரியமான பெரும் விவசாயிகளையே ஏமாற்றி ஜின்னிங் பாக்டரி முதலாளியாக மாறும் புதிய சக்தி,  விவசாயப் போராட்டத்தின் போது அதிகாரத்தைத் தனது கையில் எடுத்து அப்பாவி வண்டிக்காரனைச் சுட்டுக் கொன்றதோடு அதற்குத் தண்டனை வாங்கித் தர வேண்டிய காவல்துறையையும் நீதித்துறையையும் தனக்கு ஏவல் செய்யும் அமைப்புகளாக மாற்றிக் கொண்டவன். நியாயமாகச் செயல்பட வேண்டும் என நம்பும் பழைய மனிதர்களை அடாவடியாக ஓரம் கட்டிவிட்டுக் காசு கொடுத்துக் கையாட்களையும் அடியாட்களையும் உருவாக்கிப் பொதுவெளியின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருப்பவன்;சாதாரண வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்திக் கொண்டு வரும் அதிகார மையம். இத்தகைய சக்திகளை வளரவிடாமல் தடுக்க வேண்டிய அரசு அமைப்புகளே அவர்களின் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் பயந்து போகும்போது தனி மனிதர்களின் மனத்திற்குள் வெக்கைதான் பெருக்கெடுக்கிறது என உணர்த்துவதையே இந்நாவலில் பூமணி செய்துள்ளார்.  
வடக்கூரானின் தோட்டத்தில் ஆடு மேய்ந்ததைக் காரணமாக்கித் தன் மூத்த மகனைக் கொன்றதன் காரணம் அந்தத் தந்தைக்குத் தெரியும். வடக்கூரானின் நிலங் களுக்குள் இருக்கும் தனது துண்டு நிலத்தை வடக்கூரானுக்கு விற்கத் தயாராக இல்லை என்று மறுத்ததுதான் அந்தக் கொலைக்குப் பின்னுள்ள காரணம். தனது பிடிவாதத்தால் மகனைப் பலி கொடுத்து விட்ட ஒரு தந்தையின் மனதுக்குள் இருந்த வெக்கையின் அளவுக்குச் சற்றும் குறையாமல் அவனது இளையமகன் – பதினைந்து வயதுச் சிதம்பரத்திடமும் வெக்கை தகித்தது மேலெழும்புகிறது. தனது மூத்த மகனைக் கொன்று புதருக்குள் தூக்கிப் போட்டுவிட்டு ஊர் நியாயம் பேசித் திரியும் வடக்கூரானைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்குத் தந்தை வந்த சேர்ந்தது போலவே தனது தமையனின் இருப்பை இல்லாமல் செய்தவனின் கையை வெட்டி அலைய விட வேண்டும் எனத் தம்பி சிதம்பரமும் முடிவெடுக்கிறான். ஆனால் கைக்கு மட்டும் வைத்த குறி தவறி ஆளையே காலி செய்து விடுகிறது. இதன் தொடர்ச்சியாக நடக்கும் அலைவுகளும் தலைமறைவு வாழ்க்கையும் சிதம்பரம் குடும்பத்திற்கு வடக்கூரானின் அதிகாரம் நேரடிப் பகையாக மாறியது போலக் காட்டப்பட்டாலும், வடக்கூரானின் இருப்பு அந்தச் சிறு நகரத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கே துயரமாக இருந்தது என்பதையே சிதம்பரத்தின் நினைவோட்டங்கள் வழி பூமணி விவரிக்கிறார்.
விவசாயிகள் போராட்டத்தில் நேரடியாகத் தொடர்பில்லாத அப்பாவி வண்டியோட்டியைச் சுட்டுக் கொன்று பயத்தின் வழியாக அதிகாரத்தை உருவாக்கும் வடக்கூரான் வெறும் சொத்து சேர்க்க ஆசைப்படும் நிலக்கிழார் மட்டுமல்ல; பொது வெளியில் அனைத்து விதமான அமைப்புகளையும் சீர்குலைத்துத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் புதுவகை மனித எதிரி என்பதைத் தந்தையும் மகனும் பேசும் பேச்சுகளில் மட்டுமல்லாமல், சிதம்பரத்தின் மாமா, அத்தை, அம்மா என ஒவ்வொருவரின் உரையாடல் வழியாகவும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். வடக்கூரான் கொலைக்குப் பிந்திய தலைமறைவு வாழ்க்கையில் சிறுவன் சிதம்பரத்தின் மனத்திலும், அவனது அய்யாவின் மனத்திலும் எழும்பி எழும்பி அடங்காமல் தகிக்கும் கொதிப்பின் வெப்பம் தான் வெக்கை நாவலின் சாரமும் அர்த்தமும். அந்தக் கொதிப்பை உருவாக்குபவனாகவும், உரமூட்டி வளர்த்தவனாகவும் சுட்டப்படும் வடக்கூரான் நாவலில் எதிர்நிலைப் பாத்திரமாக நிறுத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும், தனது எழுத்தின் மூலம் அவன் சிதம்பரத்திற்கும் அவனது குடும்பத்திற்கும் மட்டுமே எதிரானவன் அல்ல என்பதைப் பூமணி கவனமாக உருவாக்கியுள்ளார். அந்தக் கவனம் சின்னச் சின்னக் குறிப்புகளால் வடக்கூரான் போன்றவர்கள், உழைக்கும் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதோடு, அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டிய அரசதிகார அமைப்புகளைத் தங்களின் சொந்த நலனுக்கேற்றபடி இயங்கும் அமைப்புகளாக மாற்றும் அபாயகரமான சூழலை உருவாக்குபவர்கள் என்பதையும் உணர்த்திக் காட்டுகின்றார். அடிப்படையான நீதி, நியாயங்கள் என எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மனித உறவுகளையும் உயிர்களையும் துச்சமாக நினைக்கும் மனிதர்களின் வகை மாதிரி வடக்கூரான்.
1960 களுக்குப் பின்னர் உருவான வடக்கூரானின் நகல்கள் தான் இன்று தமிழ்நாட்டின் வாழ்க்கை யைச் சீரழித்துக் கொண்டிருக்கும் அரசியல் பிம்பங்கள். கிராமம், நகரம் என எல்லா வெளிகளையும் ஆக்கிரமித்து, நெறிமுறை களின்படி இயங்க வேண்டிய ஜனநாயக அமைப்புகளைச் சிதைத்து, அவற்றைத் தங்களுக்குச் சேவகம் செய்யும் நிறுவனங்களாக ஆக்கி விட்டவர்கள். தமிழ்நாட்டின் பேரரசியல் தொடங்கி நுண்ணரசியல் வரை செயல்படும் வடக்கூரான்களைத் தோற்றக் களனிலேயே அடையாளப்படுத்திய வெக்கை நாவல் இப்போதும் வாசிக்க வேண்டிய நாவல் என்பதே எனது பரிந்துரை.

========================================  நன்றி: தீராநதி/ பிப்ரவரி/2012


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை