: 105

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி

ஜெயகாந்தனின் பாரிஸுக்குப் போ: காலத்தை எழுதுவதற்கான முன்மாதிரி


விடுதலைக்குப் பிந்திய இந்திய சமூகத்தின் திசை வழிகள் சரியானவை தானா? என்ற கேள்வியைப் பல்வேறு தளங்களில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்த கால கட்டமாக 1950-களின் பின் பாதியையும் 60-களின் முன்பாதியையும் சொல்ல வேண்டும்.. சிந்தனை மற்றும் பண்பாட்டுத் தளத்தில் ஐரோப்பிய மாதிரிகளை இந்தியர்கள் உள்வாங்க வேண்டும் என நம்பிய ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக்காலம் அது. அவரது நிலை பாடுகளுக்கு எதிராக இருந்தவர்கள் பண்பாட்டு வெளியை முன்னிறுத்திப் பலவகையான சொல்லாடல்களை உருவாக்கினார்கள். குறிப்பாக  ஐரோப்பிய வகைப்பட்ட கல்வி நிறுவனங்கள் மீது அதிகப் படியான எதிர்ப்புணர்வுகளை வெளிப் படுத்தினர்.
மேற்கத்தியக் கல்வி முறையின் அடிப் படைக் கோட்பாட்டையும் கற்பிக்கும் முறை யியலையும் விட்டுவிட்டு வெறும் பணியாளர் களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என விமரிசனம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு மனிதருக்குமான பொது வெளியைப் பற்றிய நினைவுகளை உருவாக்காமல் அவர்களைப் பற்றியும், அவர்களது தனித்த இருப்பு பற்றியும், தனிமனித மேம்பாடு பற்றியும் மட்டுமே சிந்திக்கத் தூண்டும் இந்தியக் கல்விமுறைக்கு மாற்றாக, ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளி ஒன்று இருக்கிறது என்பதை உணர்த்தி, அப்பரப்பில் அவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளும், செயல்பாடுகளும் எத்தகையன என உணரச் செய்வதை நோக்கமாகக் கொண்டது ஐரோப்பியக் கல்வி முறை. இந்த அடிப்படைக் கோட்பாட்டின் மீது விமரிசனங்கள் வைக்க முயலாமல், பயன்பாட்டை நோக்கிய விமரிசனங்களே முன் வைக்கப்பட்டன. மெக்காலே என்ற நபரின் பெயரால் அக்கல்வி அந்நியச் சரக்காகத் தூற்றப்பட்டது. அந்நியச் சரக்கு என வகைப்படுத்தப்பட்டதால், அது முன் வைத்த கலை, இலக்கியக் கோட்பாடுகளும், சுதந்திரச் சிந்தனைகளும் கூட அந்நியச் சரக்குகளாகவே அறியப்பட்டன; விலக்கி வைக்கப்பட வேண்டியனவாக முன்னிறுத்தப்பட்டன. அந்தக் குரல்கள் அறுபதுகளுக்குப் பின் அதிகமாகி 21 ஆம் நூற்றாண்டில் உச்சநிலைக்குப் போயிருக்கிறது.  .
மேற்கத்தியக் கல்விமுறை, கலை இலக்கியப் பார்வை, நாகரிகம் பண்பாடு போன்றவற்றை விமரிசனம் செய்வதாகப் பாவனை செய்பவர்கள், அவையெல்லாம் ஐரோப்பாவுக்கு மட்டுமே பொருந்தக் கூடியன எனவும், இந்தியாவின் சூழலும் சமூக அமைப்புமுறையும், கலை இலக்கியப் பார்வைகளும் அவற்றை விடவும் மேன்மையானவை என விதந் தோதுகின்றனர். இந்தியக் கலை,இலக்கியங்களின் ஆழம், அதன் நோக்கம் போன்றவற்றை முன் நிறுத்தி காலனியச் சாயல் கொண்ட அனைத்தும் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் என அறுபதுகளில் பேசிய பேச்சுக்களின் தொடர்ச்சியே 1990 கள் தொடங்கி மதப் பெரும் பான்மை வாதமாகவும், அடிப்படை வாதங்களாகவும் உருமாற்றம் பெற்றுள்ளன என்பதைப் பலரும் உணர மறுத்து வருகின்றனர். நாம் வாழும் சமூகத்தின் அதிகாரத்துவத் தளங்களே தனிமனிதனின் அன்றாட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கிறது என்ற நவீனச் சிந்தனையையொத்த கருத்தை ”உலக வாழ்வில் மனிதன் செய்யும் செயல்கள் எதற்கும் அவனது நடவடிக்கைகளும் நினைப்பும் காரணம் அல்ல” எனச் சொல்லும் சமயம் சார்ந்த தத்துவ நிலைப்பாட்டோடு சமன்படுத்தி இந்தியத் தத்துவ தரிசனத்தின் பழைய முகத்திற்கு முலாம் பூசும் முயற்சிகளும் கூட இந்தப் பின் நவீனத்துவக் காலகட்டத்தில் நடக்கிறது..
தனிமனித சுதந்திரத்தை முதன்மைப் படுத்திய ஐரோப்பிய வாழ்க்கை முறை மீது கடும் விமரிசனங்களை முன் வைப்பவர்கள் பாரம்பரியப் பெருமை, குடும்ப அமைப்பின் கட்டுதிட்டம், அது தந்த/ தரும் பாதுகாப்பு ஆகியவற்றை முன் நிறுத்துவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படியான எதிரிணையைக் கட்டமைத்து இந்தியத் தனத்தின் மேன்மையைப் புனைவாக்கி, மேற்கத்தியச் சாயல்களை விரட்டி விடலாம் என்பது அவர்களின் எண்ணம். இத்தகைய எண்ணங்களுக்கு நவீனத்துவச் சிந்தனையாளர்கள் நேரடியாக மறுப்புக் கருத்துகளைத் தந்துள்ளனர் என்றாலும், அதனையே படைப்பின் விவாதமாக ஆக்கிச் சாதனை படைத்தவர் ஜெயகாந்தன். அவரது பல படைப்புகளில் மேற்குலகமும் இந்திய வாழ்க்கையும் சந்திக்கும் புள்ளிகளை நாம் வாசிக்கலாம். என்றாலும் ஆகக் கூடிய விவாதங்களைக் கொண்ட படைப்பாக இருப்பது அவரது  பாரிஸுக்குப் போ நாவல் தான்.
1925 இல் பிறந்து பள்ளிப்பருவம் தொடங்கி லண்டனில் கல்வி கற்று, பிரெஞ்சுப் பெண்ணொருத்தியோடு வாழ்க் கையைப் பகிர்ந்து கொண்டு, பின்னர் விவாகரத்துப் பெற்று, தன் இசைக் கோர்வைகளால் மதுபான விடுதிக்கு வருபவர்களுக்குக் கிளர்ச்சியூட்டி வாழ்ந்த சாரங்கன் தனது நாற்பதாவது வயதில் திரும்பவும் இந்தியா வருகிறான். என்பதில் பாரிஸுக்குப் போ நாவல் தொடங்குகிறது.. மேற்கின் மனிதனாக வந்த சாரங்கன் அவனது குடும்பத்தோடும் ஒட்ட முடியாமல், அவனது கருத்தை ஏற்கும் நண்பர்கள் குழாமையும், சமூக வெளியையும் கண்டடைய முடியாமல், திரும்பவும் பாரிசுக்குப் போய்விடுவது எனக் கிளம்பும் நிலையில் ஒரு சிறு நம்பிக்கைக் கீற்று, தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பால், வங்காளத்திலிருந்து வந்து தடுத்துத் தன் பக்கம் திருப்பிக் கொண்டது என்பதாக நாவல் நிறைவடைகிறது.  ஐரோப்பியக் கல்வியின் மீது ஏற்பட்ட மதிப்பினால் அதனைப் பெறுவதற்காகத் தனது இரண்டாவது மகன் சாரங்கனைத் தனது நண்பரோடு  அனுப்பி வைக்கும் சேஷையா  கலையையும் கலைஞனையும் மதிப்பதோடு புனிதமாகக் கருதியவர். ஆந்திர மாநிலத்தின் சமஸ்தான ராஜாவின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல், ஊரை விட்டுக் கிளம்பி வந்து புரட்சிக்காரர். ஐரோப்பிய அறிவியல் கல்வியை மட்டும் கற்றுக் கொண்டு மருத்துவராகவோ, அறிவியல் அறிஞனாகவோ இந்தியா திரும்புவான் என்ற நம்பிக்கையில் லண்டன் அனுப்பப்பட்ட சாரங்கன் முழுமையாக ஐரோப்பியனாக மாறிப் போகிறான். அறிவியலைக் கற்பதற்குப் பதிலாகக் கலையில் ஏற்பட்ட ஈடுபாடே அவனை அவ்வாறு மாற்றுகிறது. இசைக்கலையை, செவ்வியல் வடிவமாகவும் புனிதமானதாகவும், உயர்வட்டத்தின் ரசனைக்குரியதாகவும் கருதும் இந்திய மனோபாவத் திற்கெதிராக மாறாக மேற்கத்திய இசை பெருங்கூட்டத்திற்குக் கிளர்ச்சியை உண்டாக்கும் ஒன்றாக இருப்பதாக நம்புகிறான். அத்தகைய அம்சங்கள் இந்தியக் கிராமத்து மனிதர்களின் பாடல்களிலும் இசைகளிலும் இருப்பதாக அவன் உணர்கிறான். மேற்கத்திய இசையின் பால் ஏற்பட்ட ஈடுபாடு, மேற்கத்தியக் காதல் வாழ்வின் பால் ஏற்படும் ஈடுபாடாக மாறி, அமைப்புகளை ஏற்காத நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. ஐரோப்பியனாகவே மாறிப்போன தனது மகன் சாரங்கன் இந்தியா திரும்புவதை விட அங்கேயே தங்கிவிடுவதே மேலானது என நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் மகன் வருவதாகச் சொன்னபின் மறுதலிக்கும் மனமில்லாமல் ஏற்றுக் கொண்டு, இந்திய வாழ்க்கையின் அர்த்தங்களை அறியச் செய்த ’இந்தியனாக’ மாற்றிவிட முயல்கிறார். இந்திய வாழ்க்கையின் மீது கொண்ட பற்றும் இந்தியப் பாரம்பரியம் மற்றும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையும் தன் மகன் ஐரோப்பாவுக்கே திரும்புவதைத் தடுக்க முயலாமல் .பிடிவாதம் கொள்ளச் செய்கிறது. பாரிஸுக்குப் போகிறேன் என்று சொன்ன போது இறுகிய மனத்தோடு அனுப்பி விடுவே விரும்புகிறார் என்பதாக நாவலின் கதைக்களமும் கட்டமைப்பும் அமைந்துள்ளது.
தந்தைவழிக் குடும்ப அமைப்பின் ஆகக்கூடிய அதிகாரம் கொண்ட பிரதிநிதியாக உருவாக்கப் பட்டுள்ள சேஷையா என்ற தந்தைக்கும், குடும்ப அமைப்பின் கட்டுகள் எதனையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத – தனிமனித சுதந்திரத்தின் ஆகக்கூடிய அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டுள்ள மகன் சாரங்கனுக்கும் இடையிலான முரண்பாட்டுச் சிக்கலாகப் பாரிஸுக்குப் போ நாவலை சாதாரண வாசிப்பில் அர்த்தப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதன் மூலம் இந்தியக் குடும்ப அமைப்பு- குறிப்பாகக் கூட்டுக் குடும்ப அமைப்பு, அதன் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்ற நேர்மறைக் கருத்தின் மீது விமரிசனம் வைக்கும் விதமாகவே பாரிஸுக்குப் போ நாவல் எழுதப்பட்டுள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.  எல்லா அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக் கொண்டு எல்லாருடைய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் தந்தை ஆதிக்கச் சமூகத்தின் பிரதிநிதியான சேஷையாவின் பிடிவாதத்தில் மூத்தமகன் நரசிம்மன் அவன் மனைவி-லீலா, மகள் பாலம்மாள்,அவளது மகன் முரளி, இவர்கள் இருவரையும் பிரிந்து கங்கா என்னும் நாட்டியக்காரியோடு வாழும் மருமகன் நரசய்யா, திருமணமான ஒருவருடத்திற்குள்ளாக இறந்து போன கடைசி மகன் ரங்கய்யாவின் மனைவி லட்சுமி என ஒவ்வொருவரும் தங்கள் மனக்குமுறலை வெளிக்காட்ட முடியாமல் தவித்தார்கள் எனக் காட்டவே இந்த நாவல் எழுதப்பட்டது எனப் புரிந்து கொள்வதில் பிழையொன்றும் இல்லை. ஆனால் நாவலின் தொடக்கத்திலேயே –சாரங்கனின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்று நட்பு பாராட்டி, அவனை இந்தியாவிலேயே இருக்க வேண்டியவனாக – இந்தியர்களிடம் ஏற்பட வேண்டிய கருத்து மாற்றத்துக்கு உழைக்க வேண்டியவனாக மாற்றிக் காட்ட விரும்பும் லலிதா- மகாலிங்கம் தம்பதியரின் பாத்திரப்படைப்பு பாரிசுக்குப் போ நாவலைச் சாதாரணக் குடும்பக் கதையாகப் புரிந்து கொள்ளாமல் தடுத்து விடுகிறது.
ஆண்-பெண் உறவு சார்ந்த கற்பு, பாலியல் அலைக்கழிப்புகள், அதன் வழியாகக் கட்டியெழுப்பப்படும் ஒழுக்கம், குடும்ப மானம் போன்றவற்றில் மரபான பழைய சமூகத்தின் மனிதர்களாக இல்லாமல் மாறிக் கொண் டிருக்கும் புதிய சமூக அமைப்பின் மனிதர்களாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கும் லலிதா-மகாலிங்கம் சேர்க்கையும், அவர்களிருவரும் சாரங்கனோடு கொள்ளும் நட்பும் நம்ப முடியாதவைகளாகத் தோன்றலாம். தன் மீது அதிகாரமற்ற அன்பையும் ஆதரவையும் காட்டும் மகாலிங்கத் திடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டுத் தன்னோடு வந்துவிடு எனச் சொல்லும் சாரங்கனின் நிலைபாட்டைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் லலிதாவின் அலைவுறு மனம் வழியாகவே ஜெயகாந்தன் பாரிசுக்குப் போ நாவலைச் சமகாலத்தை எழுதிய நாவலாக ஆக்கியிருக்கிறார்.  

லண்டனிலிருந்து சாரங்கன் எழுதிய கடிதங்களின் வழியாகவே அவனைப் புரிந்து கொண்டவளாகவும், அவனது கருத்துகளின் நிகழ்காலப் பொருத்தத்தை ஏற்பவளாகவும் இருப்பதோடு, தான் எழுதும் பத்திரிகையில் அவனது நேர்காணலை வெளியிடுகிறாள். கலை, இலக்கியம், வாழ்க்கை ஆகியவற்றின் நவீனத்துவ நிலைபாட்டை விளக்கிப் பேசும் அந்த நேர்காணலோடு, ஓவியக்கல்லூரிக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைத்துச் சென்று நவீன மனிதனின் வருகையைப் பலருக்கும் அறியப்பண்ணுகிறாள். தான் பொறுப்பில் இருக்கும் மாதர் சங்கத்திற்கும் அழைத்துப் போகிறாள். அத்துடன் இசை பற்றிய கருத்துகளை நூலாக்கும் வகையில் அவனது ஆங்கிலக்கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கி வெளியிடுகிறாள். இந்த ஈர்ப்பின் போது அவனது கருத்துகளுக்கு மனதைத் தந்தவள், அவனது தனிமைத் தவிப்புக்கும் ஒதுக்கப்பட்ட நிலைக்கும் மருந்தாகத் தனது உடலையும் தந்து சாரங்கனின் ஆதரவு சக்தியாகவே மாறுகிறாள். தனது கணவனான மகாலிங்கத்தோடு இணைந்த நிகழ்காலக் கதையோடு, தான் ஏமாற்றப்பட்டதோடு, அவமானப்படுத்தப்பட்டு விரட்டப் பட்ட கடந்த காலத்தையும் கூடப் பகிர்ந்து கொள்கிறாள். குடும்பம், சமூக நிறுவனங்கள், இதழியல் அறம் என அமைப்புகளை ஏற்றுக் கொண்டு வாழ்பவள் போல வெளியில் காட்டிக் கொள்ளும் லலிதா உண்மையில் சாரங்கனைப் போல அமைப்புகளோடு முரண்பட்டு வாழ்பவள் என உணர்ந்து கொள்கிறாள். அந்தப் புரிதலே மகாலிங்கத்திடமிருந்து பிரிந்து ’என்னோடு வந்து விடு’ எனச் சாரங்கன் கேட்டபோது,. அவன் புரிதல் சரியானது என நம்புகிறது. ஆனாலும் மகாலிங்கத்தின் அன்புக்கு முன்னால் தனது சுயநலத்தை – சுதந்திரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் தைரியம் அவளுக்கு இல்லை. அந்தத் தைரியமின்மையே சாரங்கன் திரும்பவும் பாரிஸுக்குப் போவதாகச் சொன்ன போது தடுக்கும் எத்தணிப்புகளைச் செய்யாமல் வழியனுப்பும் நிலைக்குப் போகிறது.
********************* 
இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி இலக்கிய விமரிசனம் பற்றிய பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவாதத்திற்குள்ளாக்கப்படும் எளிய தொடர்,எளிய தொடராக இருப்பதனாலேய தவறான புரிதலுடன் மேற்கோள் காட்டப்படும் தொடரும் கூட. கலை, இலக்கியங்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் இயல்புகள் எவ்வாறு அமைய வேண்டும் என இலக்கியக் கொள்கைகளைப் புதிதுபுதிதாக உருவாக்கி விவாதிப்பவர்கள் மேற்கத்தியக் கல்வியாளர்கள். செவ்வியல், புனைவியல், இயற்பண்பியல், நடப்பியல் என வரிசையாக வந்த இலக்கியக் கொள்கைகளுக்குப் பின் உருவான மிகைநடப்பியல்,வெளிப்பாட்டியல், மனப்பதிவியல், குறியீட்டியல், அபத்தவியல் போன்ற பலவற்றையும் நடப்பியல் அல்லாதன என வகைப்படுத்தி அவற்றிற்கான விளக்கங்களையும் இலக்கியத்திறனாய்வு நூல்கள்  தருகின்றன.

இந்த உலகம் –உருவமாகவும் அருபமாகவும் இருக்கும் இந்த உலகம்- அனைத்து மக்களுக்கு முரியனவையே அன்றி ஆசிர்வதிக் கப்பட்ட ஒருசில நபர்களுக்கோ, குடும்பங்களுக்கோ உரியதல்ல என்ற கருத்தியல் உருவாக்கத்தோடு உடன் பிறந்த கலை இலக்கியக் கோட்பாடே இயற்பண்பியல் வாதமும் நடப்பியல் வாதமும். ’கலை, இலக்கியங்கள் அனைத்து மக்களைப் பற்றியதாக’ இருக்க வேண்டும்’ எனவும், ’மக்களை நோக்கியதாக இருக்க வேண்டும்’ எனவும் இவ்விரண்டுமே வலியுறுத்தின என்றாலும், இரண்டுக்கும் அடிப்படையான குணவேறுபாடு உண்டு. நடப்பு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுவதில் அதிக அக்கறை காட்டும் இயற்பண்பு வாதம், அதற்காக நுட்பமான விவரணைகளையும் பேச்சுமொழியையும் தனது கருவியாகப் பயன்படுத்தியது. ஆசிரியன் சொல்வது நூறு சதவீதம் உண்மை எனக் காட்டுவதற்காக காலம், வெளி, பாத்திரங்கள் என அனைத்தையும் வாசகர்களின் அசலாக அது படைத்துக்காட்ட விரும்பியது.
நடப்பியல்வாதமோ நம்மைச் சுற்றி நடப்ப தெல்லாம் உண்மை எனக் காட்டுவதை விட, எது நடக்க வேண்டுமோ அதுதான் முக்கியம் என்பதில் தீவிரம் காட்டியது.  ”எது நடக்க வேண்டும்” என்று தீர்மானிப் பதில் ஆசிரியனின் பார்வை அல்லது மாற்றம் பற்றிய அவனது விருப்பம் இருக்கிறது என்பதை நாம் மறந்து விட முடியாது. அதனால் நடப்பியல் வாதம் லட்சியவாத எழுத்தை முன் மொழிகிறது என்ற விமரிசனமும் உண்டு. இந்த விமரிசனத்தை வைப்பவர்கள்  இயற் பண்பு வாதத்திலும்கூட விவரணைக் காகக் கவனிக்கும் கண்கள் ஆசிரியனின் கண்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். ஆசிரியனின் கண்கள் எப்போதும் நிலைக் கண்ணாடியைப் போலத் திருப்பிய திசையில் அசைவனவற்றையும் அசையாதனவற்றையும் அப்படியே திருப்பிக் காட்டாது என்பதை உணர்ந்தாக வேண்டும். எவ்வகைப் படைப்புக் கோட் பாடாக இருந்தாலும் ஆசிரிய மையத்தை அழித்துவிட முடியாது.  ஆசிரியனின் கண்களே கண்ணாடியாக இருந்து காலத்தையும் இடத்தையும் தெரிவு செய்து வாசகர்கள் பார்க்க வேண்டிய உலகத்தைக் காட்டுகிறது. அந்த உலகம் பொதுமனத்தின் உலகத்தோடு முற்றிலும் பொருந்தாத– அவனுக்கேயான உலகமாக இருக்கும் போது வாசிப்பு மனம் அந்தப் படைப்பைக் காலத்தின் பிரதிபலிப்பாகக் கருதாமல் ஒதுக்கி வைத்து விடும். தமிழில் அப்படி ஒதுக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலருண்டு. அவர்களை ஒதுக்கியதுபோல தன் காலத்தை எழுதுவதில் முன்மாதிரிகளை உருவாக்கியவராக அறியப்படும் ஜெயகாந்தனை சுலபமாக ஒதுக்கி விட முடியாது. அதிலும் எழுதப் பட்ட காலத்தின் சமூக அரசியல் சார்ந்த சிந்தனைத் தளத்தைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பாரிஸுக்குப் போ (1966)  நாவல் இப்போது மட்டுமல்ல இன்னும் சில பத்தாண்டு களுக்குப் பின்னும் ஒதுக்கி விட முடியாமல் வாசிக்க வேண்டிய நாவலாகவே இருக்கும்.
 நன்றி: குமுதம் தீராநதி/மார்ச்,12


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை