: 123

வரங்களும் சாபங்களும் - தொன்மங்களைத் திரும்ப எழுதுதல் எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்த

வரங்களும் சாபங்களும் - தொன்மங்களைத் திரும்ப எழுதுதல் எம்.வி. வெங்கட்ராமின் வேள்வித்தீ


பொழுதுபோக்கு எழுத்திலிருந்து தீவிர எழுத்தைப் பிரித்துக் காட்டும் வரையறைகளைக் கறாரான விமரிசன அளவுகோல்கள் கொண்டு இதுவரை யாரும் விளக்கிக் காட்டவில்லை. அப்படி விளக்கிக் காட்ட நினைக்கும் விமரிசகன் முதலில் கவனப் படுத்த வேண்டியது எழுத்தில் வெளிப்படும்காலப் பிரக்ஞை என்பதாகத் தான் இருக்க முடியும்.
அதிலும் நாவல், சிறுகதை போன்ற புனைகதை வடிவங்களில் செயல்படும் எழுத்தாளரை அவரது எழுத்தில் வெளிப்படும் காலப்பிரக்ஞை கொண்டே தீவிர எழுத்தாளர் அல்லது பொழுதுபோக்கு எழுத்துக்காரர் என அடையாளப் படுத்த முடியும்.
கதை சார்ந்த எழுத்து என்பது கடந்த காலத்தை நிகழ்காலத்தில் சொல்வது என்றாலும் நிகழ்காலப் பிரக்ஞை என்பதே நவீன எழுத்தின் ஆதாரம். இப்படிச் சொல்வதால் நிகழ்காலத்து மனிதர்களின் புற அடையாளங்களோடு, சமகாலம் மற்றும், நிகழிடம் பற்றிய குறிப்புகளில் நேரடித்தன்மை ஆகியவற்றை  உருவாக்கும் கதைகள் மட்டுமே நவீன எழுத்து எனக் கொள்ள வேண்டியதில்லை. அதற்கு மாறாக வரலாறு அல்லது தொன்மக்காலப் பாத்திரங்களையும், நேரடிக் காட்சியாக அமையாத நிலவெளிகளையும் எழுதிக் காட்டும் புனைகதைகள் அனைத்தும் நவீன எழுத்திற்கு எதிரானவை எனவும் கொள்ள வேண்டியதில்லை.
நிகழ்காலத்தில் நேரடியாகப் பார்க்கும் மனிதர்களைப் போலவே தோற்றம் தரும் பாத்திரங்களோடு எழுதப்பட்டு லட்சியவாதத்தை நோக்கமாகக் கொண்ட புனைகதைகளுக்கு தமிழில் உதாரணங்கள் கிடைப்பதைப் போலப் புராண காலத்து மனிதர்களை உலவவிட்டாலும் நிகழ்காலப் பிரக்ஞையோடு எழுதப் பட்ட புனைகதைகளுக்கும் உதாரணங்கள் உண்டு. முந்தியதற்கு மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, கல்கி, அகிலன் போன்றோரின் புனைகதைகள் பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் வரலாற்றையும் தொன்மத்தையும் நிகழ்காலப்பிரக்ஞையோடு எழுதிக் காட்டிய புனைகதைகளுக்கு அவ்வளவு எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியாது.
தமிழில் வரலாற்றுப் புனைகதைகளின் ஆசிரியர்கள் பட்டியல் நீளமானது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடங்கி, சுதந்திரப் போராட்ட காலம் வரையிலான காலத்தை வரலாற்றுப் புனைவுகளாக்கித் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியவர்களின் நோக்கம் எல்லாம் பொழுதுபோக்குக் கதைகளாக வரலாற்றை எழுதிக் காட்ட வேண்டும் என்பதாகவே இருந்தது. நிகழ்காலப் பிரக்ஞையோடு வரலாற்றை எழுதிக் காட்ட வேண்டும் என நினைத்தவர்களைத் தேடிக் கண்டடைவது மிக மிகக் கடினம். ஐரோப்பியர்களின் வருகையைப் பின்புலமாகக் கொண்ட வரலாற்றுப் புனைவுகள், சொந்த தேசத்து மனிதர்கள் X இந்நாட்டைச் சுரண்ட வந்த அந்நியர்கள் என்ற எதிர்வுகளை உண்டாக்கிய அளவில் மட்டுமே வேறுபட்டவையாக இருக்கின்றன. இந்த வேறுபாட்டை தவிர்த்து அவையும் நிகழ்காலப் பிரக்ஞை என்ற அளவுகோலின்படி நவீனத்துவ எழுத்திலிருந்து விலகியே நிற்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் மிகக் குறைவாகக் கிடைக்கும் தொன்மப் பாத்திரங்களைக் கொண்ட புனைகதைகள் சமகாலப் பிரக்ஞை என்பதை விட்டு விலகாத தன்மையோடு இருக்கின்றன. புதுமைப்பித்தனின் கதைகளில் இடம் பெற்ற அகலிகையும்(அகல்யா), சீதையும்(சாப விமோசனம்) நிகழ்காலப் பின்னணியில் இருக்கின்ற பாத்திரங்கள். புதுமைப் பித்தன் மட்டுமல்லாது மணிக்கொடி எழுத்தாளர்களும், அதன் தொடர்ச்சியில் எழுதுபவர்களாகக் கருதுபவர்களும் நவீனத்துவத்தின் ஆதாரமான நிகழ்காலப் பிரக்ஞையைக் கறாராகப் பின்பற்றி தொன்மங்களின் இழையை நிகழ்காலத்தில் நிறுத்தி விசாரிப்பதில் தவறியதில்லை. கடந்த காலத்தை நிகழ்காலத்தில் வைத்து அலசும் விசாரணையின் முடிவில் காவிய நாயகர்களையும், அவதாரபுருசர்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் காட்டுவதன் மூலம் மரபு எழுத்திலிருந்து விலகியவர்கள் என்பதை உறுதி செய்தனர்.அதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி நாவலைச்  சொல்லலாம்.
நிகழ்கால மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து புராணப் பாத்திரங்களையும், தொன்ம மனிதர் களையும் வேறுபடுத்திக் காட்டுவதில் முக்கியக் கூறாக இருப்பன அவற்றில் இடம்பெறும் வரங்களும் சாபங்களும். அமானுஷ்ய மனிதர்களை உருவாக்கும் நோக்கம் கொண்ட வரங்களும், சாமானிய மனிதர்களைத் தண்டிக்கும் நோக்கம் கொண்ட சாபங்களும்  ஒரே புள்ளியிலிருந்தே தோற்றம் பெறுவது யோசித்துப் பார்ப்பவர்களுக்குப் புரியக்கூடிய ஒன்று. ”எல்லாரும் போகும் சாதாரணமான இந்த பாதை எனக்குப் பிடிக்க வில்லை; இதிலிருந்து விலக விரும்புகிறேன்” எனத் தன்னுணர்வுடன் மேற்கொள்ளப்படும் விலகல்களே வரங்களை நோக்கிய தவம். அத்தகைய தன்னுணர்வின்றி ’அறியாமல் செய்யும் விலகல் அல்லது மற்றவர்கள் அறியாமல் எனக்குள்ளேயே இதைச் செய்து விடுவேன் என்ற ரகசியமான நம்பிக்கை’ சாபத்தினைக் கொண்டு வந்து சேர்க்கிறது. வரங்களும் சாபங்களும் கீழைத்தேயப் புராணங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன என்றாலும்,மேற்கத்தியத்தியப் புராணங்களிலும் இதே பின்னணியில் தான்  வரங்களும் சாபங்களும் இடம் பெற்றுள்ளன. தொல்படிவ மனம் சார்ந்து உலக இலக்கியங்களை ஆய்வு செய்த ஆய்வுகளின் முக்கியமான முடிவு இது. தொல்படிவ மனம் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கல் ஆண்-பெண் உறவு சார்ந்த சிக்கல்களாக இருக்கின்றன என்பதையும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. அதனால் தான் உளவியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே தொல்படிவ ஆய்வுகளும் அமைந்துள்ளன, ஆண்களின் உலகமாக இந்த உலகத்தை மாற்றிக் காட்ட முயன்ற சமய நம்பிக்கைகளும் நடவடிக்கைகளும் பெண்களுக்குச் சாபங்களையும் ஆண்களுக்கு வரங்களையும் அருளியுள்ளன என்பதை ஆதாம்- ஏவாள் கதையின் முடிச்சிலிருந்து உணர முடியும்
இந்தியத் தொன்மங்களும் – குறிப்பாக இந்து மதம் சார்ந்த தொன்மங்களும் ஆண்களுக்கு வரங்களையும்  பெண்களுக்குச் சாபங்களையும் உரியதாக ஆக்குவதிலிருந்து விலகவில்லை. வரங்களை உடைமையாக்கும் தவங்களை இயற்றுவதிலிருந்து விலக்கி வைக்கப் பெண்பாலினம் எப்போதும் சாபத்துக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. தங்கள் உயிரையும் விருப்பத்தையும் பொருட்படுத்தாது ஆண்களுக்காக வாழ்ந்த பெண்களில் சிலர் வரத்திற்குரியவர்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், அவர்களுக்குக் கிடைத்த வரங்கள் உண்மையில் வரங்களா? என்ற கேள்வியை எழுப்பக் கூடியனவாகவே இருக்கின்றன. சில பெண்களுக்குக் கிடைத்த வரம் கூட பெண்களின் வாழ்க்கையை-ன்னிலையை உணர்த்துவவதற்குப் பதிலாக அவர்களைச் சார்ந்த ஆண்களின் உயர்பண்புகளை இந்த உலகத்திற்குக் காட்டுவதற்குப் பயன்படும் விதமாகவே புராணங்களிலும் தொன்மங்களிலும் காட்டப்பட்டுள்ளன. அதன் வழி இந்த உலகத்திற்கான பொது அறத்தை உறுதி செய்வதற்கு உதாரணப் பாத்திரங்களாக மாறியது மட்டுமே வரம் பெற்ற பெண்களுக்குக் கிடைத்த பலன். அப்படியான ஒரு உதாரணப் பெண்ணின் கதையை நிகழ்காலப் பிரக்ஞையோடு எம்.வி.வெங்கட்ராமின் நித்தியகன்னி முன் வைத்துள்ளது.
மாதவி என்னும் பெண்ணுக்குக் கிடைத்த வரத்தின் சாரத்தை அநுசூயை என்னும் முனி பத்தினி இப்படிச் சுருக்கமாகச் சொல்கிறாள்: விசுவாமித்திரரின் மனைவி ஒரு ராஜகுமாரி. ஒரு குழந்தை பெற்றவுடன் முன்போலவே கன்னி ஆகிவிடுவாள் என்று முனிவர்கள் அவளுக்கு வரம் கொடுத்திருக்கிறார்களாம். இந்தக் காலவனை அடிவயதிலிருந்தே எனக்குத் தெரியும். பரம தரித்திரன்; பிடிவாதக்காரன்; குருதட்சிணை கொடுத்தே தீருவேன் என்று வீணுக்கு வம்பு செய்தான்; விசுவாமித்திரரைத் தெரியாதா? கோபம் வந்து விட்டது. ‘உடல் வெள்ளையாகவும் ஒரு காது மட்டும் கறுப்பாகவும் உள்ள எண்ணூறு குதிரைகள் கொண்டு வா! என்று கட்டளை இட்டார்; தரித்திர நாராயணன் என்ன செய்வான்? பிச்சைக்குப் புறப்பட்டான். பிரதிர்ஷா நகரம் போய் யயாதியிடம் குதிரைகளைக் கேட்டான், அவனிடம் இல்லை. அவன் மகள் தான் மாதவி. பரிகளுக்குப் பதிலாகப் புதல்வியைத் தானம் செய்து விட்டான்.. மூன்று அரசர்களிடம் இருநூறு இருநூறு குதிரைகளாக அறுநூறு இருந்தனவாம்; அவைகளுக்காக அந்த மூன்று பேரையும் அவள் மணந்து மூன்று குழந்தைகள் பெற்றாளாம்! மறுபடியும் … பாக்கிக் குதிரைகளுக்காகக் குருவே கலியாணம் செய்து கொண்டு விட்டார். கதை எவ்வளவு அழகாயிருக்கிறது (ப.136)
அனுசுயை வாய்வழியாகச் சொல்லப்படும் மாதவியின் கதையை விரிவாக்கி எழுதிக் காட்டும் எம்.வி. வெங்கட்ராம் பெண்களைப் பற்றிய நிகழ்கால நிலையோடு உரசிக் காட்டுகிறார்.
ஆணாதிக்க சமூகமாக இருக்கும் இந்த உலகம் பெண் என்பவளை வெற்று உடலால் ஆனவளாகவே கருதுகின்றது என்பதே நவீனப் பெண்ணியம் வைக்கும் முக்கியக்குற்றச்சாட்டு. அதன் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு மனம் ஒன்று இருக்கிறது; அது சிந்திக்கும்; ஆண் மனதைப் போலவே ஆசை கொள்ளும்; தனித்தன்மையோடு அலைந்து திரியும் என்றெல்லாம் நினைப்பதில்லை என்பதாகவும் பெண்கள் பேசத்தொடங்கியிருக்கின்றனர், இந்தக் கேள்விகளை நித்திய கன்னி நாவல் முதன்மையாக எழுப்புகிறது., கன்னித்தன்மை என்பதை ஆணின் மனம் எப்போதும் உடல் சார்ந்ததாக மட்டுமே கருதிக் கொள்கிறது என்பதையும், அந்தப் பெண் உடலுக்குள் எல்லாவிதமான ஆசா பாசங்கள் கொண்ட மனம் ஒன்று இருப்பதை எப்போதும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை என்பதைத் தனது எளிய வரிகள் மூலம் எழுதிக் காட்டும் வெங்கட்ராம் ஆண்களின் சார்பாகப் பேசாமல், பெண்களின் சார்பாகப் பேசுவதற்கான மொழியைத் தேர்வு செய்து பயன்படுத்தியுள்ளார். அந்த மொழி நாவலெங்கும் வினாக்களின் வடிவமாக நிற்பதை நாவலை வாசிப்பவர்கள் உணரலாம்.  
பெண் ஒரு மர்மம் என்று அவனுக்குத் தோன்றியது; கணத்திற்குக் கணம் மாறுதல்; இந்த மாறுதல் ஒரு புதுமைதான்; ஆனால் புதுமை என்பதெல்லாம் அதிசயமும் ஆனந்தமும் தந்துவிடும் என்று கூறமுடியுமா? (ப.82)
என்ற வினா ஆணின் நோக்கிலிருந்து எழும் வினா போலத் தோன்றலாம். ஆனால் அதற்கு முன்பு எழுப்பப்படும் பல வினாக்கள் பெண்களின் நோக்கிலிருந்து எழுப்பப்படும் வினாக்கள் என்பதில் ஐயமில்லை,
நதிகளினால் கடல் திருப்தியுறுவதில்லை; மரணங்களினால் காலன் ஓய்வதில்லை; புருஷர்களினால் பெண்ணுக்குப் ‘போதும்’ என்று ஆவதில்லை; மேலும் மேலும்…? (ப.72)
என்று எழுதுவதின் மூலம் ஆண்களின் சுயநலம் சார்ந்த இயக்கத்தைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. சுயநலம் சார்ந்த ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் வழி பெண்களுக்கு இருக்கிறதா என்ற கேள்வியை இன்றையப் பெண்களின் மொழியில் கேட்டு, அதற்கான விடையாக,
அறத்தின் பெயரால் விதிக்கப்பெறும் நிர்ப்பந்தங்களே இல்லாத ஏதாவது ஓர் இடத்துக்குப் போக வேண்டும் என்றுதான் அவள் எண்ணம். அந்த இடம் எங்காவது இருக்கிறதா என்பதைக் கூட அவள் யோசிக்கவில்லை; குதிரைகளை மேலும் மேலும் விரட்டினாள். (ப.78)
என எழுதுகிறார் வெங்கட்ராம். பெண்களுக்கான விடுதலையின் கதவுகள் முழுவதும் சாத்திக் கிடப்பதையும், அதற்குள்ளேயே அவள் சுற்றிச் சுற்றி வரவேண்டிய- கட்டுப்பாடுகளின் கயிறுகளைப் பாதுகாப்புக் கருவிகள் என நினைத்துக் கொள்ள வேண்டியதிலிருந்து விலக நினைத்தால் மனித வாழ்வு என்ற ‘ பொய்மை’யைத் துறப்பதுதான் ஒரே வழி என வெங்கட்ராமின் எழுத்து சுட்டிக் காட்டுகிறது.
மனித மிருகத்துக்கும் மற்ற விலங்குகளுக்கும் என்ன பேதம்? பார்க்கப்போனால், மனிதர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக இருக்கின்றனர்; கட்டுப்பாடுகளினால் அவர்களுடைய வாழ்வு ஒரு துயரச்சங்கிலி ஆகியுள்ளது. விலங்குகளைப் போலவே மாந்தரும் எதேச்சையாகக் கானகங்களில் அலைந்து இயற்கையான இன்பத்தை ஏன் நுகரக்கூடாது. (ப.87)
என மாதவியின் மனம் எழுப்பும் கேள்விகளின் பின்னால் நம்பிக்கை உறவு கொண்ட எல்லா ஆண்களாலும் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் குரல் இருக்கிறது. மாதவியின் நம்பிக்கையைப் பொய்யாக்கியவர்கள் அந்நியமான ஆடவர்கள் இல்லை. அவளது உடலோடு, கன்னித்தன்மை என்னும் வரம் பெற்ற உடலோடு தொடர்பு கொண்ட ஆண்கள் என்பதை நினைத்து புலம்பும் குரலாகப் படைப்பாளியின் குரல் வெளிப்படுகிறது.
அவளுடைய தந்தையார் என்றும் அவளுடைய நலத்தில் கருத்துடையார் என்றும் கூறப்படும் யயாதி, அவளை மனப்பூர்வமாக நேசிப்பவன் எனக் கருதப்பெறும் காலவன், அவள் முறையாக மணந்த மூன்று புருஷர்கள், உக்கிரமான தபோதேஜஸ் வாய்ந்த விசுவாமித்திர மகரிஷி – ஆண்மக்கள் அனைவரும் பொய்மையின் நாநாவிதமான தோற்றங்களாக அவளுக்குப் பட்டனர்; தர்மம் – ஸ்திரீ தர்மம் – என்பதே மாபெரும் பொய் என அவள் எண்ணினாள்; பொய்தான், எல்லாமே பொய்தான் என அவள் உறுதி செய்து கொண்டாள். பிரபஞ்சமே ஒரு பொய்யல்லவா? அதற்கு ஏற்படுத்தப்பட்ட அறமும் பொய்யாகத்தானே இருக்க வேண்டும்? (ப.124)
பிரபஞ்சமே பொய் போலத் தோன்றினாலும் ஆண்களுக்கான விதிகளை உருவாக்கி அதனை ஆண்களின் பிரபஞ்சமாக ஆக்கிவிடுவதில் சமூகக் கட்டுப்பாடுகள் அல்லது அறங்கள் என முன்மொழியப்பட்ட நீதிகளின் மீதும் வெங்கட்ராமின் நித்திய கன்னி கடுமையான விமரிசனத்தை முன் வைத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த அளவில் அத்தகைய அறநூல் மனுஸ்மிருதி என்பதை உறுதியாக அறிந்த வெங்கட்ராம் அதைக் காக்க வேண்டிய சத்திரிய குல அரசனே அதற்கு எதிரான குரலை வைக்கிறான் என்பதாகக் காட்டுகிறார்.
“மனுதர்மமே முடிவான மனித தர்மம் அல்ல” என்று சீறினான் நரன்; “தர்மம் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி வளைந்து கொடுக்க வேண்டும். மனிதனுக்காக, மனிதன் உயர்வு பெறுவதற்காகத்தான் தர்மம்; தர்மத்திற்காக மனிதன் அல்ல… ஏன், மனுதேவர் பெண்ணைப் பற்றி என்ன சொல்கிறார்?‘ எந்த இடத்தில் ஸ்திரீகள் பூஜிக்கப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்; எங்கு அவர்கள் பூஜிக்கப்படவில்லையோ அங்கு சகல காரியங்களும் பயனற்றுப் போகின்றன’ என்று மனுதர்மம் கூறவில்லையா? (ப.176)
இப்படியொரு குரலை எழுப்பும் உசீநரன் வெறும் அரசனாக மட்டும் இல்லை; முதன்மையாகக் கலைஞனாக இருந்தான் என அவனின் முதன்மை அடையாளத்தைச் சொல்கிறது. கலை மனம் மட்டுமே பால் பேதமற்று உலக நடப்புகளைப் பற்றிச் சிந்திக்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது.
ஒவ்வொரு குழந்தையைப் பெற்ற பின்னும் கன்னியாக மாறிவிடுவாள் என்பதை மற்றவர்கள் வரமாக நினைக்கிறார்கள். தொடக்கத்தில் மாதவியும் கூட அப்படித்தான் நினைத்தாள். ஆனால் அவளது மனம் விரும்பிய காலவன் – விசுவாமித்திரரின் சிஷ்யன் தனது ஆசை; தனது குருபக்தி, தனது கடமையை நிறைவேற்றுதல் என்பதற்காக அந்தக் கன்னித்தன்மையைப் பயன்படுத்துகிறானே ஒழிய, தனக்குள் இருக்கும் மனத்தையும் அதன் ஆசைகளையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறானே என நினைக்கும் போது அவள் மனம் உலக வாழ்க்கையை வெறுத்துப் பைத்தியநிலையை நாடுகிறது.
“இவ்வளவு தாமதித்து உங்களுக்கு விளங்கி என்ன பயன்?.. இந்தப் பிரமை நிலைதான் இவளுடைய உண்மையான வாழ்க்கை; கொடிய மனிதர்களிடையே இராமல் மானாகக் கானில் திரிவதாய்க் கற்பனை செய்துகொண்டு அதில் வாழ்கிறாள். அவளுக்கு இந்தக் கற்பனை வாழ்க்கை இன்பம் தருகிறது. அவளுடைய இந்தக் கனவைக் கலைத்தால், அவள் உடல்கூட மறைந்துவிடலாம். அவள் போகிற போக்கில் விடுவதுதான் நலம்.” (ப.178)
ஆண்களுக்கு வரங்கள் அதிக பலத்தைத் தருவதைப் போலல்லாமல், பெண்களுக்கு அந்த வரங்களே சாபங்களாக ஆகிவிடும் நிலையில் பெண் – தன் சுயத்தை இழக்க விரும்பாத பெண்ணுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதாகவே நாவல் முடிந்து போகிறது.
பழமையான ஒரு தொன்மக் கதையை விரிவாக்கி உடல் அரசியலைப் பேசும் எம்.வி. வெங்கட்ராமின்நித்திய கன்னி, நவீனப் பெண்ணிய வாதத்தின் முன்னோடி நாவலாகவும், அதற்கான மொழியைக் கண்டறிந்த படைப்பாகவும் இருக்கிறது எனச் சொல்வதில் தயக்கம் எதுவுமில்லை. 
============================================================================
நன்றி: தீராநதி-ஜுலை,2012 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை