: 52

அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு: நிலவியல் வரலாற்றுப் பின்னணியில் மனிதர்கள்

அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு: நிலவியல் வரலாற்றுப் பின்னணியில் மனிதர்கள்முதலில் ஒரு நிலவியல் குறிப்பு:
அசோகமித்திரன்
பூமியுருண்டையின் மீது கோடுகள் வரையப்பட்டிருப்பதை நிலவியல் ஆசிரியர்கள் காண்பித்திருப்பார்கள். கற்பனையான இந்தக் கோடுகளுக்குச் சில பயன்பாடுகள் உண்டு. தென் வடலாகச் செல்வதாக நம்பப்படும் தீர்க்கரேகைகள் காலக்கணக்குப் பயன்படுகின்றன. கிரின்விச் நகரத்தின் வழியே செல்லும் கற்பனைக் கோட்டை சுழியன் எனக் கணக்கு வைத்துக் கொண்டு ஒவ்வொரு தீர்க்கரேகையையும் சூரியன் தாண்டிச் செல்ல நான்கு நிமிட நேரம் ஆகிறது எனக் கணக்கிடுகிறார்கள். அதேபோல்  பூமிப் பந்தின் மத்தியில் ஓடும் கோட்டை புவிமத்தியக் கோடு எனப் பெயரிட்டுள்ளனர். அதற்கு மேலே இருப்பன அட்ச ரேகைகள்;
கீழே இருப்பன கடகரேகைகள். அசோகமித்திரனின் நாவலின் கதைக்களமான செகந்திராபாத் 18 வது அட்சக் கோட்டில் இருக்கும் ஒரு நகரம். ஆந்திரா மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்துடன் இணைத்து இரட்டை நகரமாக அறியப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் தலைநகரத்தின் பெயரும் ஹைதராபாத் என்பதே. 
அடுத்து வரலாற்றுக் குறிப்பு:
1947 இல் ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் ஆட்சியதிகாரத்தை வழங்கிவிட்டுக் கிளம்பியபோது பிரிட்டிஷாரிடம் சிறப்புச் சலுகை பெற்று அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த மன்னர்களும் ஜமீந்தார்களும் தங்கள் அதிகாரத்தைச் சுதந்திர இந்தியாவின் அரசாங்கத்திடம் கையளிக்கத் தயாராக இருந்தார்கள். ஒருசில சமஸ்தானங்கள் மட்டும் அப்படிக் கையளிக்கத் தயாராக இல்லை. தன்னாட்சி அமைப்பாக இயங்குவோம் என அறிவித்தனர். அப்படி அறிவித்த சமஸ்தானங்களில் முக்கியமானது ஹைதராபாத். ஹைதராபாத்-செகந்திராபாத் என்னும் இரட்டை நகரப்பகுதியில் ஆட்சியதிகாரம் பெற்றிருந்த நிஜாமும் அவருக்குத் துணையாக இருந்த ரஜாக்கர் படையும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஏற்பட்டிருந்த விடுதலைப்போராட்ட உணர்வுக்கு எதிராக இருந்ததோடு இந்து –இசுலாம் என்று மதம் சார்ந்த வேறுபாட்டை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாற்று நூல்கள் தரும் செய்திகள். அச்செய்திகளின் பின்னணியில் தான் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் நிஜாமை மிரட்டி வழிக்குக் கொண்டுவந்து இந்திய யூனியனோடு சேர்த்த நிகழ்வுகள் நமக்கு வரலாற்றுப் பாடமாகச் சொல்லித் தரப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் சிந்து மாகாணப் பகுதியில் இருந்த ஹைதராபாத்திலும் சரி, இந்தியப் பகுதியில் இருந்த ஹைதராபாத்தில் சரி இந்துக்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். ஆனால் அதிகாரம் இசுலாமிய வம்சாவளியினரிடம் இருந்தது. ஆகவே மக்கள் இடம் மாறிடும் விருப்பத்தில் இருந்தார்கள்; அல்லது அப்படியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர் என்பதின் பின்னணியில் கலவரங்களும் மோதல்களும் நடந்தன. அக்கலவரங்களும் மோதல்களும் படைப்பாளிகளின் பதிவுகளாக மாறியுள்ளன. தமிழில் அப்படியொரு பதிவு அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு..
படைப்புருவாக்கம் சார்ந்த ஒரு குறிப்பு:
பொதுவாக எழுத்து என்பது நிகழ்காலத்தேவைக்கு எழுதப்படுவது என்பது ஓர் உண்மை என்றால், எழுதி முடித்த கணத்திலேயே கடந்த காலத்தின் பகுதியாக மாறிவிடுகிறது என்பதும் இன்னோர் உண்மை. எழுதியவனிடமிருந்து வாசகனிடம் வருவதற்குள் ஒரு பிரதி கடந்த காலப் பொருளாக ஆகி விடுகிறது; எழுதியவனின் எழுத்தை வாசகன் அப்படியே வாசிப்பதும் இல்லை. அத்துடன் வாசகனின் கவனம், பார்வைக் கோணம், சூழல் ஆகியவற்றோடு சேர்ந்து தான் வாசிப்பு நிகழ்கிறது.ஒவ்வொரு எழுத்தாளர்களும் அவர்களது நிகழ்கால மனிதர்களுக்கான பிரதிகளை உருவாக்கும் வேலையையே முதன்மையாகச் செய்கிறார்கள் என்றாலும், ஒவ்வொரு பிரதியை உருவாக்குவதிலும், எழுத்தாளரின் கடந்த காலமும், அவர் சார்ந்த சமூகத்தின் கடந்த காலமும் சேர்ந்தே அப்பிரதியை உருவாக்குகின்றன. வளர்ச்சியடைந்த கால கட்டத்தில் ஆசிரியன் வாழும் சமூகம் மட்டும் அல்லாமல், அவனது அறிவுப் பரப்புக்குள் வரும் அனைத்துச் சமூகத்தின் கருத்துக்களும், சிந்தனைகளும் சேர்ந்தே அந்தப் படைப்பை உருவாக்குகின்றன. படைப்பு சார்ந்த இத்தகைய பார்வைக் கோணங்கள் வளர்ந்து விட்டதைப் புரிந்து கொண்டால் தான்  ”ஒரு பிரதியின் ஆசிரியராக ஒருவரைக் குறிப்பிடக் கூடாது” என்பது புரியும்..
1977 இல் வெளிவந்த அசோகமித்திரன் 18 வது அட்சக்கோடு அண்மைக்கால வரலாற்றை, நிலவியல் சூழலில் முன் வைத்துள்ள நாவல்.1947 இல் கிடைத்த இந்திய சுதந்திரத்துக்குச் சற்று முந்திய – ஐந்தாண்டுக் காலத்துக்கு முந்திய- நிகழ்வுகளைப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் பார்வையினூடாகச் சொல்லும் நாவலின் கதைத் தொடக்கம் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்திய யூனியனின் பகுதியாக ஆக்கியதோடு முடிகிறது. வரலாற்று நிகழ்வாக அறியப்பட்ட பெரும் நிகழ்வொன்றை முப்பதாண்டுகளுக்குப் பின்னால் இலக்கியப் படைப்பாக ஆக்க நினைத்த அசோகமித்திரன் கதைசொல்லியின் நிகழ்காலத்தில் நடப்பனவாகக் காட்ட நினைக்கிறார். அந்நோக்கத்திற்கேற்பக் கதையின் மையப்பாத்திரமான சந்திரசேகரனின் வயதை- பள்ளிப்பருவ வயதாக மாற்றிப் புனைவை உருவாக்கியுள்ளார். பள்ளிக்குச் செல்லும் மாணவன் என்பதை விட அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களுக்குத் தாவிக் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவனாகவும், அதன் ஊடாகவே செகந்திராபாத் ரயில்வே குடியிருப்பில் இருக்கும் மொழி,மத,சாதி வேறுபாடுகள் கொண்ட சிறுவர்களோடு உறவும் முரணும் கொண்டவனாக அவன் பார்வை விரிகிறது.  சந்திரசேகரனின் தந்தை ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு தமிழர். அவரது வருமானத்தில் இரண்டு பெண் பிள்ளைகளையும் சந்திரசேகரனையும் மாறும் நாகரிக மாற்றத்திற்கேற்பப் படிக்க வைத்து, பாட்டுச் சொல்லி, சினிமா பார்த்து வளர்க்கும் அம்மா. இந்தக் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளின் ஊடாகக் குறிப்பிட்ட அந்தப் பெருநிகழ்வைப் பதிவு செய்துள்ளார் அசோகமித்திரன். 
சந்திரசேகரன் என்னும் சிறுவனுக்குள் இருக்கும் மற்றமைகள் மீதான வெறுப்புணர்வுடன் நிகழ்வுகளையும் மனிதர்களையும் முன் வைத்துக் கதையை நகர்த்தும் அசோகமித்திரன் அதன் வழியாக குறிப்பிட்ட காலகட்டத்தில் பண்பாட்டுக் கூறுகளால் பிளவுண்ட மனிதர்களுக்கிடையே உருவாகும் மனமுறிவுகள், ஐயங்கள், பயம், பதற்றம் என்பனவற்றைச் சித்திரித்துக் கொண்டே போகிறார். அத்தகைய சித்திரிப்பில் சந்திரசேகரனின் சார்புநிலையின் வழியாக அசோகமித்திரனின் சார்புநிலையும் வெளிப்படுகிறது.

சந்திரசேகரன் முதல் காரியமாக சர்ச்சு காம்பவுண்டுக்குப் போய்ப் பார்த்தான். நல்லவேளை மாடு அங்கு இல்லை. அப்படி முழுக்க அதை நல்லவேளை என்றும் கூற முடியாது. இன்னும் எங்காவது அதைவிட மோசமான இடத்திற்கு அது போய்ச்சேர்ந்திருந்தால்? - –ப.13
சட்டைக்காரப் பையன்கள், முஸ்லிம் பையன்களாக எங்கள் வரிசையிலேயே பத்துப் பதினைந்து பேர்கள் இருந்தார்கள். எனக்கு அவர்களோடு எந்த மொழியிலும் பேச முடியாது. சந்தானம் தமிழ்ப் பையன் என்னும் காரணத்தாலும் அவனுக்கும் இங்கிலீஷ், உர்து சரியாக வராது என்னும் காரணத்தாலும் நானும் அவனுமாக மட்டும் முதலில் விளையாடிக் கொண்டிருந்தோம். –ப.28
இவை கிறிஸ்தவத்தையும் இசுலாத்தையும் மற்றமையாகப் பார்க்கும் குறிப்புகள். பின் வருவது சாதி சார்ந்த மற்றமைக் குறிப்பு
சந்திரசேகரன் குசினி பறச்சேரியையும் கடந்து சென்றான். அவன் சிறுவனாக இருந்து முதலில் அப்பெயரைக் கேட்டபோது ஏதோ வசவுபோலத்தான் தோன்றிற்று. ஆனால் அங்கே வசிப்பவர்கள் அந்த இடத்தை அப்படித்தான் குறிப்பிட்டார்கள். ஒரே தெலுங்காகவும் ஓரளவுக்கு உருதுவாகவும் உள்ள அந்த ஊரில் அந்த இடம் மட்டும் முழுக்கத் தமிழ். ஆனால் என்ன தமிழ்? அந்தத் தமிழ் சந்திரசேகரனுக்குச் சரியாகப் புரிந்ததில்லை. அந்தச் சேரியில் ஆண்களில் வயது வந்தவர்கள் அனைவரும் தங்களைப் பட்லர்கள் என்று கூறிக் கொண்டார்கள். ஓரிருவர் கார் டிரைவர்கள். - ப.87
லான்சர் பாரக்ஸும் அதன் சுற்றுப்புறமும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தன. எங்கோ தூரத்தில் துலுக்கப்பாட்டு, சரியான துலுக்கக் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. அது ஏதாவது துலுக்க ஹோட்டலாக இருக்கும். கிராமபோன் தட்டு வைத்துக் கொண்டிருக்கிறான். ஜோரா பேகமோ அமீர்பாய் கர்நாடகியோ உள்நாக்குத் துடிக்கக் கத்திக் கொண்டிருக்கின்றனர்.  – ப.100
மாற்றுச் சமய நம்பிக்கைகள், வேறுபட்ட மொழி வழக்குகள், சாதிரீதியான பண்பாட்டு வேறுபாடுகள் போன்ற மற்றமைகளையெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று நம்பிய சந்திரசேகரன் மனிதர்களை வேறு வேறாகப் பிரித்துப் போடும் கூறாக அரசியல் வந்து முளைத்ததை உணர்கிறான். இந்திய முழுக்க வெடித்துக் கிளம்பிய சுதந்திர வேட்கை ஹைடிராபாத் நிஜாமின் ஆட்சிப் பிரதேசத்தில் புதிய வடிவத்தில் எதிர்முகம் காட்டியதைத் தெளிவில்லாமல் – பள்ளியிலிருந்து கல்லூரிக்கு இளம்பிராயத்து மனிதனாகப் புரிந்து கொள்கிறான்.
இந்திய அரசாங்கம் நிஜாம் அரசு விஷயத்தில் தலையிடாது. நிஜாமுக்கு இந்திய அரசு விஷயங்களில் எதற்குத் தலையிட வேண்டும்? மற்றவர்கள் அவன் விஷயத்தில் தலையிடக்கூடாது என்றுதானே அவன் சாதித்துக் கொண்டிருகிறான். இப்போது அவனிஷ்டம் போலவே ஆயிற்று. இனிமேல் இது என்றென்றும் ஒரு துலுக்க சாம்ராஜ்ஜியமாகவே இருக்கப் போகிறது. எவ்வளவோ நாட்களாக அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் அப்போதெல்லாம் யாரும் யாரையும் விரோதியாக நினைத்ததில்லை. உயிருக்குப் பயந்து ஓடியதில்லை இப்போது எல்லோருமே பயந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.   – 183
’இன்னும் என்னடா வேணுங்றாங்க இந்த காங்கிரஸ்காரங்க? இங்கே வேலைக்கிருக்கிறவங்க பாதிக்குமேல ஹிந்துங்க. இன்னம் என்னடா வேணும்?’
’இங்கே இருக்கிற ஜனங்க முக்கால்வாசி ஹிந்துதானே? வேண்டான்னாலும் அவங்க தானே கிடைப்பாங்க வேலைக்கு?’
------------------------------
 ‘ரொம்ப அடிச்சாங்களா?’  ‘பொம்பளைங்களையா?’
ஆமாம்பா. அதுங்க பாவாடைங்களை அவுக்க முடியலை. அப்படியே கத்தியெட்டு இடுப்பு நாடாவை வெட்டிக் கிழிச்சி போட்டாங்க. அந்தப் பொம்பளைங்களை அப்படியே நங்காவா அங்கேயும் இங்கேயும் இழுத்துப்போடறான். எங்கெங்கேயோ கையைப் போடறான். அதுங்க காச்சு மூச்சுன்னு கத்துதுங்க. உடம்பெல்லாம் காயம். அப்படியே நங்காவா ஓட ஓட விரட்டினாங்க. அதுங்க திரும்பித் திரும்பிக் கீழே விழுந்து செத்துக்கிடக்கிற அதுங்க ஆம்பளைக்கிட்ட ஓடியாறது. பார்க்கச் சகிக்க முடியாதுப்பா’
நாகபூஷணம் இப்படிச் சொல்லிப் பித்துப் பிடித்தவர் போல அப்படியே உட்கார்ந்திருந்தார். சந்திரசேகரனுடைய அப்பாவும் திக்பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தார். – 204-205
மதம், மொழி,சாதி, பண்பாடு எனப் பிளவுகள் இருந்தாலும் புதிதாகத் தோன்றிப் பண்பாட்டுக் கூறுகளாக மாறிக் கொண்டிருக்கும் – நவீன வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் கல்வி, கிரிக்கெட் விளையாட்டு, சினிமாத் தியேட்டர்கள், பூங்காங்கள், கல்லூரிகள், ரயில்கள், அரசு ஊழியர்கள், அவர்களுக்காக ஏற்படுத்தப்படும் குடியிருப்புகள் என எல்லாம் சேர்ந்து  வேறுபாடுகளை இல்லாமல் ஆக்கி விடும் என்று நம்பிய சந்திரசேகரனின் எண்ணங்கள் எல்லாம் தவிடுபொடியாகிவிடுகின்றன. அதைத் துரிதப்படுத்தும் நிகழ்வாக அந்தச் செய்தி வந்து ஊரையே கலவர பூமியாக்கி விட்டதைக் கண் முன்னே காண்கிறான்,
”காந்தி நிஜமாகவே செத்துப் போய்விட்டாரா? இருக்காது அவர் நூற்றியிருபத்தந்து ஆண்டுகள் இருக்கப் போவதாகச் சொன்னாரே? இப்போது யாரோ புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். ரேடியோவில் கேட்டதாகத்தான் சொல்கிறார்கள். ரேடியோவில் ஏன் பொய் சொல்லியிருக்கக் கூடாது? யுத்த காலத்தில் ரேடியோவில் சொன்னதெல்லாம் பொய்-ஜெர்மன் ரேடியோ பிரிட்டிஷுக்கு பொய், பிரிட்டிஷ் ரேடியோ ஜப்பானுக்குப் பொய். இப்போதுகூடப் பொய்யாகத்தான் இருக்கும். காந்தி எப்படிச் சாக முடியும்? எவ்வளவு முறை பட்டினி கிடந்திருக்கிறார்? இருபத்தொரு நாள் உபவாசம். இதோ செத்துக் கொண்டிருக்கிறார். இதோ செத்துப் போய்க் கொண்டிருக்கிறார். இதோ, இதோ, இதோ – அவர் பிழைத்து வந்திருக்கிறார். ”-226
இதைத் தொடர்ந்து அவன் கண்டதெல்லாம் மனிதர்களின் ஓட்டம் தான். இருப்பிடம் விட்டு எங்கெங்கோ ஓடுகிறார்கள்.
”ரயில்வே ஒன்று மட்டும் எப்படியோ ஒரு தனி ராஜ்யமாக இருந்தது. அங்கே மட்டும் வெள்ளைக்காரர்களும் சட்டைக்காரர்களும் தமிழ்க்காரர்களும் தெலுங்குக்காரர்களும் இருந்தார்கள். இப்போது அதுவும் நிஜாம் ராஜ்யமாகி விட்டது. -241
லான்சர் பாரக்ஸிலேயே பல வீடுகள் பூட்டிக் கிடந்தன. நாகபூஷணம் போலீஸ் பெர்மிட் இல்லாமல் இரயில்வே பாஸ் வாங்கி குடும்பம் முழுக்க எங்கோ போய் விட்டாயிற்று. ஜாஃபர் அலி, மன்னார், நாஷீர் வீடுகள் தான் அவற்றிற்குரிய நபர்களுடன் முழுமையாக இருந்தன. -247
பெரும்பான்மை மக்களாக இருந்த இந்துக்களின் விருப்பத்தை மீறி நிஜாம் தன்னிச்சையுடன் அதிகாரம் செலுத்தும் நாடாக அறிவிக்க இருந்தபோது இந்திய அரசாங்கம் பெரும்படையுடன் நுழைகிறது அந்த தகவல் வந்தபோது நிலைமை தலைகீழாக மாற்றம் பெறுகிறது. அச்சத்துடன் பயந்து நடுங்கி இடம் பெயர்ந்த இந்துக்கள் பெரும்பான்மை பலம் என்பதை உணர்ந்தவர்களாக வன்மம் தீர்க்கிறார்கள். தனியொரு இந்து ,பெரும் இந்துப் படை தன் பின்னால் இருப்பதாக நம்பிச் செயல்படுகிறான். அவனது நம்பிக்கையை முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டு பயந்து பின் வாங்குகிறார்கள். குரூரம் ரத்தக் களரியாகவும், மூச்சுவிட முடியாத மௌனமாகவும் மாறிப் பிணக்குவியல்களை உண்டாக்குகின்றன.. இந்தக்குரூரத்தின் பகுதியாகச் சந்திரசேகரன் என்னும் அப்பாவி இளைஞனே ஆகிப் போகிறான் என்றாலும் அவனது மனம் குற்றவுணர்வில் தவிப்பதாகக் காட்டி நாவலை முடிக்கிறார் அசோகமித்திரன்.
சந்திரசேகரன் மீண்டும் ‘ஐயோ!ஐயோ! என்றான். அவனுக்குத் தலை சுற்றி வாந்தி வந்தது. வாயில் கொப்பளித்து வந்த கசப்புத் திறனை அப்படியே அடக்கிக் கொண்டு முன்பு உள்ளே வந்தபடியே சுவர் ஏறித் தெருவில் குதித்து வெறி பிடித்தவன் போல் ஓடினான். அவனுக்கு ரெப்யூஜிகள் பூண்டோடு அடித்து விரட்டப் பட்டதுகூட இவ்வளவு குமட்டலை உண்டு பண்ணவில்லை. அவன் வாழ்க்கையில் அவன் முதன் முதலாக நிர்வாணமாகப் பார்த்த பெண் அவனைச் சிதற அடித்து விட்டாள். அவனைப் புழுவாக்கி விட்டாள். அவள் வீட்டாரைக் காப்பாற்ற அவள் தன்னை எவ்வளவு இழிவுபடுத்திக் கொண்டு விட்டாள்! அவள் இன்னும் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு அவனும் காரணமாகி விட்டான்.  இந்தக் கறையை என்று எப்படி அழித்துக் கொள்ள முடியும்? இதை அழித்துக் கொள்ளத் தான் முடியுமா?
ஓடிக் கொண்டேயிருந்த சந்திரசேகரன் பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான். -284
ஒரு பிரதியை நாம் நமது நிகழ்காலத்தில் வாசிக்கிறோம் என்றாலும். படைப்பாளியின் கடந்த காலத்தையும் நமது கடந்த காலத்தையும் சேர்த்தே வாசிக்கிறோம். அதிலும் கதை தழுவியதாக அமையும் இலக்கியப் பிரதிக்குள்  கடந்த காலத்திற்கூடான பயணம் தவிர்க்க முடியாத ஒன்று அசோகமித்திரனின் 18 வது அட்சக்கோட்டை கடந்த காலப் பிரதியாக வாசித்துக் கொண்டிருக்கும்போதே நிகழ்கால நினைவுகளும் ஓடிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியாது.  அப்படிப் பட்ட பிரதிகள் எழுத்தின் முக்கியமான நோக்கம் ஒன்றை நிறைவேற்றுகின்றன எனச் சொல்லலாம். அந்நோக்கம் எதுவெனக் கேட்டால் ”மனிதர்கள், அவர்கள் வாழுகிற காலத்தின் சமூகப் போக்கோடு ஒத்து வாழும்படி வலியுறுத்துவதும், ஒத்து வாழாத நிலையில் அடையக்கூடிய துயரங்களைக் காட்டிப் பயமுறுத்தித் திசைமாற்றம் செய்வதும் எனச் சொல்லலாம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முந்திய காலத்து மனிதர்களை உதாரணங்களாக்கிப் பேசுகின்றன எழுத்துகள்.உலக மொழிகளில் இன்றும் உச்சரிக்கப்படும் காவியங்களும் நாடகங்களும் அத்தகைய உத்திகளின் மூலமே ஆகச் சிறந்தனவாக விளங்குகின்றன. அதைச் சரியாக உணர்ந்த நாவலாசிரியர்களும் கடந்த காலத்திற்குள் பயணம் செய்வதை முதன்மை உத்தியாகக் கருதுகின்றனர். அப்படிக் கருதிப் படைப்புகள் செய்த படைப்பாளிகள் வெற்றிகரமான படைப்பாளிகளாக வரலாற்றில் வாழ்கின்றனர்: சிறந்த படைப்பாளிகள் எனக் கொண்டாடவும் படுகின்றனர். இந்திய விடுதலைப் போராட்டத்தைக் குறிப்பிட்ட நிலவியல் பின்னணியில் வைத்து விசாரணை செய்த அசோகமித்திரனின் 18 வது அட்சக்கோடு, கற்பனையான கோட்டை நிஜமான கோடாகத் தீட்டிக்காட்டிய படைப்பு. அந்நாவலை வாசிப்பவர்களுக்கு இந்தப் பின்னணிகள் தெரியவில்லை என்றால் அது உண்டாக்க நினைத்த உணர்வு வந்து சேராமல் போய்விடும். 
நன்றி: தீராந்தி/ ஆகஸ்டு,2012


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை