: 231

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்


எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் :

1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் வெளிப்பட்டன. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்த உள்வாங்கும் மக்களாட்சிமுறை,  நகர்மயமாதல், கிராமசமூகத்திற்குள் நவீனத்துவத்தின் நுழைவு என அந்த வெளிப்பாடுகளைப் பட்டியலிடலாம். 

இவைகளும் இவைபோன்ற அரசியல், பொருளியல் திட்டங்களும் முற்றிலும் நேர்மறையானவையென்றோ, எதிர்மறையானவையென்றோ அறிவுலகம் நினைக்கவில்லை. இவைகளின்மீது விமரிசனங்களை நேரடியாக வைத்தவர்கள் அக்காலத்தில் இருக்கவே செய்தனர். படைப்புத்தளங்களில் செயல்படுபவர்கள் அவரவர் படைப்புவடிவத்திற்கேற்ப விமரிசனத்தை வைக்கத்தயங்கவில்லை. விரிவான விமரிசனங்களுக்கும் பதிவுகளுக்கும் வாய்ப்புகொண்ட நாவல் வடிவம் அறுபதுகளில் நடந்த மாற்றத்தைக் கவனமாக உள்வாங்கி வெளிப்படுத்தியது.  புராணத்தன்மை, வரலாற்றுப் புனைவு,குடும்ப வெளி என அதுவரை இயங்கிய நாவல் படைப்புகள் முடிவுக்கு வந்த காலம் அறுபதுகளின் இறுதி ஆண்டுகள். அறுபதுகளின் பிற்பாதியில் தமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நிலப்பரப்பின் குறிப்பான பின்னணிக்குள் நகர்ந்தது. அவைகளை அப்போது யாரும் வட்டார நாவல்கள் என்று சொல்லவில்லை. ஆனால் அந்த  அடையாளங்களோடு பின்னர் பேசப்பட்டன. தமிழின் முக்கியமான இந்த மூன்று நாவல்களையும் படித்தவர்கள் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாம். படிக்காதவர்கள் படித்துப்பார்க்கலாம்.  

·         சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை (1966 )

·         சா.கந்தசாமியின் சாயாவனம் (1969)

·         கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் (1976)

இம்மூன்றும் உருவாக்கி வைத்த தடங்களே தமிழ் நாவல் போக்குகளாகப் பின்னர் மாறியிருக்கின்றன. இவை, தமிழ் மனிதர்களின் பிரச்சினைகளை நிலவியலின் பிரச்சினை களோடு இணைத்துப் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவை என்பதே முதன்மையானது. அவற்றில் இடம்பெற்ற பேச்சு வழக்குகள் வட்டாரத்தின் பேச்சு மொழிகளாக அறியப்பட்டது இரண்டாம் நிலைப்பட்டவை.

சுந்தரராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை உண்மையில் புளிய மரத்தின் கதையல்ல. நாகர்கோவில் என்னும் பெருங் கிராமம் நகராட்சியாக மாறி, ஜனநாயக அரசியலுக்குள் நுழைந்தபோது அடைந்த மாற்றங்களையும் முரண்களையும் எழுதிக்காட்டிய நாவல். அந்த மாற்றங்களும் முரண்பாடும் ஜனநாயக அரசியலால் நிகழ்ந்த மாற்றத்தை ஒரு குறிப்பிட்ட நிலவியலுக்குள் - அதன் பண்பாட்டிற்குள் வைத்துப் பார்த்து எழுதியது. அவ்வகையான எழுத்து முறையைப் பின்னர் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி இவர்களின் பின்னோடிகள் எழுதிக் காட்டினர். 

சா.கந்தசாமியின் சாயாவனம் தமிழ்நாட்டுக்கிராமம் ஒன்று தொழிற்சாலையொன்றின் வரவுக்காகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட பதிவு. வளமான காவேரிப் படுகைக்  கிராமம் சந்தித்த முரண்கள் மற்றும் மாற்றங்களைப் பண்பாட்டு நிலவியல் பின்னணியில் கூடுதலாக முன்வைத்தது. நகரம்xகிராமம் அல்லது வேளாண்மை வீழ்ச்சி x இயந்திரத்தொழில் வளர்ச்சி என்ற முரண்பாடுகளை உரிப்பொருளாக்கிய நாவல்களின் முன்னோடிப் புனைகதை அது. அதேபோல்  கோபல்லகிராமம் இடப் பெயர்வுகளால் ஒரு கூட்டம் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதிக்காட்டும் எழுத்தின் முன்னோடி வகைமை. முழுக்கவும் புதிய வெளிக்குள் ஒரு கூட்டம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள நடத்திய நீண்ட போராட்டத்தைப்பற்றியது. இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் பலவற்றிற்கு முன்மாதிரியாக அமைந்த நாவல். மொழி சார்ந்து வட்டாரநாவல் போக்கைத் தொடங்கி வைத்ததைப் போல இடம் பெயர்தல் மற்றும் இனக்குழுவாக அடையாளப்படுத்திக் கொள்ளுதல், நாட்டார் மரபுகளைத் தொகுத்துக் கதையாக்குதல், காலத்தொடர்ச்சியற்றுக் கதை கூறல் எனப் பலவற்றின் முன்னோடி அது. வட்டார நாவல்களே வர்க்க நாவல்களையும் தலித் நாவல்களையும் உருவாக்கின. புலம்பெயர் மனிதர்களின் அலைவுறு வாழ்க்கையைப் பதிவு செய்யும் நாவல்களின் எழுத்தாளர்களும் கூட கோபல்லகிராமத்தின் சொல்முறையை உள்வாங்கியவர் களாகவே வெளிப்படுகின்றனர்.

சுந்தரராமசாமி, சா.கந்தசாமி, கி.ராஜநாராயணன் ஆகியமூவரும்  நிலவியலைப் பதிவு செய்வதில் செலுத்தியுள்ள கவனம் முக்கியமானவை. பழந்தமிழ்க் கவிதைகள் குறுங் கவிதைகளாக இருந்து பெரும்பாடல்களாக மாறியபோது முதல் பொருளும் கருப்பொருளுமாகிய நிலவியலை விரிவாக எழுதிப் பதிவு செய்த தன்மையோடு இணைத்துப் பார்க்க வேண்டியவை. குறிப்பாகத் தொகைக் கவிதைகள் நெடும்பாடல்களாக மாறும்போது நிலமும் காலமும் விரிந்து நீண்டதையும், அவற்றிற்குள் தெய்வம், உணவு, மா, மரம், புல், பறை, செய்தி, யாழென கருப்பொருள்களின் பெருக்கம் கூடியதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டின் பகுதிகளான கூதிர், முன்பனி, பின்பனி,கார்,இளவேனில், முதுவேனிலென பெரும்பொழுதுகள் ஆறும், நாளின் பகுதிகளான வைகறை, எற்பாடு, காலை நண்பகல், மாலை,  யாமமெனச் சிறுபொழுதுகளாறும் விரித்துவிரித்து எழுதப் பட்டன என்பதைப் பட்டினப்பாலையிலும் நெடுநல் வாடையிலும் வாசித்துப்பார்க்கலாம்.   நிலவியல் பண்பாடு இலக்கியப் படைப்பாக்கத்தின் பின்னணியாக ஆகமுடியும்; ஆகவேண்டும் என்பதைச் சரியாக உணரவிரும்பும் ஓர் இலக்கியமாணவனும் படைப்பாளியும் இளங்கோவின் சிலப்பதிகாரம் விரிக்கும் நிலவெளிப் பரப்பைப்பற்றிய வரிகளை -வர்ணனைகளை-  வாசித்தால் தெளிவு கிடைக்கும்.

தமிழ் மரபின் நுட்பம் உணர்ந்து வாசிப்போடு பெருவெளி எழுத்தான புனைகதைகளுக்குள் வந்தவர்களே 21 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களாக அறியப்படுகிறார்கள். அத்தகைய நாவல்களே நிலைபெறப்போகும் நாவல்களாக - தமிழ்வெளியின் அடையாளம் நிரம்பிய நாவல்களாக நிற்கப்போகின்றன.ஜெயமோகன், இமையம், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கவனப்பட்டதின் பின்னணியில் தமிழின் மரபுத்தொடர்ச்சி இருக்கிறது.

2000 -க்குப்பின் தமிழின் நிலவியல் பண்பாட்டைக் கவனமாகப் பதிவுசெய்யும்  நாவல்கள் ஆண்டுக்கு ஒன்றிரண்டாவது வந்துகொண்டேயிருக்கின்றன. ஐவகைத் திணையில் முல்லைநிலப்பரப்பைப் பெயரில் கொண்டதாக ஜெயமோகனின் காடு வந்த ஆண்டு (2003). முல்லைநிலப்பரப்போடு குறிஞ்சிநிலப்பரப்பையும் அதன் உரிப்பொருளான புணர்ச்சியையும் புணர்தல் நிமித்தத்தையும் தன்னுணர்வோடு திளைக்கத் திளைக்க எழுதிக்காட்டிய பெருவெளி எழுத்து அது. அவரது இன்னொரு நாவலான கொற்றவை(2005)  சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகளின் பயணப் பாதையோடு புதியபுதிய பாதைகளின் வழியாகத் தமிழ்நிலப்பரப்பில் பயணம் செய்த பனுவல். ஆனால் நிகழ்காலத்திற்குள் வராமல் அங்கேயே நிலைகொண்டுவிட்டது. கண்ணகியைப் போலத் தெய்வம் ஏற்றப்பெற்ற பெண்ணின் கதையைச் சொன்ன இமையத்தின் செடல் (2006), வடமாவட்டத்துப் பெருநிலப்பரப்பை எழுதிக்காட்டிய நாவல்.  சிலப்பதிகாரத்தோடு பலவகையான ஒப்புமைகள் கொண்ட செடல்  வந்து கொண்டாடப்பெற்ற அடுத்த ஆண்டில் (2007)   தனது பெருநாவலான யாமத்தை வெளியிட்டார்  எஸ்.ராமகிருஷ்ணன்.  அதுவரை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய புனைவெழுத்து முறைகளிலிருந்து விடுபட்டுப் பெருவெளியையும் பெருங்காலத்தையும் விரிக்கும் நாவலாக யாமம் வந்தது.

யாமம் என்னும் அந்தத் தலைப்பு குறிப்பான பெரும்பொழுது, சிறுபொழுதெனக் காலத்தைப் பிரித்துப் பேசிய தமிழ் அறிவு யாமத்தை காமத்தோடு இணைத்தே பொருள்கொள்ளும்.  காமம் என்னும் சொல்லோடு ஒலியிலும் பொருளிலும் நெருங்கிநிற்கும் தன்மைகொண்ட  அத்தலைப்பிற்குள் மனிதவாழ்க்கையைத் தீர்மானிக்கும் ஆதாரசக்திகள் நான்கையும் ஒன்றன்மேல் ஒன்றாகப் பிணைத்துக் கட்டியெழுப்பியுள்ளார்.  மனிதர்களின் முதல் தேவை பொருள்; அதன் வழியாக முடிவுக்கு வந்துவிடக்கூடிய வயிற்றுப்பசி;  வயிற்றுப்பசியிலும் அதன் இன்மையிலும் உயிர்பெறும் காமம். இம்மூன்றுமிருந்தாலும் வந்தே தீரும் உண்மை மரணம். இந்நான்கையும்  ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக்காட்டும் தன்மையில் நாவலின் கட்டமைப்பை உருவாக்கியதோடு இவை அனைத்தும் ஒரு பெருநகரமெனும் நிலவியல் வெளியில் அலைகின்றன என விரிக்கிறது நாவல். 

நாவலாக வாசிக்கக்  கிடைத்த யாமம், அதுவரையிலான தமிழ் நாவல் கட்டமைப்பு எதனையும் பின்பற்றாமல் புதியதொரு அமைப்பில் வாசகர்களை வந்தடைந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியக்குறுநில மன்னர்கள் ஒவ்வொருவரையும் தங்களது புத்திசாலித்தனதாலும், அவர்களுக்கிருந்த அற்ப ஆசைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுப்பதன் வாயிலாகவும் கிழக்கிந்தியக் கம்பெனியார் உள்ளே நுழைந்தார்கள் எனச் சொல்லப்பட்டு நம்பபடுவது ஒருவகை வாய்மொழிவரலாறு. இந்த வாய்மொழி வரலாற்றின்மேல்  ஒரு  வரலாற்றுப் புனைவுக்கான தளத்தை உருவாக்கிக் கொள்ளும் தன்மையோடு கதாகாரணம் என்ற முதல் பகுதியை உருவாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து  எழுதாக் கதை 2- முதல் சாசனம், எழுதாக் கதை 3-காற்றும் வெயிலும்,மதராபட்டணம் எனும் கடற்பாக்கம் என்று தலைப்பிட்டுப் பெருநகரமொன்றின் உருவாக்கத்தைச் சொல்வதுபோல நாவலின் கட்டமைப்பு வடிவம்  கொண்டுள்ளது. அந்த வடிவத்தை அங்கேயே நிறுத்திவிட்டுத் தொடரும் பட்டணத்துவாசிகளின் சரிதம் தான் நாவலை நிகழ்காலத்துப் புனைகதையாக மாற்றுகிறது.

51 இயல்களில் விரியும் பட்டணத்து வாசிகளின் சரிதத்தில் நான்கு தனித்தனி சரிதங்கள் இருக்கின்றன. முதல் சரிதம் ஆண்வாரிசுக்காக மூன்று மனைவிகளைக் கட்டிக்கொண்டுக் காமத்தில் திளைத்துக் காணாமல் போன கரீமின் சரிதம். இரண்டாவது சரிதம் எலிசபெத் என்னும் வெள்ளைக்காரியிடம் கொண்ட மோகத்தால் தனது மேல்மலையென்னும் பெருந்தோட்டத்தை இழந்த கிருஷ்ணப்ப கரையாளரின் குடும்பப் பகையையும் நீதிமன்ற அலைவையும் சொல்லும் சரிதம். மூன்றாவது சரிதம் ஐரோப்பியக் கல்வியியென்னும் அறிவுவாதம் துரத்தப் பாரம்பரியமான - உடன் பிறப்புகளெனும் நம்பிக்கையான - உறவுகளுக்குள் ஏற்படும் காமஞ்சார்ந்த ஒழுக்கச் சிதைவும், அதன் தொடர்ச்சியான மனச்சிதைவுகளும், வெறுமையை உணரும் தருணங்களுமாக விரியும் பத்ரகிரி -விசாலாட்சி, திருச்சிற்றம்பலம்-தையல் நாயகி ஆகியோரின் சரிதம். நான்காவதான சரிதம் சதாசிவப் பண்டாரமும் நாயும் இணைந்து செல்லும் பயணம். கடவுளைத் தேடும் பயணமாகத் தொடங்கிக் காமத்தைக் கண்டடைந்ததாக மாறி, காமத்தில் காணாமல் போன அல்லது கடவுளான ஒருவனின் சரிதம் . தனித்தனியான நான்கு சரிதங்களையும் தனித்தனியாக எழுதி அடுக்கித் தரும் நாவலாசிரியர் ஒரே நாவலாக வாசிக்கத்தந்ததன் வாயிலாகப் புதுவகை நாவலொன்றை வாசித்த அனுபவத்தை உருவாக்கினார்.
நான்கு சரிதங்களுக்குள்ளும் இருக்கும் இணைப்புச் சங்கிலி காமமும் அதன் காரணமான இழப்புகளும். பொருளைத் தேடுதல் அல்லது தேடிய பொருளை இழத்தல், அறிவைத் தேடுதல் அல்லது தேடிச்சென்ற ஞானத்தை இழத்தல் என்னும் ஒவ்வொன்றின் பின்னணிக்காரணமாக இருப்பது காமமும், காமத்திற்குக்காரணமான யாமமும் என அந்த நாவலை வாசிக்கலாம். அப்படித்தான் அந்த நாவல் வந்தபோது பலரும் வாசித்து விமரிசனம் செய்தனர். படைப்பாளிகளாலும் விமரிசகர்களாலும் கொண்டாடப்பட்ட யாமம், எஸ்.ராமகிருஷ்ணனுக்குப் பல விருதுகளையும் கவனிப்பையும் பெற்றுத்தந்த நாவலும் கூட.

நாவல் இலக்கியத்தின் தோற்றத்திற்கான காரணமாக நடுத்தரவர்க்க உருவாக்கத்தையும், அவர்களின் வாசிப்புக்கான தேவையும் எனச் சமூகவியல் திறனாய்வுகள் முன்வைத்தன. நடுத்தரவர்க்க மனிதர்களின் வாழ்க்கைத் துயரத்தை - அவர்களின் இருப்பை அவர்களுக்கே எழுதிக்காட்டும் தன்மைகொண்டதாகவே நாவல்கள் உருவாகின என்பது அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கைகளும் கூற்றுகளும். சமூகவியல் திறனாய்வின் தொடர்ச்சியாகக் கருதத்தக்கநிலவியல் பண்பாட்டுப்பார்வை என்னும் அறிவுப்புலம், அக்கூற்றை முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதில்லை. “உண்மையில் நாவல்கலை மனிதர்களை எழுதுவில்லை; மனிதர்கள் உலவும் நிலவியலைத்தான் எழுதுகிறது” என்கின்றனர். உலகத்தின் நிலப்பரப்பைத் தங்களின் வரைவுக்கித்தானில் வரைந்து காட்டத்துடிக்கும் பெரும் ஓவியர்களைப் போல நாவல் எழுத்தாளர் தங்களது கருவியான எழுத்தால் நிலத்தையே எழுதுகிறார்கள் என்பது அதன் சாரம். நிலம் எழுதப்படுவது என்பது, நிலத்தில் தங்கி நிற்கும் பண்பாட்டை எழுதுவது. பண்பாட்டை எழுதுவது என்பதன் காரணமாக அதனைப் பயிலும், பயன்கொள்ளும் மனிதர்களை எழுதுவது என்பதாக மாறுகிறது என்பது அந்தக் கோட்பாடு. நிலத்தை எழுதுவதே திணையெழுத்தின் சாரம் என்பதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.

நிலவியல் பண்பாட்டை எழுதுதலே நாவல்கலையின் முதன்மை நோக்கம் என்ற கருத்தியலை விவாதிக்கவும், விளக்கவும் அதற்கு முன்பே தமிழில் பல நாவல்கள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தும் வேறுபட்ட ஒன்றாக  இருப்பது எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் எனச் சொல்லவிரும்புகிறேன். ஒவ்வொரு திணை அல்லது நிலத்தை எழுதி தங்களை அடையாளப்படுத்தியவர்களுக்கு மாறாக நவீன நிலமும் அதன் உருவாக்கமும் என்பதான முன்வைப்பைச் சொல்லும் நாவலாக இருக்கிறது யாமம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொண்டதைப்போல மதரா பட்டணம், ஐவகைநிலத்துப் பண்பாட்டுக் கூறுகளோடு அந்நிலங்களிலிருந்து மனிதர்களும் வந்துசேர்ந்ததே இப்பெருநகரம் என்கிறது.  

கதாகாரணமாகவும், நான்கு குடும்பங்களின் சரிதமாகவும் விரிந்த அந்த நாவலை வாசித்து முடித்தபோது முக்கியமான விவாதப்பொருள் எதனையும் மையப்படுத்தாத இருப்பியல்வாத நாவலாகவே முதலில் தோன்றியது. ஆனால் இருப்புதான் வரலாற்றின் ஆதாரம். கடற்பாக்கமென்னும் கடலோரக்கிராமம் மதரா பட்டணமாக ஆகிவிட்டதே நிகழ்காலத்தின் இருப்பு.  நவீனத்தமிழ் வாழ்வின் அடையாளமாக நம்முன்னே  பரந்துவிரிந்திருக்கும் மதரா பட்டணம் என்றழைக்கப்பட்ட இன்றைய சென்னைப்பட்டணம் இப்படியாகத்தான் உருப்பெற்றது என்ற கதையாக  வாசித்தவர் நினைக்குபோது வாசிப்பு அவருக்குள் திரும்பவும் பலவாசிப்புகளை நடத்தத்தொடங்கிவிடுகிறது. ஒரு பெருநகர உருவாக்கத்திற்குள் தொழில்,வியாபாரம் கல்வி, நீதி, நிர்வாகம், அறிவையும் ஞானத்தையும் தேடல் எனப் பலகாரணங்களுக்காக மனிதர்கள் வந்து சேர்கிறார்கள். பல காரணங்களால், பலவிதமான பயணங்களைச் செய்து, பலதிசைகளிலிருந்தும் வந்து சேரும் மக்கள் கூட்டம் ஒன்றோடொன்று மோதியும் முரண்பட்டும், நெகிழ்ந்தும் இணைக்கம் கொண்டு வாழ்கிற பூமியாக அது மாறுகிறது. அந்த மாற்றத்திற்குள் மேல்மலையின் உடைமையாளரான கிருஷ்ணப்பக் கரையாளரும், காட்டுப்பூக்களைப் பயிரிட்டு அத்தர் தயாரித்த கரீமும்,  வளமான வயல் வெளி மனிதர்களான பத்ரகிரியும் திருச்சிற்றம்பலமும், மணல் பரவிய கிராமமொன்றிலிருந்து கிளம்பிய சதாசிவப்பண்டாரமும் தங்களைக் கரைத்துக்கொண்டார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நிலப்பரப்பான திணைகளின் குறியீடுகள். 

நவீன நிலவியல் வெளி என்பது மரபின் கலவை. நவீன வாழ்க்கை என்பது மரபடையாளங்களின் இணைவும் தொலைப்பும். தொலைந்ததிற்குள் தேடினால் அவரவர் அடையாளங்களின் பங்களிப்பும் இருக்கவே செய்யும். அதே நேரத்தில் நவீனத்துவத்திற்குள் கரைந்துவிட்ட மரபடையாளங் களைத் தேடிக் கொண்டாடிக் கொண்டிருப்பது நவீன வாழ்வாக இருக்கவும் முடியாது என்பதும் உண்மை. இந்த உண்மையை எழுதிக்காட்டியதின் வழியாக எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் அவரது நாவல்களின் முக்கியமானதாக இருப்பதோடு, நவீனத்தமிழ் வாழ்வின் முக்கியப்பதிவாகவும் ஆகியிருக்கிறது.

நன்றி : குமுதம் தீராநதி/ செப்டம்பர் 2015


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை