: 61

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

விளையாட்டு - வேட்டை - வியாபாரம்

புனைகதையின் இருவேறு வடிவங்களையும்-சிறுகதை, நாவல் -வேறுபடுத்தும் அடிப்படைகளில் 'அளவு'க்கு முக்கியமான இடமுண்டு. அளவு என்பது எழுதப்படும் பக்க அளவல்ல. புனைகதை இலக்கியத்தில் விரியும் காலம் மற்றும் வெளியின் விரிவுகளே சிறுகதையிலிருந்து நாவல் இலக்கியத்தை விரிவாக்கிக் காட்டுகின்றன.  இவ்விரண்டும் விரியும் நிலையில் அதில் இடம்பெறக்கூடிய பாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிட வாய்ப்புண்டு.

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்று அடிப்படைகளிலுமே நேரடியாகத் தோன்றுவனவும் நினைக்கப்படுவனவும் என இருநிலைகள் உள்ளன. குறிப்பான ஒருவெளியை நேரடி வெளியாகக் கொண்ட ஒருநாவல் மிகக்குறுகிய காலத்தையும், எண்ணிக்கையில் மிகக்குறைவான பாத்திரங்களை மட்டுமே கொண்டதாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தப் பாத்திரங்களின் நினைவுகள் மூலம் காலப்பரப்பையும் நிலப்பரப்பையும் பெரும்பரப்பாக ஆக்கிவிடும் வாய்ப்பு நாவல் இலக்கியத்தில் உண்டு.
அண்மையில் வந்துள்ள சரவணன் சந்திரனின் ஐந்து முதலைகளின் கதை (உயிர்மை, அக்டோபர், 2015)  நாவலை வாசித்தபோது  குறுகிய காலப்பரப்பில்  பெருவெளிப்பரப்பு தரும் புதிய அனுபவங்கள் கிடைத்தன. தமிழில் நாவல் வாசிக்கும் விருப்பம் கொண்டவர்கள் சரவணன் சந்திரன் விரிக்கும் அனுபவங்கள் விரிவானவை என்பதோடு புத்தம் புதியன என்பதையும் உணரமுடியும் நான் அப்படி உணர்ந்தேன். அத்தோடு இந்நாவலை வாசித்து முடித்தவுடன் இதனோடு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவலும்(மலைச்சொல்,2014) நினைவுக்கு வந்தது. ஏற்கெனவே படித்த கானகனைத் திரும்பவும் படிக்கத் தூண்டியது. இவ்விரு நாவல்களையும் இணைக்கும் சங்கிலியாக விளையாட்டு - வேட்டை - வியாபாரம்  என்ற மூன்று சொற்களும் தோன்றிக் கொண்டே இருந்தன. அதற்கான காரணங்களைப் பின்னர் பார்க்கலாம். முதலில் இந்நாவல்கள் உருவாக்கப்பட்டுள்ள விதத்தைப் பார்க்கலாம்.
ஐந்து முதலைகளின் கதை.
நாவலுக்குள் சரவணன் விரிக்கும் அனுபவங்கள் தமிழகப் பரப்பிற்குள் கிடைக்காத அனுபவங்கள். உலகமயத்தின்  வரவுக்குப்பின் அதன் பகுதியாக நினைக்கும் தனிமனிதர்களுக்குக் கிடைக்கக்கூடிய பன்னாட்டு அடையாளம், கட்டுப்பாடற்ற வியாபாரமும் வாழ்க்கையும், தரகாகக்கிடைக்கும் பெரும்பணம், கொண்டாட்டங்களும் களியாட்டங்களுமென விரியும் கனவின் ருசியை அனுபவித்துவிடக் கிளம்பியவர்களின் அனுபவங்களாக விரிந்துள்ளது. அந்த அனுபவங்களைப் பெற்ற  இந்தியத்தமிழ் இளைஞன் ஒருவனின் கதையாக விரியும் நாவல், நவீன முதலாளியத்தின் விதிகள் எதையும் கற்றுக்கொள்ளாமல் முன்னுணர்வின் வழி இன்னொரு நாட்டிற்குள் நுழைந்து தோல்வியுடன் திரும்பியவனின் கதையாகவும் இருக்கிறது. கதையென்றவுடன் ஒருவனின் வாழ்க்கை வரலாறு என்று நினைக்கவேண்டியதில்லை. அதிகம் போனால் ஓராண்டிற்குள் நிகழ்ந்த சில சந்திப்புகளின் தொகுப்புகளே அவை. நாவல் வெளியான காலத்தின் முக்கிய நிகழ்வுகளான ’செம்மரக்கட்டைக்கொலைகள், நூடுல்ஸ்தடை’ போன்ற தகவல்களை எல்லாம் போகின்ற போக்கில் பேசும் சமகால எழுத்தாக வந்துள்ள சரவணனின் நாவல் இப்படித்தொடங்குகிறது.
 “எல்லோருடைய தாத்தாக்களையும் போலவே அந்தச் சிறுவனுக்கு அவனது தாத்தாவும் ஒரு கதை சொன்னார். சூரியன் எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் அதைத் தொடர்ந்து போகச்சொன்னார். தாத்தாக்களைப் பைத்தியக்காரர்களாகப் பார்க்கும் குலவழக்கம் இல்லாத அந்தச் சிறுவனும் தாத்தாவின் சொல்படியே நடந்தான்.(15)
அந்த இளைஞன் போன நாடு தைமூர். இந்தியத் தலைநகர் டில்லியின் பெயரையே தனது தலைநகருக்கும் பெயராகக் கொண்ட அந்நாடு. சூரியன் உதிக்கும் நாடுகளில் ஒன்று. கிழக்காசியப் பகுதிக்குள் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு. வேளாண்மை மற்றும் கானகப் பொருட்களுக்காக இந்தியா உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளுக்கு 17-ஆம் நூற்றாண்டில் வந்திறங்கிய ஐரோப்பியக் காலனியாதிக்கவாதிகளைப் போலல்லாமல், வியாபாரத்தின் வழியாகப் பெரும்பணமுதலையாகிவிடலாம் என்ற நம்பிக்கையில் அந்நாட்டிற்குள் நுழைந்தவன் அவன்.
தைமூர் நாட்டின் தேசிய லட்சிணையான முதலை நாவல் முழுக்க பல்வேறு  குறியீடாக ஆக்கியுள்ளார் சரவணன். கடல் அட்டைகள், காபி லூவாக் என்னும் புனுகுபூனைக் கழிவு, வனவளம்,  தனித்த ருசிகொண்ட மீன்கள், இவற்றைச் சேகரித்துத் தரத் தயாரான கடின உழைப்பாளிகளான மனிதவளம் என அத்தேசத்தின் வளத்தை வணிகப்பொருளாக்கிக் கொழுத்துவிட வந்த  மலேசியாக்காரன், சிங்கப்பூர்த் தமிழன், இலங்கைச் சிங்களன், தாய்லாந்துக்காரன் ஆகியோருடன் இணைந்தும் விலகியும் நகரும் தமிழ்நாட்டு இளைஞனின் வீழ்ச்சி என முதலைகளின் கதை விரிகிறது.
‘திரைகடலோடித் திரவியம்தேடு’ என்ற பழஞ்சொற்றோடரை உலக மயப் பொருளாதாரம் புதிய அர்த்தத்தோடு உருவாக்கி வளர்க்கிறது. விதிகள், அறங்கள், மனித உறவுகள் என எவையும் பின்பற்றப்படவேண்டியன அல்ல; எல்லாம் மீறப்படவேண்டியன என்பதை முன்வைத்து நகரும் நவீன வியாபாரம்,  அசையாச் சொத்து களுக்கு இருக்கும் மதிப்பைவிட அசையும் சொத்தான பணத்திற்கே அதிக மதிப்பெனவும் சொல்கிறது. அதை முழுமையாக நம்பிய அவன், தாத்தாவின் வழிகாட்டல் என்று சொல்லிக் கொண்டு நிகழ்காலப் பொருளியலின் லாபவேட்டைக்குள் இறங்குவதற்காகத்  தன் வீட்டை - டாலராக மாற்றிக் கொண்டு கிளம்பும்போது எதுவும் புரியாமல் வாழ்த்தி அனுப்புபவர்கள் இரண்டுபேர். ஒருத்தி நண்பன் ராஜாவின் அக்கா, அவனைத் தன் தம்பியாகவே நினைப்பவள். அவள் சொன்ன வார்த்தைகள்:
‘ இது பாண்டி அய்யா காலடி மண். போகிற இடத்தில் இதை வைத்து ஒருசெங்கல்லை வைத்தாவது கும்பிடு. பாண்டி அய்யா எப்போதும் என் தம்பியுடன் இருப்பார். (44)
இன்னொருவர் அவன் வேலைபார்த்த கம்பெனியின் உயரதிகாரி மேனன். அவர்,
சூதாட்டம் என்பதற்கு அதிர்ஷ்டம் தேவை. ஆனால் இங்கு ஆட்டத் திறமைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒரு வணிகத்தைப் பங்குச் சந்தையை அணுகுகிறமாதிரி முன்னெடுக்கப்போகிறோமா என்பதுதான் கேள்வி.  (44)
என்றொரு கேள்வியை முன்வைத்து அனுப்புகிறார். இந்தக் காட்சிகளெல்லாம் அவனின் நினைவாக வருபவை. நாவலின் நேரடிக்காட்சிகள் எல்லாம் தைமூரில் நடப்பவையே. நம்பிக்கையின்மை, அதன்பேரில் உருவாகும் போட்டி, போட்டியில் மறைக்கப்படும் ஏமாற்றுவேலைகள், அதனால் உருவாகும் வன்மம், வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் தீர்வாக நினைக்கும் குடியும் காமமும் எனப் பலவிதமான நினைவுகளை நாவல் விரித்துக் கொண்டே போகிறது.
உரிப்பொருள் (theme)  சார்ந்து கவனிக்கத்தக்க நாவல்களாக எழுதப்பட்ட  பலவற்றில் இருக்கும் முக்கியமான குறைபாடுகள்  சரவணன் சந்திரனின் நாவலிலும் உள்ளன. அதேநேரத்தில், நாவல் நிகழும் காலம் மற்றும் நிலப்பின்னணியென்னும் முதல்பொருளால் தமிழில் இதுவரை எழுதப்படாத ஒருநாவலாக வந்துள்ளது. புனைகதையின் ஒருவடிவமான சிறுகதையில் எழுதிப் பழகிய கைகளால் கவனிக்கத்தக்க முதல்நாவலை எழுதியவர்கள் உண்டு. ஆனால் நேரடியாக நாவல் எழுதவந்து தனது முதல் நாவலைக் கவனிக்கத்தக்க நாவலாக ஆக்கியவர்கள் மிகக்குறைவு.  மிகப்பெரிய ஆச்சரியம் எழுத்தாளர் இமையம். கோவேறு கழுதைகள் வந்தபோது அதற்குமுன் இமையம் என்பது எந்தவிதத்திலும் கேள்விப்படாத பெயர். ஆனால் சரவணன் சந்திரன் பத்திரிகையாளராகவும், ஊடகக்காரராகவும்  அனுபவம் பெற்றபின் தனது முதல் நாவலை எழுதியிருக்கிறார். இவ்விரண்டிற்காகவும் யோசிக்கும் - எழுதும் மனநிலை அவருக்கு ஏற்கெனவே வாய்க்கப்பெற்ற ஒன்று. இவ்விரண்டின் தன்மைகளும் நாவல் முழுக்க வெளிப்பட்டுள்ளது. செய்திக்கட்டுரை எழுதும் பத்திரிகையாளனின் மொழியும் விவரிப்பும் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளன. அது சிலநேரங்களில் பயணக்கட்டுரையாகிவிடும் தன்மைக்குள் நெருங்கிவிட்டு விலகியுள்ளது. சந்திப்புகளை நிகழ்வுகளாக முன்வைக்கும் காட்சிகள் காட்சி ஊடகத்திற்காக நிறுத்திவிட்டுப் பேசும் தன்மையில்  வெளிப்பட்டுள்ளன. அவைகளைக் கதைசொல்லி நினைவலைகளுக்குள் நகர்த்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதே நாவலின் மொழியாக மாறும். அப்படி மாறும்போது கதைசொல்லியின் இருப்பு, தான் எதிர்கொள்ளும் மனிதர்களின் நியாயங்களை மட்டுமே பேசாமல், தனது நிலைப்பாடுகள் குறித்தும் விசாரனைக்குள் இறங்கியிருக்கும். அந்த வாய்ப்புகளைச் சரவணன் தவறவிட்டுள்ளார். அதற்கான காரணம் நாவலுக்குத் தேவையான வடிவமும் சொல்முறையும் இதுதான் என உறுதியாக வரையறுத்துக் கொள்ளாததே எனத்தோன்றுகிறது. பொதுவான வெளியிலும் காலத்திலும் வைத்தே மனிதர்களின் நினைப்புகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் சரவணன், அவர்கள் குறிப்பான வெளியையும் காலத்தையும் எதிர்கொள்ளும்போது என்ன நினைத்துக் கொள்வார்கள் என எழுதாமல் விட்டுவிடுகிறார். தன்னையும் பாத்திரமாக்கிக் கதைசொல்லும் தன்மைக் கூற்றுக் கதைசொல்லலில் இத்தகைய குறைகள் தவிர்க்கமுடியாதவை.
கானகன்
சரவணனின் நாவலில் இல்லாத  கச்சிதமான வடிவம், சொல்முறை, ஓராண்டுக் காலத்திற்குள் நடக்கும் பெருமாற்றங்களைக் கொண்ட நிகழ்வுகளின் தொகுப்பு என்பதான நேர்மறைத்தன்மைக்காக கானகன் நாவல் நினைவில்  வரவில்லை. கானகன் எழுதிக்காட்டியுள்ள வேட்டையென்னும் உரிப்பொருளுக்காகவே அந்நாவல் நினைவுக்கு வந்தது. உலகமயப்பொருளாதாரத்தில் வியாபாரம் என்னும் சொல் ஒருவிதத்தில் பெருவேட்டையைக் குறிக்கும் சொல்லே. இவ்விருசொல்லுக்கும் மூலச்சொல்லாகவும் ஆதிப்படிமமாகவும் இருப்பது விளையாட்டு. அதிலும் குறிப்பாகக் கண்ணாமூச்சி விளையாட்டு. மறைந்தும் மறைத்தும் தன்னை இருத்திக்கொண்டு எதிராளிகளைக் கண்டறியும் கண்ணாமூச்சி விளையாட்டின் இன்னொருவடிவமே வேட்டை. அவ்வேட்டை ஆதிச்சமூகங்களில் சில அடிப்படைகளோடு நிகழ்ந்தன.  ஆனால்  இந்தப் பிரபஞ்சமே – அதில் இருக்கும் நிலம், நீர், காற்று, வானம், கோள்களென அனைத்துப்பரப்பும், மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டது என நம்பிய  மனித அறிவுக்காலமான நவீனத்துவம் விளையாட்டை வேட்டையாக மாற்றிக் கட்டமைத்துவிட்டது. அப்படியான கட்டமைப்பின் விளைவுகளே காடுகளை அழிப்பதும், கானுயர்களைக் கொல்வதுமாக உலகமெங்கும் விரிகின்றன. 
கானகன் என்னும் தலைப்பிலேயே உரிப்பொருளைத் தெளிவாக்கிக் கொண்ட லக்ஷ்மி சரவணக்குமார் நாவலின் நிகழ்வெளியான தவளை நாட்டையும் அதற்குள் இருந்த பெரிய பளியக்குடிகளின் குடியிருப்பான மொக்கநிலையையும் எழுதுவதாகத் திட்டமிட்டுக்கொண்டு, அதனையொட்டிய அகமலை, நவமலை, நாகமலை, வெள்ளிமலை முதலான கானகப்பெருவெளியை எழுதிக்காட்டியிருக்கிறார்.  லக்க்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நேரடியான காலப்பின்னணியாக ஓராண்டு என்பதை முடிவு செய்துகொண்டு அதனைப் பனிக்காலப்பொழுதுகளும் வனமிருகங்களின் குருதிச்சுவையும், இளவேனிற்கால நாட்களில் வனமெங்கும் விரியும் புதிய உயிர்களின் நெடி, கடுங்கோடையின் வறண்ட கனவுகளும் வாழ்விற்கான சில முன் தயாரிப்புகளும்,  பெருமழைக்காலத்தின் மர்மங்களும் வற்றாப் பகையின் நீட்சியும் என்று நான்கு பெருங்காலமாகப் பிரித்தெழுதும்போது அதுவே நாவலின் வடிவத்தைக் கச்சிதமான ஒன்றாக ஆக்கித் தந்துவிடுகிறது.  நான்கு பெருங்கால இடைவெளிக்குள் கானகமும், கானுயர்களும் சமதளத்து மனிதர்களால் எவ்வாறெல்லாம் வேட்டையாடப்பட்டன என்பதைக் குறிப்பான காலப்பின்னணியில் சொல்கிறது.  
குறிப்பான காலப்பின்னணியாக நாவலில் இடம் பெறும் காலம் தமிழக முதல்வராக எம். ஜி. ராமச்சந்திரன் இருந்த காலகட்டம். நோய்வாய்ப்பட்டு அமெரிக்கா சென்று திரும்பிய எம். ஜி. ஆர். பற்றிய குறிப்புகள் நேரடி நிகழ்வாக நாவலில் இடம்பெற்றுள்ளது. அந்தக் காலமென்பது, தமிழக நிலப்பரப்பிற்குள் மரபான வேளாண்மையும், அதனோடு தொடர்புடைய கால்நடைமேய்த்தலும், அவற்றிற்குத் தேவையான காடுகளும் பேரழிவுகளைச் சந்தித்த காலகட்டம். இப்பேரழிவுகளுக்கு அவரது ஆட்சிப்பொறுப்பை காரணமாகச் சொல்வதைவிட அறிவியலின் பேரால் நவீனத்துவ சமூகம் இயற்கைவளங்களை வேட்டையாடத் தொடங்கியிருந்த மனநிலையையே காரணமாகச் சொல்லவேண்டும்.  அம்மனநிலை நடைமுறையில் இருக்கும் சட்டங்களையும், அதனைச் செயல்படுத்துபவர்களையும் வளர்ச்சிக்கு எதிரானவைகளாகக் கருதிக் கிண்டலோடு விமரிசித்துக் கொண்டிருந்ததோடு,  சுலபமாக வளைத்துவிடவும், அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் ஒன்றாக மாற்றவும் முனைப்புக்காட்டிய காலகட்டம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  
இந்தப் பின்னணியை உருவாக்கிக் கொண்டு நாவலை நகர்த்தும் லக்ஷ்மி சரவணக்குமார், சட்டப்படியான உரிமையாளர்கள் எனச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கானகத்தின் மக்களாக அறியப்பட்ட பளியர்களின் பக்கம் நிற்கும்விதமாக நாவலின் கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். பளியர்களின் வாழ்வோடு விளையாடும் அரசு எந்திரம் (காட்டிலாகாவினர்) மலையாளத்து மரம் வெட்டிகள், கஞ்சாத் தோட்டங்களை உருவாக்கிக் கொள்ளையடிக்க நினைக்கும் சமதளத்து முதலாளிகள் பணவேட்டை, தற்காலிகக் களியாட்டத்தின் பகுதியாகக் கானத்தில் தங்கிக் கானுயர்களை வேட்டையாடும் ஜமீன்தார் அவர்களுக்கு மறைமுகமாக உதவும் காவல்துறை, பளியர்களின் பக்கமாக நின்று அவர்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்க வந்த கம்யூனிஸ்டுகள் எனக் காலத்தின் சமூக இயக்கப்போக்கை எழுதிக்காட்டுவதில் கானகன் நாவல் சரியான புரிதலைக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணி நாவலின் நேரடிக்காலமான  ஓராண்டிற்குள் நடக்கக்கூடியவையல்ல என்பதால், அவற்றைத் தனது எழுத்துப்பரப்பிற்குள் கொண்டுவரும் நோக்கத்தோடு நாவலின் அடிப்படை முரணை வேறொன்றாக வடிவமைத்துள்ளார். 
தங்கப்பன் என்னும் வேட்டைக்காரனுக்கும் அவனிடம் மோகித்துத் தன் பளியக்குடிக் கணவனான சடையனை விட்டுப் பிரிந்து வந்த செல்லாயியின் மகன் வாசிக்குமிடையேயான கண்ணாமூச்சி விளையாட்டாக வடிவம் கொண்டுள்ளது கானகன் நாவல்.  வாசி, கானகவாசிகளான பளியக்குடியின் பிரதிநிதி, அவனது அம்மாவைக் கடத்திவந்து ஏற்கெனவே இருக்கும் இரண்டு மனைவிகளோடு மூன்றாவது மனைவியாக ஆக்கியதோடு பளியக்குடிக்காரனான வாசியையையும் வேட்டைக்காரனாக மாற்ற நினைப்பவனாகத் தங்கப்பன் எழுதப்பட்டுள்ளான். சமதளத்து கிடைக்காரனின் மாடுகளைக் கொல்கிறது என்பதற்காகப் புலியொன்றை வேட்டையாடும் தங்கப்பனின் சாகசத்தோடு தொடங்கும் நாவல், தொடர்ந்து அவனின் சாகசங்கள் வழியாகவே வளர்கிறது. தனக்குப் பின் இத்தகைய சாகத்தை நிகழ்த்தப்போகும் ஒருவனாக வாசியை ஆக்கிட விரும்பி,
 ‘நீ வேட்டையாட இந்தக்காடு ஆயிரம் மிருகங்களைக் கொடுக்கும். எல்லாத்துகிட்டயும் கருணை காட்டிட்டு இருக்கக்கூடாது. நீ வாழ்றதுக்குச் செய்றதுதான் வேட்டை. இது கொலை இல்லை. . (61)
 என்று தங்கப்பன் வாசிக்குச் சொல்லும் இந்தச் சொற்கள் தொடக்கத்திலிருந்தே உவப்பானதாக இல்லை. ஆனால் தங்கப்பனின் மனமோ வேட்டையின் மீது தீராத வேட்கைகொண்டது.
 “அடிப்படையில் கொல்வது அவனுக்குப் பிடித்திருந்தது. ரத்தம் சிதற ஒரு மிருகத்தை சுட்டு வீழ்த்தும்போது தான் கடவுளாலும் சாத்தானாலும் ஒருசேர ஆசீர்வதிக்கப்பட்டவன் என்கிற கர்வத்தை உணர்ந்தான். அந்தக் கர்வம் மேன்மேலும் கொல்லச்சொன்னது. இந்தக் கர்வத்தை விரும்பினான்” (174)
தனது வேட்டை வேட்கையால் தான் ஜமீன்தாரோடு வேட்டைக்குள் செல்கிறான். நாவலின் நிறைவில் நடக்கப்போகும் யானை வேட்டையில் அவன் காட்டும் ஆவேசத்திற்கும் அதுவே காரணம்.
சடையனின் மகனாகவே அறியப்பட வேண்டுமென நினைக்கும் வாசிக்குத் தான் தங்கப்பனின் மகன் என அறியப்படுவது உடன்பாடல்ல என்பதாகவே நாவல் நகர்கிறது. அதுவே நாவலின் கதைப்போக்கில் வெளிப்படும் அடிப்படை முரண். இந்த அடிப்படை முரண் வழியாக வாசியைக் கானகனாகவும், கானகத்தின் காவலனாகவும்  எழுதிக்காட்டவும், தங்கப்பனைக் கானகத்தையும் கானுயிர்களையும் அழிப்பவனாகவும் அழிப்பதற்குத் துணைபோகின்றவனாகவும் எழுதிக்காட்டவும் செய்கிறார். கானுயிர்களுக்கும் கானகவாசிகளுக்கும் எதிராக இயங்கும் வேட்டைக்காரனான தங்கப்பனின் பெருவேட்டையில் தொடங்கும் நாவல்,  கானகனாகவும், கானுயிர்களின் நேசகனாகவும் வளரும், வாசியால் திட்டமிடப்பட்ட  இன்னொரு புலியின்  வேட்டையால் செத்துப்போனான் என்பதாக முடிகிறது.
தமிழ் நாவல் இலக்கியத்திற்குள் புதுவகையான உரிப்பொருளை அறிமுகம் செய்துள்ள இவ்விரு இளம் எழுத்தாளர்களும்  இன்னொரு முக்கியமான எழுத்துநிலைக்காகவும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்லத் தோன்றுகிறது. ஆண் - பெண் காமத்தை எழுதுவதில் அவர்களின் வயதுக்கு மீறிய புரிதல் வெளிப்பட்டுள்ளது.  பணம் சார்ந்த வாழ்க்கையில் மாறிவிட்ட பாலியல் உறவுகளைப் புரிந்துகொண்ட மனநிலையைச் சரவணன் தடையற்ற எழுத்தாகத் தருகிறார். கட்டுப்பாடுகள் அதிகமில்லாத ஒரு தேசத்தில் கொஞ்சம் குற்றவுணர்வோடு அந்நியதேசத்துப் பெண்களைக் கவனிக்கும் மனநிலையைச் சரவணனிடம் காணமுடிகிறது.  லக்க்ஷ்மி சரவணக்குமாரிடம்  கானகப்பரப்பிலும் கிராமத்துவெளியிலும், ஆண் -பெண் இருபாலாருமே  காமவிருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கடைப்பிடிக்கும் முறைகளை நடுத்தரவர்க்க மனநிலையிலிருந்து எழுதாமல், அந்தந்த வெளியில் இயங்கும் மனிதர்களின் மனநிலையிலேயே எழுதிக்காட்டும் பாங்கு வெளிப்பட்டுள்ளது. இவ்விரண்டு மனநிலையும் அந்தந்த நாவல்களின் இயங்குநிலையோடு பொருந்திப்போகக் கூடியன என்பதும் சொல்லவேண்டிய ஒன்று. 

=====================================================================
நன்றி: தீராநதி


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை