: 42

காணவில்லை

 எழுந்திருங்க பெண்டுகளே..விடிவெள்ளி வந்திருச்சி

பொழுது மறையுமுன்னே போரடிச்சுக்குமிக்க வேணும்

எழுந்திருங்க பெண்டுகளே..எழுந்திருங்க..

கொத்தன் குரல்கேட்டுக் கிராமம் முகம் அலம்பும்.

கம்மம்புல் மாளிகைகள் கதவு இமைதிறக்கும்.

ககனவெளித்தேடலுக்கு காற்றோடு பறவை மோதும்.

கலைந்தெறிந்த சருகு கொண்டு ஆலமரம் குளிர்காயும்; அருகே சிறுவருடன்.

தினந்தோறும் வீட்டுமுன் சாணியில் பாதம்படும்.

மாக்கோலம் முகம்வெளுக்க முழங்கையும் சடையுரசும்

இடுப்புக்குடம் சலசலத்து வளையலுக்குப் போட்டியாகும்

பிறைக்குப் பிடிபோட்டு கையில் எடுப்பார்கள்

காலைமென்பனியில் கால்கள் பதிப்பார்கள்.

 

ந்தக் கிராமத்தில் வளர்ந்து பிரிந்துவந்தேன்

ஆண்டுகள்  மூன்று பத்து உருண்டோடிப் போயே போச்சு.

திரும்பி வந்து பார்க்கும்போது

திசையெங்கும் அருகம்புல் தீய்ஞ்சு விரிஞ்சிருக்கு

திணைக்கதிர்கள் படப்புமில்லை; கேழ்வரகுக்கூழுமில்லை.

திரண்டு மேய்ந்துவரும் ஆட்டுச் சத்தந்தானுமில்லை

அருவாள் நெழிபோல நீண்டுவிழும் அருவியில்லை

நீரோடைதானுமில்லை;ஓரத்து நாணலுடன்.

 

கொண்டுபோனார் யாரென்று அறிந்திருந்தால் சொல்லுங்களேன்.

சொன்னவர்க்குப் பரிசாக பாராட்டுச் சொல்தருவேன்

நிதிகூட நான் தருவேன் திருப்பித்தரும்  அறிவினுக்கு.

 

பசுமைப் புரட்சியென்று பெயர்சொல்லித் திருடிச் சென்ற

எனது ஊர் கிடைத்திடுமா..?

தொடித்தலை விழுத்தண்டூன்றி நடந்துசெல்ல ஆசையுண்டு.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை