: 40

சோதனைகளின் பொருளியல் இயங்குநிலை

சோதனைகளின் பொருளியல் இயங்குநிலை
==============================================
தமிழகத்தின் முதன்மையான திராவிடக் கட்சிகளுக்குத் தனியான பொருளியல் கொள்கை என்பது இருந்ததில்லை. அந்தந்த நேரத்தில் மைய அரசு பின்பற்றும் பொருளியல் கொள்கைகளையே பின்பற்றின. நேருவினதும் அவரது மகள் இந்திராவினதும் பொருளியல் கொள்கைகளையே 1970 கள் வரை தி.மு.க. அரசு பின்பற்றியது. வரிவருவாய் மூலம் மட்டுமல்லாமல் உற்பத்திகளில் முதலீடு செய்வதின் வழியாக அரசின் வருமானத்தைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களைச் செய்வதான சமூக நல அரசாக விளங்கலாம் என்பது அதன் கருத்தியல் நிலைபாடு.

இதில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த மன்மோகன்சிங், அரசு முதலீடு செய்யும் வேலையை அரசு செய்யவேண்டியதில்லை. முதலீடும் தொழில்நிர்வாகமும் தனியார்களிடம் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்னும் நிலைக்கு நகர்ந்தது. அரசு நிர்வாகம் முழுமையும் வரிவருவாயின் வழியாக மட்டுமே நடந்தால் போதும் என்ற முடிவை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ஜி. எஸ். டி. வரிகட்டமைப்பைக் கவனித்தால் இது புரியவரலாம்.. உற்பத்திப் பிரிவு, சேவைப்பிரிவு என அனைத்திற்கும் வரிக்கொள்கையை உருவாக்கிக் கொண்டு அவற்றிலிருந்து பெறும் வரிவருவாயிலிருந்து அடிப்படைக் கட்டுமானங்களைச் செய்யும் நிறுவனமாக .அரசு இருந்தால் போதும் என்பது உலகமயத்திற்குப் பிந்திய மைய அரசின் கொள்கையாக மாற்றம் பெற்றது. உற்பத்தியைப் பெருக்குவதற்குத் தேவை நிலம், நீர், காற்று போன்ற இயற்கை ஆதாரங்கள். அதனைக் கையாளும் நிறுவனமாகவும் அரசுகள் தங்களைக் கருதுகின்றன. கையாளுதல் என்பது அதனை விருப்பப்படி பிரித்தளிப்பது என்பதான். இந்த மாற்றத்திலும் திராவிடக் கட்சிகளுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

இந்திய அளவுக்கட்சிகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு ஆதரவான பெருமுதலாளிகளை உருவாக்கினார்கள். அவர்களைப் பன்னாட்டு முதலாளிகள் என்ற நிலைக்கு உயர்த்தும் பொருளியல் கொள்கையைத் தீட்டினார்கள். அவர்களிடமிருந்து அரசுக்கான வரிவருவாயை வசூலித்து அரசை நடத்துவதையும் நன்கொடைகள் பெற்றுக் கட்சியை நடத்துவதையும் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டார்கள்.இந்திய அளவில் நடக்கும் பொருளியல் மாற்றத்தைப் புரிந்துகொண்டு தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் பெருமுதலாளிகளை உருவாக்க நினைக்கவில்லை. தங்கள் குடும்ப உறுப்பினர்களையே அந்நிலைக்கு உயர்த்துவதன் மூலம் கட்சியைச் செம்மையாக நடத்தினால் போதும். தேர்தல் காலச் செலவுக்கான பணம் கையிருப்பாக அல்லது சேவைப்பிரிவுகளில் முதலீடாக இருந்தால் போதும் என நினைத்தார்கள். இப்போதும் நினைக்கிறார்கள்.

பெரும் முதலீட்டை உற்பத்தித் தொழில்களில் செலுத்தி வளர்ச்சியில் பங்கெடுக்கும் முதலாளிகளாக ஆவதைப் பற்றி திராவிட / தமிழ் முதலாளிகளை உருவாக்குவது பற்றியும், அவர்களைப் பன்னாட்டு முதலாளிகளாக ஆக்குவதுபற்றியும் இந்த அரசியல் கட்சிகளின் அதிகார மையம் அல்லது சிந்தனைக்குழுக்கள் யோசிக்கவில்லை. அவ்வகையான பொருளியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்பதில் கவனம் செலுத்தவில்லை. அதற்குமாறாகச் சேவைப்பிரிவுகளில் மட்டுமே முதலீடுசெய்தார்கள். இப்பிரிவு முதலீடுகள் அதிகமும் வெளிப்படைத் தன்மையை வேண்டுபவை. வருமானவரிமீறல், வணிகக்குழு உருவாக்க நடைமீறல், பங்குவர்த்தகப் பரிவர்த்தனை போன்றனவற்றைச் சரியாகக் கையாள முடியாத நிலையில் எளிதாகச் சோதனைகள் மாட்டிக்கொள்கிறார்கள். இதில் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடுகள் இல்லை.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை