: 59

எல்லாவற்றையும் மறந்து விட முடியாது

எல்லாவற்றையும் மறந்து விட முடியாது


(சட்டக்கல்லூரிக் கல்வரம்: சாதிவெறியின் சரித்திர நிழல்)
உருட்டுக் கட்டை, இரும்புத் தடி, வெட்டுக் கத்தி எனச் சகல ஆயுதங்களோடும் தன்னைத் துரத்தி வந்த கும்பலிடமிருந்து இனித் தப்பிக்க முடியாது என்ற முடிவுடன் வாசல் கதவில் சாய்ந்து மொத்த அடியையும் வாங்கிச் சரிந்த சட்டக்கல்லூரி மாணவரின் முகம் நினைவில் இல்லை. அந்த மாணவரின் முகம் மட்டும் அல்ல; உடைக்கப் பட்ட காலோடு நடந்து சென்று மரக்கிளையில் தொங்கிய பின்னும் அடிக்கப்பட்டு விழுந்த இன்னொரு மாணவரின் முகமும் கூட மனதில் இல்லை. அந்த உடல்கள் நினைவில் இருக்கின்றன.
பல திரைப்படங்களில் நாயகக் கதாபாத்திரத்தின் வீரம் சார்ந்த பிம்பத்தை உண்டாக்குவதற்காக இடம் பெறும் சண்டைக் காட்சியின் பகுதியாக போலி அடி; போலியாகத் தூக்கி அடிக்கப் படுதல், போலியான ஒலிச் சேர்க்கை, போலியான ரத்தக் கொப்பளிப்பு, போலிக்காயங்கள் எனப் பார்த்து ரசிக்கப் பட்ட வன்முறையின் நிஜத்தை-அந்தக் காட்சியை செய்தியின் பகுதியாகப் பார்க்க நேரிடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . எதிர்பார்க்காத ஒன்றைப் பார்க்க நேரும் போது உண்டாகும் அதிர்ச்சியை ஒவ்வொருவரும் அடைந்திருக்கக் கூடும். எல்லோருக்கும் அத்தகைய அதிர்ச்சி உண்டாகி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் காமிரா கொஞ்சம் நகர்ந்து அடிக்கப்படுவதிலிருந்து விலகிக் காவலர்களையும், பொதுமக்களையும் பத்திரிகையாளர்களையும் காட்டிய போது ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. கண் முன்னே நடக்கும் கொலை வெறித்தாக்குதலை திரைப்படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பது போல வேடிக்கை பார்க்க முடியுமா? அதுவும் சட்டம்,ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல் துறை அப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியுமா? தங்கள் பணி மூலம் சமூகப் பதற்றத்தைத் தணித்து தேசத்தில் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியும் என நம்பும் பத்திரிகையாளர்களின் தார்மீகப் பொறுப்பு அதை வேடிக்கை பார்ப்பது மட்டும் தானா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்த போது அதிர்ச்சி ஆயாசமாக மாறித் தூக்கம் கெட்டுப் போனது தான் மிச்சம். 
சட்டக்கல்லூரி வாசலில் வைத்து ஒரு மாணவரைப் பலர் தாக்கிய அந்தக் காட்சி எனக்குப் பேரதிர்ச்சியாக இருக்கவில்லை. இப்படிப் பட்ட நிகழ்வுகள் தமிழ் நாட்டில் நடக்காத நிகழ்வுகள் அல்ல. தமிழ் நாட்டுக் கிராமங்களின் தினசரி நிகழ்வுகள் தான். திருநெல்வேலியில் வசிக்கும் எனக்கு இத்தகைய செய்திகள் புதியனவும் அல்ல. சாதி ஆதிக்கத்தையே உண்டு, சாதி ஆணவத்தோடு உறங்கி, சாதிக் காற்றையே மூச்சாக உள்வாங்கி வெளி விடும் மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஏராளமான தருணங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. வெட்டு – கொலை எனச் செய்தி எழுதாத நாட்களை திருநெல்வேலியின் நாளிதழ்கள் கணக்கில் வைத்துக் கொள்ளாமல் விட்டு விடும் என்றே நினைக்கிறேன். திருநெல்வேலியின் நகரப் பகுதியில் வசிப்பதால் தினசரிகளில் வாசிக்கும் அந்தக் காட்சிகளை நேர்க்காட்சிகளாகப் பார்க்கும் வாய்ப்புகள் இப்போது இல்லை. ஆனால் நான் பிறந்த உசிலம்பட்டி வட்டாரம் பல காட்சிகளை நேர்க் காட்சிகளாக காட்டித் தந்திருக்கிறது. பல காட்சிகள் எனது நினைவடுக்குகளில் பதிந்தும் உள்ளன.
அப்படியான காட்சிகளைப் பசுமையான நினைவுகள் என்று சொல்லக் கூடாது. சிவந்து கொப்பளிக்கும் நினைவுகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சரியும் தனது குடலை வயிற்றோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் வெட்டி எடுக்கப் பட்ட பெண்ணின் தலையோடு போலீஸ் ஸ்டேசன் வாசலில் நின்றிருந்த மனிதனை நான் பார்த்தது எனது பத்தாவது வயதில். உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பார்த்த அந்தக் காட்சிக்குச் சற்றும் குறையாத காட்சிகள் பல அடுத்தடுத்த பக்கங்களில் பதிந்துள்ளன. சொத்துத் தகராறு ஒன்றைத் தீர்த்து வைக்க வந்த பக்கத்து ஊர் நாட்டாமையைக் கூட்டத்தில் ஒருவர் கை நீட்டிப் பேசி விட்டார் என்பதற்காக ஒருவாரத்திற்குள் நீட்டிய கையின் மணிக்கட்டு வெட்டி எடுக்கப் பட்டது. வெட்டி எடுத்த கும்பல் நடுத்தெருவின் வழியாக நிதானமாகத் தான் நடந்து போனது. வேடிக்கை பார்த்த தெருக் கூட்டத்தில் ஒருவனாக நானும் நின்றிருக்கிறேன்.எனது பள்ளிப் படிப்பின் காலங்களில் எங்கள் ஊர்ப் பக்கம் கட்டைப் பஞ்சாயத்துகளில் நாட்டாமையாக இருந்த அந்த நபர் எனது கல்லூரி நாட்களில் மதுரையின் முக்கியமான தாதாவாக மிரட்டிக் கொண்டிருந்தார்.
பத்து ஆண்டுகள் கழித்து அந்தக் காட்சியை மறக்கும்படி செய்தது ஓடும் பஸ்ஸில் நடந்த அந்த நிகழ்வு. திரைப்படத்தின் முன்னிரவுக் காட்சி முடிந்து எழுமலையிலிருந்து திரும்பும் போது இரண்டு வாசலிலும் ஆயுதங்களோடு ஏறிய கும்பல் அந்தப் பஸ்ஸின் மத்திய இருக்கைகளில் இருந்த மூன்று பயணிகளை மொத்தப் பயணிகள் சாட்சியாக வெட்டி விட்டு இறங்கிப் போனது. உத்தப்புரம் கிராமத்தின் மையத்தில் இருந்த அந்தப் பஸ் நிறுத்தம் அன்று முதல் இல்லாமல் போய் விட்டது. ஒரு நிறுத்தத்திற்குப் பதிலாக இரண்டு பஸ் நிறுத்தங்கள். பஸ் நிறுத்தங்கள் மட்டும் அல்ல எல்லாமே இரண்டு பட்டன. பள்ளிக் கூடம் இரண்டு; ரேசன் கடைகள் இரண்டு; தபால் ஆபிசுகள் இரண்டு; குடிதண்ணீர் டேங்குகள் இரண்டு. அந்தத் தண்ணீரை உற்பத்தி செய்யும் கிணறுகள் இரண்டு; அதனைக் கிராமத்திற்குக் கொண்டு வரும் குழாய்கள் இரண்டு; நடக்கும் பாதைகள் இரண்டு; பயணங்களோ பலப்பல.
எனது பூர்வீகக் கிராமத்தை அடுத்துள்ள உத்தப்புரம் இரண்டுபட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. கடுமையான உழைப்பின் மூலமும், அரசு தந்த சலுகைகளின் பலனாகவும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தொடங்கியிருந்த உத்தப்புரம் கிராமத்து தாழ்த்தப்பட்டோரின் உரிமை கோரல்கள் எப்போதும் பொது வெளிகளைப் பயன்படுத்துவதில் தங்களுக்குள்ள உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் தான் இருந்தன. தனிநபர்களின் சொந்த வெளிக்கான போராட்டங்களைச் சட்டத்தின் வழியாகத் தீர்த்துவிட முடியும். அனுபவப் பாத்தியதைகள் மூலம் சொந்தம் கொண்டாடப்படும் பொது வெளிகளின் மீதுள்ள உரிமைகளைச் சட்டத்தின் வழியாகத் தீர்த்து வைப்பது அவ்வளவு சுலபமல்ல.
ஒரு கிராமத்தின் கோயில், கண்மாய், குடிதண்ணீர்க் கிணறுகள், பாதைகள், மேய்ச்சலுக்கான புறம்போக்கு நிலம் எனப் பொது வெளிகளைப் பயன்படுத்துவதில் ஆதிக்க சாதியினர் எப்போதும் ஏகபோக உரிமைகளை நிலை நாட்டி வந்தனர். அந்த ஏகபோக உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப் படுவது தான் ஜனநாயகத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படைகள் சமூக வாழ்க்கையின் வழிமுறையாக மாறும் போது ஆதிக்கம் செலுத்தியவர்கள் தங்களின் போக்கைக் கைவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுவரை உரிமைகளும் சலுகைகளும் பெறாத சமூகக் குழுக்கள் அவற்றைப் பெறுவதன் மூலம் தங்களின் இருப்பை உணரத் தொடங்குவார்கள். இந்த இயக்கப்போக்கைப் புரிந்து கொள்ளாத நிலையில் – இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஏற்படும் முரண்பாடுகளே சாதிக்கலவரங்களாக உருப்பெறுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற அரசுகள் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். போதித்துப் புரிய வைப்பதில் தொடங்கி அச்சமூட்டிப் பணிய வைப்பதுவரை அத்தனை வழிகளையும் பின்பற்றினால் தான் ஜனநாயகத்தின் பரிமாணத்தை – சட்டத்தின் ஆட்சியைப் புரிய வைக்க முடியும். சொல்லிப் புரிய வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே இல்லை என்பதுதான் மிகப் பெரிய துயரம். சொல்லிப் புரிய வைக்க வேண்டிய பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களே சாதீயத் தீயை மூட்டும் வேலையைச் செய்யும் பல தருணங்களை நேரில் கண்டிருக்கிறேன். அச்சமூட்டி அடக்க வேண்டிய காவல்துறையும் கூடச் சாதீயப் பிளவுகளால் கனன்று கொண்டிருப்பதும் நிதர்சனமான உண்மை.
கல்வி அறிவின் வழியாக இந்திய ஜனநாயகத்தைப் புரிந்து கொண்டு மாறியிருக்க வேண்டிய கல்வி நிறுவனங்களே கலவர பூமிகளாக ஆகி வருகின்றன. குறிப்பாகச் சட்டக் கல்லூரிகள் கலவரத்தின் – சாதி மோதலின் உச்சக் கட்டத்தைப் பல ஆண்டுகளில் பல முறை சந்தித்துள்ளன. ஆம். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கும்பல் கும்பலாக வன்முறையில் ஈடுபடுவது இது முதன் முறையல்ல. இந்த முறை ஏற்பட்ட அடிதடிகள், காயங்களை விடப் பலமடங்குக் கூடுதலான காயங்களும் அடிதடிகளும் இதற்கு முன்பும் பல முறை ஏற்பட்டுள்ளன. சென்னை சட்டக் கல்லூரி என்றில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல சட்டக் கல்லூரிகளிலும் இதுதான் நிலைமை. பல ஊர்களில் செயல்படும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளும் கூட இதற்கு விலக்கல்ல. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கக் கூடும். இதன் காரணங்களைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கலை அறிவியல் கல்லூரிகளுக்கும், சட்டக் கல்லூரிகளுக்கும் படிப்பதற்காக வரும் மாணாக்கர்களின் சாதிப் பின்புலம் சார்ந்த புள்ளி விவரங்களுக்குள் செல்ல வேண்டும்.
பல தலைமுறைகளாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் முன்னேறிய சாதியினர் தங்களின் உயர்கல்வியைத் தரமான தனியார் கல்லூரிகளில்– குறிப்பாகத் தொழில் கல்லூரிகளில் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கிப் பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன. இன்று தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் மொழி மற்றும் சமூக அறிவியல் துறைகளின் பட்ட மேற்படிப்பில் சேர முற்பட்ட வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிப்பதே இல்லை. சென்னைப் பல்கலைக்கழகம் விதிவிலக்காக இருக்கலாம். பிற்படுத்தப்பட்ட சாதிகளில் பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்களும் , மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் அட்டவணைச் சாதியினரும் மட்டும் தான் விண்ணப்பிக்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் பட்டப் படிப்பில் சேர வருபவர்களின் புள்ளிவிவரங்களும் இதைத் தான் காட்டுகின்றன. தமிழ் நாட்டின் சட்டக்கல்லூரிகள் அனைத்துமே அரசுக் கல்லூரிகளாக உள்ளன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
வழக்குரைஞர்களாக ஆவதற்குச் சட்டக்கல்வி அவசியம் என்பதைவிட அரசியல்வாதிகளாவதற்குச் சட்டக் கல்லூரியின் நுழைவு தேவை என்பதான நம்பிக்கை 1970-கள் தொடங்கி இருந்து வரும் ஒன்று. சட்டம் படித்தவர்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்குப் பதிலாகச் சட்டத்தை வளைப்பதற்குப் பழகிக் கொள்வதன் மூலம் தேர்தல் அரசியலில் அதிகாரத்தை நெருங்கி விட முடியும் என நம்பினார்கள். இன்று அந்த நம்பிக்கையும் கூடப் பொய்த்து விட்டது. அரசு தரும் உதவியைப் பெறும் நோக்கத்தோடு அரசுக் கலைக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அப்படிச் சேர்கிறவர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால் பெரும் பாலும் மிகப் பிற்பட்ட சாதி மற்றும் பட்டியல் இன மாணாக்கர்களே அதிகம் என்பது புரிய வரலாம். இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் இரண்டு பெரிய குழுக்கள் எதிரும் புதிருமாகத் தங்களை நிறுத்திக் கொண்டு யுத்தங்களை நடத்திக் கொண்டே வருகின்றனர். ஆதி திராவிடர்கள், பட்டியல் இனத்தவர் என தலித் சாதிகள் அடையாளப் படுத்தப் பட்டு ஒற்றைக் குழுவாக ஆக்கி ஒதுக்கப்படுவதற்கு எதிராகத் தேவர்கள் அல்லது முக்குலத்தோர் என்ற அடையாளத்துடன் ஒற்றைக்குழுவாகக் கள்ளர், மறவர், அகம்படியர் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரே குழுவாக அடையாளம் காட்டுகின்றனர்.
பட்டியல் இனத்தவர்களும் , மிகப் பிற்பட்டவர்கள் என்ற பிரிவினரும் கிராமஞ்சார்ந்த பொருளாதார நிலையில் அடுத்தடுத்த அடுக்கில் இருப்பவர்கள். ஆனால் சமூக வெளியில் அடக்குபவர்களாக மிகப் பிற்படுத்தப் பட்ட சாதியினரும், அடங்கிப் போக வேண்டியவர்களாக பட்டியல் இனத்தவரும் இருப்பதாக இன்னும் நம்புகின்றனர். கிராம வெளியில் இந்த நம்பிக்கை கேள்விக்குள்ளாவதற்குக் கல்விச் சாலைகளில் தரப்படும் கல்வி உதவித்தொகைகள் மற்றும் சலுகைகள் தான் காரணம் என நம்பப்படுகிறது. தாங்களும் அத்தகைய சலுகைகள் கிடைத்ததால் தான் உயர்கல்வியைப் பெற முடிகிறது என்பதை மறந்து விட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைப்பதாக நம்பும் அவர்கள் அதைக் குறி வைத்துத் தாக்கும் வாதங்கள் இன்று கல்லூரி வளாகங்களில் தொடர்ச்சியாகக் கேட்கும் ஒன்றாக இருக்கிறது. 
நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்களின் விடுதலையை முன் வைத்துப் புதிய அடையாளங்களையும் குறியீடுகளையும் உண்டாக்குவது புரிந்து கொள்ளப் பட வேண்டிய ஒன்று. கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கல்வியின் உச்சபட்சங்களைத் தொட்டதோடு, சுதந்திர இந்தியாவிற்கே அரசியல் சட்டத்தை எழுதித் தந்த டாக்டர் அம்பேத்கர் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாக ஆகி இருக்கிறார்.அவரது சிலைகள் சேரிகள் தோறும் நிறுவப்படுகின்றன. சேரிகள் தோறும் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டதின் எதிரொலியாகப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைகள் தென்மாவட்டக் கிராமங்களில் நிறுவப்பட்டன என்பது அண்மைக்கால நிகழ்வு. அதன் தொடர்ச்சியாக வ.உ.சி. சிலையைப் பிள்ளைமார்களும், திருமலை நாயக்கர் சிலையை நாயுடுகளும், வீரன் அழகு முத்துக்கோன் சிலையை யாதவர்களும், நேசமணியின் சிலையை நாடார்களும், தங்களின் சாதிகளுக்கான குறியீடுகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் கூட அண்மைக்கால நிகழ்வுகள் தான். குறியீடுகள் நிறுவப்படுவதும், அவை சிதைக்கப்படுவதும் கூட வன்முறைக்கான பின்புலங்களாக மாறியதும் அந்த வரலாற்றின் தொடர்ச்சி தான். தென் மாவட்டக்கிராமங்களில் இன்று தேவர் சிலைகளும் அம்பேத்கர் சிலைகளும் கூண்டு கட்டிப் பாதுகாக்கப்படுகின்றன.
ஆதிக்க சாதிகளின் அடையாளங்களை – குறியீடுகளை- பொது அடையாளங்களாகத் தாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது போலத் தங்களின் குறியீடுகளையும் பொது அடையாளமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது எப்படித் தவறாக இருக்க முடியும்.? ஆனால் அவர்களது அடையாளங்களும் குறியீடுகளும் எப்போதும் கேள்விக்குறியாகி வருகின்றன. ராணி மங்கம்மாள், காயிதே மில்லத், பசும்பொன் தேவர் முதலான பெயர்கள் மாவட்டங்களுக்குப் பெயரான போது எதிர்ப்புகள் எழவில்லை; கட்டபொம்மன், நேசமணி, தீரன் சின்னமலை எனப் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் குறியீடுகள் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயரான போதும் எதிர்ப்புகள் எழுந்ததில்லை. ஆனால் வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் ஒரு போக்குவரத்துக் கழகத்தின் பெயரான போது ஏற்பட்ட எதிர்ப்புகளின் விளைவே சென்ற நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் ஏற்பட்ட தென்மாவட்டக் கலவரங்கள் என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டிய பேருந்தில் ஏற மறுத்ததன் இன்னொரு வடிவம் தான் கல்லூரியின் பெயரான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரை அச்சிட மறுப்பதும் கூட.
தமிழ்நாட்டுக் கிராமங்களில் நீறுபூத்த நெருப்புக்களாக –நள்ளிரவு வெக்கையாகத் தொடரும் சாதீய மோதல்கள் கல்லூரி வளாகங்களுக்குள்ளும் நீள்கின்றன என்பதைச் சட்டக் கல்லூரிகள் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகின்றன. கிராமங்களில் பொது வெளியின் மீது ஆதிக்க சாதிகள் கோரும் உரிமையின் நீட்சியே கல்வி வளாகங்களிலும் தொடர்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்தும் சாத்தியங்கள் ஏதேனும் உண்டா? என்று சிந்தித்தாக வேண்டும். அச்சிந்தனையின் விளைவாகப் பெரும் மாற்றங்களை உருவாக்கி ஆக வேண்டும். வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலம் சமூக அடுக்குகளில் நிலவும் ஆதிக்க உணர்வும், அதிகாரப் படிநிலைகளும் புரிந்து கொள்ளப் படும் வாய்ப்புகள் உண்டு. அத்தகைய புரிதலின் வழியாகவே எல்லாம் மாறி விடும்; சரியாகி விடும் என்றெல்லாம் விட்டு விட முடியாது. அத்தகைய கருத்தோட்டத்தோடு அரசுத்துறை நிறுவனங்கள் வாளா இருந்ததின் காரணமாகவே இந்திய சமூகம் கோரமான எதிர்விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்த எதிர் விளைவுகள் ஏற்படக் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பலரும் சொல்லும் காரணங்கள் கல்விக் கூடங்கள் அரசியல் மயமாகி விட்டன என்பதாக இருக்கிறது. அப்படிச் சொல்பவர்கள் அரசியல் என்பதை ஓட்டு வாங்கி வெற்றி பெற்று சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகி தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் நபர்களின் செயல்பாடுகளை அரசியல் செயல்பாடாகக் கருதுகிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரு முறை வெற்றி பெற்ற அரசியல் கட்சி அல்லது உறுப்பினர் தொடர்ந்து வெற்றி பெறத் தேவையான பணம் அல்லது உணர்ச்சியூட்டப்பட்ட கும்பலைத் தக்க வைத்துக் கொள்வதில் ஈடுபடுவது சரியான அரசியலாக ஆகாது.
என்னைக் கேட்டால் நமது கல்வி வளாகங்கள் அரசியல் மயமாக ஆகவில்லை என்பதுதான் உண்மை. இங்கே நடந்து முடிந்துள்ள அரசியலாக்கம் என்பது திசை திருப்பப் பட்ட அரசியலாக்கம் மட்டுமே. கல்வி நிறுவனங்களில் செயல்பாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று விவாதித்து முடிவு எடுக்கும் நடைமுறைகள் எப்போதும் பின் பற்றப்படுவதில்லை. இருக்கின்ற அமைப்புகளிலும் கூட அதிகார மையத்தை அனுசரித்துப் போகும் நபர்களை அமர வைத்துக் காரியம் சாதிக்கும் போக்கே நிலவுகிறது. அதற்குப் பதிலாக அதிகம் பாதிக்கப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு என்பதான ஜனநாயகத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டு ஓர் அமைப்பில் இருக்கும் படிநிலை வேறுபாடுகளுக்கேற்ப பிரதிநிதித்துவத்தை வழங்குதல், நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்தல், முறைப்படியான பங்கேற்புகள், அறிவு பூர்வமான விவாதங்கள் நடைபெறச் செய்தல், பொதுநன்மைக்குக் குந்தகம் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றனவற்றை உள்ளடக்கிய அரசியல் இங்கு அறிமுகப் படுத்தப்பட வேண்டும். அப்படியான அரசியலுக்குரியவர்களாக ஆக்குகிற வேலையைக் கல்வி நிறுவனப் பொறுப்பாளர்கள் செய்யாத போது மாணாக்கர்கள் திசை திருப்பப்படும் வாய்ப்புக்கள் நேரத்தான் செய்யும். நமது கல்லூரிகளில் நடந்துள்ள அரசியலாக்கங்களும் மோதல்களும் அதைத் தான் உறுதி செய்கின்றன.
மனித உயிர்களைத் துச்சமென மதிக்கும் ஆணவத்தைத் தனக்குள் கொண்ட சாதி மனிதர்களின் கூடாரங்களாக நமது கிராமங்கள் மட்டும் அல்ல கல்விக் கூடங்களும் அசைந்து கொண்டிருக்கின்றன. இதை நமது அரசுகளும் அறிவுஜீவிகளும், தன்னலம் தவிர பிறர்நிலையைச் சிறிதும் பார்க்க விரும்பாத நடுத்தர வர்க்கமும் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. இந்த தேசத்திற்கு ஆபத்தைத் தரும் பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றும் சந்தைப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி, மின்சாரப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, தேர்தல் கொண்டாட்டங்கள் போன்றன மட்டும் தான் என அவை கருதிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் இவை எல்லாவற்றையும் விட ஆபத்தான பிரச்சினை தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சாதி வேறுபாடுகள் என்பதை உணர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா.

உயிர்மை 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை