: 43

இலக்கு ஒன்று: பாதைகள் மூன்று : பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வியூகங்கள்

1967-இல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்பதாகப் பதிவு செய்வதா? பெரியவர் பக்தவச்சலத்தின் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் இயக்கமின்மைக்கும் பிடிவாதத்துக்கும் கிடைத்த தோல்வி என்பதாகப் பதிவு செய்வதா? என்று கேட்டால் நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டாவதைத் தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

விலைவாசியைக் கட்டுப் படுத்தி, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாமல் தவித்த பக்தவச்சலத்தின் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராகத் தி.மு.க. முன் வைத்த, ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒருபடி நிச்சயம்’ என்ற கோஷத்தை நேர்மறைக் கோஷமா? எதிர்மறைக் கோஷமா?என்று இன்றும் கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியின் ஆதிக்கத்தைக் கட்டுப் படுத்துவதில் அக்கறை காட்டாமல், அதன் பரவலுக்கு ஆதரவாக இருந்து வருகிறது காங்கிரஸ் என்பதை உணர்த்தும் விதமாக முன் வைக்கப்பட்ட ‘இந்தி ஒழிக’ , ‘ தமிழ் வாழ்க’ என்ற முழக்கம் எதிர்மறை முழக்கம் என்று உறுதியாகச் சொல்லலாம். தாய்மொழிக்கு வரும் ஆபத்தைக் காக்காத அரசு இருக்க வேண்டுமா? என்ற கேள்வியின் மேல் எழுந்த வெறுப்புணர்வின் விளைவுகள் தான் அறுபத்தேழில் ஆட்சியைக் கைமாற்றித் தந்தன.

தமிழின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அதிகமான ஆபத்துகளை உண்டாக்கி வந்த ‘ஆங்கிலத்தை ஒழிக’ என்று சொல்லாமல் ‘இந்தி ஒழிக’ என்று சொன்னது அரசியல் கோஷம் என்பது இப்போது புரிகிறது. திராவிட இயக்கங்களின் ஆட்சி நாற்பது ஆண்டுகளை முடிந்த பின்பு இந்தி இனி நுழையாது என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தமிழும் பெரும்பான்மையான தமிழர்களும் வாழ்வார்கள்; மேம்பாடுகள் உண்டாகும் என்பதற்குப் பெரிதாக உத்தரவாதம் எதுவும் இல்லை.

நாங்கள் உருவாக்க நினைக்கும் தமிழக அரசியல் இப்படிப் பட்டதாக இருக்கும். அதற்காக எங்கள் கட்சி பின்பற்ற உள்ள பொருளாதாரக் கொள்கை இது. அதை நடை முறைப்படுத்த நிறுவன ரீதியான அமைப்பு முறைகளில் பின்வரும் மாற்றங்களைச் செய்ய உள்ளோம் என்பதான கொள்கை வழி அரசியலை தமிழகக் கட்சிகள் எப்போதும் மக்களிடம் முன் வைப்பதில்லை. அப்படி ஒன்று இருந்தால் கூட அவற்றைத் தள்ளி வைத்து விட்டு, ஆட்சியில் இருப்பவர்கள் மேல் உண்டாகும் வெறுப்புணர்வை அதிகபட்சமாக வளர்த்தெடுக்கும் எதிர்மறைக் கோஷங்களைக் கண்டறிவதிலும், அவற்றைப் பயன்படுத்தித் தேர்தல் வெற்றியை அறுவடை செய்வதிலுமே குறியாய் இருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை நேர்மறை முழங்கங்களை விட எதிர்மறை முழக்கங்களே எப்போதும் தமிழகத் தேர்தலின் பெரும் முழக்கங்களாக இருந்து வந்துள்ளன.

இந்திய விடுதலைக்குப் பிந்திய தமிழக அரசியலைச் சாதாரணமாகக் கவனித்து வந்தவர்களுக்குக் கூட இந்த உண்மை புரியக் கூடும். 1967 தொடங்கித் தமிழக அரசியலில் திமுகவும் அஇஅதிமுகவும் மாறி மாறி ஆட்சியை இழந்ததற்கும்/பெற்றதற்கும் பின்னணியில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்பட்ட எதிர்மறைக் கோஷங்களே முக்கியக் காரணங்களாக இருந்தன .
‘ஊழல் ஆட்சி, இது ஒழிக்கப் பட வேண்டும்’
‘திறமையற்ற நிர்வாகம், இறக்கப்பட வேண்டும்’
‘தேச விரோத அரசு, அகற்றப் பட வேண்டும்’
‘அராஜக ஆட்சி, வீட்டிற்கு அனுப்பப் பட வேண்டும்’
என்பதான எதிர்மறைக் கோஷங்களே இங்கு பெரும்பாலும் வெற்றிக் கனியைப் பறித்துத் தந்துள்ளன. இனி வரும் தேர்தலிலும் இப்படியான எதிர்மறைக் கோஷம் ஒன்று எழுப்பப்படலாம்; அக்கோஷம் வெற்றியைப் பெற்றும் தரலாம்.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ இ அதிமுகவுக்கு அத்தகைய கோஷம் ஒன்றை இப்போதே உண்டாக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை; காரணம் சட்டமன்ற தேர்தலுக்குக் கால அவகாசம் உள்ளது. அடுத்து வரப் போவது பாராளுமன்றத் தேர்தல் தான் ; அதனால் அதற்கேற்ற முழக்கத்தைக் கூட்டணி வியூகத்திற்குப் பின்னர் உருவாக்கக் கொண்டால் போதும் என்று தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் 2011 இல் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி அப்படிப் பொறுமையாக இருக்க முடியாது.

வட மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்ற அடையாளத்தைத் துடைத்தெறிய தென் மாவட்டங்களிலும் கட்சி அமைப்புகளைத் தொடங்கிப் போராட்டங்கள் நடத்தினால் மட்டும் போதாது. ஒட்டு மொத்தத் தமிழர்களின் மனத்தையும் தட்டிப் பார்க்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும்; குறிப்பாகப் பண்பாட்டு நடவடிக்கைகளையும் நலவாழ்வு சார்ந்த முன் மொழிவுகளையும் கண்டுபிடித்தாக வேண்டும். அவையே ஓர் இயக்கத்தின் எல்லைகளை விரிவு படுத்திப் புதிய அடையாளங்களுக்குள் இட்டுச் செல்லும். இதைச் சரியாக உணர்ந்துள்ளதாகப் பா.ம.க.வின் சமீப்த்திய அணுகுமுறைகள் காட்டுகின்றன. பொங்குதமிழ்ப் பேரவை, தமிழ்ப் படைப்பாளர் பேரியக்கம், என்பதான அடையாளங்களோடு மக்கள் தொலைக்காட்சியின் தனித்துவமான ஒளிபரப்புகள் அதன் பண்பாட்டு வெளியையும் அடையாள முன்னிறுத்துதலையும் காட்டுகின்றன என்றால் அக்கட்சி கண்டு பிடித்துள்ள மூன்று முழக்கங்களும் தேர்தலுக்கான நகர்வை அடையாளப்படுத்துகின்றன என்று சொல்லலாம்.

திரைப்பட மோகமும் பண்பாட்டுச் சீரழிவும் தடுக்கப் பட வேண்டும் 
மதுக்கடைகள் ஒழிக்கப் பட வேண்டும்;
புகைபிடித்தல் நிறுத்தப் பட வேண்டும்.

இம்மூன்று முழக்கங்களும் நேர்மறை முழக்கங்களா? எதிர்மறை முழக்கங்களா? என்று கேட்டால் தீர்மானமான பதில் எதையும் சொல்ல முடியாது தான். ஆனால் இந்தி ஒழிக என்ற முழக்கத்தைப் போல இவை அரூபமான முழக்கங்கள் அல்ல என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். மக்கள் வாழ்வின் மீது கொண்ட அக்கறையின் பருண்மையான வெளிப்பாடுகள் இவை.

இம்மூன்று முழக்கங்களில் முதல் இரண்டை–திரைப்படம், மதுக்கடைகள் ஆகியவற்றிற்கெதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தீவிரமாக முழக்கமிட, கடைசி முழக்கத்தை – புகைப் பிடித்தலுக்கெதிரான யுத்தத்தை- அவரது மகனும் இளம் தலைவருமான அன்புமணி ராமதாஸ் சட்டத்தின் எல்லைக்குள் இருந்தே நடத்தி வருகிறார். இம்மூன்றும் தமிழர்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியன என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழர்களுக்கு மட்டும் அல்ல மனித குலத்திற்கே எதிரான அம்சங்கள் கொண்டனவும் கூட. தனிமனிதனின் உடல் நலத்தைக் கெடுத்து நோய்களின் இருப்பிடமாக மனித உடலை மாற்றி விடும் ஆபத்துக் கொண்டது புகைப் பிடித்தல் பழக்கம் என்றால், குடும்பத்தின் வருமானத்தைப் போதைக்காகச் செலவழிப்பதன் மூலம் ஏராளமான குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் எதிர்கால வாழ்க்கையும் சீரழியக் காரணமாக இருப்பது மதுப் பழக்கம். இவை இரண்டும் ஒழிக்கப் படும் நிலையில் மனித வாழ்க்கை – குறிப்பாக ஏழை மக்களின் வாழ்க்கை பெருமளவு மேம்பட வாய்ப்புண்டு. சமூகத்தின் அடித்தள மக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான குரலை- முழக்கத்தைத் தனது கட்சியின் முழக்கமாக வைப்பதை எதிர்மறை முழக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் நடைமுறைப் படுத்தும் வழி முறைகளைப் பற்றி யோசிக்கும் போது இவையெல்லாம் இந்தி ஒழிக என்று முழங்கப் பட்ட அரசியல் கோஷம் போல ஆகி விடுமோ என்ற அச்சம் உண்டாகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

பீடி, சிகரெட் தயாரிக்கும் ஒன்றாக மட்டும் இல்லாமல் மருத்துவப் பயன் கொண்டதாக விளங்கும் புகையிலை பயிரிடுதலை நாட்டில் தடுக்க முடியாது. ஆனால் பீடி, சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலையை மூடாமல், உற்பத்தி செய்த பொருட்களை உரிய வரிகளையைப் பெற்றுக் கொண்டு சந்தைப் படுத்துதலை அனுமதித்து விட்டுப் புகை பிடித்தல் சட்ட விரோதமானது எனச் சொல்லும் அரசின் செயல் பாட்டையும், அதனைத் தங்கள் கட்சியின் ஆதார முழக்கங்களில் ஒன்றாக வைக்கும் அரசியல் கட்சியையும் மக்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்பதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணியும் அவரது தந்தையும் பாமகவின் தலைவருமான ராமதாஸும் விளக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

புகையிலை சார்ந்த புகைபிடித்தலும் சரி, மதுபானம் சார்ந்த குடிப் பழக்கமும் சரி நாட்டின் வருமானத்தின் ஒரு பகுதியை ஈட்டித்தரும் தொழில்களோடும் அதன் முதலாளிகளோடும் மற்றும் தொடர்பு கொண்டன அல்ல; அத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமான சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள், போன்றோரின் அன்றாட வாழ்க்கையோடும் தொடர்பு கொண்டனவாக உள்ளன. இந்தப் பின்னணியில் தான் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கெதிரான பிரசாரத்தை உலக நாடுகள் பலவும் தீவிரமான பிரசாரம் மற்றும் ஆலோசனை என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. கடுமையான சட்டம் இருக்கிறது என்பது கூட ஒருவகைப் பிரசாரம் தான். எனவே சட்டத்தின் வழியாகவும் , சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆலோசனை களாகவும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றிற்கு எதிரான பிரசாரத்தைத் தொடரலாம். அதற்கான சாத்தியங்கள் மட்டுமே இங்கே இருக்கின்றன. அப்படித் தொடரும் போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு.எந்தவொரு பிரச்சாரத்தையும் கொள்கையையும் தன்னிலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் .

ஒரு தனிமனிதனோ அல்லது இயக்கமோ ஒரு கொள்கை அல்லது கருத்தைப் பிறருக்குச் சொல்வதற்கு முன்னால், தானே பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். தானோ அல்லது தன்னுடைய இயக்கமோ பின்பற்றுவதற்குச் சாத்தியப் படாத ஒன்றைப் பிறருக்கு அல்லது பொது மனிதனுக்கு உரியதாகப் பிரசாரம் செய்வதும், பின் பற்ற வேண்டியதாகப் பரிந்துரை செய்வதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகக் கருதப் படாமல் போவது மட்டுமல்ல; சொன்னவரின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கையின்மையையும் உண்டாக்கி விடும் ஆபத்தையும் கொண்டது. இதனால் தான் காந்தி தனது கொள்கைகளைத் தானே பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டார். அவரது சத்திய சோதனையின் பல பக்கங்களில் அவர் தன்னையே சோதித்துக் கொண்டதை ஆச்சரியத்தோடு நாம் வாசிக்க மட்டுமே முடிகிறது. புகை பிடித்தலையும் மதுப் பழக்கத்தையும் ஒழித்து விட வேண்டும் எனத் தீவிரமாகப் பிரசாரம் செய்யும் பாட்டாளி மக்கள் கட்சி அந்தச் சோதனையைத் தங்கள் கட்சியினரிடம் முதலில் தொடங்கிட வேண்டும். மதுப் பழக்கம் இல்லாத தொண்டர்களால் நிரம்பி வழியும் கட்சியாக அது தன்னை உருமாற்றிக் கொள்வதோடு, புகைபிடிக்காத கூட்டத்தினரைக் கொண்டு மாநாடுகளை நடத்திக் காட்ட வேண்டும். அப்படிச் செய்யாமல் தீவிரமான கோபத்தையும் ஆவேசத்தையும் மட்டும் புகைக்கு எதிராகவும் மதுவுக்கு எதிராகவும் காட்டும் போது நம்பகத்தன்மை ஏற்படாமல் போய்விடும்.

புகைபிடித்தல், மதுப் பழக்கம் போலத் திரைப்படத்தை முழுமையாக ஒதுக்கத் தக்க ஒன்று என்று சொல்ல முடியாது. தமிழக மக்களின் வாழ்வில்- குறிப்பாகப் பண்பாட்டுத் தளத்தில் திரைப்படங்களும், திரைப் படங்களின் நகல்களையும் கூறுகளையும் சரக்காக வைத்து உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் உண்டாக்கும் பண்பாட்டுப் பிறழ்வுகளும் அடையாள அழிப்புகளும் பருண்மையானவை தான். அத்துடன் அங்கிருந்து கிளம்பும் நடிக அரசியல்வாதிகளால் தமிழகம் திசைமாறிக் கெட்டுக் கிடக்கிறது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் வாதமும் கூடச் சரியானது தான். ரசிகர்களை வைத்து அரசியல் களத்தில் வெற்றி பெற்று விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை உணர்த்திய முன்னோடி மாநிலம் தமிழகம் என்பதும் கூட உண்மை தான். அந்த மாதிரியை இன்று பல மாநில நடிகர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டதால் ஒட்டு மொத்த இந்திய அரசியலும் சீரழிவுக்குள் நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூடக் கருத்துத் தெரிவிக்கலாம். ஆனால் இவை எல்லாம் திரைப் படம் என்ற கலைச்சாதனத்தின் நேரடி விளைவுகள் அல்ல என்பதை மறுத்து விட முடியாது. சரியான திசையில் மக்களை அரசியல் படுத்த வேண்டிய இயக்கங்கள் அதைத் தவற விட்டதனால் உண்டான எதிர்மறை விளைவுகள் என்பதை மறந்து விடக்கூடாது. அரசியல் இயக்கங்கள் கொள்கைகளைச் சொல்வதைத் தவிர்த்து விட்டுப் புனைவுகளையும் பொய்களையும் ஏற்கத்தக்க வகையில் சொல்லும் பிம்பங்களாக நடிகர்களை மாற்றிப் பயன்படுத்தியதின் எதிர்மறை விளைவுகளை வெகுமக்கள் கலையாகவும் பொழுது போக்குச் சாதனமாகவும் விளங்கும் திரைப்படத்தின் மீது ஏற்றி வெறுப்பை உமிழ்வது சரியாக இருக்குமா என்பதைப் பாட்டாளி மக்கள் கட்சி திரும்பவும் யோசித்தாக வேண்டும். அத்துடன் திரைப்படம் போன்ற ஊடகங்களைத் தடை செய்வது; வெளியிடுவதைத் தடுப்பது போன்ற செயல்களில் அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் இறங்குவது பாசிசத்தின் வெளிப்பாடாக மாறி விடும் ஆபத்துக் கொண்டவை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

2011 –இல் ஆட்சியைப் பிடிப்பது என்ற ஒற்றை இலக்கை நோக்கி மூன்று பாதைகளில் பயணம் தொடங்கியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. பருண்மையான முழக்கங்களை முன்வைத்து நகரும் அது திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டதாக எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. இப்போது அவை பின்பற்றிய உத்திகளையே தனது தேர்தல் உத்தியாகவும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சுவையான நகை முரண்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை