: 20

உழவுக்கும் தொழிலுக்கும் ...

உழவுக்கும் தொழிலுக்கும் ...

மேற்கு வங்கமாநிலம் சிங்கூரிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருத்தத்துடன் வெளியேறி விட்டது. வருத்தத்துடன் வெளியேறியது என்று சொல்வதை விட இறுக்கத்துடன் வெளியேறியது என்று சொல்வதே சரியாக இருக்கும். டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா தனது முகத்தில் வெளிப்பட்ட இறுக்கமும் வருத்தமும் விலக நீண்ட நாட்கள் காத்திருக்கவில்லை.
வங்காளத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று அவர் சொன்ன அடுத்த நிமிடமே ஒவ்வொரு மாநில முதல்வர்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தத் தொழிற்சாலையை வரவேற்றனர். மகராஷ்டிரா மாநிலம் தொடங்கி வைத்த போட்டியைக் கர்நாடக மாநில முதல்வரும் ஆந்திர முதல்வரும் துரிதப் படுத்தினார்கள். ஆனால் டாடாவின் நேநோ கார் தொழிற்சாலையைக் குஜராத்தின் நரேந்திர மோடித் தட்டிச் சென்று விட்டார்.

நேநோ கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைப் பன்னாட்டுத் தொழில் குழுமமான டாடா நிறுவனம் ஓராண்டுக்கு முன்பு வைத்தது. அந்தக் காரின் விற்பனை 2010 –இல் தொடங்கி விடும் எனவும் அறிவித்தது டாடா நிறுவனம். 2010 இல் ஒரு லட்சம் விலையில் கிடைக்கும் நேநோ காரை வாங்கித் தங்கள் வீட்டுப் போர்டிகோவில் நிறுத்தலாம் என மகிழ்ச்சியிலிருந்த பலருக்கும் ஒரு சந்தேகமும் இருந்தது. சந்தேகத்திற்குக் காரணம் தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு டாடா நிறுவனம் தேர்வு செய்த மாநிலம் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்க மாநிலம் என்பது தான்.
1990-களில் தொடங்கி இந்தியாவில் நடந்து வரும் தொழில் மாற்றங்கள் பற்றிக் கம்யூனிஸ்டுகளுக்கு மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. நவீனத் தொழிற்சாலைகளைத் தொடங்குவதைப் பற்றியும், அதற்கு அரசாங்கம் தர வேண்டிய அனுமதி மற்றும் உதவிகள் பற்றியும் இரண்டு மூன்று தடவை அல்ல; ஐந்து அல்லது ஆறு தடவை யோசிப்பவர்கள் கம்யூனிச சிந்தாந்திகள். தொழில் வளர்ச்சிக்கு தாங்கள் எதிரிகள் அல்ல என்று அவர்கள் சொல்லிக் கொண்டாலும் , பன்னாட்டு மூலதனத்தை இந்தியாவில் அனுமதிக்கும் அளவு குறித்துக் கறாரான தீர்மானங்கள் கொண்டவர்கள்.
இடதுசாரிகளின் கறாரான சிந்தாந்தப் பிடிமானத்தால் தான் அவர்களின் ஆட்சி நடக்கும் கேரளமும் மேற்கு வங்கமும் தொழில் நுட்ப ரீதியான வளர்ச்சியை அடையாமல் இருக்கின்றன என்ற விமரிசனங்களைச் சந்திக்கின்றன. அதன் காரணமாகவே இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகில் அந்தச் சிந்தாந்தம் பழைமையை நேசிக்கும் சிந்தாந்தமாகக் காட்சி அளிக்கிறது. ஆனால் இடது சாரிகளின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு சில தனி நபர்களையோ சில குடும்பங் களையோ கோடீஸ்வரர்களாக ஆக்கும் உள் நோக்கம் கொண்டவை அல்ல என்பதை உறுதியாகக் கூறலாம்.
படிப்பாளிகளை மூலதனமாகக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தில் ஆந்திரம், கர்நாடகம், தமிழ் நாடு போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருக்கக் கேரளமும் மேற்கு வங்கமும் பின் தங்கி விட்டன. இந்தியாவிலேயே படித்தவர்கள் எண்ணிக்கை சதவீதத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம் கேரளம். ஆனால் அங்கே எந்தவொரு பன்னாட்டு மூலதனக் கம்பெனியும் தொழில் தொடங்க விரும்புவதில்லை. மேற்கு வங்கத்திலும் படித்தவர்கள் எண்ணிக்கை குறைவு அல்ல. தகவல் தொழில் நுட்பத்தை அரவணைத்து பொருளாதார லாபம் அடைந்துள்ள மாநிலங்களை விடக் கூடுதல் தான். ஆனால் சிந்தாந்தத்தின் இறுக்கத்தால் விளைவுகள் நேர்மறையாக இல்லை. தேசந்தழுவிய வேகத்தோடு பயணம் செய்யாமல் தாங்கள் ஆளும் மாநிலங்களை இடதுசாரிகள் பின்னுக்கு இழுத்துச் செல்கின்றனர் என்ற விமரிசனங்கள் வைக்கப் பட்டன.
இடதுசாரிகள் எதிர்கொண்ட விமரிசனங்களுக்குப் பதில் சொல்லும் விதமாகப் புத்த தேவ் எடுத்து வைத்த முதல் அடி தான் சிங்கூரில் அமைய விருந்த நேநோ கார் தொழிற்சாலை. நேநோ கார் திட்டம் டாடாவின் கனவுத் திட்டம் அல்ல; இந்திய நடுத்தர வர்க்கத்தின் கனவுத்திட்டம் என வருணிக்கப் பட்டது. சிங்கூரில் தயாரிக்க உள்ள புதிய கார்கள் தான் உலகத்திலேயே விலை குறைந்த காராக இருக்கும். இந்திய நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ரூபாய் ஒரு லட்சம் விலையில் விற்க இருக்கிறது டாடா நிறுவனம் எனச் சொல்லப் பட்டது.
’முதல்வரின் வேண்டுகோளை ஏற்று இன்னும் காலம் தாழ்த்த முடியாது; நாங்கள் வெளியேறுகிறோம்’ என்று கிளம்பிய போது டாடாவின் முகத்தில் மட்டும் தான் இறுக்கம் இருந்தது என்று சொல்ல முடியாது. அதைவிடக் கூடுதலான இறுக்கத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியது மேற்கு வங்க முதல்வர் புத்த தேவ் பட்டாச்சார்யாவின் முகம். இடதுசாரிகள் மீது வைக்கப்படும் விமரிசனங் களைத் துடைத்து விடலாம் என்று நினைத்த அவரது கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது.
நேநோ கார் திட்டம் நிறைவேறாமல் போனாலும் இடதுசாரிகள் ஒரு விதத்தில் மனத் திருப்தி அடைந்து கொள்ளலாம். சிங்கூரிலிருந்து நேநோ கார் திட்டம் குஜராத்திற்கு மாறியதற்கு புத்ததேவோ, அவரது கட்சி பின்பற்றும் கறாரான சிந்தாந்தமோ காரணம் அல்ல; சுயநலம் கொண்ட மம்தா பானர்ஜியின் தடாலடி அரசியல் தான் காரணம் என்பதை மேற்கு வங்க மாநில மக்கள் மட்டும் அல்ல; இந்திய தேச மக்கள் அனைவருமே ஒத்துக் கொள்வர். விவசாயிகளின் நலனுக்காகப் போராடுவதாகப் பாவனை செய்து மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக் கட்டை போட்டவர் என்ற பழிச் சொல்லை மம்தா பானர்ஜி அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியாது.
அந்த வகையில் இடதுசாரிகளுக்கு வெற்றி தான் என்றாலும் அதில் திருப்தி அடைபவர்களாக இடதுசாரிகள் இருந்து விடக் கூடாது என்பதுதான் முக்கியம். விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டு விட்ட உலகமயப் பொருளாதாரத்தில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் என்பதும் தொழில் மயம் என்பதும், தேசத்தின் தேவையாகி விட்டது. அதில் ஒருசில மாநிலங்கள் மட்டும் விலகிச் செல்லுதல் சாத்தியம் இல்லை. அப்படி விலகிச் செல்வதே கூடப் பிரிவினை வாதத்தை நோக்கியதான ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கக் கூடும். நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கான தக்க முன்னேற்பாடுகளும், சரியான திட்டமிடலும் இருந்திருந்தால் டாடா வெளியேற வேண்டியிருக்காது என்றே தோன்றுகிறது.
டாடாவையும் மேற்கு வங்கத்தையும் பற்றிப் பேசுகின்ற போது தமிழர்களாகிய நமக்கு ஓராண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருவதைத் தவிர்த்து விட முடியாது. தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களை மையப்படுத்தி நடந்த அந்த நிகழ்வுகள் திருநெல்வேலியில் வாழும் எனக்கு நேர்க்காட்சி அனுபவம் வேறு.
அந்நேர்க்காட்சி அனுபவத்தை நினைக்கும் போது அந்தப் புராணக் கதை நினைவுக்கு வந்தது. சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இமயமலையில் இருந்த கைலயங்கிரியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு உலகத்தின் பெருமக்கள் அனைவரும் சென்றனராம். பாரம் தாங்காமல் உலகத்தட்டின் வடகோடு கீழிறங்க தென்பகுதி மேலே போய் விட்டது. சமநிலைக் குலைந்து விட்டதால் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம கதி கலங்கி நிற்க, சிவன் ஒரு குள்ளமான மனிதரை அழைத்து உடனடியாக தென் திசைக்குச் செல்லுங்கள்; சமநிலையை ஏற்படுத்துங்கள் என ஆணையிட, அந்த மனிதரும் சிவனின் திருமண நிகழ்ச்சியைக் கூடப் பார்க்காமல் , தென் திசைக்குப் பயணமானார்.
ஆகாய மார்க்கமாகப் பயணம் செய்த அந்த குறு மனிதர் வந்திறங்கிய இடம் பொதிகை மலை. இறங்கிய அந்தக் கணத்திலேயே உலகத்தட்டு சமநிலை அடைந்ததாம். திருமணத்திற்கு வந்தவர்கள், ‘’அவர் யார்? அந்த ஒரு மனிதரின் எடை இங்குள்ள அனைவரின் எடைக்கும் எப்படிச் சமமாக ஆனது’’ என்று ஆச்சரியப்பட்டு சிவனிடம் கேட்டார்களாம். அதற்குச் சிவன், ‘’அவர்தான் குறுமுனி அகத்தியன்; அவரது உடல் எடை சாதாரண மனிதனின் எடை தான்; ஆனால் அவர் மூளைக்குள் உள்ள சரக்கின் எடை இங்குள்ள அனைவரின் எடைக்கும் சமமானது ‘’எனப் பதில் தந்தாராம்.வடபுலத்திலிருந்து வந்த அகத்திய முனிவன் தென் புலத்தில் தங்கி வடமொழிக்குச் சமமாக ஒரு மொழியை- தமிழை- உண்டாக்கினான் ; அதற்காக அவன் எழுதிய நூல் தான் அகத்தியம் என்னும் இலக்கண நூல்; அதுதான் தமிழின் முதல் நூல் என்று அந்தப் புராணக் கதை நிகழ்வு அமைந்துள்ளது. 
இந்தப் புராணக்கதையை இங்கேயே நிறுத்திக் கொண்டு நிகழ்காலத்திற்கு வருவோம். தமிழ் நாட்டின் தென் பகுதி மக்கள் வடக்கு நோக்கி நகர்ந்து சென்னை போன்ற பெருநகரத்தை வீங்கச் செய்த கதையைக் கொஞ்சம் நினைத்து பாருங்கள். கடந்த நாற்பது ஆண்டுகளில் பரப்பிலும் மக்கள் தொகைப் பெருக்கத்திலும் சென்னை நாற்பது மடங்கு விரிவடைந்திருக்கிறது. சென்னை மட்டும் அல்ல; அவ்வவற்றின் தகுதிக்கு ஏற்ப மற்ற பெருநகரங்களும் வீங்கிப் பெருக்கத்தான் செய்திருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் பல கிராமங்கள் காணாமல் போய்விட்டன. கூரைகள் இல்லாத மொட்டை மதில்களோடு கூடிய குடிசைகளுடன் சில கிராமங்கள் அங்கங்கே நிற்கின்றன.
பசுமைப் புரட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி புதுவகை விதைகள், புதுவகை எந்திரங்கள், புதுவகை உரங்கள், பூச்சி மருந்துகள் எனத் தேடித் தேடி அலைந்த விவசாயிகள் மரபான விவசாயத்தைத் தொலைத்தார்கள்.மரபான விவசாயம் அழிந்த போது கிராமங்களை விட்டு முதலில் வெளியேறியவர்கள் அந்தக் கிராமங்களின் பொதுச் சேவைகளைச் செய்துகொண்டிருந்த சாதியினர் தான். சவரம் செய்தல், துணி வெளுத்தல், தச்சன், கொல்லன், எனப் பணியாற்றிய அவர்களின் வெளியேற்றம் 30 ஆண்டு களுக்கு முன்பே நடந்தேறிவிட்டது. அவர்களைத் தொடர்ந்து விவசாயக் கூலிகளும், சிறு விவசாயிகளும் கிராமங்களை விட்டு வெளியேறினார்கள். சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் பெரிய விவசாயிகள் கூட விவசாயம் செய்ய முடியாத நிலை தோன்றி விட்டது.
தோட்டப் பயிர்களைப் பயிர் செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளின் தீவிரத்தை அறிய வேண்டும் என்றால் - கருத்துக் கேட்க வேண்டும் என்றால் செல்ல வேண்டிய இடங்கள் அந்தக் கிராமங்கள் அல்ல. மதுரை , தேனி மாவட்டத்து விவசாயக் கூலிகளும் சிறு விவசாயிகளும் இடம் பெயர்ந்துள்ள திருப்பூருக்கும் ஈரோட்டிற்கும் செல்ல வேண்டும். திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்ட புஞ்சைக் காட்டு விவசாயிகளைச் சந்தித்துக் கருத்துக் கேட்க வேண்டும் என்றால் செல்ல வேண்டிய இடங்கள் சாத்தான் குளங்களும், ராதாபுரங்களும் அல்ல. சென்னையில் உள்ள சிறு வியாபாரிகளிடம் தான் கேட்க வேண்டும். சென்னை, பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி எனப் பெருநகரங்களில் பெட்டிக்கடை நடத்துபவர்களும், பெரிய பெரிய வியாபார நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் தென் மாவட்டத்து மனிதர்கள் தான். அவர்களின் இடப் பெயர்ச்சி நாற்பது ஆண்டுகளில் மெல்ல மெல்ல நடந்தேறி முடிந்து விட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு 1990 களின் மத்தியில் நடந்த தென் மாவட்ட நிகழ்வுகளைப் பத்திரிகைகளும் அரசின் பதிவேடுகளும் சாதிக் கலவரங்கள் என்று பதிவு செய்தன. ஆனால் நேரடியாகக் களத்திற்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆழமாக ஆய்வு செய்த ஆய்வாளர்களின் கருத்துக்கள் வேறாக இருந்தன. மரபாக நடந்து வந்த வேளாண்மையைத் தொடர முடியாத வேளாண்மைச் சமுதாயம் சந்தித்த நெருக்கடிகளும் பொருளாதார உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் அந்தக் கலவரத்தின் பின்னணியில் இருக்கின்றன என்பது அவர்களது கண்டுபிடிப்புக்கள்
இந்தக் கண்டு பிடிப்புகளின் பின்னணியில் பெறப்பட்ட அறிக்கைகள் சில பரிந்துரைகளைச் செய்தன. தென் மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப் பட வேண்டும். படித்தவர்களும் படிக்காதவர்களும் பயன் பெறுமாறு தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப் பட்டன. பரிந்துரைகள் உடனடியாகச் செயல் வடிவம் பெறுவது ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. ஐந்தாண்டுக்கொரு முறை ஆட்சி புரியும் கட்சியை மாற்றிப் பார்ப்பதின் விளைவாக ஓராட்சியில் போடப்பட்ட திட்டம் இன்னோர் ஆட்சியில் கிடப்பில் போடப்படும் கதைகள் தானே நடப்பு.முரசொலி மாறன் முயற்சியில் தி.மு.க. ஆட்சியில் ( 1996-2001) அடிக்கல் நாட்டப் பட்ட நாங்குனேரி தொழில் பூங்காவில் செடிகள் கூட வைக்கப் படவில்லை.
இன்னொரு திட்டமான கங்கை கொண்டான் தொழிற்பேட்டை தகவல் தொழில் நுட்பமாக மாறி ஆமை வேகத்தில் பீடு நடை போடுகிறது. டாடாவின் உதவியோடு வருவதாக இருந்த டைட்டானியம் தொழிற்சாலையின் வருகையும் அநேகமாக கேள்விக்குறி தான். டைட்டானியம் ஆலை வருவதால் தான் தென் மாவட்டங்களில் நடந்த விவசாயம் அழியப் போகிறது என்று சொல்பவர்களை நம்பி அந்த மக்கள் ஏமாந்த கதைக்கு ஒராண்டு விழா நடத்தலாம். நாற்பது ஆண்டுகளாக தென் மாவட்ட மனிதர்கள் மந்தை மந்தையாக வடக்கு நோக்கி நகர்ந்த போது கண்களை மூடிக் கொண்டிருந்தவர்கள் அப்பொழுது வடித்த நீலிக் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து தாமிரபரணிக்குப் போட்டியானது.
ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் நடத்திய அறிக்கைப் போர்களை விட இவ்விரு கட்சிகளிடமும் அதிகாரப் பங்கைப் பெறப் போட்டியிட்ட சிறிய கட்சிகளின் போக்குகள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் குந்தகங்களை விளைவிக்கப் போகின்றன. சில தனிநபர்களின்- இன்னும் சொல்வதானால் திரைப்பட நடிகர்களின்¢ ஆசைகளாலும், சில குழுக்களின் தூண்டல்களாலும் தொடங்கப் பட்ட அந்த இயக்கங்கள் அல்லது கட்சிகள் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த நலனுக்கு எதிரானவையாக இருக்கப் போகின்றன என்பதற்குப் பெரும் ஆய்வுகள் எதுவம் தேவை இல்லை. அவைகளின் செயல்பாடுகளே அத்தாட்சியாக இருக்கின்றன. நீண்டகாலத் திட்டங்களோ, பொருளாதாரக் கோட்பாடுகளோ, ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையோ இல்லை என்றாலும் அவை எல்லாம் இருப்பதாகப் பாவனைகள் செய்யும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களும் செயல்பாடுகளும் திருவிழாக்களில் காட்டப்படும் வேடிக்கைகளைத் தாண்டி வேறெதுவாகவும் இல்லை.
டைட்டானியம் தொழிற்சாலையை மையைப் படுத்தி நடத்தப் பட்ட கருத்தறியும் காட்சிகள் அப்படித்தான் இருந்தன. தங்கள் கட்சியும் இயக்கமும் இதன் மூலம் வளர்ந்து விட வேண்டும் என்ற ஆசையில் அரசின் நிலைப் பாட்டிற்கு எதிரான நிலைப் பாட்டைத் தங்கள் கருத்தாக உருவாக்கிக் கொண்டு, அந்தக் கருத்தை மக்களின் கருத்து என்று சொல்லும் பொருட்டு ஒவ்வொரு தலைவரும் தென் மாவட்டங்களின் மக்களைச் சந்தித்தார்கள். தியாகச் செம்மல், ஏழைகளின் தோழன், பாட்டாளிகளின் தோழன், சமூக நீதிக் காவலர், ஒடுக்கப்பட்ட மக்களின் ஏந்தல், விவசாயிகளின் துயர் நீக்கி எனப் பட்டங்கள் சூட்டப்பட்டு அந்தத் தலைவர்களின் வருகைக்கு வைக்கப் பட்ட வரவேற்கும் பதாகைகளும் விளம்பரங்களும் என் கண் முன்னே இன்றும் நிழலாடுகின்றன. சிங்கூரில் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கிய பின் வெளியேறுவதற்கான நிர்ப்பந்தம் தரப் பட்டதை விடவும் கூடுதலான வேகத்தில் தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய நிர்ப்பந்தம் அது. தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்யாகுமரி மாவட்டங்களை மையப்படுத்தி டாடா தொடங்க இருந்த டைட்டானியம் ஆலை நமது நினைவிலிருந்து மறந்தே போய் விட்டது.
டைட்டானியம் ஆலை வராது என்றால், சாத்தான் குளம், ராதா புரம் பகுதி நிலத்தில் என்ன விவசாயம் செய்யப் போகிறோம்? அதற்கான திட்டங்கள் என்ன இருக்கிறது நம்மிடம்? வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் ஒரு தொழிற்சாலை வந்தால் தேசத்தின் பொருளாதாரத்தோடு கூலி வேலை செய்பவர்களின் அன்றாட வாழ்க்கையும் மேம்பட வாய்ப்புண்டு என்று பார்க்க வேண்டும். சிங்கூரும் ராதாபுரமும் வித்தியாசமானவை அல்ல.
விவசாயம் வேண்டும்; அதே நேரத்தில் தொழிற்சாலைகளும் வேண்டும். இச்சிந்தனை இப்போதைய ஞானம் அல்ல. சுதந்திரம் அடைவதற்கு முன்பே பாரதி சொன்னது தான். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடியதைப் பொருத்தமில்லாத கூற்று என்று சொல்லி விட முடியாது. 20-10-08


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை