: 21

விலகிப் பாயும் அம்புகள்

விலகிப் பாயும் அம்புகள்


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாதகமான அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது தான். இந்தியாவின் குடிமைச் சட்டம் ஆயினும் சரி, குற்றவியல் சட்டமாயினும் சரி, நீதியியல் முறைகளானாலும் சரி அரசும், அரசு நிறுவனங்களும் எப்போதும் அதிகம் பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.
பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது உலக வரலாற்றில் நடந்த ஜனநாயகப் புரட்சிகளின் விளைவுகள் என்பதை நாம் அறிவோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோஷங்களால் ஈர்க்கப் பட்ட மனிதர்களின் வெற்றி அது. அங்கிருந்து தான் கலை இலக்கியவாதிகளும்,சமூகப் போராளிகளும் பாதிக்கப் பட்டோருக்காகக் குரல் கொடுப்பதை வாழ்தலின் அர்த்தமாக ஆக்கிக் கொண்டனர். பாதிக்கப் படுவோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியச் சட்டவியல் பல சரத்துகளை உருவாக்கி வைத்துள்ளது. அச்சட்டங்களில் இரண்டு சமீபகாலத்தில் அதிகம் விமரிசனத்திற்குள்ளாகி வருகின்றன.
விமரிசனங்களுக்குள்ளாகி வரும் அவ்விரு சட்டங்களில் முதலாவது வரதட்சணை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டம். இரண்டாவது தீண்டாமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட குடிமைப் பாதுகாப்புச் சட்டம். இவ்விரு சட்டங்களுக்கும் எதிராக ஆங்காங்கே எழுந்த முணுமுணுப்புகள் அறைக் கூட்டங்களின் பேச்சாக மாறி, ஊடகங்களின் கவனத்துக்கு வந்துள்ளன. சிலர் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் முயன்று வருகின்றனர். இவ்விரு சட்டங்களும் முதலாவதாக குற்றவியல் சட்டங்கள் என்ற பிரிவிலிருந்து எடுக்கப்பட்டு குடிமைச் சட்டப் பிரிவிற்குள் கொண்டு வரப் படவேண்டும் எனச் சொல்கின்றனர்.
குடும்பம் வன்முறைச் சட்டம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்ற இரண்டையும் மையப் படுத்தி கிளம்பி யிருக்கும் விமரிசனங்கள் அண்மைக் காலத்தில் ஊடகங்களின் கவனத்துக்கு வந்து விவாதப் பொருளாக ஆகியிருக்கின்றன. அவ்விமரிசனக்குரல்கள் ஆர்ப்பரிக்கும் ஒலியாக மாறி, ஆர்ப்பாட்டங்களாக ஆகி, அந்தச் சரத்துகளையும், அதன் மூலமான சட்டவிதிகளையும் நீக்க வேண்டும் என்று கோரும் வலிமையை நோக்கி நகர்ந்து விடும் அபாயம் தூரத்தில் இல்லை.
குடும்ப வன்முறைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் , இச்சட்டம் இந்தியப் பண்பாட்டின் அடிப்படைக் கூறான குடும்ப அமைப்பையே சிதைத்து விடும் ஆபத்துக் கொண்டது என வாதிடுகின்றனர். அதே போல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்பது பொய்யான தகவல்களின் மேல் பழி வாங்கும் நோக்கத்துக்கு மட்டுமே பயன்படும் விதமாக நடைமுறையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவின் அரசு நிர்வாகங்கள் பாதிக்கப் படுகின்றன; வேலை செய்யாத ஒருவரைத் தட்டிக் கேட்கவோ, தண்டனை தரவோ தடையாக இருக்கிறது. அந்தச் சட்டம். தொடர்ந்து நீட்டிக்கப் படும் நிலையில் இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கே உலை வைத்து விடும் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என வாதிடுகின்றனர்.
அப்படி வாதிடுபவர்கள் குறிப்பான சில நிகழ்வுகளை எடுத்துக் காட்டி வாதிடுவதையும் தங்கள் பாணியாகக் கொண்டுள்ளனர். இதே பாணியைத் தான் இப்போது ஊடகங்களும் – குறிப்பாக அச்சு ஊடகங்களும் செய்கின்றன. ஊடகங்கள் எடுத்துக் காட்டும் நிகழ்வுகள் அனைத்தும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்நிலை சார்ந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் குடிமைச் சட்டங்கள் பெரும்பாலும் பொது நலம் சார்ந்த சமூக மாற்றத்திற்காகவும், பொது நன்மைக்காகவும் உருவாக்கப்பட்டவை. இந்தியாவில் இனியும் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதி வேறுபாடுகளும், தீண்டாமைக் கொடுமையும் தொடரக் கூடாது என்ற பொது நோக்கே குடிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் பின்னணிக் காரணம். அதே போல் பாலின அடிப்படை காரணமாகப் பெண்கள் ஒடுக்கப் பட்ட பாலின மாகவோ கருதப் படக் கூடாது; அப்படியான கருத்து எங்கெல்லாம் நிலவுகிறதோ அதைக் களைவது பெண்கள் சார்ந்த குடும்ப வன்முறைச் சட்டத்தின் பின்னணியில் இருக்கும் பொதுநல நோக்கு.
இவ்விரு பொது நோக்கும் இனித் தேவையில்லை என்ற நிலை உருவாகி விட்டது என்ற யாராவது சொல்ல முடியுமா? இன்னும் கிராமங்களில் தீண்டாமைப் பேய்களும், சாதியடிப்படையில் ஒதுக்கி வைக்கும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் இந்தச் சட்டத்தின் உதவியை நாடும் மனிதர்கள் விழிப்புணர்வு பெறவில்லை. விழிப்புணர்வு அடைந்திருந்திருந்தாலும் அன்றாட வாழ்க்கைக்கு வேறு வழியில்லை என்ற இயலாமையின் பேராலும், ஆதிக்க சாதியினருக்கு இருக்கும் வலிமை, மற்றும் அமைப்புகளின் ஆதரவு ஆகியவற்றைக் கண்டு ஏற்பட்ட பயத்தின் பேராலும், ஒடுங்கிப் போகின்றனர் விளிம்புநிலை மக்கள்.
இதே நிலைமைதான் குடும்ப அமைப்புக்குள்ளும் தொடர்கின்றன. குடும்பத்தின் தேவைக்கான பொருளாதாரத்தை ஈட்டும் வேலையைப் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கிய பின்னும், அடுப்படியிலும், படுக்கையறையிலும் பெரிய அளவு மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை. நமது குடும்ப அமைப்பு அன்பு வழிப்பட்ட உறவால் ஏற்பட்டது எனச் சொல்லும் மனிதர்கள், மருமகளை இன்னும் வெளியிலிருந்து வந்தவள்; நாம் விரும்பினால் வெளியே அனுப்பி விடலாம் என்ற மனநிலையில் தான் உள்ளனர். குடும்பத்தின் பகுதியாக அவளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை எந்தச் சடங்குகளும் உருவாக்கித் தரவில்லை என்ற நிலையில் சட்டங்கள் தான் அதைச் செய்ய வேண்டும்.
நடுத்தர வர்க்க நிகழ்வுகளை எடுத்துக் காட்டி கருத்தியல் போக்கை மாற்ற முயலும் ஊடகங்கள் பொது நிலைப் பார்வையைத் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்தியக் குடும்பங்களில் இருக்கும் உறவு, விட்டுக் கொடுத்தல் என்னும் பெயரில் அடிமையாக இருக்கச் சம்மதித்தல் என்பதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் சாதி வெறி தாண்ட வமாடும் கிராமப்புறங்களைக் கவனித்து இந்தச் சட்டங்களின் தேவையைக் கணிக்க வேண்டும். அதை விடுத்து நடுத்தர வர்க்க உதாரணங்களைப் பொதுத்தளத்திற்குரியதாக ஆக்கிக் காட்டுவது கூட்டுச் சதியின் விளைவாகவே இருக்கும். 
படித்து வேலை பார்க்கும் நடுத்தர வர்க்கப் பிரிவிற்குள் நுழையும் ஒரு நபர் எப்போதும் தனக்குச் சாதகமான விதிகளை மட்டுமே கவனப்படுத்துகிறார் என்பது பொதுவான நியதி. அதனைப் பயன்படுத்தித் தான், தனது என்ற சிந்திக்கும் இயல்பு உலக முழுக்க நடுத்தர வர்க்கத்தின் குணமாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு தான் பாரதி ‘ படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் , போவான், ஐயோ என்று போவான் ‘ என்று சொன்னானே என்று கூடத்தோன்றுகிறது. படித்தவர்களின் சூதுக்காக பொது நலனைப் பழி கொடுத்து விட முடியாது.
ஜனநாயகம் என்பது தான் அனைத்து மக்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஆகச்சிறந்த அமைப்பு என்று சொல்ல முடியாது. ஆனால் இதை விடக் குறைவான ஆபத்துக் கொண்ட ஆட்சி அமைப்பு ஒன்றை வரலாற்றில் கண்டதில்லை என பங்கேற்பு வாய்ப்புக் கொண்ட மக்களாட்சி முறையின் மீது நம்பிக்கை கொண்ட பலரும் சொல்வதுண்டு. ஜனநாயகத்தின் வெற்றி எல்லாருடைய குரலுக்கும் மதிப்பளிப்பதில் இருக்கிறது என்று கருத வேண்டியதில்லை; எல்லாருடைய குரலுக்கும் இடமளிப்பதாகப் பாவனை செய்வதில் தான் இருக்கிறது. பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்கிறது என்பது அதன் தலையாய பாவனை. அதனையும் காலி செய்வது பெரும் ஆபத்துக்களில் போய் முடியும்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை