: 31

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை

பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிகளை போதுமான அளவில் செவ்வனே செய்யும் போது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது.
மக்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பண்பட்ட அரசியல் உதவும்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் பணியைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்
இந்தியாவில் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப் படும் செப்டம்பர்,5 அன்று இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது பட்டமளிப்பு விழாவில் நமது நாட்டின் அரசுத் தலைவர் டாக்டர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் இடம் பெற்ற வாசகங்கள் இவை.
பல்கலைக்கழகக் கல்வியின் பொறுப்பையும், பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டிய விதத்தையும் சரியாக உணர்ந்துள்ள பிரதமரின் உரை வெகுமக்கள் அரசியலுக்கும் உயர்கல்விக்கும் இருக்க வேண்டிய உறவுகளையும் கூடச் சுட்டிக் காட்டியுள்ளது. இந்தப் பொறுப்புணர்வோடு தான் மைய அரசாங்கம் நியமித்த உயர்கல்விக்கான கல்வியாளர் குழுவும் கடந்த ஆண்டு ஒரு முக்கியமான பரிந்துரையை அரசுக்கு அளித்தது.தேசிய அறிவுக் குழுவின் ( National knowledge commission) அந்த அறிக்கையில், ’இந்திய தேசத்திற்கு இப்போதுள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை போதாது; இதைப் போல இன்னும் மூன்று மடங்கு எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப் பட வேண்டும் ’ என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.
மைய அரசு உயர்கல்விக்குப் பொறுப்பான பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு இந்தக் குறிப்பை நடைமுறைப் படுத்தும்படி கேட்டுக் கொண்டபின் எல்லா மாநிலங்களிலும் புதிய பல்கலைக் கழகங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மையப் பல்கலைக் கழகங்கள் இல்லாத மாநிலங்களில் மைய அரசாங்கமே முழுச் செலவில் மையப் பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் வேலையையும் ஆரம்பித்துள்ளது.
நீண்ட காலத்துக்குப் பின் தமிழ் நாட்டில் இரண்டு மையப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப் பட உள்ளன.தொழில் நகரமான கோயம் புத்தூரில் ஒன்றும், திருவாரூரில் ஒன்றுமாக இரண்டு மையப் பல்கலைக் கழகங்களுக்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கியுள்ளன. இதே நோக்கத் தோடு மாநில அரசும் தனது பங்குக்குப் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் பணியை ஆரம்பித்திருக்க வேண்டும். புதிய பல்கலைக் கழகங் களைத் தொடங்காமல், தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையை உயர்த்தி விடலாம் என மாநில அரசு யோசித்துள்ளது. அந்த யோசனையின் விளைவே கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்தும் திட்டம்.
புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்கும் பணியில் ஏராளமான நிதித் தேவை இருக்கும் என்பது வெளிப்படையான உண்மை. எந்த நகரத்தில் தொடங்குவது எனத் திட்டமிடுவதில் தொடங்கி, நிலத்தேவை, உள்கட்டுமான உருவாக்கம், பணியிடங்களை உருவாக்கி உரிய நபர்களைத் தேர்வு செய்தல், ஆசிரியர், அலுவலர் எண்ணிக்கை உயர்வு, இவை அனைத்துக்குமான பணத்தேவை எனப் பலகோடிகள் செலவாகும். அப்படிச் செலவு செய்த போதிலும் உடனடியாகப் பல்கலைக்கழகம் முழுமையாகச் செயல்பட முடியாது.
இந்தக் காரணங்களால் புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்காமல், அதற்குப் பதிலாக ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படும் பெரிய கல்லூரிகளை - சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி போன்றவற்றை- பல்கலைக் கழகங்களாக மாற்றிவிட முடிவு செய்தது தமிழக அரசு.அந்த முடிவு உடனடியாக செயல்படுத்தப் படாமல் தள்ளிப் போடப் பட்டுள்ளது. காரணம் ஆங்காங்கே தோன்றிய எதிர்ப்புணர்வு தான்.
இம்மாற்றத்தை எதிர்ப்பவர்கள் பலகாரணங்களை முன் வைக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அங்கு பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இப்போது போல் கிடைக்காது என்பது சொல்லப்படும் இன்னொரு காரணம். பல்கலைக் கழகமாக மாறினால் மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் கூடும் என்பதும் அதோடு சேர்த்துச் சொல்லும் கூடுதல் காரணம். அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் தனியார் நிறுவனங்களாக மாறி விடும் என்ற வாதமும் சிலரால் முன் வைக்கப்பட்டதன் விளைவாகக் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்தும் திட்டம் தள்ளிப் போடப்பட்டாகி விட்டது.
எதிர்ப்பவர்கள் சொல்லும் காரணங்களில் கட்டணம் கூடும் என்பது சரியான காரணமே. அரசுக் கல்லூரியின் பாடமாகவும், அரசு உதவி பெறும் பாடமாகவும் இருக்கும் ஒன்றிற்கு ஒரு மாணவன் செலுத்தும் படிப்புக் கட்டணம் பல்கலைக்கழகமாக மாறிய பின் கூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதே நேரத்தில் அவன் செலுத்தும் கட்டணத்திற்கேற்ற கல்வியைக் கேட்டுப் பெறும் வாய்ப்பும் பல்கலைக்கழகத்தில் உள்ளது என்பதையும் மறந்து விடக் கூடாது. 
இது தவிர மற்ற காரணங்கள் ஏற்புடைய காரணங்களாக இல்லை. ஆசிரியர், அலுவலர் பணிப் பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாறும் போது இல்லாமல் போய்விடும் என்பது எப்படி என்று தெரிய வில்லை. கல்லூரி ஆசிரியரின் பணிக்காலத்தை விட இரண்டு ஆண்டுகள் கூடுதலாகப் பணியாற்றும் வாய்ப்பு பல்கலைக் கழகத்தில் உண்டு. அதல்லாமல் ஒவ்வொரு ஆசிரியரும் கல்வித் திட்டங்கள், ஆய்வுத் திட்டங்கள், குழுக்களில் பங்கு பெறுதல் எனப் பல பொறுப்புகளை ஏற்க முடியும். இவற்றை யெல்லாம் செய்வதற்காக ஆசிரியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும். இதற்குத் தயாராக இருக்கும் எந்த ஆசிரியரும் தங்கள் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறுவதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு கல்லூரி பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப் பட்டால் மைய அரசின் நேரடி உதவியைப் பெற முடியும்; அதன் மூலம் அந்த நிறுவனம் வளர்ச்சி அடைய முடியும் என்பது தமிழக அரசின் வாதமாக இருக்கிறது. அந்த வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லைஒவ்வொரு ஆண்டும் மாணாக்கர்கள் கட்டும் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி விட முடியாது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி நிறுவனம் என்பது முழுமையாகப் பணம் செலுத்திப் படிக்கிற ஒன்றாக இல்லை என்பது இன்றளவும் உண்மை.
அரசுக்கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக்கல்லூரி என எவ்வகைக் கல்லூரியாக இருந்தாலும் அரசு மற்றும் அரசுசார் நிறுவனங்களின் மானியங்கள், உதவிகள் போன்றவற்றைப் பெற்றுத்தான் நடக்கின்றன. ஆனால் பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்லூரியைப் போல அந்த நிறுவனத்தை நடத்தும் தனியார் அல்லது மாநில அரசின் நிதியை மூலதனமாகக் கொண்டு மட்டும் நடப்பதில்லை. சிறந்த ஆசிரியர்களின் ஆய்வுத் திட்டங்களின் ஒரு பல்கலைக்கழகம் மூலதனத்தைத் திரட்ட முடியும். திட்டமிட்டுப் பணியாற்றும் துறைகளின் மூலம் அதில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.
இந்த வாய்ப்புகள் எல்லாம் இப்போதுள்ள அமைப்பில் இயங்கும் ஒரு கல்லூரியில் மிகக்குறைவே . எல்லாவகையான மாற்றங்களிலும் சில சந்தேகங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாது. அந்தச் சந்தேகங்களுக்காக மாற்றத்தையே தள்ளிப் போடுவது புத்திசாலித்தனமாக இருக்காது. இந்திய சமூகம் அறிவுசார் சமூகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேலையில் புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்குவதும், இருக்கும் நிறுவனங்களை – கல்லூரிகளைப் பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்துவதும் ஏற்கப் படவேண்டிய ஒன்றே.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை