: 22

அடிப்படை வாதத்தின் முகங்கள்

அடிப்படை வாதத்தின் முகங்கள்

2008, ஜுலை 22 இந்திய வரலாற்றின் சுவடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது என எழுதிய பேனா மையின் ஈரம் கூட இன்னும் காய்ந்து விடவில்லை. ஈரமான அந்த வரிகளை அடித்துச் செல்லும் வேகத்தோடு புதிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன.
அமெரிக்காவுடன் இந்த அரசு செய்து கொள்ளப் போகும் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கம். வெளியிலிருந்து ஆதரிக்கும் எங்களின் மன உணர்வுகளை மதிக்காமல் பிடிவாதம் காட்டும் அரசை நாங்கள் ஆதரிக்க முடியாது; எங்கள் அரசியல் அறிவின் படி அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தம் எதிர்கால இந்திய மக்களின் வாழ்க்கைக்கு ஆபத்தானது என நம்புகிறோம்.
நம்பிக்கையைத் தள்ளி வைத்து விட்டு ஓர் அரசியல் இயக்கம் இயங்கக் கூடாது என்ற கொள்கை சார்ந்த அரசியல் எங்களுடையது. கொள்கையைக் காவு கொடுத்து விட்டு அரசியல் நடத்தக் கூடாது என்பதால் தான் எங்கள் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொண்டோம் என்று தங்கள் வாதத்தை- தன்னிலை விளக்கத்தை இடதுசாரிகள் மக்களுக்குச் சொல்லத்தொடங்கி இருந்தார்கள். 
இடதுசாரிகளின் நோக்கம் இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து விட வேண்டும் என்பதல்ல. செய்யும் தவறிலிருந்து பின் வாங்கச் செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் என்று பேசத் தொடங்கி இருந்தார்கள். அறிவார்த்தமான அந்தக்¢ குரலை அமுக்கி விடும் பேரோசையாக அந்த எட்டுக் குண்டுகள் வெடித்து விட்டன.
பெங்களூரின் முக்கியமான இடங்களில் வெடித்த அந்த எட்டுக் குண்டுகளும் ஏற்படுத்திய சேதங்கள் பெரிய அளவில் இல்லை. உயிர்ப் பலி ஒன்று தான். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்காமல் வெட்ட வெளிகளில் தான் வெடித்துள்ளன. அதிக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் போன்ற குண்டுகளை வெடிக்கச் செய்யாமல் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்தவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதா? அச்ச மூட்டுவதா? விடை தெரியவில்லை.
2008 ஜூலை 22 இல் இந்த அரசு பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல.பெட்டி பெட்டியாகப் பணம் கொடுத்து வாங்கிய ஓட்டுகளின் மூலம் அடைந்த வெற்றி. அரசின் இந்த வெற்றி வெட்கக் கேடானது என எதிர்க்கட்சியின் உரத்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. எதிர்க்கட்சிகள் பாராளு மன்றத்திற்குள் வந்து கொட்டிய பணக்கட்டுகளை ஏற்பாடு செய்தவர்கள் அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் அல்ல; அரசாங்கத்தின் மேல் பழியைப் போடுவதற்காக எதிர்க்கட்சியினரே செய்த நாடகத்தின் ஒரு காட்சி தான் அது என ஆளுங்கட்சி பதில் சொல்லத் தயாரானது .
இதில் எது உண்மையாக இருக்கும் என்பதற்கான பதில் இந்திய வாக்காளனுக்கு இப்போது கிடைக்கப் போவதில்லை. இப்போது மட்டும் அல்ல; எப்போதும் கிடைக்கப் போவதில்லை. ஏனென்றால் பாராளு மன்ற நடவடிக்கைகள் சார்ந்த இந்திய அரசியலில் இது புதிய குற்றச்சாட்டு அல்ல. இது போன்ற குற்றச் சாட்டுகள் பல தடவை எழுப்பப்பட்டுள்ளன. அவை எதற்கும் பதில்கள் கிடைத்ததில்லை. ஒரு வேளை பதில்கள் சொல்லப்பட வேண்டியதில்லை என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன போலும்.
அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த குற்றச்சாட்டுகளில் உண்மையைக் கண்டறிந்து சொல்லும் சாத்தியங்கள் இல்லவே இல்லையா? அரசியல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருக்கும் உண்மையைக் கண்டறிவதற்கான அமைப்புகளோ, வழிமுறைகளோ, உபகரணங்களோ இல்லாத நிலை தான் இந்திய ஜனநாயகத்தில் நிலவுகிறதா? அப்படி இருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக அத்தகைய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை நமது அரசுகள் செய்யாமல் தள்ளிப் போடுவது ஏன் என்று தொடர்கேள்விகளும் ஐயங்களும் இந்திய வாக்காளனுக்குத் தோன்றுவது இயல்பானது.
இந்தியப் பாராளுமன்றத்தின் செயல்பாடுகள் ஜனநாயகத்தின் அடையாளமா? பணநாயகம் அரங்கேறும் மேடைத் தளமா?என்ற விவாதங்களை நடத்திக் காட்டுவதற்காக நமது ஊடகங்கள் ஒத்திகைகள் நடத்தத் தொடங்கியிருந்தன.நடுநிலையான அறிவுஜீவிகளோடு மேடையைப் பகிர்ந்து கொண்டு விவாதிக்க ஒவ்வொரு கட்சியிலும் விவாதத்திறன கொண்ட பேச்சாளர்கள் குறிப்புக்களைத் தயார் செய்து கொண்ட தோடு, ஒப்பனைகளுக்குத் தயாரானார்கள். ஆனால் அத்தனையும் வீணாகிப் போய் விட்டது.
தயார் செய்த மேடைகளைக் கலைத்துவிட்டு நேரடிக் காட்சிகளை ஒளிபரப்புவதற்கும், விவரிப்பதற்கும் எல்லாச் சாதனங்களோடும் குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்திற்குச் செல்ல வேண்டியதாகி விட்டது. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெடித்த வெடிகுண்டுகள் 45 உயிர்களைப் பலி வாங்கி இருக்கின்றன. பல கோடி பெறுமான சொத்துக்கள் நாசமாகி விட்டன. அரசுத்தலைவர்களின் நேரடிப் பார்வை; கருணை உள்ள வெளிப்பாடு; நட்ட ஈடு எனத் தொடரும் நிகழ்வுகளோடு பயங்கரவாதத்திற்கு எச்சரிக்கைகள்; சவால்கள் ; நாட்டு மக்களுக்கு ஆறுதல் எனக் காட்சிகள் மாறிவிட்டன.
காதுகளைச் செவிடாக்கும் வெடிகுண்டுகள் வெடித்துக் கிளம்பும் ஓசைக்குப் பக்கத்தில் அறிவுஜீவிகளின் தர்க்கங்கள் எப்படி நிற்க முடியும்?பயங்கரவாதிகளின் அச்சமூட்டும் முகங்களுக்குப் பின்னால் மறைந்து நழுவிக் கொண்டார்கள் அரசியல் தரகர்கள். சிதறிய உடல்களும் ரத்தக் கறைகளும் காட்சிப் பொருளாகி விட்ட நிலையில் பணக்கட்டுகளும், சூட்கேஸ்களும் காணாமல் போய்விட்டன. 
திசை திரும்பி விட்டது தேசத்தின் பார்வை.
அரசியல் விவாதங்கள் முன்னெடுக்கப் பட வேண்டிய ஒவ்வொரு கட்டத்திலும் பயங்கரவாதத்தின் யுத்தக் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்படுவது எப்படி? அப்படிப் பட்ட பயங்கரவாதிகள் எங்கே இருக்கிறார்கள்? நமது நாட்டிற்குள் தான் இந்தப் பயங்கரவாதிகள் இருக்கிறார்களா? அல்லது வெளியிலிருந்து வருகிறார்களா? அரசியல் விவாதங்களை முன்னெடுக்க விடாமல் தடுக்கும் பயங்கரவாதத்தின் நோக்கம் என்ன? கோரிக்கைகளை நிறைவேற்றுவதா? அச்சமூட்டுவதா?
கேள்விகள் நிறைய இருக்கின்றன. பதில்கள் தான் கிடைக்கவில்லை.
கேள்விகளுக்கான விடைகள் இந்திய வாக்காளனுக்குக் கிடைக்கும் சாத்தியங்கள் இல்லவே இல்லையா? அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு விடைகள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முடிவு செய்து விட்டது போல பயங்கரவாதத்தின் பின்னால் உள்ள கேள்விகளுக்கும் விடைகள் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதா..? இத்தகைய முடிவுகள் தான் அரசாங்க ரகசியங்களா.?
பயங்கரவாதத்தின் தொடக்கம் அடிப்படைவாதம் என்பதை இனியும் விளக்க வேண்டியதில்லை. அடிப்படைவாதம் எப்போதும் சுயநலத்திலிருந்து தான் தொடங்குகிறது. ‘நான், எனது ‘ என்ற தன்னிலை அடையாளத்திலிருந்து எனது குடும்பம், எனது உறவினர், எனது சாதி, எனது பண்பாடு, எனது மொழி, எனது சமயம், எனது மாநிலம், எனது தேசம் என விரியும் சிந்தனைகள் பல நேரங்களில் சுயநலமற்றவை போலத் தோன்றக் கூடும். ஆழமாகப் பிரித்துப் பார்த்தால் வேர்கள் சுயநலனின் தான் இருக்கின்றன.
ஒருவன் தன்னுடைய நலனைப் பேண விரும்பும் அதே நேரத்தில் பக்கத்தில் இருப்பவனுக்கும் அதே மாதிரியான நோக்கம் இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இது தான் ஜனநாயகம் வலியுறுத்தும் பொதுநலப் பார்வை. பொதுநலப் பார்வையை அடிப்படை வாதம் எப்போதும் நிராகரிக்கவே செய்கிறது.
இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அடிப்படை வாதம் என்பது இங்கே மத வாதத்தில் மட்டுமே இருப்பதாக நம்புகிறார்கள். மத அடிப்படிவாதத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல மாநில வாதம். மாநில வாதத்தோடு மண்டல வாதம் போட்டி போடுவதும் அடிப்படை வாதத்தின் நோக்கத்திலிருந்து தான். இவற்றின் நீட்சியாகவே மொழி, இன சாதிய வாதங்களும் கருத்தியல்களை உருவாக்குகின்றன. 
அடிப்படைவாதத்தை இன்னொரு அடிப்படைவாதத்தால் ஈடுகட்ட முடியாது. ஜனநாயகத்தின் வலிமைதான் அடிப்படைவாதத்தை வெற்றி கொள்ளக் கூடிய கருவியாக இப்போதைக்கு இருக்கிறது.
வரலாற்றின் சுவடுகள்
2008, ஜூலை, 22.-‘ இந்த நாள் இனிய நாள் ’ என்று ஒவ்வொரு நாளையும் தொடங்கி, எந்த வம்புதும்பு களுக்கும் போகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் தனி மனிதர்களின் வாழ்க்கை சரித்திரத்தில் இந்தத் தேதியும் ஒரு நாள் தான். ஆனால் இந்திய தேசத்தின் வரலாற்றில் இந்தத் தேதியை அப்படிக் குறித்துவிட்டு இனிப் போக முடியாது .
தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளையும் எதாவது ஒரு காரணத்துக்காகக் குறித்து வைத்துக் கொள்வார்கள். ஆனால் வரலாறு எல்லா நாட்களையும் அப்படிக் குறித்து வைத்துக் கொள்வதில்லை. குறித்து வைத்துப் பதிந்து வைத்துக் கொள்ளும் நாட்களுக்கென்று சில விசேசங்கள் இருப்பதுண்டு. இந்திய வரலாற்றைப் படிக்கின்ற மாணவர்களிடம் கேட்டால் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய நாட்கள் எனச் சில தேதிகளைப் பட்டியலிட்டுச் சொல்வார்கள்.
பட்டியலிட்¢டுக் காட்டும் அந்த நாட்கள் பெரும்பாலும் தேசத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வாழ்வின் திசையை மாற்றிய நாட்களாக இருக்கக் கூடும். திசை மாற்றம் என்பதின் பின்னணியில் மைய நீரோட்டம் ஒன்றின் வெற்றி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மைய நீரோட்டக் கருத்தியல் அல்லது சிந்தனை என்பது அரசர்கள் காலத்தில் அவர்களின் விருப்பம் மட்டும் தான். குறுநில மன்னனாக இருக்கும் ஒரு சிற்றரசன், அவனி முழுதாளும் பேரரசனாக வேண்டும் எனக் கருதிப் படை திரட்டி, எதிரி நாடுகள் எவை எனப் பட்டியலிட்டுக் கொண்டு , அவற்றை வென்று தனது அதிகாரத்தை நிலை நாட்டியதையே அரசர்களின் வெற்றி என வரலாறு எழுதி வைத்துள்ளது. கங்கை கொண்டு , கடாரம் வென்ற நிகழ்வுகளின் பின்னணியில் இருந்ததெல்லாம் பேரரசு ஆசையால் ஏற்பட்ட திருப்பங்கள்.
ராஜராஜ சோழனுக்கு ஏற்பட்ட இந்தச் சிந்தனை அவனுக்கு முன்பும் அவனுக்குப் பின்பும் பல மன்னர்களுக்கு- இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்படத் தான் செய்துள்ளன. சந்திர குப்தருக்கும், இரண்டாம் புலிகேசிக்கும், விஜயநகரத்துக் கிருஷ்ண தேவராயருக்கும் இத்தகைய ஆசைகள் ஏற்பட்டதாலேயே இந்திய வரலாற்றில் அவர்களது பெயர்கள் சுவடுகளாகப் பதிந்துள்ளன. கஜினி முகம்மதுவும், மாலிக்காபூரும் ஔரங்கசீப்பும் எழுதப்பட்டதின் பின்னணி யில் இருந்ததும் இந்தப் பேரரசுச் சிந்தனைதான். இந்திய வரலாறு என்ற பரப்பிற்குள் உச்சரிக்கப்படும் இந்தப் பெயர்களோடு உலக அளவில் அலெக்சாண்டரையும், செங்கிஸ் கானையும், நெப்போலியனையும், வரலாற்றுப் புத்தகங்கள் உச்சரிப்பது அவர்களது சொந்தச் சிந்தனையை மைய நீரோட்டச் சிந்தனையாக மாற்ற முனைந்த காரணத்தால் தான்.
நான் ஆரியன்; ஆரிய இனம் ஆளப்பிறந்த இனம்; அந்த இனத்தில் பிறந்த நான் ஜெர்மனியை மட்டும் அல்ல; இந்த உலகத்தையே ஆளுவேன் . எனக்குப் பின்னாலும் இந்த உலகம் ஆரியர்களால் ஆளப்பட வேண்டும் என்ற தனது சொந்தக் கருத்தை - சிந்தனையை நிலைநாட்டி விடத் துடித்த அடால்ப் ஹிட்லரின் பெருவிருப்பம் ஏற்படுத்திய தாக்கம் உலக வரலாற்றின் பக்கங்களைத் திசை திருப்பியது. அந்தத் திசை மாற்றத்தின் பின்னனியில் இருந்தது ஹிட்லரின் வெற்றி அல்ல; ஹிட்லரின் தோல்வி.
ஹிட்லரின் தோல்வியை உறுதி செய்தவர் ஒரு நபர் அல்ல. ஒரு தனி நாடும் அல்ல. அப்படியொரு பெயரை வரலாறு சுட்டிக் காட்டவில்லை. அதற்கு மாறாக ஹிட்லரின் தோல்வி நேச நாடுகளின் வெற்றியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது .
ஆகஸ்டு 15, 1947 என்ற தேதியை நிகழ்கால இந்திய வரலாறு நினவில் வைத்துக் கொள்ளும் நாளாகக் கருதுகிறது . சூரியன் மறையாப் பேரரசாக இருந்த பிரிட்டானிய ஆட்சியை முடிவுக் கொண்டு வந்த அந்த நாளை இந்தியாவின் வரலாற்றில் திசை மாற்றம் கொண்டு வந்த நாள் எனக் கொண்டாடுகிறோம். கொண்டாடத்தக்க அந்த நாளை இந்தியர்களுக்குத் தந்தவராகத் தனி ஒரு நபரை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் பலரையும் நினைவில் கொண்டு வருகிறோம்.
தியாகிகள் எனப் பாராட்டுப் பத்திரங்கள் வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். அந்த நாளில் நாங்கள் வாழ்ந்தோம் என்று சொன்ன தலைமுறையின் ஆனந்தக் களியாட்டத்தை நான் கேட்டிருக்கிறேன். அப்படிப் பட்ட ஒரு நாள் வரப் போகிறது என முன்பே கட்டியம் கூறிப் பாடிச் சென்ற பாரதியைப் பாராட்டுகிறோம்.
மனுக்கள் போட்டுக் கோரிக்கைகள் வைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை சுதந்திரம் எமது பிறப்புரிமை;அதை அடைந்தே தீருவோம் எனச் சொல்ல வைத்த மாற்றத்தைச் செய்தவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி மட்டும் அல்ல. அந்த வரலாற்றின் பக்கங்களில் தூக்கு மேடை ஏறிய பகத்சிங்கிற்கும் இடம் உண்டு. இந்திய தேசிய ராணுவம் எனத் தனிப்படை திரட்டி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயிற்சிகள் அளித்த சுபாஷ் சந்திரபோஸிற்கும் இடமுண்டு.
விநாயகர் சிலையை முன் வைத்து இந்திய மக்களுக்குத் தேச விடுதலை உணர்வை ஊட்டிய திலகருக்கு இடம் இருப்பதைப் போலப் பம்பாய் நகரத்துத் தொழிலாளர்களைத் திரட்டிய டாங்கேவிற்கும், பி.சி.ஜோசிக்கும் அந்த வரலாற்றில் இடம் இல்லை என்று சொல்ல முடியாது. சொந்தமாகக் கப்பல் கம்பெனி நடத்திச் சிறை சென்று செக்கிழுத்த சிதம்பரனுக்கு இருக்கும் அதே இடம் அமிர்தசரஸில் ஜெனரல் டயரின் உத்தரவால் சுட்டுக் கொல்லப்பட்ட - பஞ்சாப் படுகொலையில் செத்துப் போன -ஒவ்வொருவருக்கும் உண்டு.
சொந்த சொத்துக்களைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்ததோடு அதன் நிர்வாகப் பொறுப்பில் முக்கியப் பங்காற்றிய நேரு குடும்பத்துக்கு இந்திய வரலாற்றில் நீண்ட நெடிய பங்கு இருக்கிறது. அதைப் போலவே தனது வீட்டுத் தோட்டத்தில் இருந்த பனை மரங்களையும் தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தி விட்டுக் காந்தியின் பின்னால் திரண்ட ஈ. வெ. ராமசாமிக்கும் இடம் இருக்கிறது. தேச விடுதலையோடு சேர்த்து இந்த நாட்டின் ஏழை எளிய மக்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் என வைத்திருக்கும் கொடிய சமூகப் பழக்கவழக்கத்தையும் சேர்த்து முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பேசிய அண்ணல் அம்பேத்கருக்கும் வரலாறு தனது பக்கங்களை ஒதுககி வைத்துள்ளது.
வெற்றி நாட்களை மட்டுமே வரலாறு பதிவு செய்யும் என்பதில்லை. வெற்றிக்குப் பின் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும் அதன் பக்கங்களைத் திறந்து காட்டும். பேரரசன் அசோகனின் பெயர் அப்படித்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலிங்கப் போரின் வெற்றிக்காக அசோகனின் பெயர் நினைவு கூரப்படுவதை விட, வெற்றிக்குப் பின் அவனது மனம் அடைந்த மாற்றத்திற்காகத் தான் அசோகனின் பெயரை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் அதி முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் எனப் பட்டியலிடும் போது இந்த நாள் -2008, ஜூலை, 22- நிச்சயம் குறிக்கப்படும் என்பது மட்டும் உறுதி. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முன் வைத்துப் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றார் இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் என அந்த நாள் குறிக்கப்படும். வெளிப்படையான இந்தத் தகவல் மட்டுமே இந்த நாளை முக்கியத்துவம் வாய்ந்த நாள் என்று சொல்லப் போவதில்லை. வெளிப்படையான இந்த உண்மைக்குப் பின்னால் மறைமுகமான பல காரணங்களும் இருக்கின்றன.
மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராக்கி நரசிம்மராவ் தொடங்கி வைத்த புதிய பொருளாதார முறைமையின் அடுத்த கட்ட நகர்வுக்குக் காரணமாக இருக்கப் போகிறது இந்த நாள். தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற முழக்கங்களை முன் வைத்தவர்கள் நாலுகால் பாய்ச்சலில் வேகம் காட்ட இந்த நாள் அனுமதி அளித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் பத்தொன்பது வாக்குகள் கூடுதலாகப் பெற்று ஆளும் ஐக்கிய முன்னனி அரசு வெற்றி பெற்றது எனச் சொல்லப்பட்டாலும், அதன் முழுப்பெருமையையும் தட்டிக் கொண்டு போனது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் வெற்றி பெற்றது எனச் சொல்லும் போது முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா தோல்வி அடைந்தது என்று எழுதுவது தானே நியாயம். ஆனால் வரலாறு அப்படி நிச்சயம் எழுதப் போவதில்லை. இந்திய இடதுசாரிகளின் தோல்வி என்று தான் எழுதப்போகிறது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படியானதொரு ஒரு சவாலை முன் வைத்தவர்கள் இடதுசாரிகள் தான்.
இந்திய அரசாங்கம் செய்யப் போகும் அணுசக்தி ஒப்பந்தம் 123, இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டதல்ல; அமெரிக்க நலனுக்காகச் செய்யப்படுகிறது என்ற கருத்தில் தங்களுக்கு நம்பிக்கை இருந்தது என்றால், அந்த நம்பிக்கையை மைய நீரொட்டச் சிந்தனையாக மாற்றி இருக்க வேண்டும். அதற்கான பிரசாரத்தை- விழிப்புணர்வுப் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். அதற்காக மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.
மக்களிடம் சொல்ல வேண்டியதைப் பாராளுமன்றத்தில் சொல்லிக் கொண்டிருந்த இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி சாதாரணமானதல்ல. அதைத் தோல்வி என்று சொல்வதை விட வீழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். நடைமுறைக் கோளாறுகள் பல இருந்த போதிலும் அடித்தள மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் இடதுசாரிகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. எந்த நிலையிலும் சொந்த வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படாது,மக்களுக்காக யோசித்து மக்களுக்காக வாழ்கின்ற இடதுசாரிகளின் வீழ்ச்சி இந்தத் தேசத்திற்கு நல்லதல்ல.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை