: 28

ஒற்றுமையில் வேற்றுமை

ஒற்றுமையில் வேற்றுமை


கல்வித்துறையில் மாற்றங்கள் என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே விவாதப் பொருளாக ஆக்கியிருக்கிறது. கடந்த ஆட்சி வரை கல்வித்துறை என்பது ஒரே அமைச்சரின் கீழ் இயங்கிய நிலையை மாற்றி, பள்ளிக் கல்விக்கென ஓர் அமைச்சரையும், கல்லூரிக்கல்வி தொடங்கி நடக்கும் உயர்கல்வித் துறைகளுக்கு இன்னொரு அமைச்சரையும் பொறுப்பாக்கியதே கூடக் கல்வித்துறை இந்த ஆட்சியில் கவனிக்கப் படத் தக்க துறையாக ஆகப் போகிறது என்பதன் குறிப்புணர்த்தலாக இருக்கலாம்.
பொறுப்பேற்றுக் கொண்ட இரு கல்வி அமைச்சர்களும் தொடக்கத்திலிருந்தே ஒரே நோக்கம் கொண்ட இரு சொற்றொடர்களை உச்சரித்த வண்ணம் உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் சமச்சீர்க் கல்வி என்ற சொற்றொடரை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறார் என்றால் உயர் கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்கள் பொதுப்பல்கலைக்கழகச் சட்டம் என்ற சொற்றொடரை அடிக்கடி உச்சரித்து வந்துள்ளார்.
இவ்விரண்டும் வேறுவேறான சொற்றொடர்களாக இருந்தாலும், தமிழகத்தின் அனைத்து மாணாக்கர்¢களுக்கும் ஒரே மாதிரியான கல்வியையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என நினைக்கும் அரசின் கொள்கை முடிவையே இந்தச் சொற்றொடர் வழியாகச் சொல்லி வருகிறார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. பள்ளிக் கல்வி சமச்சீர்க் கல்வியாக அமைய வேண்டும் என நம்பி முயலும் அமைச்சர் அதில் ஒட்டு மொத்தமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளன.
வேறுபட்ட பின்னணிகளுடன் தொடங்கப் பட்டு நடைபெற்று வரும் பள்ளிகளின் உள்கட்டமைப்பையும், ஆசிரியப் பணிகளின் விகிதத்தையும் ஒரேசீரானதாக ஆக்கும் போதே சமச்சீரான கல்வி சாத்தியம். தொடர் நடவடிக்கைகளால் அவை சாத்தியப் படலாம். அதன் முதல் படியாகப் பள்ளிக் கல்வி அமைச்சகம் தேர்வு முறை மாற்றத்தை முன் மொழிந்து நடை முறைப் படுத்திக் கொண்டு வருகிறது.
பள்ளிப் படிப்பின் முடிவில் கிடைக்கும் மதிப்பெண் சான்றிதழில் வேறுபட்ட மதிப்பெண்கள் இல்லாமல், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் இருக்கும்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இம்மாற்றம் கற்கும் முறையிலும், கற்றுப் பெற்ற அறிவிலும், அவ்வறிவைப் பயன்படுத்திக் கொள்ளும் வழியில் மாற்றங்களை ஏற்படுத்தி விடப் போவதில்லை என்றாலும், கண்ணுக்குப் புலப்படும் படியான வேறுபாடு ஒன்று களையப்பட்டுள்ளது.
வரவேற்க வேண்டிய ஒன்று.இதே போல் பொதுப் பல்கலைக்கழகச் சட்டம் என்னும் முழுமையான மாற்றத்தை முன் மொழிந்த உயர்கல்வி அமைச்சகம், அம்முழுமையைத் தள்ளி வைத்துவிட்டு,பொதுவான பாடத்திட்டக் கட்டமைப்பு ஒன்றைத் தமிழகம் முழுமைக்கும் பரிந்துரை செய்துள்ளது.
ஆங்கிலத்தில் சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் (Choice based credit system) என அழைக்கப்படும் தேர்வு அடிப்படைப் பாடஅலகு முறைத் திட்டத்தை அறிமுகம் செய்யும் விதமாக அனைத்துப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தையும் பொதுத் தன்மைக்குள் கொண்டு வரும் முயற்சியாக இப்பரிந்துரை அமைந்துள்ளது. அதனை ஏற்று இந்த ஆண்டு முதலாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன.ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைத் தொடங்கும் தவிர்க்க முடியாத காரணங்களால் இடம் மாற நேர்ந்தால் படிப்பைத் தொடர்வதில் இருந்த சிக்கலை இம்மாற்றம் எளிதாக்கக் கூடியது.
ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்கும் நிலையில் முதல் பல்கலைக் கழகத்தில் முடித்த இடத்திலிருந்து அடுத்த பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடரலாம். அத்துடன் இந்தத் தேர்வு முறை இதுவரை ஆசிரியர்களை மையமிட்டு உருவாக்கப் பட்ட பாடத்திட்டத்திலிருந்து நகர்ந்து மாணாக்கர் அடிப்படை பாடத்திட்டமாக மாறுகிறது எனலாம். தான் விரும்பிச் சேரும் பாடப்பிரிவில் அடிப்படையான பாடங்களைக் கற்றுத் தேர்வதோடு, கூடுதல் விருப்பமாகப் பிறதுறைகளின் பாடங்களையும் கற்கும் வாய்ப்பு இப்புதிய முறையில் உள்ளது. முதன்மைப் பாடங்கள், சார்புப் பாடங்கள், என்ற வகைப்பாட்டிற்குப் பதிலாக வல் அலகுப் பாடங்கள் (Hardcore credit), மெல் அலகுப் பாடங்கள்,(Softcore credit), துறைசாராப் பாடங்கள், சமூக உணர்வுக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி என விரியும் தன்மை கொண்ட இப்புதிய திட்டம் ஆசிரியர்கள் மனது வைத்தால் திறமையான மாணாக்கர்களை உருவாக்கும் வாய்ப்பைத் தன்னகத்தே கொண்டதாக அமைந்துள்ளது.
ஆம் எத்தகைய பாடத்திட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் ஆசிரியர்களே இருக்கிறார்கள் என்பது தவிர்க்க முடியாததாக உண்மை தான் .
அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்புதிய திட்டப்படி ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதன் விருப்பப்படி பாடங்களின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு பிரிவிலும் இத்தனைத் தாள்கள் என்னும் பொதுக்கட்டமைப்பு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. அதில் குறைக்கும் அதிகாரம் பல்கலைக் கழகங்களுக்கு இல்லை. விருப்பப் பட்டால் கூடுதலாகத் தரலாம். நிகழ்காலத் தேவையைக் கருதி கணினி அறிவு, தொடர்பு மொழிப் பயிற்சி, ஆளுமைத் திறன் வெளிப்பாடு, செய்ம்முறைக் கல்விக்குக் கூடுதல் வாய்ப்பு எனப் பாடத்திட்டங்களை அமைத்துக் கொள்ளலாம்.கூடுதலாக உழைக்கும் மாணவன் குறிப்பிட்ட கால அளவிற்கு முன்னதாகவே படிப்பை முடிக்கும் வாய்ப்புகள் கூட இம்முறையில் உண்டு.
ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தோடு வேறு பல்கலைக்கழகப் பாடத் திட்டதையம் இணைத்துக் கற்கும் முறை கூட மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் உள்ளன. அனைத்திலும் மேற்கைப் பார்த்து மாறிக் கொண்டிருக்கும் நாம் கல்வி முறையிலும் அப்படியே தொடர்கிறோம் என்ற குறைபாட்டைச் சிலர் சொல்லக்கூடும் என்றாலும் இம்மாற்றம் தவிர்க்க முடியாதது. மேற்கத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆசிரியர்களை மையமிட்ட பாடத் திட்டத்தைக் கைவிட்டு விட்டு மாணவனை மையமிட்ட பாடத்திட்டத்திற்கு அடுத்து நகர உள்ளன. அம்மாற்றமும் விரைவில் வரக்கூடும்.
தேசத்தின் பொருளாதார அடித்தளம் மாற்றம் அடையும் போது அதனால் பாதிப்புக்குள்ளாகும் மேல் தளங்களிலும் மாற்றங்கள் உருவாகும் என்பது இயங்கியல் விதி. இயங்கியல் விதி என்பது தானாக நடப்பதில்லை. நடக்கும் அடித்தள மாற்றத்திற்கேற்பச் சிந்திக்கும் மனிதர்களின் சிந்தனைத் தொகுதியின் வெளிப்பாடே இயங்கியல். இந்த இயங்கியலைப் புரிந்து கொண்டால், வேகமாக மாறிக் கொண்டிருக்கும் சந்தைப் பொருளாதாரத்தின் தேவைக்கேற்பக் கல்வியை மாற்றும் முயற்சி இது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
தவிர்க்க முடியாததும் வரவேற்கத் தக்கதுமான இந்த மாற்றத்தில் இன்னொரு பரிந்துரையும் செய்யப்பட்டது. நல்ல வேளை இந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப் படவில்லை. தமிழகம் முழுவதற்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடத்திட்டக் குழு என நகரும் அந்த முயற்சி ஆபத்தானது. ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதை ஒற்றைப் பாடத்திட்டம் எனப் புரிந்து கொண்டு முன் மொழியப்படும் அம்முயற்சி கைவிடப் பட வேண்டும்.
அப்படியான முறை பள்ளிக் கல்வியில் இருக்கிறதே எனப் பலர் வாதம் செய்யலாம். பள்ளிக் கல்வியிலிருந்து வேறுபட்டது கல்லூரி; கல்லூரிக் கல்வியிலிருந்து வேறுபட்டது பல்கலைக்கழகக் கல்வி. இந்த அடிப்படைத் தத்துவம் தகர்க்கப்பட்டால் தமிழகத்தில் புதியன புகுதல் நிகழாமல் போகும். சோதனை முயற்சிகள் தடைபட்டால் உலகத்தோடு சேர்ந்து பயணிக்கும் வாய்ப்புகளைத் தவற விட்டவர்களாக ஆவோம்.
பொதுவான அமைப்பில் வேறுபாடுகள் கொண்ட உள்ளடக்கம் என்பதே படைப்புத்திறனின் சிறப்பம்சம். உள்ளடக்க வேறுபாடுகளை ஒழித்து விட்டால் புதிய சிந்தனைகளும், புதிய காற்றும் வீசாது.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை