: 24

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.

இதேபோல் அறிவியல் பாடங்களான உயிரியல், கணிதம், இயல்பியல், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம், வரலாறு மரபான பாடங்களுக்கும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த அமர்வுகளில் பங்கேற்ற பேராளர்கள், கருத்தாளர்களோடும் உரையாடினேன். பலரும் சந்தேகங்களோடுதான் திரும்பியிருக்கிறார்கள். அவையெல்லாம் சிலவற்றை உணர்த்துகின்றன. ஒருசிலர் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து அவர்கள் உணர்ந்ததைச் சொன்னார்கள். மொழி இலக்கியக் கல்வி திட்டங்களைத் தாண்டிப் பொதுநிலையில் தமிழ்நாட்டுப் பள்ளிக்கல்வி குறித்தும் தொடர்ச்சியாக உயர்கல்வி குறித்தும் விவாதங்கள் தேவை; மாற்றங்கள் தேவை. தொடர்ச்சியாக எழுதிப்பார்க்கவேண்டும் . எழுதிப்பார்ப்பதின் வழியாக எனக்கே சில தெளிவுகள் கிடைக்கலாம்.
இரண்டு நாட்களும் அங்கே உலவிய கருத்தோட்டம் முதன்மையாக உணர்த்தியது இதுதான். பலவிதங்களிலிருந்து ஒற்றைத் தன்மையைக் கொண்ட பள்ளிக்கல்வியை உருவாக்க வேண்டும்; காலத்தின் கட்டாயம் அது. கட்டாயத்தில் முதலில் இருப்பது தேசியத் தர உறுதித்தேர்வு(NEET).இத்தேர்வு கொடுத்த உதைதான் இந்த நகர்வுக்கு முதல் காரணம். மருத்துவப் படிப்பை முன்வைத்து அறிமுகமாகிவிட்ட அத்தேர்வு, அடுத்தடுத்த ஆண்டுகளில் பொறியியல், வணிகவியல், கலையியல், அறிவியல்,சமூக அறிவியல் என ஒவ்வொரு புலமாகவோ, ஒட்டுமொத்தமாகவோ அறிமுகமாகத்தான் போகிறது.பெருந்தேசக் கருத்துக்கு ஒப்புக்கொடுத்தபின் விலகல்கள் சாத்தியமில்லை. இப்போட்டித் தேர்வு மட்டுமே நமது மாணாக்கர்கள் முன்னிருக்கும் ஓட்டப்பந்தயம் அல்ல. பலப்பல பந்தயங்களில் ஏற்கனவே கலந்துகொண்டு கோப்பைகளை வென்றிருக்கும் தமிழ் இளையோர்களைப் பாராட்டவும் செய்துள்ளோம்; செய்வோம்.
இந்திய அரசின் குடிமைப்பணிக்கான (IAS,IPS,IRS...) போட்டித்தேர்வுகளில் எந்தவிதத் தயக்கமில்லாமல் பங்கேற்றுவருகிறோம். பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசியத்தகுதி (NET), அறிவியல் பாடங்களுக்கான ஆய்வுத்தேர்வுகள், ரயில்வே துறை, முன்பு தபால் துறைக்கு, ராணுவம் சார்ந்த துறைகளுக்கு மட்டுமல்லாமல், மைய அரசின் பணிகளுக்கும் பொதுத்துறைகளுக்கும் தேசிய அளவுத்தேர்வுகள் நடந்துகொண்டுதான் இருந்தன. மையப்பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் பற்றி இங்கே விவாதங்கள் இல்லை. இவற்றில் சிலசில வேறுபாடுகள் இருக்கின்றன.. அவையெல்லாம் மைய அரசின் கையிலிருக்கும் துறைகளுக்கான தேர்வுகள்.
இப்போது நடத்தியுள்ள தேசிய தர உறுதித்தேர்வு தொடங்கி இனித் தொடர்ந்து நடத்த நினைக்கும் தேர்வுகளெல்லாம் மாநில அரசின் கையிலிருக்கும் துறைகளைப் பின்வாசல் வழியாக மைய அரசு கைப்பற்ற நினைக்கும் முயற்சியின் வெளிப்பாடு. அம்முயற்சியின் முதல் அடியிலேயே தமிழ்நாட்டு மாணவர்களுக்கு - குறிப்பாகச் சமூக நீதி அடிப்படையில் கிடைத்த இடங்கள் பறிபோகின்றன. இட ஒதுக்கீடு அடிப்படையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இடங்களைப் பெறும் வாய்ப்பில்லாமல் இருந்த - சாதிக்குழுக்களுக்குக் கூடுதல் வாய்ப்பை வழங்கும் விதமாக இந்தத் தேர்வின் முடிவுகள் அமைந்துள்ளன. இதுதான் மைய அரசு அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களிலும் முன்வைப்புகளிலும் இருக்கின்றன. வரலாறு தெரிந்த நாள் தொடங்கித் தங்களை மூளை உழைப்புக்குழுவாக மட்டுமே கருதிக்கொண்ட சாதிக்குழு, அதனைத் தங்களின் பிறப்புரிமையாகக் கருதும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தும் பின்னணி இருக்கிறது. இதனை உணர்ந்தபோதிலும் அரசியல் சட்ட அடிப்படையில் எதிர்த்துவிட முடியாத நிலையில் போட்டியில் இறங்கித்தான் பார்த்துவிடலாம் என்ற ஏற்பாட்டின் முதல்படிதான் கல்வித்திட்ட மாற்றங்கள் எனப் பலரும் நினைக்கிறார்கள்; பேசுகிறார்கள்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை