: 61

சிதைவுகளின் முழுமை

சிதைவுகளின் முழுமை

தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள்,நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.
இத்தகைய விவாதங்களை இந்தியாவின் தேசியக்கட்சிகள் தங்களின் பொது அமைப்பில் விவாதிக்கின்றனவா என்று தெரியவில்லை. விவாதித்திருந்தால் எப்படியாவது தங்களின் ஆதிக்கத்தை எல்லா இடங்களிலும் நிலைநாட்டிவிட வேண்டுமென கருதியிருக்காது. வெவ்வேறு மாநிலங்களில்/ அமைப்புகளில் பின்வாசல் நுழைப்புகளை முன்னெடுத்திருக்காது. ஆனால் இந்தியாவில் தேசியத்தைக் கட்டமைப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கட்சிகள் தொடர்ந்து பின்வாசல் நுழைப்புகளைச் செய்துகொண்டே இருக்கின்றன.
ரஜினிகாந்தைத் தமிழக அரசியலில் இறக்கும் முயற்சி அப்பட்டமானபின்வாசல் நுழைவு. அதனைத் தேசியவாதம் வெளிப்படையாகச் செய்யாமல் மறைமுகமாகச் செய்கிறது. அறியாமல் செய்யும் பிழைகளுக்கு மன்னிப்பு உண்டு; அறிந்தே செய்தால் தண்டனைதான் கிடைக்கும். தண்டனை “ ஓரடி முன்னால், ஈரடி பின்னால்” என்ற அறியப்பட்ட சொற்றொடரின் அர்த்தமாக வெளிப்படும்; முடியும் என்ற சொல்ல விரும்புகிறேன். அப்படி முடிந்ததிற்கான முன்னுதாரணத்தைத் தேடி வேறெங்கும் செல்லவேண்டியதில்லை. தமிழ்நாட்டின் நிகழ்கால வரலாறே அதுதான்.
தேசியக் காங்கிரசும் தேசியவாதத்தில் நம்பிக்கைகொண்ட இடதுசாரிகளும் திரு எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களைப் பின்வாசல் வழியாகவே அரசியலில் நுழைத்தார்கள். நுழைந்த பின்னால், தமிழகச் சூழலில் தேசியவாதம் எடுபடாது என்பதைப் புரிந்துகொண்டார். தேசிய நலனின் பக்கம் திரும்புவதற்குப் பதிலாக இரண்டடி தாவி வட்டாரவாதத்தை வளர்த்தெடுத்தார். மாநிலவாதம் அல்லது தேசிய இனத்தின் நலன் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைபாடு தேசியத்திலிருந்து ஓரடி விலகல் என்றால், அதிமுகவின் தொடக்க கால நடவடிக்கைகள் வட்டார வாதத்தை நோக்கிய பயணமாகவே இருந்தது. அவர் காலத்தில் வட்டாரவாதமாக இருந்ததை அவருக்குப் பின்னால் தலைமையேற்ற அவரது வாரிசான ஜெ.ஜெயலலிதா சாதியவாதமாக மாற்றிக்கட்டமைத்துத் தன் தலைமையைத் தக்கவைத்தார். .
தேசிய இனங்களின் அடையாளங்கள், அவற்றின் விருப்பங்கள், அதனை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் திட்டங்கள் பற்றிய மறுபரிசீலனை செய்யாமல் செயல்பட்ட காங்கிரசின் மைய அரசும், கட்சியும் 1960 -களில் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்த வீழ்ச்சி, பல்வேறு தளங்களில் பல்வேறு பாணிகளில் இன்று முழுமையாக வெளிப்படுகின்றது. இந்தியாவை ஆண்ட தேசிய காங்கிரஸ் அதன் பிடிமானத்தை எல்லா மாநிலங்களிலும் இழந்துநிற்கிறது. எல்லா மாநிலங்களிலும் அதிகாரத்திற்கு வரவேண்டுமென விரும்பும் பா.ஜ.க., சகலவிதமான குறுக்குச் சால்களையும் ஓட்டுகிறது. கட்சியின் பெயர் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு மாநில பா.ஜ.க.வின் செயல்பாடுகளும் தேர்தல் உத்திகளும் வெவ்வேறானவை. தேர்தல் வெற்றிக்காக மாநிலவாதம், மதவாதம், சாதியவாதம், தனிநபர்களை முன்னிறுத்தும் வெகுமக்கள் வாதம் என அனைத்தையும் பயன்படுத்துகிறது. இவையெல்லாம் உடனடிப்பலன்களைத் தரலாம். ஆனால் நீண்ட காலத்திற்குத் தேசத்தை - தேசத்தின் அடிப்படை அரசியல் வாழ்வை- பொருளாதாரக் கட்டுமானத்தை உறுதியாக்கித் தராது.
ஒருவிதத்தில் பின் நவீனத்துவ காலத்தின் முழுமை என்பது சிதைவுகளின் வழியாக உருவாக்கப்படும் முழுமைதான் என்றாலும், திரும்பவொரு சிதைவை விரும்பாமல் ஆக்குவதில் முழுமை வெற்றிபெற்றாக வேண்டும் சிதைவுகளின் அடையாளங்கள் தொடர்ந்து வாழும் என்றால் எப்போதும் சிதையவும் செய்யும் என்பதும் உணரப்படவேண்டும். சிதைவுகளின் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு முழுமைக்குள் இருப்பதில் லாபமுண்டு என்பதைச் சிதைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்திலும் நினைக்கும் விதமாக முழுமை நடந்துகொள்ளவேண்டும்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை