: 27

தொடரும் வட்டார தேசியம்

தொடரும் வட்டார தேசியம்


அதிகாரப் பரவலாக்கம் பற்றி ஜனநாயக ஆர்வலர்களும் அறிவுஜீவிகளும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். மையப்படுத்தப்படும் அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் போக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் வெளிப்பாடு. மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பில் சில மாநில மக்களின் நலன்களும்¢, மாநில அரசுகளின் உரிமை களும் கண்டு கொள்ளப்படவில்லை; அதிகாரம் பரவலாக்கப் பட வேண்டும்; மேலிருந்து கீழ் நோக்கி அப்பரவல் நகரவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டதுண்டு. ஒற்றைக் கட்சியின் ஆட்சி மைய அரசில் இருந்த போது இத்தகைய குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன. தேசிய இனங்களின் உரிமைகள், நலன்கள் என்ற சொல்லாடல்களின் வழியாக விவாதிக்கப்பட்ட அவையெல்லாம் இன்று அர்த்தமிழந்து வருகின்றனவோ என்ற ஐயம் தோன்றத் தொடங்கியுள்ளது. ஐயம் தோன்றுவதற்குக் காரணம் மைய அரசாங்கம் பல கட்சிகளின் கூட்டாக மாறிவிட்ட சூழல் தான் என்று சொன்னால் அதிகாரப் பரவலை ஆதரிக்கும் ஜனநாயக ஆதரவாளர்கள் கோபம் கொள்ளக் கூடும். அந்தக் கோபம் நியாயமான கோபமா? ஜனநாயகத்தின் பலவீனத்தை மூடி மறைக்கும் போலியான வாதமா? விவாதிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அதிகாரப் பரவலாக்கம் என்பது இந்திய ஜனநாயகத்தில் எந்தத் தளத்தில் நடக்க வேண்டுமோ அந்தத் தளத்தில் நடக்காமல் வேறு ரூபத்தில் நடந்து கொண்டி ருக்கிறது என்பது உடனடியாகப் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அரசு நிர்வாகம், அதன் அமைப்புகள், கட்டுப்பாடுகள் , அவற்றிற்கிடையே இருக்க வேண்டிய புரிதல்கள், விட்டுக் கொடுத்தல்கள் என்பனவாக இருக்க வேண்டிய அதிகாரப் பரவலாக்கம் இங்கு தொடங்கவே இல்லை. மாறாக, அரசாங்கத்தை உருவாக்கும் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளால், பலவீனமான அரசுகள் உருவாகி வருகின்றன. மைய அரசாங்கம் மட்டுமே இத்தகைய கூட்டணி அரசியலால் பலவீன மாகத் தோற்றமளிக்கிறது என்று எண்ணி விட வேண்டாம். மாநில அரசுகளே கூட அந்த நிலையில் தான் உள்ளன. உள்ளே இருந்து ஆதரிக்கும் கட்சிகள், வெளியே இருந்து ஆதரவு தரும் கட்சிகள் போன்றவற்றின் நெருக்கடிகளால் அரசு இயந்திரம் தொடர்ந்து தற்காலிக முடிவுகளை எடுக்¢கிறது. மைய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரதமரானாலும் சரி, மாநில அரசுகளின் முதல்வர் களானாலும் சரி இத்தகைய நெருக்கடிகளில் தான் சிக்கித் தவிக்கின்றனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இது தான் நிலைமை. மாராட்டிய மாநிலத்தைவிட்டு வட மாநிலத்தவர்கள் வெளியேற வேண்டும் என ராஜ் தாக்ரே சொல்லுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் மாநில அரசும்,மத்திய அரசும் பலவீனமான அரசுகள் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இதே போல் கர்நாடகத்திலிருந்து தமிழர்களும், தமிழ்நாட்டிலிருந்து வடவர்களும் தெலுங்கர்களும்,வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்களும் வெளி யேற வேண்டும் என எழுப்பப்படும் குரல்கள் எத்தகைய தத்துவத்தின் மேல் ஒலிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்வதைவிட, எத்தகைய வரலாற்றிலிருந்து உருவானவை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. ஆம். அதற்கொரு வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வட்டார தேசியம் என்ற அரசியல் கலைச்சொல்லை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருகை தந்த போது இந்தியா என்று ஒரு நாடு இருந்த தில்லை. சில நூறு தேசங்கள் இங்கு இருந்தன. அந்தத் தேசங்களை ஆண்டவர்கள் பொதுவாகத் தங்களை ராஜாக்கள் என அழைத்துக் கொண்டார்கள். அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை நிர்வாகம் செய்யப்¢ பிரதிநிதிகளை நியமிப்பதுண்டு. அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட மண்டலத்தின் அதிகாரப் பொறுப்புடையவர் என்ற அர்த்தத்தில் மண்டலாதிபதிகள், பாளையக்காரர்கள் என அவர்கள் அழைக்கப் பட்டனர். தங்களைத் தாங்களே திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று அழைத்துக் கொண்ட சில நூறு தேசத்து மன்னர்களையும் பிரிட்டானியக் கிழக்கிந்தியக் கம்பெனி தங்கள் வசம் கொண்டுவர படை வலிமையையும் மூளையையும் பயன்படுத்தியது. அவர்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவரை மோதச் செய்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த கிழக்கிந்தியக் கம்பெனி,அந்த அதிகாரத்தை விக்டோரியா மகாராணியின் கைக்கு மாற்றிக் கொடுத்தது என்பது நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் இருந்த செய்திகள். விக்டோரியா மகாராணியின் அதிகாரத்தின் கீழ் வந்த இந்தியாவை ஆள்வதற்கு பிரிட்டானியர்கள் உருவாக்கிய அமைப்புக்கு ஜமீன்தாரி முறை என்று பெயர். மக்களிடமிருந்த வசூலிக்கும் வரியிலிருந்து இவ்வளவு தொ¬கையைத் தங்கள் பங்காக அனுப்ப வேண்டும் என்ற ஏற்பாட்டுடன் ஜமீன்தார்¢களின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை அந்தந்தப் பகுதியில் இருந்த வட்டாரத் தலைவர் களுக்கு வழங்கியது ஆங்கில அரசாங்கம். அதன் மூலம் தங்களின் பகுதிக்குத் தாங்களே அரசர்கள் என்ற எண்ணம் அந்த வட்டாரத் தலைவர்களான ஜமீன்தார்களுக்குத் தொடரும்¢படி செய்தது. ஒவ்வொரு வட்டாரத்தை ஆண்ட தலைவர்களும் தாங்கள் ஒரு தேசத்தை ஆள்பவர்களாகக் கருதிக் கொண்டதால், ஒட்டு மொத்த இந்திய மக்களைப் பிரிட்டானியர்கள் சுரண்டியதைக் காணத்தவறினார்கள். இந்திய விவசாயிகளின் உற்பத்தி,¢ இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருள்களாக மாறிய பொருளாதாரப் பரிவர்த்தனையைப் பற்றிய விவாதங்களே எழுப்பப்படவில்லை. பின்னர் இந்த விழிப்புணர்வு உண்டாவதற்குக் காரணமாக இருந்தது ஆங்கிலக் கல்வியும், அவர்கள் உண்டாக்கிய நிர்வாக முறைகளும் என்பது சுவாரசியமான முரண். அது தனியாக விவாதிக்க வேண்டியது. நிகழ்காலக் கூட்டணி அரசுகளின் நிர்வாகம் திரும்பவும் பழைய வட்டார தேசிய உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வட்டாரத்தை ஆளும் மாநில அரசும் மாநிலக் கட்சியும் அந்த மாநிலத்தைத் தனி தேசமாகக் கருதி அதன் எல்லைக்குள் இன்னொரு தேசத்து மக்களுக்கு இடமில்லை என்று கருதத் தொடங்கி விடுகின்றன. ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது இப்படி நினைப்பதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்தாலும், எதிர்க்கட்சியாக ஆனவுடன் அப்படித்தான் நினைக்கின்றன.நதிநீர் தாவாக்கள், ரயில்வே கோட்டங்கள், மைய அரசில் இடம் பெற்றுள்ள தங்கள் கட்சி அமைச்சரைக் கொண்டு தங்கள் மாநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தல் எனப் பலவற்றை இங்கே நினைத்துக் கொண்டால் இது புரியலாம். ஒவ்வொரு வட்டாரக் கட்சியும் அந்தந்த வட்டாரத்தைத் தங்களின் சுயாதீனத்திற்கு உட்பட்ட பிரதேசமாகக் கருதுகின்றன. இந்த ஆபத்தைச்¢ சுட்டிக் காட்டும் இந்த நேரத்தில் இதைவிட ஆபத்தான இன்னொரு போக்கையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு மாநிலக் கட்சிக்குள்ளும் கூட இந்த வட்டார தேசிய உணர்வு மேலோங்கி வருகிறது. அந்தந்தப் பகுதிகளில் செல்வாக்கோடு இருக்கும் சாதிகளின் தலைவர்களை அந்த வட்டாரத்தின் தலைவர்களாக ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்களின் மைய அதிகாரத்தைக் காத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்தப் பகுதியில் நடக்கும் அரசுத்துறை நியமனங்கள், பணிகள், நிர்வாக நடைமுறைகளை அந்தத் தலைவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. அதிலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் மாநிலக் கட்சி குறிப்பிட்ட வட்டாரத்தின் உயர் பதவிகளை வட்டாரத்தலைவரின் ஒப்புதலோடு தான் செய்கிறது என்பது கண்கூடு. பொதுத்துறை நிறுவனங்களின் மேலாளர்கள், கூட்டுறவு அமைப்புக்களின் நிர்வாகிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,மாவட்ட, வட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள் போன்ற அரசு நிர்வாகப் பதவிகளை கட்சிகளின் வட்டாரத்தலைவர்களின் ஒப்புதலோடு செய்வதை அதிகாரப் பரவலாக்கம் எனச் சொல்லுவது ஆபத்தானது.இந்நிலையை அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லால் குறிப்பதை விட அதிகாரத்தைப் பங்கு போடுதல் என்ற வார்த்தையால் குறிப்பதே சரியாக இருக்கும். பரவலாக்கம் புரிந்து ணர்வின் வெளிப்பாடு. பங்கு போடுதல் கண்டு கொள்ளாமையின் நிலைப்பாடு. மார்ச்- 23


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை