: 31

முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி

முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி

தேர்தல் அரசியலை ஏற்றுத் தமிழ் நாட்டில் இயங்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அதிகம் நம்புவது பேச்சு மேடைகளையும் அச்சு ஊடகங்களையும் தான். அச்சு ஊடகமான பத்திரிகை மற்றும் நூல்களை வெளியிட அதிகாரபூர்வமான கட்சி அமைப்புகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள். அவ்வதிகாரபூர்வமான அமைப்புகள் வழியாகச் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்யச் சில துணை அமைப்புகளை உருவாக்குவதும் உண்டு. அத்துணை அமைப்புகளைப் பொறுப்பேற்று நடத்தும் தனிநபரின் விருப்பம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் அத்துணை அமைப்புகளின் எல்லைகளும் செயல்பாடுகளும் விரிவடையும்.
தமிழகப் பெருநகரங்கள் அனைத்திலும் கிளைகளைக் கொண்டுள்ள பாரதிபுத்தகாலயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடுகளையும், அதன் துணை அமைப்புகளின் நூல்களையும் விற்பனை செய்யும் ஒரு பதிப்பக இயக்கம். அதன் வெளியீடுகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாகப் புதிய புத்தகம் பேசுது என்றொரு இதழையும் நடத்தி வருகிறது. அந்த இதழை அவ்வப்போது சிறப்புமலராகவும் வெளியிடுவதுண்டு. ஏப்ரல் ,2009 இல் அத்தகைய சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அச்சிறப்பு மலரின் பொதுப் பொருள் தமிழ்ப் புத்தக உலகம்,1800-2009.
இப்பொதுப் பொருளில் 44 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக அச்சிறப்பு மலர் வந்துள்ளது. தமிழில் புத்தகங்களை அச்சிடத் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரையிலுமான புத்தக உலகம் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள தொகுப்பு நூல் என்று பொருள் படும்படியான தலைப்பினைக் கொண்டுள்ள இந்தூலில் பலர் பொறுப்புடன் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மொத்தக் கட்டுரைகளின் வாசிக்கும் போது இச்சிறப்பு மலரைப் புத்தகங்களின் உலகம் என்று சொல்வதை விடப் பதிப்புகளின் உலகம் எனச் சொல்வது சரியாக இருக்கும் என்று தோன்றியது.
மொத்தம் உள்ள 44 கட்டுரைகள் தனி மனிதப் பதிப்புகள்-11, பொதுக் கட்டுரைகள்- 27, நிறுவனம் சார்ந்த பதிப்புகள்-6 எனப் பிரித்துத் தரப்பட்டுள்ளன. 1800க்குப் பின் தமிழில் அச்சாகியுள்ள புத்தகங்களின் உலகம் அல்லது பதிப்புகளின் உலகம் என்றிருந்தாலும் பெரும்பாலும் மரபுத்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த தனிநபர்கள், நிறுவனங்கள், மட்டுமே கவனப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றிலும் கூடச் சில விடுபடல்கள் இருக்கின்றன. பதிப்பாசிரியர் குழு அமைத்துத் தமிழில் ஏராளமான மரபுத் தமிழ் நூல்களைப் பதிப்பித்த சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பற்றிய கட்டுரையும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை பற்றியொரு கட்டுரையும் இடம் பெறவில்லை என்பது கவனத்தில் உடனடியாக வந்தவை.
அதே போல் பொதுவுடைமைப் பதிப்புகள் பற்றிய கட்டுரை வெறும் பட்டியலாக இருப்பது ஏனென்று புரியவில்லை. இப்போது நவீன இலக்கியங்களைப் பதிப்பித்துக் கொண்டிருக்கும் பதிப்பகங்களை விட்டு விட்டால் கூடப் பரவாயில்லை. ஏற்கெனவே புத்தகங்களைப் பதிப்பித்து நின்று போன முக்கியமான பதிப்பகங்கள் மற்றும் தனிநபர்கள், இயக்கங்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் இடம் பெற்றிருந்தால் இத்தொகுப்பு இன்னும் சிறப்புடையதாக அமைந்திருக்கும். சக்தி காரியாலயம், கலைமகள் காரியாலயம், அல்லயன்ஸ் பதிப்பகம், திராவிடப் பண்ணை, பெரியார் புத்தகப்பண்ணை, வாசகர் வட்டம், மாஸ்கோ பதிப்பகம், சி.சு. செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரம், பரந்தாமனின் அஃ, போன்றவற்றைப் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டும். தலித் பிரசுரங்களும் நூல்களும் பற்றிய கட்டுரையை எழுதிய ஸ்டாலின் ராஜாங்கம் கூடத் தனது எல்லையாக 1990 என வரையறுத்தது ஏனென்று தெரியவில்லை. அதற்குப் பின்பே தலித் நூல்களை வெளியிடுவதற்கெனத் தனிப் பதிப்பகங்களும் தனிநபர்களும் முயன்றார்கள். ஒதுங்கி நின்ற தலித் பிரசுரப் போக்கை இன்று மையநீரோட்டம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், முன்னோடிப் பதிப்பகங்களான விடியல், விளிம்பு, சமூகநீதிப் பதிப்பகம், தலித், ஐடியாஸ் போன்ற பதிப்பகங்கள் தொடங்கி வைத்த முன்னோடி நடவடிக்கைகளும், தனிநபர்களின் தீவிரமுமே காரணம் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். இப்படிச்சுட்டிக் காட்டுவது குறை சொல்வதற்காக அல்ல. விடுபடல்கள் எதிர்காலத்தில் சரி செய்யப்படலாம் என்ற நம்பிக்கை காரணம் தான்.
தமிழ்ப் பதிப்பகங்கள், தமிழ்ப் புத்தகங்கள் , தமிழ் அகராதிகள், நிகண்டுகள், கலைக்களஞ்சியங்கள், தொகை நூல்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பலவற்றைத் தொகுத்தளிக்கும் கவனிக்கத் தக்க சிறப்பு மலரைக் கொண்டு வந்துள்ள புத்தகம் பேசுது ஆசிரியர் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இத்தொகுப்பில் கட்டுரை எழுதியுள்ள கல்வித்துறை சார்ந்தவர்களும் சாராதவர்களும் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்தவர்களாக வெளிப்பட்டுள்ளார்கள். இத்தொகுப்பு இன்னும் சரி செய்யப்பட்டு ஒவ்வொரு நூலகத்திலும், ஒவ்வொரு ஆய்வாளர்களின் கைகளிலும் இருக்க வேண்டும்.

தமிழ்ப் புத்தக உலகம்,1800-2009
புதிய புத்தகம் பேசுது –சிறப்பு மலர்
பாரதிபுத்தகாலயம்,421,அண்ணாசாலை, சென்னை, 600 018 பக்.320, விலை.ரூ.95


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை