: 45

கீழ்த்திசை நாடுகளின் பொதுமனம்

கீழ்த்திசை நாடுகளின் பொதுமனம்மிக நிதானமாக நடத்தப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தேர்தலின் முடிவுகளை அம்மாநிலத்து அரசியல்வாதிகள் பொறுப்போடு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைத்து விடலாம் என்ற சாதகமான அம்சம் இருந்த போதிலும் தேர்தலுக்கு முந்திய கூட்டணியை மாநிலக் கட்சிகள் விரும்பவில்லை என்பதுதான் காஷ்மீரின் யதார்த்தம், மாநிலக் கட்சிகளான பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் சரி, முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சியும் சரி தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு தேர்தலுக்கு முந்திய உடன்பாடு கொள்ள விரும்பவில்லை.
இந்தியாவோடு சேர்ந்து இருப்பதா? தனிநாடாக ஆக்குவதா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் காஷ்மீரில் ஒரு மாநிலக் கட்சி, தேசியக் கட்சியோடு கொள்ளும் தேர்தல் உறவு எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கும் என்பதை மாநிலக் கட்சிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றன. அதே நேரத்தில் தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் அத்தகைய கூச்சத்தை இரு கட்சிகளுமே வெளிப்படுத்தவில்லை என்பதும் நம்ப முடியாத உண்மையாகவே இருக்கிறது. 
87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீரத்துச் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களை வென்று, அதிக இடங்களை பெற்றுள்ள கட்சியாக திகழ்கிறது. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாரதீய ஜனதா கட்சி இம்முறை 11 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஜம்மு பகுதியின் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மைக்குரிய வெற்றியைத் தரவில்லை. ஜம்முவிலும் காஷ்மீரிலும் பரவலான அறிமுகத்தைப் பெற்றுள்ள கட்சியாகக் காங்கிரஸ் இருந்த போதும் அக்கட்சியைத் தேர்வு செய்யப் பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதைத் தான் முடிவுகள் சொல்கின்றன. தரப்பட்டுள்ள முடிவுகளை ஏற்றுக் காங்கிரஸ் மாநிலக் கட்சியான – அதிலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை விட்டுத் தந்துள்ளது காங்கிரஸ். இந்த முடிவு பொதுநிலையில் நின்று யோசிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் முடிவு மட்டும் அல்ல, காங்கிரசின் புத்திசாலித்தனமான முடிவும் கூட.
தொடர்ந்து கலவரங்களையும் வெடிகுண்டுச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டிருக்கும் ஜம்மு- காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒவ்வொரு நிகழ்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதே சரியாக இருக்கும். இந்த நிதானமான யோசனை தான் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை அதிக இடங்களைப் பெற்றுள்ள தேசிய மாநாட்டுக் கட்சிக்கு விட்டுக் கொடுக்கும்படி வழி நடத்தி இருக்கக் கூடும். காஷ்மீரின் சிக்கலான அரசியலிலிருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு தனது கட்சி ஒதுங்கி இருக்கலாம் எனக் கருதியும், அடுத்து வரும் தேர்தலில் நிபந்தனையற்ற கூட்டாளியாகத் தேசிய மாநாட்டுக் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ஆகி விடும் என்பதாலும் இந்த முடிவைக் காங்கிரஸ் தலைமை எடுத்திருக்கலாம். அத்தோடு வாரிசுக்குப் பட்டம் சூட்டுதல் என்னும் நிகழ்வைக் கேள்விக்கப்பாற்பட்டதாக ஆக்கிக் காட்டும் உள்நோக்கம் ஒன்றும் அதன் பின்னணியில் இருந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை.
காஷ்மீர் அரசியலில் தொடர்ச்சியாக மூன்று தலைமுறைகளைக் கண்ட - நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பம் அப்துல்லாவின் குடும்பம். முதல்வராகப் பொறுப்பேற்கும் உமர் அப்துல்லா இந்திய மாநிலங்களில் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டவர்களில் வயதில் மிகவும் இளையவர். நாற்பது வயதைத் தொடாதவர். ஆனால் அவரது அரசியல் அறிவு நீண்ட காலப் பின்னணி கொண்டது. தேசிய மாநாட்டுக் கட்சியின் புரவலரான அவரது தந்தை பரூக் அப்துல்லா இதே நாற்காலியில் அமர்ந்து அனுபவம் பெற்ற அரசியல்வாதி. பரூக் அப்துல்லா மட்டுமல்ல, அவரது தந்தையும் காஷ்மீர் அரசியலில் பிரிக்க முடியாத பெயர் தான். காஷ்மீர் சிங்கம் என அழைக்கப் பட்ட சேக் அப்துல்லா தான் காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளைத் தக்க வைக்கக் காரணமானவர். ஆக ஒரு நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்து உறுப்பினராகத் தான் உமர் அப்துல்லா காஷ்மீரின் முதல்வராக ஆகிறார். அவர் வரவில்லை என்றால் இன்னொரு அரசியல் பாரம்பரியக் குடும்பமான – முப்தி முகம்மது சையத்தின் மகளான மெகபூபா முகமது முதல்வராக ஆகி இருக்கக் கூடும். ஆக எந்தக் கூட்டணி அதிகாரத்திற்கு வந்தாலும் காஷ்மீரில் தொடரப் போவது வாரிசுகளின் அதிகாரம் தான்.
தேர்தலுக்கு முன்பு மக்கள் ஜனநாயகக் கட்சியோடு அதிகாரத்தைச் சமமாகப் பங்கு போட்டுக் கொள்ள வாய்ப்பிருந்த போதிலும் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்ததன் மூலம் காங்கிரஸ் கட்சி அடுத்து அமைக்கப் போகும் வாரிசு ஆட்சிக்கு அஸ்திவாரம் போடுகிறது. வரப்போகும் தேர்தலில் நேரு குடும்பத்து வாரிசு தான் பிரதமராக வர வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தோதாக இளைய தலைவர் ஒருவர் சிக்கலான பிரச்சினைகள் நிரம்பிய மாநிலத்தில் முதல்வராக வர அக்கட்சி அனுமதித்திருக்கிறது. இப்படி நினைப்பதும் சொல்வதும் தவறான கருத்தின் வெளிப்பாடு அல்ல. நாடாளுமன்ற உறுப்பினராகப் பயிற்சி பெற்ற ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக ஆக்கப்பட்டுக் கட்சி நிர்வாகம் என்னும் அனுபவங்களைப் பெற்று வருகிறார். அடுத்து அவர் அமர வேண்டிய இருக்கை அமைச்சர் பதவியா? அல்லது நேரடியாகப் பிரதமர் பதவியா என்பதை அடுத்த தேர்தல் முடிவுகள் சொல்லக் கூடும்.
இந்தியாவின் மைய அரசாங்கத்தின் அதிகாரம் நேரு குடும்பத்தின் சொத்தாக ஆகி விட்டது எனச் சொல்பவர்கள் அக்கூற்றை இனி விட்டு விட வேண்டியதுதான். ஏனென்றால் இன்று பெரும்பாலான மாநிலங்கள், வாரிசுகளின் ஆட்சியைப் பார்த்து விட்டன. இடதுசாரிகள் மட்டுமே இதற்கு விதி விலக்காக இருக்கிறார்கள். ஆனாலும் கேரளத்தில் கருணாகரனின் குடும்ப அரசியல் நடக்காமல் இல்லை. ஆந்திரத்தில் என்.டி.ராமாராவின் மகன்கள், மருமகன் எனத் தொடர்கிறது. கர்நாடகத்தில் தேவே கௌடாவின் குடும்பமும், ஒரிசாவில் பட்நாயக்கின் குடும்பமும், மகாராஷ்டிரத்தில் தாக்ரேயின் குடும்பமும், மத்தியப் பிரதேசத்தில் சிந்தியாக்களின் குடும்பமும், பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் யாதவ்களின் குடும்பங்களும் ஆட்சி அதிகாரத்தை யாருக்கும் விட்டுத் தரத் தயாரில்லாத குடும்பங்களாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில் ஹரியானாவின் லால்களின் குடும்பத்தையும் பஞ்சாப்பின் பர்னாலாக் களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ் நாட்டின் கதையைக் கேட்கவே வேண்டாம். ஆளுங்கட்சியின் குடும்ப அரசியலுக்கீடாக எதிர்க் கட்சிகளிலும் வாரிசு அரசியல் இல்லாமல் இல்லை. புதிதாகக் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் கூடத் தங்களிடம் இருக்கும் அதிகாரம் அடுத்துத் தங்கள் மனைவியோ, மச்சானோ தான் அதிகாரம் கொண்டவர் களாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர், மாநில அளவில் நடக்கும் வாரிசு அரசியலுக்கு ஈடாக மாவட்ட அளவிலும் அரசியல் குடும்பங்களின் உறுப்பினர்களே அதிகார மையங்களாக இருக்கின்றனர். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளைப் போல அதிகாரத்தையும் வருவாயையும் பிரித்துக் கொடுக்கத் தயாராக உள்ள அமைப்பைக் கொண்டிருப்பது புரியவரலாம்.
தன்னாட்சி, சுய அதிகாரம், தேசிய நிர்ணயத்திற்கான போராட்டம், தனி நாட்டுக் கோரிக்கைக்கான யுத்தம் எனக் கலவரம் தொடரும் காஷ்மீரிலேயே வாரிசுகள் தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்திருக்கிறது என்பதை ஜனநாயக அரசியலின் சோகம் எனப் பலர் சொல்லக் கூடும். அதே போல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், மைய அரசியலிலும் வாரிசுகள் ஆட்சி என்ற சாபம் தான் இங்கு சாத்தியம் எனச் சொல்லிச் சலிப்பை வெளிப்படுத்தி ஓய்ந்து விடலாம். இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள், தென் கிழக்காசிய நாடுகளின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகளைக் கூர்மையாகக் கவனித்திருப்பார்களானால் அப்படிச் சொல்லத் தயங்கவே செய்வர். ஏனென்றால் இது இந்தியாவின் பொதுக்குணம் மட்டுமல்ல; தென்கிழக்காசிய நாடுகளின் பொதுமன வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
காஷ்மீர் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளி வந்ததற்கு அடுத்த நாள் வெளியான வங்காள தேசத்தின் பொதுத் தேர்தல் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்தியுள்ளன. வங்காள தேசத்தின் தேர்தலில் ஷேக் ஹஷினாவின் அவாமி லீக் கட்சி தேர்தல் நடந்த 299 தொகுதிகளில் 231 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது. அவரும் ஏற்கெனவே ஆட்சியில் இருந்து வெளியேறியவர் என்றாலும், அதையெல்லாம் தாண்டி அவருக்கு ஒரு சிறப்பு உண்டு. வங்கதேசம் என்னும் நாட்டை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மானின் மகள் அவர் என்பதுதான் அவருக்கு உள்ள சிறப்பு. தேசத்தை உருவாக்கிய முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்ட பின்பு ஆட்சிக்கு வந்த ராணுவத் தலைவர்களாலும் , ஊழல் அரசியல்வாதிகளின் அதிகார வெறியாலும் சிதறிப்போன வங்க தேசம் திரும்பவும் ஷேக் ஹசினாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப் பார்க்கிறது. ஆம் வாரிசுகளிடம் ஆட்சிக் கட்டிலை வழங்கிப் பார்ப்பது அங்கும் ஏற்புடையதாகவே இருக்கிறது.
வங்காளதேசத்தில் மட்டும் அல்ல; இந்த ஆண்டில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் பெரிய கட்சியாக வெற்றி பெற்றது பெனாசிர் புட்டோவின் கட்சி தான். அவரது கணவர் தான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். பெனாசிர் புட்டோ பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜுல்புகர் அலி புட்டோவின் மகள் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். அப்படியே பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குப் போனால் குமாரதுங்க குடும்பத்தினருக்கு அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்ட வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. இன்னும் பர்மா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து எனக் கீழ்த்திசை நாடுகளின் அண்மைக்கால வரலாறுகள் – ஜனநாயகம், தேர்தல் வாக்கெடுப்பு என நவீன சொல்லாடல்களைப் பயன்படுத்திய போதும் வாரிசுகள் அதிகாரத்திற்கு வருவதை அங்கீகரிக்கும் நிலையையே தொடர்கின்றன.
உலக அளவில் திரள் மக்களைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் பொதுப்புத்தி என்றொரு சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். தனக்கெனத் தனி அடையாளம் கொண்டவர்களாக ஒவ்வொருவரும் இருந்தாலும் வாழும் இடம், சீதோஷ்ணம், நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள் சார்ந்து பொதுக்குணங்கள் உருவாகி விடுவதைத் தவிர்க்க முடியாது என்கின்றனர். இப்பொதுப் புத்தி வெளிப்படையாகப் புலப் படாதவை என்றாலும் அதுவே ரசனை, முடிவெடுத்தல், தெரிவு செய்தல், பின்பற்றுதல் போன்ற அக வாழ்க்கை முடிவுகளையும் அவற்றின் தொடர்ச்சியாக அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக நடைமுறை போன்ற புறவாழ்க்கை அமைவுகளையும் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்கின்றனர்.
புலப்படா நிலையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் பொதுப்புத்தியில் உலக அளவில் இரு பெரும் வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. மேற்கத்திய தேசத்து மனிதர்களின் பொதுப்புத்திக்கு எதிரான முரண்பாடுகளோடு கீழ்த்திசை நாடுகளின் மனிதர்களின் பொதுப்புத்தி அமைந்துள்ளது என்பது ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் வாதம். ஓரியண்டலிசம் எனச் சொல்லப்படும், கீழ்த்திசை நாடுகளின் பொதுப்புத்தி பெரும் மாற்றங்களை எப்போதும் விரும்பாது எனவும், ஏற்கெனவே இருப்பனவற்றின் தொடர்ச்சிகளின் மீது தீராத மோகத்தை வெளிப்படுத்தக் கூடியது எனவும் மானிடவியல் சார்ந்த சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று உலக அளவில் இருக்கும் பல்வேறு தேசத்து மனிதர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தால் பொதுப்புத்தியை இருபெரும் முரணாக மட்டுமே கொள்ளுதல் போதாது என்று சொல்லலாம். ஆப்பிரிக்க நாடுகளின் கருப்பு மனிதர்களின் பொதுப்புத்தி மேற்கத்தியப் பொதுப்புத்திக்குள் அடங்கி நிற்கக் கூடியது அல்ல; இதே தன்மையை லத்தீன் அமெரிக்க தேசத்துப் பொதுப்புத்திக்குள் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.
இந்த வேறுபாடுகளைப் பார்த்து விட்டு தெற்காசிய- குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளின் பொதுப்புத்தியைக் கணிக்க முயன்றால் அவற்றுக்குள் ஒரு பொதுத் தன்மை இருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது. அதனால் தான் சொந்த வாழ்க்கையில் கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக நம்பும் நமது மனம், பொதுவெளியில் அவற்றிற்கான அர்த்தத்தை முக்கியமாகக் கருதுவதில்லை. தங்களது பாரங்களைச் சுமக்க தீர்மானிக்கப் பட்ட குடும்பங்கள் இருக்கும் போது புதிய மனிதர்களைப் பரிசோதனைக்குட்படுத்துவது அனாவசியமானது எனக் கருதுகிறது. நமது பொதுப்புத்தி மாற்றமின்மையை நேசிக்கும் ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் கொள்ள வேண்டியதே இல்லை.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை