: 28

தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள் (அ.மார்க்ஸின் நான்கு நூல்கள்)

தொடர் ஓட்டக்காரனின் பிடிவாதங்கள் (அ.மார்க்ஸின் நான்கு நூல்கள்)


2001 தொடங்கி 2003 ஆம் ஆண்டு வரை பல்வேறு பத்திரிகைகளில் அ.மார்க்ஸ்,எழுதிய கட்டுரைகளைக் கருப்புப் பிரதிகள் என்னும் புதிய பதிப்பகம் நான்கு தொகுப்புக்களாகத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ஒரே தேதியில் ஒரே பதிப்பகத்தின் வழியாக ஓர் ஆசிரியர் தனது நான்கு நூல்களை வெளியிடுவது என்பது ஒரு சாதனை தான். கடந்த கால் நூற்றாண்டுக் காலத் தமிழ்ச் சிந்தனையில்,- குறிப்பாகத் திறனாய்வுத் துறை சார்ந்த சிந்தனையில்-குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கள் செய்துள்ள அ.மார்க்ஸ் இச்சாதனைக் குரியவர்தான் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை.1980 தொடங்கி சிறியதும் பெரியதுமாக அவர் எழுதி வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கைகளும் கூட கால் நூறைத் தாண்டியிருக்கலாம்.அவரே தனியாக வும் அவ்வப்போது அவரது நண்பர்களாக இருந்த வேறு சிலரோடு சேர்ந்தும் எழுதியனவும் அவற்றுள் அடக்கம். கோ.கேசவன், கா.சிவத்தம்பி, ரவிக்குமார், பொ.வேல்சாமி என அவரது நண்பர்களின் உறவும் அவரது எழுத்துக்களைத் திசை மாற்றியுள்ளன என்பதை அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்த வர்கள் அறிந்திருக்கக் கூடும். என்ற போதிலும் அரசியல், சமுதாய மாற்றம், மொழி , இலக்கியம், பொதுக்கருத்து உருவாக்கம் , அதனைக் குலைத்தல், மாற்றுக ¢கருத்துக்கள் மற்றும் மரபுகளை உருவாக்குதல் எனப்பலவற்றிலும் அ.மார்க்ஸிற்குத் தீர்மானமான கருத்துக்கள் இருந்துள்ளன; இருக்கின்றன; இருக்கும். அதனாலேயே அவர் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு கல்வித் துறை சாராத திறனாய்வுகளும் கல்வித் துறைத் திறனாய்வுகளும் நேர்மறை யாகவும் எதிர்மறையாகவும் வினையாற்றியுள்¢ளன.
கலை, இலக்கியத்துறை விமரிசகனும்சரி, அவற்றின் இயங்குதளத்தைத் தீர்மானிக்கும் சமூகத்தை விமரிசிக்கின்றனவும்சரி, தனது விமரிசனக் கருத்துக் களைத் தனது நோக்கம் சார்ந்தே உருவாக்கிக் கொள்கிறான் என்பது பொது வான நம்பிக்கை. இப்பொதுநம்பிக்கைக்கேற்ப இருப்பையும் மாறவேண்டிய நிலைமைகளையும் அடையாளப்படுத்தி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பது அவனது முக்கிய கடமையாக அமைந்துவிடுகிறது. இக்கடமையைச் செய்யும் விமரிசகர்களே ஏதாவது அரசியல் அல்லது இலக்கிய இயக்கம் சார்ந்தவர் களாக இருந்தால் அவ்வியக்கம் முன்வைக்கும் மாற்றத்தைப் பரிந்துரை செய்கிறவர்களாக ஆகி விடுகின்றனர். அந்த இயக்கத்தின் மீது வாசகர் களுக்கு /மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை/ செல்வாக்குக்கேற்ப விமரிசகனின் விமரிசனக் கருத்துக்களுக்கும் செல்வாக்கும் மரியாதையும் நிலவுகிறது.
அ.மார்க்ஸ் எப்பொழுதுமே அடைய வேண்டிய இலக்குகளை/மாற்றத்தை முன்வைத்த விமரிசகராக இருந்ததில்லை. இதற்காக இயக்கம்சார்ந்த எழுத் தாளர்களாலும் வாசகர்களாலும் அவர் விமரிசிக்கப்படுவதும் உண்டு. எப்பொழுதும் நம்பிக்கையூட்டும் கடவுள்களை எதிர்பார்க்கும் இந்திய /தமிழ் மனோபாவம் விமரிசகனிடமும் நம்பிக்கையூட்டும் கருத்துக்களை / இலக்கு களை எதிர்பார்க் கின்றன. ஆனால் சரியான விமரிசகன் நம்பிக்கைகளைச் சிதறடிக்கும் வேலையும் தன்னுடையதே எனக்கருதுபவன்.அதுவும் ஐரோப்பிய நவீனத்துவத்தை அதன் உள் அர்த்தங்களோடு கடந்து வந்த விமரிசகனுக்கு இலக்குகளைச் சுட்டுவது என்பதும் நம்பிக்கைகளை முன்வைப்பதும் இயலாத ஒன்று. நவீனத்துவத்தையும் அதனை அடுத்து வந்த பின் நவீனத்துவத்தையும் தனது சொல்லாடல்களில் வெளிப்படுத்தும் அ.மார்க்ஸ் போன்ற விமரிசகர் களுக்கு நம்பிக்கைகளை முன்வைப்பது என்பது உவப்பான மனநிலையாக இருக்க முடியாது.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என மார்க்சிய அடிப்படைகளின் மேல் தனது திறனாய்வுப்பயணத்தைத் தொடங்கிய அ.மார்க்ஸ், புரட்சிகர அரசியலும் அதற்கான கலை இலக்கியங் களும் என மாறி ,பின்னர் அதனை மறுதலித்த நவீனத்துவம் , பின்நவீனத் துவக் கருத்தியல்கள் எனப் பயணம் செய்துள்ளார் என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்தவர்கள் அறிந்திருக்கக் கூடும். மறுதலிப்புக்கு வந்து சேர்ந்த ஒருவரது பயணம் நம்பிக்கைகளுக்குள் திரும்பினால் சமயம் சார்ந்த சொல் லாடல்களில் அதற்குப் ‘பாவமன்னிப்பு வேண்டுதல’ என்று பெயர். ஆனால் விமரிசனச் சொல்லாடல்களில் இதற்கு வேறு பெயர் உண்டு; மறுபரிசீலனை. அ.மார்க்ஸின் அண்மைக்கால எழுத்துக்கள் -குறிப்பாக அவரும் ஆசிரியர் குழுவில் இருந்து நடத்திய நிறப்பிரிகை என்னும் இதழ் நிறுத்தப்பட்ட பின்னர் அவரது எழுத்துக்கள் தொடர்ந்து மறுபரிசீலனைகளாக இருக்கின்றன என்பதையும் அவரின் தொடர் வாசகர்கள் அறிந்திருக்கக் கூடும்.என்றாலும் முழுமையும் மறுபரிசீலனை என்றும் சொல்லிவிட முடியவில்லை.
கருப்புப் பிரதிகளின் வெளியீடாக வந்துள்ள இந்த நான்கு நூல்களிலும் உள்ள கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கும் நிலையில் இவையனைத்தும் ஒற்றைக் கருத்தியலைத் தனது எழுத்தின் பின்புலமாகக் கொண்ட ஒருவரின் கட்டுரைகள் எனத் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. பின் நவீனத்து வத்தின் அறங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கையூட்டிய நபர்களை அடையாளங்காட்டவும் முனைகிறார். இதற்கு முன்னர் நவீனத்து வத்தின் பெயராலும் பின் நவீனத்துவத்தின் பெயராலும் அவரால் நிராகரிக்கப்பட்ட கருத்துக்களும் நபர்களும் இந்நூல்களில் நம்பிக்கையூட்டும் பிம்பங்களாக முன் வைக்கப்பட்டுள்ளன. பல உதாரணங்கள் இந்நூல்களில் காணக் கிடைக்கின்றன என்ற போதிலும் பச்சைத்தமிழர் காமராசர் பற்றிய கட்டுரையும் ஈரோடு தமிழன்பன் பற்றிய கட்டுரையும் முக்கியமான உதாரணங்கள். முன்பு கண்டு கொள்ளப்படாத கவிஞர் பிரமிள்,வரலாற்றில் கால் பதித்து, மானிடத் துயர்களை, இழிவுகளை, எதிர்ப்புகளை, பெரு மூச்சுக்களை இலக்கியமாக்கியவர் பிரமிள் எனப் பாராட்டபடுகிறார். மறுபரிசீலனைக்கான காரணங்கள் எவையெனச் சுட்டப்படாத நிலையிலும, முன்னர்க் கூறிய கருத்துக்கள் மாறிவிட்டதற்கான பின்னணிகள் தரப்படாத நிலையிலும் இம்முன்மொழிதல்கள் அல்லது அரவணைப்பு என்பன அவ்வப் போதைய அணிச் சேர்க்கைக்கேற்பவோ அல்லது தன்னை ஏற்றுக் கொண்டவர்களைப்பாராட்டுவது என்ற மனநிலையிலோ வெளிப்பட்ட கருத் துக்களாக நின்றுவிட வாய்ப்புண்டு. காத்திரமான திறனாய்வு என்பது இத்தகைய ஐயங்களுக்கு வாய்ப்பளிக்காது என்பது எதிர்பார்ப்பு.
வரலாற்றை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் என்னும் நூல் ஒன்பது நபர்களைப் பற்றிய கருத்துரைகள். அவ்வொன்பது பேர்களில் எட்வர்ட் செய்த், மோகன் தாஸ் காந்தி ஆகிய இருவர் மட்டுமே தமிழ் நாட்டைச் சேராத சிந்தனையாளர்கள். மீதமுள்ள ஏழுபேர்- இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், பெருஞ்சித்திரனார், ஆர்.பரந்தாமன், காமராசர், இமானுவேல் சேகரன், ஆகியவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் செயல்பட்டவர்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு இவர்களைப் பற்றிய அ.மார்க்ஸின் மதிப்பீடுகளும் முன்மொழிதல்களும் வேறானவை. ஆனால் இப்போதைய மனநிலைக்கேற்ப மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளார்கள். கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் செயல் பட்ட துறைகளில் முக்கியமான பங்களிப்புச் செய்துள்ளவர்களாகவும் அ.மார்க்ஸ் முன்நிறுத்திய போதும் ஏற்கெனவே தமிழ் வாசகப்பரப்பிலும் சமூகப்பரப்பிலும் இவர்களைப் பற்றி நிலைபெற்றுள்ள கருத்துக்களை மாற்றிவிடும் வல்லமை இவ்வெழுத்துக்கு இல்லை என்பதுதான் உண்மை.பாராட்டுவது என முடிவு செய்து விட்டு அதற்கேற்ப விவாதங்களை எழுப்புவதன் மூலம் காலம் ஒதுக்கிவைத்து விட்ட ஆளுமைகளைத் தூக்கி நிறுத்திவிட முடியாது . ஆனால் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள செய்த் பற்றிய கட்டுரைகளை அந்த வகைக்குள் அடக்கிவிட வேண்டியதில்லை. அண்மையில் மரணம் அடைந்த எட்வர்ட் செய்த் கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் பலவிதங்களில் அறிமுகம் பெற்றவர். ஆதிக்கக் கருத்தியலைத் தனக்குள் வைத்திருக்கும் மேலைத்தேயச் சிந்தனைகளுக்கெதிராகக் கீழைத்தேயச் சிந்தனைகளை முன்னிறுத்தி வாதிட்டவர். செய்தை தமிழ்ச் சூழலில் பொருத்த முற அறிமுகப்படுத்தும் அ.மார்க்ஸின் கட்டுரைகள் இந்நூலில் குறிப்பிடத் தக்க எழுத்துக்கள். 
கடமை அறியோம் தொழில் அறியோம், சொல்வதால் வாழ்கிறேன் என்ற இரண்டு நூல்களும் கலை, இலக்கியம் , கலாசாரம், என்னும் தளங்களில் விவாதங்களை முன்வைத்துள்ளன. மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியல்கள் மீதும், அவற்றை விமரிசித்துக் கருத்துரைத்து வரும் சிறுபத்திரிகை களில் செயல்படும் ஆதிக்கக் கருத்தியலாளர்களின் ஆதரவு சக்திகள் மீதும் எழுதப்பட்ட விமரிசனங்கள் இவ்விரு தொகுதிகளில் அதிகம் உள்ளன. அந்த வகையில் இவையனைத்தும்¢ செய்திக் கட்டுரைகள் என்ற வகைக்குள் வைத்து விவாதிக்கத்தக்கன. சிறுபத்திரிகைகளில் அவ்வப்போது நடக்கும் கருத்தியல் மோதல்களுக்கேற்ப அ.மார்க்ஸ் தனது வாதங்களை முன் வைக்கும் தொனி இவ்வெழுத்துக்களில் அதிகம் உண்டு. கறாரான அத்தொனி கட்டுரையாளரின் கருத்துக்களை மறுப்பின்றி ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தும் இயல்புடையது. வாசகன் ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் வேற்று முகாம் ஒன்றின் -அ.மார்க்ஸால் விமர்சிக்கப்படும் எதிரி முகாம் ஒன்றின் உறுப்பினன் என்று தயங்காமல் முத்திரை குத்தும் அதிகாரத்தையும் அத்தொனி தன்னகத்தே கொண்டிருக்கிறது. தனது எதிரிகளைப் பற்றித் தன் நண்பர்களுக்கு எடுத்துக்கூறி நல்ல மேய்ப்பனின் பாத்திரத்தைச் சரியாகச் செய்யும் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் வெளிப்படும் இந்தத் தொனி அவரது பலமா..? அல்லது பலவீனமா.. ? என்பதை உறுதியாகச் சொல்ல முடிய வில்லை. மற்ற தொகுதிகளில் அவரது பலவீனமாகத் தோன்றும் இந்தத் தொனி இந்துத்துவத்தின் இருள்வெளிகள் என்னும் நூலை வாசிக்கும் போது அ.மார்க்ஸின் பலமாகவே தோன்றுகிறது .
இந்துத்துவம் பற்றிய அ.மார்க்சின் கருத்துக்களும் நோக்கங்களும் மிகத் தெளிவானவை.அம்பலப்படுத்துதலும் எச்சரிக்கை செய்தலும் என்னும் தந்தி ரோபாயங்களைக் கொண்டு செயல்படும் அவர் அதிகாரத்தைக் குறி வைத்து நகர்ந்துள்ள இந்துத்துவ சக்திகள் எத்தகைய ஆபத்தானவை என்பதைத் தனது கட்டுரைகளில்¢ பலவிதமாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். கட்டுரைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் இந்துத்துவம் தன் விளையாட்டுக்களமாகத் தேர்ந் தெடுத்த குஜராத்தில் நடத்திய வெறியாட்டங்களின் பின்னணிகளை வாசகர் களுக்குக் கொடுக்க அ.மார்க்ஸ் காட்டியுள்ள அக்கறைகள் வியக்கத்தக்கவை. இந்து அடிப்படைவாதம் பற்றிய அ.மார்க்சின் விமரிசனங்கள் இந்த நூலில் தான் உள்ளன என்பதற்கில்லை. இத்துத்துவத்தின் பன்முகத்தன்மை பற்றி ஏற்கனவே இரு நூல்களையும் எழுதியுள்ளார். இந்துத்துவ எதிர்ப்பு என்பது அ.மார்க்சின் தொடர்ச்சியான மனநிலை என்று கூடக் கூறலாம். இந்தியாவில் சிந்திக்கின்றவனாகவும் செயல்படத்தூண்டுபவனாகவும் இருக்க விரும்பும் ஒருவனுக்குத் தடையாக முன்நிற்பது இந்துத்துவ அடிப்படைவாதமும் அதன் வெளிப்பாடுகளான சங்பரிவாரங்களின் செயல்பாடுகளும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இறுக்கமான விதிகளைப் பண்பாட்டின் அடிப்படைகளாக மாற்றிவிட்டு அவற்றைத் தக்க வைக்கப் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதீயப்படி நிலைகளை முன்னிறுத்தியுள்ள இந்துத்துவம் தொடர்ந்து அதிகார மையங் களைத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது.பலநேரங்களில் அது அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அது விலகி நிற்பது கூடக் கிடையாது. இந்த உண்மை திரும்பத்திரும்பச் சொல்லப் பட வேண்டிய ஒன்று. அ.மார்க்ஸ் அதைச் செய்துள்ளார்.
இதையே, ‘களையப்பட வேண்டியன மத அடிப்படை வாதங்கள’ என்ற நிலை பாட்டிலிருந்து தனது விமரிசனக் கருத்துக்களை உருவாக்கியிருந்தால் அ.மார்க்சின் விமரிசனப் பார்வையில் சறுக்கல்களே கிடையாது எனச் சொல்ல முடியும்.அப்படி உருவாக்கிக் கொள்ளாமல் இந்துத்துவ மத அடிப்படை வாதம் என்பதை மட்டும் குறிவைக்கும் நிலையில், இவ்விமரி சனம், பின் நவீனத்துவ விமரிசன முறை ஆகுமா..? என்கிற கேள்வி எழுப்பப் படுவதைத் தடுத்து விட முடியாது. ஆனால் இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாதம் பெரும்பான்மையினரின் அடிப்படைவாதம் என்பதால் முதலில் குறி வைக்கப்படுகிறது என்று காரணங்கள் சொல்லப்படலாம். அடிப்படைவாதத்தின் பிடியிலிருந்து இந்துக்கள் மட்டும் விடுபட்டால் போதுமா..? சிறுபான்மைச் சமூகத்தினருக்கு அத்தகைய விடுதலைகள் வேண்டாமா..? - அச்சமயங்களின் அடிப்படைவாதக் கருத்தியலிலிருந்து அவர்கள் விடுபடுவதற்காக யார் பேசுவது..? சிறுபான்மைச் சமூகத்துக் குள்ளிருந்து தானே அந்தக் குரல்கள் வரவேண்டும். இந்தச் சுட்டிக் காடடு தல்கள் அ.மார்க்ஸின் எழுத்துக்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அந்நிலையில் அவரது விமரிசனங்கள் சார்புத் தன்மையுடையன என்று எண்ணப்படும் வாய்ப்புக்கள் உண்டு. சார்புத் தன்மைகள் தவிர்க்க முடியாதது தான்;என்றாலும் சொந்த நலன் சார்ந்த சார்புத்தன்மை விரும்பப் படுவதில்லை.
இந்திய சமூகத்தின் அறிவுலகப்பயணத்திற்குத் தடையாக இருக்கும் பல்வேறு கருத்தியல்களையும் அடிப்படை வாதங்களையும் விமரிசித்து வந்த அ.மார்க்ஸின் எல்லையைச் சுருக்கித் தன்பக்கம் திருப்பிவிட்டது இந்துத் துவம். ஒருவிதத்தில் இதனை இந்துத்துவத்தின் பலமாகக் கருதினாலும் இன்னொரு விதத்தில் அ.மார்க்ஸின் பலவீனம் என்றும்தான் கணிக்க வேண்டி யுள்ளது.பின்நவீனத்துவப் பின்னணியில் பன்முகச்சொல்லாடல்களை வலியுறுத்தி வந்த அ.மார்க்ஸ் , இந்துத்துவம் அல்லது பிராமணர்கள் என்னும் ஒற்றை எதிரியை முன்னிறுத்தும் பெரியாரிய வாதியாக மாறிவிட்டதை மறுபரிசீலனை எனப் புரிந்து கொள்வதா..? பின்னோக்கிய பயணம் எனச் சொல்வதா..? என்று கேள்வி எழுகின்றபோது பின்னோக்கிய நிலைப்பாடு என்று தான் கூறத் தோன்றுகிறது. என்றாலும் அ.மார்க்ஸ் ஒரு தொடர் ஓட்ட வீரனுக்குரிய தெம்பையும் வலிமையையும் உடையவர். வெற்றியைப் பற்றிக் கவலைப்படாது ஓடிக்கொண்டிருப்பது தானே விளையாட்டு வீரனின் அடையாளம்
=====================================================

1.கடமை அறியோம் தொழிலறியோம்-விலை , ரூ. 60/-, பக்.152
2.அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்-விலை.ரூ.45/-, பக்.112
3.சொல்வதால் வாழ்கிறேன்- விலை.-ரூ.50 /-, பக்.120
4.இந்துத்துவத்தின் இருள்வெளிகள் விலை.ரூ.55/-, பக்.135.


வெளியீடு ; ஜூன், 2004,பதிப்பகம் ; கருப்புப்பிரதிகள் ,
45 A, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, செனனை -5

15-12-04 === தீராநதியில் அச்சிடப்பெற்ற மதிப்புரை


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை