: 54

இயக்கத்தை முன்னெடுக்கும் எழுத்து

இயக்கத்தை முன்னெடுக்கும் எழுத்து

பலதுறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற ஒரு சிந்தனையாளர் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து தனது கருத்துக்களை எழுதிவரும் ஒருவடிவம் பத்தி எழுத்து. ஒரு துறையின் நிபுணர் அவர்சார்ந்த துறையில் நடந்துவரும் மாற்றங்கள், போக்குகள் பற்றிக் கருத்துரைக்கவும் ஏற்ற வடிவமாகவும் இந்தப் பத்தி எழுத்து முறை இருக்கிறது. ஆங்கிலப்பத்திரிகைகளில் மட்டுமே இருந்துவந்த பத்தி எழுத்து என்னும் வடிவம், சமீப ஆண்டுகளில் தமிழிலும் முக்கியம் பெற்று வருகிறது.பத்தி எழுத்தின் மிகமுக்கியமான அம்சம் அதன் சமகாலத்தன்மை தான். தனது சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதனை அரங்கேற்றும் நபர்கள் அல்லது கருத்துகள் பற்றிய பின்னணிகளை அறிந்து அவற்றின் மீதான விமரிசனங்கள்; ஏற்பு அல்லது மறுப்புகள்; கூடுதல் தகவல் அல்லது மறைக்கப்பட்ட செய்திகள்; நேர்மறை அல்லது எதிர்மறை விளைவு கள் எனத்தொடர்ந்து வெளிப்படுத்த்¢க்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் காரணங்களால் பத்தி எழுத்து தர்க்க விவாதங்களின்மேல் கட்டமைக்கப்படும் கட்டுரையிலிருந்து விலகிக் கொள்ளவும் செய்யும். ரவிக்குமாரின் கடக்க முடியாத நிழல் என்னும் இந்நூல், முதல் இரண்டு கட்டுரைகள் தவிர அனைத்தும் அத்தகைய பத்தி எழுத்துக்களே. முதல் இரண்டு கட்டுரைகளும் விரிவாக எழுதப்பட்ட தனிக் கட்டுரைகள் என்றாலும் அவற்றின் எழுத்து முறையும் பத்தி எழுத்தின் இயல்புகளுடனேயே அமைந்துள்ளன.
தொண்ணூறுகளில் தமிழ்ச் சிந்தனைத் தளத்தைச் சுழற்றியடித்த தலித் எழுச்சிப் போக்கின் தாக்கம் அரசியல், பண்பாடு, இலக்கியம், ஊடகச் செயல்பாடு, களப்போராட்டம் எனப்பலவிதமான தளங்களிலும் வெளிப் பட்டுள்ளன. ஓர் எழுச்சி நெருப்பின் சூடு தணியாமல் இருக்க அது கொலை களையும் தற்கொலைகளையும் , அவமானங்களையும் அங்கீகாரங்களையும், நண்பர்களையும் எதிரிகளையும், களியாட்டங்களையும் அவல நாடகங் களையும் தனதாக்கிக் கொள்வதைத் தவிர்த்து விட முடியாது.வெளியில் உலாவரும் தலைவர்களின் பிம்பம் ஒருவிதமாக அதற்கு உதவும் என்றால் அவர்களோடு ஒன்றுபட்டும் முரண்பட்டும் கருத்துரைக்கும் சிந்தனை யாளர்களின் பங்கு வேறு விதமாகப் பங்காற்றும். தமிழகத்த்¢ன் தலித் எழுச்சி, அரசியல் தளத்தில் ஏற்ற இறக்கங்களைப் பெற்று வந்தாலும் அதன் சிந்தனைத் தாக்கம் காத்த்¢ரமாகவே இருந்துவருகிறது. கலை இலக்கியம், பண்பாடு, ஊடகம், விளையாட்டு, கேளிக்கைகள் என எல்லாவற்றிலும் தலித் சிந்தனையாளர்களின் கருத்து என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்பி யோசிக்க வேண்டிய நெருக்கடியை அது ஏற்படுத்த்¢விட்டது. அத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தியது தலித் இயக்கங்களின் களச் செயல்பாடுகளே என்றாலும் அதன் பின்னின்று இயக்குபவர்கள் அவ்வியக்கத்த்¢ன் சிந்தனையாளர்களே.
தலித் இயக்கங்களுக்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கிச் செயல்பாட்டுத் தளத்துக்கு உருட்டிவிடும் பணியைத் தொடர்ந்து செய்துவருபவர் ரவிக்குமார். அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் (2001-2003 ) எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பைக் கடக்க முடியாத நிழல் என்னும் நூலாகக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் இருபத்தைந்து கட்டுரைகள் தனித்தனித் தலைப்புக்கள் இடப்படாமல் ஆறு இனங்களாக வகைப் படுத்தித் தரப்பட்டுள்ளன. ஆறு இனங்களாகப் பிரித்துக் காட்டி யிருப்பது ஒருவிதத்த்¢ல் வாசகர்களின் வசதிக்காகத்தான். இந்த ஆறு இனங் களையும் ஒரு தேர்ந்த வாசகன், தலித்துகளை மையப் படுத்திய கட்டுரைகள் அதனைத் தவிர்த்த பொதுநிலைக் கட்டுரைகள் எனப்பிரித்துச் சுலபமாக வகைப்படுத்திக் கொள்ள முடியும். இப்படி வகைப்படுத்தி வாசிக்கும்பொழுது இன்னும் கூடுதல் கவனம் கிடைக்க வாய்ப்புக்களுண்டு. நூலிலேயே அந்தமாதிரியாகப் பிரித்துக்கொள்வதற்கேற்ப முதல் நான்கு இனங்களும் தலித் பிரச்சினைகளாகவும், பின்னிரண்டு இனங்களும் பொதுநிலைப் பட்டன வாகவும் தரப்பட்டுள்ளன.
தலித் மக்களுக்கான விடுதலையை முன்நிபந்தனையாகக்கொண்டு தனது சிந்தனை மற்றும் செயல் பாடுகள் அமைய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டு செயல்படுபவர் ரவிக்குமார் என்பதை அவரது எல்லா வகை எழுத்துக்களும் காட்டுகின்றன. கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் வெளிப் படையாக இதனைக் காட்டுகின்றன என்றால் அவரது எழுத்துமுறை மறைமுகமாக இந்தப் பணியைச்செய்து கொண்டே இருக்கிறது. இந்நூலில் நான்கில் மூன்று பங்கினதாகத் தலித் பிரச்சினைகளை உள்ளடக்கமாகக் கொண்ட கட்டுரைகளே உள்ளன. விடுதலை அடையப்போகும் ஈழத்த்¢ல் தீண்டாதார் பிரச்சினை எவ்வாறு அணுகப்பட வேண்டும் என்ற ஆலோசனை களைச் சொல்லும் முதல் கட்டுரை தொடங்கி, தலித்துக்களின் கல்வி, அவர்களின் பொருளாதாரப்பிரச்சினை, நடைமுறையில் உள்ள ஜனநாயகச் சட்டங்களின் செயலின்மை என்பனவற்றைப் படிப்படியாக விளக்கிச்செல்லும் கட்டுரைகள் இன்று அரசியல் தளத்த்¢ல் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் போராட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தீர்மானித்த கருத்துக்கள் என்றால் மிகையாகாது. அந்த வகையில் ரவிக்குமாரின் எழுத்துக்கள் இயக்கத்தை முன்னெடுக்கும் நோக்கம் கொண்ட எழுத்துக்களாக அமைகின்றன எனலாம்.
பொதுவாகத் தலித் எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இலக்கியம், பண்பாடு, இடஒதுக்கீடு என்ற தளங்களில் அதிகம் கவனம் செலுத்திப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் ரவிக்குமார் தனது எழுத்துக்களை தலித்துக் களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளான பொருளாதார மேம்பாடு ( நிலங்கள், தமிழக பட்ஜெட்டில் தலித்துகளுக்கான பங்கு என்ன ? இட ஒதுக்கீடு, பொதுச் சொத்துக்கள்), அறிவைச்சேகரிக்கும் விதம் (ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள் உருவாக்கப் படவேண்டியதன் அவசியம்,பறிபோகும் கல்வி), அரசியல் அதிகாரத்தில் தலித் துக்களின் பங்கு எனத் த்¢சைமாற்றிக் கொள்வதன் மூலமாக விரிவான கவன ஈர்ப்புக்களை வாசகனிடம் வைக்கிறார். இப்படியாக கவனத்தைத் த்¢ருப்பிய பின் அவரது லாவகமான மொழிநடையாலும் சேகரித்த தகவல்கள் மூலமும் தனது விமரிசனங்களை வாசகனிடம் கடத்தி விடுவது எளிமையான ஒன்றாகி விடுகிறது. இந்நூலில் மூன்றாவது மற்றும் நான்காவது இனங்களாகத்தொகுக்கப்பட்டுள்ள ஜனநாயகம், தேர்தல், காவல் துறை , ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்த உருவாக்கப் பட்ட சட்டங்கள், இந்தியச் சாதிய அமைப்பு காரணமாக செயல்பட இயலாமல் தவிக்கும் அச்சட்டங்களின் இயலாமை பற்றிய அவரது விமரிசனங்களும்,-மேலவளவு, நாட்டார் மங்கலம், கீரிப்பட்டி, பாப்பாபட்டி போன்ற எடுத்துக்காட்டுகள் மூலம் விவரிக்கும் தகவல்களும் இந்நூலைக் கட்டுரைத் தொகுப்பு என்ற வரையறையைத் தாண்டி நிகழ்கால நடப்பின் ஆவணமாக நமக்குக்காட்டுகிறது.
ரவிக்குமாரின் அக்கறைகள் தலித்துகள் சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டுமே அவ்வாறு இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. பொதுநிலைப்பட்ட விசயங்களைப் பேசும்போது கூட தலித்தியக் கோணத்திலிருந்தே அவற்றைப் பார்க்கவும் விளக்கவும் செய்துள்ளார். ஊடகங்கள், பொதுசிவில்சட்டம், பெண்களின் பாடுகள், தீவிரவாதிகளுக்கும் அரசமைப்புக்குமான முரண் (செப்டம்பர் 11/ டிசம்பர்13), மதச்சார்பு (குஜராத்) அல்லது மதச்சார்பின்மை (கொடுங் கனவின் பாரம்), இடைநிலைச்சாத்¢களின் அரசியல் (பெரியார் என்ற ரட்சகர்) போன்ற பொதுநிலைப்பட்ட களங்களைப்பற்றிய கட்டுரைகளில் ரவிக்குமாரின் பார்வை எல்லாவற்றையும் விவரித்துச் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடும் ஒரு நடுநிலையாளனின் பார்வையாக அமையவில்லை. அந்த விவரிப்பிலிருந்தும் விளக்கங்களிலிருந்தும் ஒரு தலித் வாசகன் தன்னுடைய அணுகுமுறையை உருவாக்கிக் கொள்வதை வலியுறுத்து கிறது. அதே நேரத்தில் ஒரு தலித் அல்லாத வாசகனிடத்த்¢ல் 'இது தான் தலித்துக்களின் கோணம்' என்பதைத் தெளிவாகவும் உறுத்¢யாகவும் சொல்வதாக அமைகிறது. இந்தக்கோணங்களும் அணுகுமுறையும் தான் ரவிக்குமாரின் எழுத்துக்களை இயக்கத்தை முன்னெடுக்கும் எழுத்தாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தலித் இயக்கங்களும் ரவிக்குமார் என்ற தனிநபரும் இயைந்தும் விலகியும் பயணம் செய்து கொண்டே இருக்கின்றனர். அதற்கு இந்த நூலும் ஒரு சாட்சி.
ரவிக்குமார்
கடக்க முடியாத நிழல் (கட்டுரைகள்)-
காலச்சுவடு பதிப்பகம்-முதல் பதிப்பு-
டிசம்பர், 2003 /208பக்கங்கள்-விலைரூ.100/-
13-06-2004 ===தீராநதியில் வந்த மதிப்புரை


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை