: 86

இனாம்கள் : தருவதும் பெறுவதும்

இனாம்கள் : தருவதும் பெறுவதும்

இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும் எல்லோரும் ஒரே மாதிரியாகக் கொண்டாடி இருக்க மாட்டோம். இந்தியாவில் பலர் கொண்டாடாத பண்டிகையாகக் கூடத் தீபாவளி இருந்திருக்க வாய்ப்புண்டு. தீபாவளி என்றில்லை,ரம்ஜான்கிறிஸ்துமஸ்புத்தாண்டுபொங்கல் என எல்லாப் பண்டிகைகளையும் எல்லோரும் கொண்டாடுவதும் இல்லை.
கொண்டாடினாலும் ஒரேமாதிரியாகக் கொண்டாடுவதில்லைகொண்டாடுவதும் இயலாது.
தனது ஒருநாள் கூலியில் தமது வயிற்றுப் பாட்டை மட்டுமல்லாமல்தனது குடும்பத்தினரின் வயிற்றுக்கும் உணவு தர வேண்டிய நிலையில் இருக்கும் அன்றாடக் கூலியும்அவனின் ஒரு வருடக் கூலியை ஒரு நேரச் சாப்பாட்டிற்குச் செலவழிக்கும் தனவந்தனும் இருக்கும் ஒருநாட்டில்பண்டிகைகள் மட்டும் எப்படி ஒன்று போல் கொண்டாடப்படுவதாக இருக்க முடியும்?
இப்படிச் சொல்பவர்களை எதிர்மறைப் பார்வை கொண்டவர்கள் என்றும்,  இத்தகையவர்களின் பேச்சுகள்,வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களைப் பற்றி எதுவும் தெரியாதவர்களின் பேச்சுகள் என்றும் சொல்லிஅவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டுப் போக வேண்டும் எனச் சொல்லும் கூட்டம் இப்போது கணிசமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம் நகரங்கள் சார்ந்த- சுயநலக்  கூட்டம் தான் எனச் சொன்னால் அதற்கும் கூடுதலான வியாக்கியானங்களையும் விளக்கங்களையும் தருவார்கள். ஆனால் உண்மைகளைச் சொல்லாமலும் கண்டு கொள்ளாமலும் இருக்க முடியுமாசொல்வதைச் சொல்லி வைக்கலாம்.
நமது ஜனநாயக அரசுகள் வேலைக்கு உணவு எனவும்வருடத்திற்கு நூறு நாள் வேலை எனவும் திட்டங்களை உருவாக்கி இன்னும் செயல்படுத்துவதின் காரணங்கள் என்ன?
இந்தியாவில் ஒவ்வொரு நேர உணவுக்கும் உடனடியாக உழைத்தால் தான் உணவு கிடைக்கும் என்ற நிலையில் சில கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பது தானே காரணம். அப்படி உழைப்பதற்குத் தயாராக இருந்தாலும் அவர்களுக்கான வேலைகளை உருவாக்கித் தரும் சிறு தொழில்களும்விவசாயமும் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை மறைக்கத் தானே நூறு நாள் வேலைத் திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அந்தத்திட்டத்திலும் உள்ளூர் அரசியல்வாதிகள்அதிகாரிகள்ஊழியர்கள் கூட்டணி மூன்றில் ஒரு பங்கைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதும் நிகழ்கால நடப்புக் கதை தான்.
முதலாளித்துவப் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சியற்ற இந்தியாவாக இருந்த போதும்வளரும் நாடாக ஆன போதும் இந்திய சமூகத்தில் பொருளாதார வேறுபாடுகள் எப்படி இருந்தனவோ அதைவிடக் கூடுதலாகவே இப்போதும் இருக்கின்றன. இந்தியா வளர்ச்சியடையும் நாடு அல்லஇப்போது வளர்ச்சியடைந்த நாடு என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சான்றிதழ் அளித்து விட்டுப்  போயிருப்பதால் இந்தியர்கள் ஒவ்வொருவரின் தனி நபர் வாழ்க்கையும் பெரிய அளவு மாற்றங்களைச் சந்தித்து விடும் என்று நினைத்து விட வேண்டியதில்லை. 
இல்லாதவர்கள் இன்னும் ஏழைகளாகவே இருப்பதும்பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகிஉலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியிடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இப்படி ஆவதுதான் வளர்ச்சியின் அடையாளம் என உலகமயப் பொருளாதார வல்லுநர்கள் வியாக்கியானங்கள் சொல்லக் கூடும். இருப்பவனின் தீபாவளியும் இல்லாதவனின் தீபாவளியும் நிச்சயமாக வேறு வேறு தான். மாதச் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தும் நடுத்தர வர்க்கத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டமும்அவர்களது ஆண்டு வருமானத்தை விடக் கூடுதலாக ஒருவருடத்தில் வருமானவரி கட்டும் மேலதிகாரியின் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் வேறானவைகளாகத் தானே இருக்க முடியும்.
நேரடியாக வருமானம் பெறும் சம்பளக்காரர்களின் கொண்டாட்டங்களும்நேரடியாகவும் மறைமுகமாகவும்கணக்கு வைத்தும் வைக்காமலும் வருமானம் பெறும் அரசியல்வாதிகள்தொழிலதிபர்கள்சினிமாக்காரர்கள்கலைஞர்கள்,விளையாட்டு வீரர்கள் போன்றோரின் கொண்டாட்டங்களும் எப்படி ஒன்று போல இருக்க முடியும். பொருளாதாரம்,மற்றும் சாதி அடுக்கு சார்ந்து வேறுபாடுகள் கொண்ட பல தரப்பு மனிதர்களும் வாழும் ஒரு நாட்டில் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் கூடப் பலதரமானவைகளாகவே இருக்க முடியும். பாரதூரமான பொருளாதார வேறுபாடுகள் மட்டும் அல்லாமல்சமூக அமைப்பு சார்ந்து நீண்ட காலமாக மேல்- கீழ் என்றொரு படிநிலை அமைப்பைக் கட்டிக் காக்கும் இந்திய சமூகத்தில் கொண்டாட்டங்களும் அவை சார்ந்த வார்த்தைகளும் கூட வேறு வேறு பொருள்களையே தரும்.
தீபாவளியோடு சேர்ந்து உச்சரிக்கப்படும் இரண்டு முக்கியமான வார்த்தைகளை முன் வைக்கிறேன். போனஸ்இனாம் என்பனவே அந்த இந்த இரண்டு வார்த்தைகள்.  இவ்விரண்டு வார்த்தைகளும் இயல்பில் ஒன்று போலத் தோன்றினாலும் பேரளவு வேறுபாடுகளைக் கொண்டவை. இரண்டும் தருவதாகவும் பெறுவதாகவும் இருக்கின்றன. இரண்டு வார்த்தைகளில் இனாம் பழைய சொல்பாரம்பரியத்தோடு தொடர்பு கொண்டது. போனஸ் புதிய சொல். நவீன இந்தியர்களின் தன்னிலையை உருவாக்கிய காலனியத்தோடு சேர்ந்து இந்தியாவுக்கு வந்த சொல். காலனி ஆட்சியாளர்கள் போய்விட்டாலும் அந்தச் சொல் அவர்களோடு சேர்ந்து போகாமல் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து விட்ட சொல். இந்தியா முழுக்கக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையையொட்டி அரசுத்துறைகளும்பொதுத் துறைகளும்தனியார் துறைகளும் போனஸ் போட்டாக வேண்டும் என்ற நெருக்கடியைத் தந்து விட்ட சொல்.
இந்தியாவில் புதிதாக உருவாகி விட்ட தொழிலாளி வர்க்கம் இந்தச் சொல்லைக் கொண்டாடும் சொல்லாக - பண்டிகையின் அடையாளமாகக் கருதுகிறது. போனஸ் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு விருப்பக் கொடை என அகராதிகள் பொருள் தந்தாலும்இன்று போனஸ் நிர்வாகத்தின் -முதலாளியின் விருப்பம் சார்ந்தது அல்ல. தர வேண்டியது முதலாளிகளின் - நிர்வாகத்தின் கடமை. அதைப் பெறுவது தொழிலாளிகளின் உரிமை. மாதச் சம்பளத்தில் பண்டிகைகளின் கூடுதல் செலவை எதிர்கொள்ள முடியாத தொழிலாளிகளும்கடைநிலை ஊழியர்களும் போராடிப் பெற்றது போனஸ் என்பதும் அது அவர்களின் சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதும் அதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு.
அதே நேரத்தில் இந்தியாவைப் பற்றி ஒவ்வொருவரும் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் வேற்றுமையில் ஒற்றுமைஎன்ற வாசகம் பண்டிகைகளின் கொண்டாட்டங்களின் போதும் பொருந்தத்தான் செய்கிறது. கோடி உடுத்திக் கொண்டாடுதல் என்று கிராமங்களில் சொல்வார்கள். இந்தக் கோடி எண்களைக் குறிக்கும் சொல் அல்ல;புத்தாடையைக் குறிக்கும் சொல். இன்பமாக இருந்தாலும்துன்பமாக இருந்தாலும் புத்தாடையால் அடையாளப்படுத்திக் கொண்டாடும் பண்பாட்டு அடையாளம். 
இந்த அடையாளத்தைத் தவற விடாமல் புத்தாடை உடுத்திபுதுவெடி வெடித்துத் தீபாவளியைக் கொண்டாடிய தமிழகத்திற்குப் புதுமழையும் புயலும் சேர்ந்து கொண்டது இந்த ஆண்டு.  தீபாவளிக்கு முன்னும் பின்னும் பெருமழை என்பதும் கூடப் புதியதல்ல. ஒவ்வொரு ஆண்டும் மழையும் தீபாவளியுடன் சேர்ந்து கொள்ளும் என்பது பண்பாட்டு அடையாளம் அல்லநிலவியல் அடையாளம். வடகிழக்குப் பருவமழைக் காலத்துப் பண்டிகையான தீபாவளிக்கு அடைமழை பெய்யவில்லை என்றால் தான் பாரம்பரியமான இந்திய மனம் வருத்தம் அடையும்.
தீபாவளியை தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் அல்ல எனப் பேசிய திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்த போது அதனைக் கொண்டாடும் பண்டிகையாக ஏற்கவில்லை. அதனால் திராவிட இயக்கங்கள் நடத்தும் அரசுகள் தீபாவளிக்குப் பதிலாக பொங்கலின் பெயரில் போனஸ் வழங்கும் நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கிய வரலாறையும்அதில் உறுதியாக நிற்காமல் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் விருப்பப்படி வழங்கலாம் எனச் சமரசம் செய்து கொண்டன என்பதையும் கூட அண்மைக்கால வரலாறாக நாம் நினைத்துக் கொள்ளலாம். 
தீபாவளிக்குப் போனஸ் வழங்கினாலும்பொங்கலுக்கு இனாம் வழங்குவதையும் நமது அரசு ஆண்டு தோறும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. போனஸ் பெறத் தகுதியுடைய கடைநிலை ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மட்டும் அல்லாமல் தனது ஊழியர்கள்அதிகாரிகள் என அனைவருக்கும் அரசு இனாம் வழங்கவே செய்கின்றது. தமிழக அரசு அதன் ஊழியர்களுக்கு வழங்கும் பொங்கல் இனாம் அரசின் கடமையின் பாற்பட்டதல்லஊழியர்களின் உரிமையும் கூட இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அரசின் பொறுப்பில் இருக்கும் நபர்களின் விருப்பம் சார்ந்தது. ஆம் அதுவே விருப்பக் கொடை. ஆள்பவர்களின் கொடைமறம் சார்ந்தது இனாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக அரசு அதன் பணியாளர்களுக்கு பொங்கல் இனாமாகப் பணம் தருவதோடு,அதன் குடிமக்கள் அனைவருக்கும் இனாமாக எதையாவது தர வேண்டும் என விருப்பம் கொண்டுகுடிமை அடையாளத்திற்கான அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் பொங்கல் பைகளை இனாமாக வழங்குகிறது. அப்பைகளில் பொங்கல் வைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் இருக்கும் என்றாகிற போது பொங்கல் அன்று ஆட்சியாளர்களின் நினைவு வரத்தானே செய்யும்.
இனாம் பெறுவதை தன்னம்பிக்கை கொண்ட சமூக மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான். நமது பழைய இலக்கியங்களும் கூட இனாம் அல்லது யாசகம் பெறுவதை ஏற்கத்தக்க ஒன்றாகக் கருதுவதில்லை. ஏற்பது இழிவு என்பது மூதுரை. நிலமானிய காலத்திலேயே தனிமனிதனின் ஆளுமைக்கு இழுக்கு உண்டாகும் சொல்லாகக் கருதப்பட்ட இனாம் என்ற சொல் இப்போது- ஜனநாயக காலத்தில்- கொண்டாடப் படும் சொல்லாகவும்அதிகார விரும்பிகளின் ஆயுதமாகவும் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை எப்படி விளக்குவது?
ஜனநாயகத்தில் அரசுகளும் கட்சிகளும் தங்கள் ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொள்ளவும் வலுப்படுத்தவும் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதமாக இனாம் இருக்கிறது என்பதை தேர்தல் காலங்கள் தான் உறுதி செய்யும் என்பதில்லை. பண்டிகைக் காலங்களே உறுதி செய்கின்றன. ஒரு நிறுவனத்தின் மேலதிகாரிகளும்அதன் கடைநிலை ஊழியர்களுக்கு அதிகப்படியான இனாம் தருவதன் மூலம் தங்களின் கருணைக் குணத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ள முயல்வது ஒவ்வொரு நிறுவனத்திலும்ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் நடக்கின்ற நிகழ்வு. 
ஆண்டு முழுவதும் தன் கீழ் பணியாற்றும் பணியாளர்களிடம் ஒழுங்கைக் கடைப்பிடித்தல்வேலை வாங்குதல்,தவறாக நடப்பவர்களைத் தண்டித்தல் எனக்  கடுமையாக நடந்து கொள்ளும் அதிகாரி பண்டிகைக்கால இனாம் மூலம் தன் பிம்பத்தை மாற்ற முயற்சித்து வெற்றி அடைய முடியாது. அது வேறுஇது வேறு எனப் பாவனைகள் காட்டினாலும் அவை பெரும்பாலான நேரங்களில் எடுபடுவதில்லை.
இதற்கு மாறாக ஒரு நிறுவனத்தின் பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் நடைமுறைகளைப் பின்பற்றும் நிர்வாகிகள் பண்டிகைக்கால இனாம் மூலம் தங்களின் பிம்பத்தை மாற்றிக் கொள்கிறார்கள். தீபாவளிக்கோ,கிறிஸ்துமஸுக்கோரம்ஜானுக்கோ தனது பையிலிருந்து எடுத்துத் தரும் இனாம்களின் மூலம் தங்கள் மீதிருக்கும் பொது அபிப்பிராயங்களின் சில அடுக்குகளையாவது மாற்றிக் கொள்ளவே செய்கிறார்கள். இனாம் தருவதன் மூலம் தங்களின் கருணைக் குணத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பட்டியல் என்னிடம் உண்டு என்றாலும் வெளியில் சொல்லி விட முடியாது.
அலுவலக நடைமுறைகளைச் செயல்படுத்தும்போதுவிதிகளைப் பின்பற்றாமல் செயல்படுவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் ஓர் அதிகாரி கூடுதல் இனாம் தர முடியும் என்பதே நிகழ்கால நடப்பு. அப்படிக் கிடைக்கும் கூடுதல் வருவாய்க்கு நடைமுறையில் பல பெயர்கள் இருக்கின்றன. அவை அன்பளிப்புதரகுக் கட்டணம் என்று அழைக்கப்படும் வரை அவை கெட்ட வார்த்தைகள் இல்லை. ஆனால் லஞ்சம் என அழைக்கப்படும் போது கெட்ட வார்த்தையாகவும் ஆபத்தான செயலாகவும் ஆகி விடுகிறது.
ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நபர்கள் இவ்வாறு கிடைக்கும் மிகை வருமானத்தில் வழக்கமாகத் தரக்கூடிய இனாம் தொகையை விடப் பல மடங்கு தொகையை இனாமாகத் தருவதின் மூலம் தங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை மாற்றிக் காட்ட முடிகிறது ஒரு நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்களும் நேரடியாகப் பாதிக்கப்படாத இடைநிலை ஊழியர்களும் கூட அத்தகைய நடவடிக்கைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லைகண்டுகொள்வதும் இல்லை. இத்தகைய நடைமுறைகள் நிறுவனத்தைப் பாதிக்கும் என நினைக்கும் ஒருசாரார் மட்டுமே விமரிசனக் கணைகளைத் தொடுக்கிறார்கள்கோபம் கொள்கிறார்கள். நிறுவனங்களும் அமைப்புகளும் அதன் விதிகளும் காப்பாற்றப்பட வேண்டும் எனப் பேசுகிறார்கள். அத்தகைய பேச்சுக்களுக்கு அவ்வமைப்புகளில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் செவி சாய்ப்பதுமில்லை. அத்தகைய பேச்சுக்கள் இப்போதெல்லாம் பல நேரங்களில் விரும்பத் தகாத பேச்சாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஆபத்தான போக்கு. 
ஒரு நிறுவனத்தின் தலைமையை மையமிட்டு சொல்லப்பட்ட இனாம் சார்ந்த நடைமுறையே இன்றைய தேர்தல் கால நடைமுறைகளாக ஆகி வருகிறது. இப்படிச் சொல்வது பலருக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். நிகழ்கால அரசியலில் ஓட்டுக்குப் பணம் பெறுவது அன்றைய வேலைக்கான சம்பளம் அல்லபோனஸும் கூட இல்லை;அது இனாம். தேர்தலில் போட்டியிடுபவரின் விருப்பக் கொடை. அவரது செல்வத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல;கொடுக்கலாம் என நினைக்கும் அவரது விருப்ப மனம் சார்ந்ததும் கூட.
தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதை விடஉழைக்காமல் கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதில் யாருக்கும் பெரிய வருத்தம் இருக்கப் போவதில்லை. முறையான உழைப்பின் வழியாக இல்லாமல்முறைப்படியான கணக்குகளையும் காட்டாமல் சம்பாதிக்கும் வழிவகைகள் உள்ள இந்த நாட்டில் இனாம்களைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும் என அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். பதவிக்காலத்தில் முறைப்படி சம்பாதிக்காத பணத்தைச் சேர்த்து வைத்துத் தேர்தல் காலத்தில் இனாமாகக் கொடுக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாத வாக்காளர்கள் அதிகம் தருபவன் அதிகக் கருணை உள்ளம் கொண்டவன் என நினைத்து வாக்களிக்கிறார்கள்.
இனாம்களைக் கொடுத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் ஜனநாயகத்தின் நல்ல அம்சங்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதையும்இருக்கிற அமைப்புகளின் செயல்பாடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கூடுதலாகப் பணம் சம்பாதித்துச் சேமித்துக் கொள்வார்கள் என்பதையும்அப்பணத்தையே அடுத்த தேர்தலில் அதிக இனாமாகக் கொடுப்பார்கள் என்பதையும் வாக்காளர்கள் எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. அது உணரப்படாதவரை தேர்தல் ஜனநாயகம் சரியான அர்த்தம் கொண்டதாக இருக்கப் போவதில்லை.   


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை