: 34

குஷ்புவின் அரசியலாட்டம்

குஷ்புவின் அரசியலாட்டம்

தமிழ் நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் இடத்தைக் கடந்த 40 ஆண்டுகளாகக் கைவசம் வைத்திருக்கும் மு.கருணாநிதி, தனது கட்சியில் புதிய ரத்தங்களைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கிறார். இனிவரும் காலங்களில் பெண்களின் அரசியல் முக்கியத்துவம் பெறும் எனச் சரியாகக் கணித்துப் பெண்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகிறார். இயக்கப் பெண்களை மட்டுமல்லாம், தனித்த அடையாளங்கள் கொண்ட பெண்களையும் உள்ளிழுத்துக் காட்டும் அவரது திறமையின் கடைசி வெளிப்பாடு நடிகை குஷ்புவின் அரசியல் நுழைவு.
ஏற்கெனவே கவி சல்மா, கவி கனிமொழி, கவி தமிழச்சி எனத் தனித்துவமான பிம்பங்களோடு போட்டி போட்டி வெல்லப் போகும் பிம்பமாகத் தி.மு.க. வில் நுழைந்துள்ள குஷ்புவின் வருகையைக் கணிக்கலாம். ஏனெனில் குஷ்பு வெகுமக்கள் அரசியலுக்கான சரியான தேர்வு. எப்போதும் வெகுமக்கள் உளவியலோடு இணைந்து செல்லும் தி.மு.க. குஷ்புவின் வருகையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. குஷ்பு அரசியலில் வெற்றிபெற நிறையச் சாத்தியங்கள் இருக்கின்றன.
இந்தக் குறிப்போடு அவருக்கு எதிராகப் பிரச்சினைகள் கிளப்பப் பட்ட போது திரையில் நான் எழுதிய கட்டுரையைப் பதிவேற்றம் செய்கிறேன்.

தமிழ் விரோதமா? பாதுகாப்பா?
யுத்தத்தின் இரண்டாவது கட்டத்தில் இருக்கிறது தமிழகம். இன்றைய தேதியில் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒற்றை எதிரி யாராக இருக்க முடியும்? தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவம் பற்றியும் அறியாமல் தான் தோன்றித்தனமாக கருத்து சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகை குஷ்பு தான் அந்த எதிரி.

இந்த இரண்டாம் கட்டப் போர் ஒருவிதத்தில் குதிரைப்படைத்தாக்குதல் என்று வருணிக்கத்தக்கது. சட்டம் என்னும் குதிரை ஏறி வாதம், மறுப்பு, சாட்சி, நிபந்தனைகள் என்று பலவித வாள்களுடன் தமிழ்ப் பண்பாடு காக்கும் வீரத்தமிழர்கள் நீதிமன்றக் களங்களில் குஷ்புவைச் சந்திக்கத் தயாராகியுள்ளனர். பழம்பெரும் நகரமான மதுரையம்பதியிலிருந்து தொடங்கிவிட்ட இந்தப் போர் திருச்சி, நெல்லை, சேலம் என்னும் மாநகரங்களின் மாவட்ட நீதிமன்றக் கூண்டுகளிலும், சங்கரன்கோவில், திருக்கோவிலூர், கோவில்பட்டி எனச் சிறு நகரங்களின் தாலுகா நீதிமன்றக் கூண்டுகளிலும் நடைபெறப்போகிறது. ஒவ்வொரு ஊரிலும் குஷ்புவைக் கூண்டிலேற்றி விசாரிக்கப் போகும் அந்தக் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகள் தான். இல்லை, இல்லை; செவிகள் நிறைய இன்பம். காலாட்படை எனவும், தூசிப்படை எனவும் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வருணிக்கப் பட்ட முன்னணிப்படை, முதலில் களமிறங்கி நடத்திய முதல் கட்ட யுத்தம் தான் கண்கொள்ளாக் கட்சிகள் காலணிகள், துடைப்பக் கட்டைகள் ஏந்தி துவம்ச யுத்தம் நடத்தியும், கொடும்பாவிகளை எரித்துக் காட்டியும், தொண்டர் படை நடத்திய அந்தக் காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் விரிக்கப்பட்ட வண்ணக்காட்சிகளாக நிறைவு பெற்று விட்டன. அந்தக் காலத்துக் காலாட்படை என்பது இந்தக் காலத்தில் தொண்டர் படை தான் என்பதை யாராவது மறுக்க முடியுமா என்ன? காட்சி ஊடகங்களில் நடந்த அந்த யுத்தம் சட்டப்போர் என்னும் வடிவில், இனி அச்சு ஊடகங்களில் தமிழர்களுக்கு வாசிக்கக் கிடைக்கலாம். தமிழர்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தளிக்கும் தமிழ் ஊடகங்களின் பணி மென்மேலும் சிறப்பதாக.

”அரசியலை ஆணையில் வைப்போம்” என்ற புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் போக்குகளையும் அரசியல் பார்வையுடன் அணுகி, அவற்றில் உள்ள முற்போக்கு அம்சங்களைத் தீர்மானித்து, அந்தச் சமூகத்தை முன்னகர்த்திச் செல்ல வேண்டும் என்ற பேரவாவுடன் சொல்லப்பட்ட வாசகம் அது. இந்த வாசகத்தில் உள்ள ‘ அரசியல்’ என்பது அனைத்துத் தரப்பினருக்கும் விடுதலையையும் சமத்துவத்தையும் மேன்மையான வாழ்க்கையையும் உறுதி செய்யும் அரசியலாக இருக்கும் என்பது, அந்த வாசகத்தை முன் மொழிந்தவர்களின் நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கையைத் தரும் அரசியலுக்காக, கலை இலக்கியம் போன்ற தனித்துவம் தேடும் நிறுவனங்களில் செயல்படும் கலைஞர்களும், இலக்கியங்களும் சிலவகையான சமரசங்களையும் விட்டுக் கொடுத்தல்களையும் கைக் கொள்ளலாம் என்பது அதன் பின்னிருக்கும் வலியுறுத்தல்கள்.
சமகாலத் தமிழ் வரலாற்றைக் கவனிப்பவர்கள் ஆணையிடும் இடத்தில் ‘ அரசியல்’ இருக்கிறது என்பதையும், ஆனால் அந்த இடத்தைக் ‘கலைஞர்’களிடத்தில் இழந்து விடுவோமோ என்ற அச்சத்துடன் இருக்கிறது என்பதையும் கணிக்க முடியும். அந்த அச்சத்தின் காரணமாகவே இவ்விரண்டிற்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டு அரசியல்வாதிகளே கலைஞர்களாகவும், கலைஞர்களே அரசியல்வாதிகளாகவும் பவனி வருகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளலாம். இந்த இடத்தில், விடுதலைக்குப் பிந்திய தமிழ்நாட்டைத் தீர்மானித்த அரசியல் என்பது ’ திராவிட இயக்க அரசியல்’ தான் என்பதையும் கலை என்பது ’ வெகுமக்கள் சினிமா’’ தான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாட்டின் வெகுமக்கள் உளவியலைக் கட்டமைக்கும் பணியில், சினிமாக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியைப் புரிந்து கொள்ள முடியும். அப்படியானதொரு புரிதலுடன் தான் இந்தப் போட்டியை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல், உணர்ச்சிபூர்வமான பின்னணிகளுடன் நமது ஊடகங்கள் தகவல்களாகத் தந்து கொண்டிருக்கின்றன. பல நேரங்களில் ஊடகங்களின் பொறுப்புணர்வு ஆச்சரியமூட்டக் கூடியதாக இருக்கின்றன. சொல்பவரின் கருத்தைச் சொல்லப்பட்ட சூழலிருந்து பிரித்தெடுத்துத் தருவதன் மூலம் ஏற்படப் போகும் பின்விளைவுகள் பற்றியெல்லாம் கவலையே கொள்ளாமல், காட்சிகளையும் தகவல்களையும் தருகின்றன.
பரபரப்பான தகவல்களின் மூலமே தமிழ்ச் சமூகத்தை மிகை உணர்ச்சி கொள்ளச் செய்யலாம் என்பதும், அந்த மிகை உணர்ச்சியின் அடிப்படையிலேயே தங்களுடைய வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியல்வாதிகளையும் கலைஞர்களையும் ஊடகங்களையும் அவர்கள் தேர்வு செய்து கொள்கிறார்கள் என்பதும் நீருபிக்கப்பட்ட உண்மைகளாக நம்பப்படுகின்றன. எல்லாவற்றையும் பரபரப்பாக்குவது முதலிடத்தைப் பிடிப்பதற்கான மலிவான உத்தி என்பதைத் தமிழ் மக்கள் அறியும் நிலையில், இன்றுள்ள தமிழ்நாட்டின் அரசியல் களம், கலை உலகம், ஊடக வலைப்பின்னல்கள், சமய நடவடிக்கைகள் என அனைத்தும் தங்கள் முகமூடிகளைக் கழற்ற வேண்டியது கட்டாயமாகும். அதுவரை தொடரப் போவதென்னவோ இந்தப் பரபரப்பான போலிச் சண்டைகள்தான்.
நடிகை குஷ்புக்கு எதிராகக் கோஷமிடுதல், மறியல் எனக் களமிறங்கிய பின் இன்று சட்டப் போர்களை நடத்தும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினரும், அவ்வியக்கத்தைப் பின்னின்று இயக்கும் அரசியல் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் முன் வைக்கும் அரசியல் எத்தகைய அரசியல் ? என்பதும், அந்த அரசியல் ஆணையிடும் இடத்தில் வைக்கத் தக்க அரசியல் தானா? என்பதும் விரிவாக விவாதிக்கப் பட வேண்டியதாக இருக்கிறது. சமூகப் பொருளாதாரத்தில் அவற்றின் நோக்கங்கள் அடித்தள மக்களின் விடுதலையாகவும், அரசதிகாரத்தில் அவர்களின் பிரதிகளுக்குரிய இடத்தைப் பெறுவதாகவும் இருக்கின்றன. திரட்டப்பட்ட அதிகாரம் கொண்ட மைய அரசில் ஒருசில மாவட்டங்களில் திரட்டப்பட்ட மக்களைக் கொண்டு அதிகாரம் மிக்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பாய்ச்சல் முன்னோக்கிய பாய்ச்சலாகக் கணிக்கப் படலாம். பெறப்பட்டுள்ள அதிகாரத்தின் வழி வாக்களித்த மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு உத்தரவாதம் இல்லை என்ற போதிலும், தங்களின் பிரதியாக கருதத்தக்கவர் இடம் பெற்றுள்ளனர் என்ற ஆறுதலைத் தரக்கூடிய நிலையில் இந்த மாற்றம் அமைந்துள்ளது. அதே பாணியில் தமிழக அரசியலிலும் தங்களுக்கான அதிகாரப் பங்கீட்டை இந்த அமைப்புகள் கோரக்கூடும்; பெறவும் கூடும்.
அதிகாரத்தைப் பெற்றபின் அவை அடையப்போகும் பரிமாணங்கள் அனைத்து மக்களுக்குமான அடையாளங்களாக இல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கான இயக்கங்கள் என்பதாகத் தான் இருக்கப் போகின்றன. அத்தகைய வெளிப்பாடுகள் இப்பொழுதே காணப்படுகின்றன என்றாலும் உறுதியாகச் சொல்லும்நிலை இப்பொழுது இல்லை. அரசியல் தளத்தில் அவற்றின் பாத்திரங்களை உறுதியாகச் சொல்லும் நிலை இப்பொழுது இல்லை. அரசியல் தளத்தில் அவற்றின் பாத்திரங்களை உறுதியாகக் கணிப்பதில் சிரமங்கள் உள்ளன. ஆனால் பண்பாட்டுத் தளத்திலும், கலை இலக்கியத் தளங்களில் அத்தகைய சிரமங்கள் இல்லை. அவை ஆற்றப்போகும் பணிகளும், முன்மொழியும் கருத்துக்களும் முன்னோக்கியதாக இருக்கப் போவதில்லை என்பது நிச்சயமாகத் தெரிகிறது. கடந்த காலத்துப் பண்பாட்டு விதிகளின் மேல் உள்ள மோகத்தாலும், குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக வைக்கும் கருத்துக்களாலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழர் விரோத இயக்கமாக மாறி விடும் அபாயத்தில் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லத் தோன்றுகிறது. இப்பொழ்து நடக்கும் குஷ்புவுக்கு எதிரான யுத்தமே இதற்குப் போதுமான சாட்சி.
மாறிவரும் தமிழ்ச் சமூக வாழ்வு சார்ந்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கத் தக்க கருத்துக்கள் அல்ல. அத்துடன் இத்தகைய கருத்தைச் சொல்ல நடிகை குஷ்பு முற்றிலும் பொருத்தமான நபரும்கூட. தமிழ்ச் சமூகத்தின் உளவியலைத் தீர்மானிக்கும் திரைப்படத்துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. அந்தத் திரைப்படத்துறை ஆண்களின் அதிகாரம் நிலவும் உலகம். அத்தகைய ஆண்களோடு நட்பாகவும் தோழமையாகவும் அவைகளையெல்லாம் தாண்டிய கணங்களோடும் இருந்து கடந்து வந்திருப்பவர். தாய்மொழி தமிழ் இல்லை என்றபோதிலும் தமிழ் நாட்டு ஆடவர் ஒருவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டு இரண்டு தமிழ்க் குழந்தைகளின் அம்மாவாக திகழ்பவர். தமிழ்நாட்டுப் பெண்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களையும், போட்டிகளையும் தமிழில் நடத்தும் அளவுக்கு தமிழோடு தன்னை இணைத்துக் கொண்டவர். அத்தகைய ஒருவரை, அவர் சொன்ன கருத்துகளுக்காக தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
நடிகை குஷ்பு தமிழ்நாட்டு மக்களின் மனதிற்குள் பெற்றிருந்த இடத்திற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. இன்று அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் திருச்சி நகருக்குப் பக்கத்தில் தான் அவருக்குக் கோயில் கட்டிய ரசிகரும் இருக்கிறார். கோயில் கட்டி வணங்கிய அந்த ரசிகர்களின் மனதிற்குள் இருந்த குஷ்புவின் பரிமாணம் எதுவாக இருக்கும்? இன்று தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்லும் தொண்டர்களின் மனதிற்குள் இருக்கும் குஷ்புவின் பரிமாணம் எதுவாக இருக்கிறது? இந்த இரண்டு வினாகளுக்கான விடை பெண்ணின் உடல், பெண்ணின் மனம் என்ற இரண்டு வார்த்தைகள்தான். பத்தாண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கோயிலில் குடியிருக்க வேண்டிய தேவதையாக ரசிக மனம் விரும்பியது குஷ்புவின் உடலைத்தான். இன்று தமிழ்நாட்டை விட்டு விரட்டப்பட வேண்டிய ராட்சசியாக நினைப்பதற்குக் காரணம் அவரது மனம்தான்.
இந்த இரண்டு வார்த்தைகளையுமே குஷ்புவுடன் இணைத்து கூடுதல் அர்த்தங்களைக் கட்டி எழுப்பிய பணிகள் தமிழ் ஊடகங்களின் அரும்பணிகளாக இருந்தன; இன்றும் இருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நமது பத்திரிகைகள் அவரைப் பற்றித் தந்த தகவல்கள் அனைத்தும் அவரது உடல் பற்றிய வருணனைகளைத்தான். அவரைப் பற்றி மட்டும் அல்ல; புதிதாகத் திரைப்படத்துறையில் நுழைந்து தனக்கென ஓரிடத்தைத் தக்கவைக்கப் போராடும் எல்லா நடிகைகளைப் பற்றியும் இப்படியான பிம்பங்களைத்தான் உருவாக்குகின்றன. அதுவும் தமிழ் நாட்டிற்கு வெளியிலிருந்து வந்த, தமிழை வாசிக்கத்தெரியாத நடிகைகள் என்றால், நமது பத்திரிகைகளின் சினிமா நிருபர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்தியா டுடே பத்திரிகையில் குஷ்புவின் கருத்து வருவதற்கு முதல் நாள்வரை தமிழ் ஊடகங்கள் தந்த குஷ்புவின் பிம்பம் கவர்ச்சி நிரம்பிய உடல் கொண்ட ஒரு பெண் என்பதாகத்தான் இருந்தது. பதினைந்து ஆண்டுகளாக ஊடகங்கள் உருவாக்கிய பிம்பத்தை தனது இரண்டு செயல்கள் மூலம் தகர்த்துவிட்டார் என்பதுதான் அவர் மீது கோபம் உண்டாகக் காரணம் எனச் சொல்லலாம்.
செயல் ஒன்று: நடிகர், இயக்குநர், ஒளி ஓவியர் தங்கர் பச்சான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய கூட்டத்தில் முன் வரிசையில் நின்று உரத்தக் குரலில் வலியுறுத்தியது.
செயல் இரண்டு: ஆண்- பெண் உறவு, சமூக மாற்றத்தில் பெண்களின் இடம் பெண்களின் தனி அடையாளத்தைத் தக்க வைத்தல் போன்ற ஆண்களின் ஆளுமைக்குட்பட்ட களத்தில் புகுந்து ஒரு பெண்ணாகவும் அதுவும் ஒரு நடிகையாகவும் நின்று கருத்துச் சொன்னது. இந்த இரண்டு செயல்களுமே ஆணாதிக்கம் நிரம்பிய தமிழ் மனங்களுக்குள் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரிகின்றன. அதிலும் குறிப்பாகத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நவீன கருத்துக்களின் பால் நாட்டமும் , கலையின் சமூகப்பாத்திரம் குறித்து தீராத ஆவேசமும் காட்டி வரும் தங்கர் பச்சானைப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னவர் என்று அடையாளப் படுத்தி மன்னிப்புக் கேட்கச் சொன்ன செயல் ஆண்களுக்கு எதிராக விடப்பட்ட சவாலாகத் திருப்பப் பட்டுள்ளது. அதுவும் குறிப்பாகத் தமிழ் அடையாளம் பேசும் ஆண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதப்படுகிறது என்பதுதான் இதில் உள்ள வேடிக்கை. ஆணாதிக்க மனம், ஆண்களிடம் மட்டுமே தான் உள்ளது என்று நினைக்க வேண்டியதில்லை. திரட்டப்படும் கூட்டத்தில் பால்பேதமின்றி அவ்வுணர்வை உருவாக்க முடியும். தங்கர் பச்சான் அளித்த நேர்காணல் ஒன்றில் எனக்கு ஒரு நீதி; குஷ்புவுக்கு ஒரு நீதியா? என்று ஆவேசமாகக் கேட்டதை நினைவில் கொண்டு வந்தால் இது புரியலாம். படித்த நகரத்து யுவதிகளைப் பற்றிய கருத்தை ஒட்டுமொத்த தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றிய பேச்சாக மாற்றப்படும் அரசியலில் இருப்பது ஆணாதிக்க மனோபாவம் தான். அதுவும் கற்பு என்பது பெண்களை அடிமைப்படுத்த ஆண்களால் உருவாக்கப்பட்ட ஒரு கருத்து என்று சொன்ன ஈ.வே.ராமசாமியின் பகுத்தறிவுக் கருத்துக்களை இந்தத் தமிழ்ச் சமூகத்திற்கு வழிகாட்டும் கருத்துக்களாக முன் மொழியும் இயக்கங்கள் சொல்கின்றன என்பதுதான் ஆச்சரியம். பெரியாரைத் திரும்பத் திரும்ப தோற்கடிப்பவர்கள் அவரது எதிரிகளாக அறியப்படும் நபர்களோ, இயக்கங்களோ அல்ல; அவரைப் பின்பற்றுகிறவர்களாகவும் வழிகாட்டும் சிந்தனையாளராகக் கருதும் நபர்களும் இயக்கங்களும்தான்.
பெண் உடலை அட்டைப்படமாகவும், நடுப்பக்கமாகவும் அச்சிடும் பத்திரிகைகளும், பாடல்களிலும் கவிதைகளிலும் பெண் உடலை பூடகமாகவும் நேரடியாகவும் வருணித்தும், உடலின்பத்தின் கருவியாகவும் பேசியும் வரும் கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பெண் கவிதை மொழிக்கு எதிராக வைக்கும் வாதங்களின் பின்னணிகளும் இத்தகைய உள்நோக்கம் கொண்டவைகள் தான். பெண்களின் அந்தரங்க உறுப்புகளை வார்த்தையாகச் சொல்வதன் மூலமும், மனவிருப்பங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலமும் உண்டாக்கப்படும் பெண்ணியச் சொல்லாடல்கள் பெண்ணை, ஆண்களையொத்த உணர்வுகள் நிரம்பிய உயிரியாகவும், அறிவும் மேதமையும் வெளிப்படும் மனுஷிகளாகவும் காட்ட முயல்கின்றன. அதன் மூலம் இதுவரை ஆண்கள் கற்பித்து வந்த அடக்குமுறைக் கருத்துகளைச் சதி எனக்குற்றம் சாட்ட முயல்கின்றன. இதை ஏற்றுக் கொள்ள இயலாத மனநிலையில் தான் ஆண்மை நிரம்பிய படைப்பாளிகளும் பத்திரிகையாளர்களும் பெண்ணிய கவிஞர்களுக்கு எதிராகவும் இதே ஆவேசத்துடன் கருத்துக்களையும் எதிர்ப்புணர்வையும் காட்டுகின்றனர் என்பதை இதனுடன் சேர்த்தே புரிந்து கொள்ளலாம்.
நிறைவாக இப்படி முடிக்கலாம்.
தமிழ்ப் பாதுகாப்புக்கான இயக்கம் முன் வைக்கும் கோரிக்கைகளும், நடத்தும் போராட்டங்களும் பண்பாட்டுத் தளத்தில் முற்போக்கான பாத்திரங்களை வகிப்பதற்கான அடையாளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படை. துடைப்பக் கட்டைகளோடும் காலணிகளோடும் மறியலில் ஈடுபடுவதும், கொடும்பாவிகளை எரிப்பதும் அவ்வியக்கம் எத்தகைய அரசியலை முன்னெடுக்கப் போகிறது என்பதைத்தான் காட்டுகின்றன.
தனிமனிதர்கள் தங்களின் சிந்தனை வழியாகவும் அனுபவங்கள் வழியாகவும் பெற்ற கருத்துக்களைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்காத அரசியலைக் குறிப்பதற்கு அரசியல் துறைசார்ந்த அகராதியில் பாசிசம் என்றொரு வார்த்தை இருக்கிறது. பாசிசத்தை முன்மொழியும் இயக்கத்தவர்கள் தாங்கள் நம்பும் கருத்துக்களையே மற்றவர்களும் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துவர்; மிரட்டுவர்; பணிய வைக்கப் பல வழிகளையும் பயன்படுத்துவர். சொல்லிய கருத்துக்காகத் தமிழ்நாட்டின் பெரிய, சிறிய நீதிமன்றங்கள் தோறும் கூண்டிலேற்றப்படும் அபாயத்தை உண்டாக்குவதும்கூட அத்தகைய வழிமுறைகளில் ஒன்றுதான். ஆனால் இத்தகைய அரசியலை ஆணையில் வைக்க ஜனநாயகத்தை நம்புபவர்கள் விரும்புவதில்லை என்பது மட்டும் தான் இப்போதைக்குள்ள ஒரே நம்பிக்கை.
திரை/ நவம்பர்/ 2005


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை