: 44

மண்ணின் மைந்தர்களின் மறுபக்கம்

மண்ணின் மைந்தர்களின் மறுபக்கம்

-->
           இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய காலகட்டத்து மனிதர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தினர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், இன்றைய இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்குப் பேர் 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. இன்று எழுபத்தைந்து வயதைத் தாண்டிய சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். ஆனால் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் 
என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது.
இப்போது கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ படிக்கும் மாணாக்கர்களிடம் வந்தே மாதரம் என்ற சொல் பற்றிக் கேட்டால் ஏ.ஆர். ரகுமானின் ஆல்பத்தின் பெயர் என்பது மட்டும் தான் தெரியும். இந்தத்தலைமுறை எந்தப் பொருள் குறித்தும் அதன் மூலத்திற்குள் சென்று தேடுவதில்லை என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் விரும்பினால் வந்தே மாதரத்தின் வரலாற்றைச் சொல்லிக் கொடுக்கலாம்.
இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணியாரை நீடுழி வாழ்க என வாழ்த்துவதற்காக எழுதப்பட்ட அந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட காலத்தில் சூழலால் அர்த்தம் மாறியது என்பதை இந்தத் தலைமுறை நினைத்துப் பார்க்கப் போவதில்லை. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்த மடம் எனும் வங்கமொழி நாவலிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்த போது , “வந்தே மாதரம் என்போம்;மா நிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று எழுதி, அந்த வரிகளுக்குள் தேசப்பற்று என்னும் உணர்ச்சியைப் பிடித்துத் திணித்தான் பாரதி என்று விளக்கும் நூல்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பட்டியல்களைத் தந்தால், அவர்கள் அவற்றை எடுத்துப் படிக்கப் போவதில்லை. இப்போதைய தேவைக்கான தகவல்களைத் தரும் கல்வியாக உயர்கல்வி மாறிக் கொண்டிருக்கும் ஆபத்து உணரப் படவேண்டும்.
ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு .பிரிட்டானியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் , அதன் ஆளுகைப் பரப்பாக இருந்த பிரதேசங்களிலும் கூட பிரிட்டானிய இந்தியர்கள் என்ற தன்னிலை முழுமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த கால கட்டத்திலேயே கூட அதன் ஈர்ப்பு எல்லைக்குள் வராதவர்களாகப் பல கோடிப் பேர் இருக்கத் தான் செய்திருப்பார்கள். அவர்களின்  உருவாக்கம்  காலனி ஆட்சியாளர்களின் திட்டமான பிடிமானத்தால் உருவாகாமல், அதன் நேர்மறைத் தன்மையிலிருந்தும் எதிர்மறைத் தன்மையிலிருந்தும் உருவாகியிருக்கக் கூடும். அப்படியான உருவாக்கம் ஒருவிதத்தில் விலகிய நிலையின் வெளிப்பாடு.இது கடந்த கால வரலாறு.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டானியர்கள் வெளியேறியிருக்கலாம்; ஆட்சியதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் இந்தியாவில் இருந்தபோது  இந்திய சமூகத்தை என்னவாக மாற்ற நினைத்தார்களோ அதன் சாயல் எல்லா தளங்களிலும் படிந்து கிடக்கிறது. காரணம் ஐரோப்பியர்களின் மொழி இங்கு கல்விப்புல மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் வெளியேறிய பின்னும் ஐரோப்பிய அறிவு இங்கு தங்கியிருந்தது; தங்கியிருக்கிறது. அதனை முற்றிலும் விலக்கி அனுப்பிவிட வேண்டும் என்ற வேட்கை பலரால் முன்வைக்கப்பட்டதும் உண்டு. என்றாலும் இந்திய வெகுமக்களிடம் அவை முழுமையான செல்வாக்கைப் பெற்றுவிட வில்லை என்பதும் உண்மை.
இந்தியப்பண்பாட்டின் பெருமையும் தமிழ்ப் பண்பாட்டின் பாரம்பரியமும் ஆரவாரமான கூச்சல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பியர்களின் பண்பாடு விரும்பத் தக்க பண்பாடு என்று கருதுபவர்கள் வெளியில் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் நம்பும் அதைப் பேசிக் கொண்டிருக்காமல் நடைமுறையில் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆழமான உண்மை.
இந்தியப்பண்பாட்டை அல்லது தமிழ்ப் பண்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாதிடுவது உண்மையில் நன்மையின் பாற்பட்டதா? அதனை ஏற்றுக் கொண்டு ஐரோப்பியப் பண்பாட்டை விலக்கி விடும் வேலையைத் தொடங்கலாமா? உண்மையில் பண்பாடு என்பது எதில் இருக்கிறது? உடுத்தும் உடை வழியாக வெளிப்படுவதுதான் பண்பாட்டின் வெளிப்பாடா?
இந்தியப் பாரம்பரிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் விதமாக நமது கல்வி நிறுவனங்களை மாற்றி விட்டு ஐரோப்பியக் கல்விமுறையையும், ஐரோப்பிய அறிவையும் வெளியேற்றி விடலாமா? ஐரோப்பிய மனநிலை நீங்கி விட்டால் உண்டாக்கப்படும் இந்திய மனநிலையில் இருப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத் தக்க மன நிலை தானா?  பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய இந்தக் கேள்வியை இங்கே ஒரேயொரு தளத்தில் மட்டும் விவாதிக்கலாம். அதன் வழியாக மற்ற தளங்களுக்கும் நாம் நகர்த்திக் கொள்ளலாம்.
ஆங்கிலேயர்களை வெளியேறச் சொன்ன போது உண்டாக்கப் பட்ட உணர்வு தான் தாய் மண்ணை வணங்குதல் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் இன்று அந்தச் சொல்லாடல் என்ன அர்த்தத்தில் இருக்கிறது? எது தாய் மண் என்று கேள்வி தான் விதம் விதமாக கேட்கப் படுகிறது.
இந்தியா என்ற தேசத்தின் மண்ணா? தமிழ்நாடு அல்லது கேரளம் அல்லது கர்நாடகம் என்ற மாநிலத்தின் தாய் மண்ணா? தேசிய வாதத்திற்கு எதிராக மாநிலவாதம் பேசிய கட்சிகள் உருவாக்கும்  மண்ணின் மைந்தர்கள் என்ற கருத்துப் படிமம் நன்மையா? தீமையா?
உலக அளவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகார முறையும், பன்னாட்டுக் கம்பெனிகளும் இங்கே வருகின்ற போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும், முல்லைப் பெரியாறு நீரைத் தமிழ் நாட்டிற்குத் தரக்கூடாது எனச் சொல்லும்போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும் ஒரே பொருள் உடையதுதானா?
இந்த சொல்லாட்சிகள் இலக்கியம், பண்பாடு போன்ற தளங்களிலும் இன்று விரிவாக விவாதிக்கப் படுகின்றன. உலகம் தழுவிய இலக்கிய வகைகளையும், பொது மனிதர்களையும் எழுதுவதை விட்டுவிட்டு ஒவ்வொரு வட்டாரத்தையும் முக்கியப்படுத்தும் வட்டார எழுத்து முறையும், விளிம்பு நிலை மனிதர்களும் இலக்கியங்களிலும் கலைகளிலும் பதிவு பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இந்த வலியுறுத்தல் ஆதரிக்கப்பட வேண்டிய நன்று எனச் சொல்லும் அதே நேரத்தில் எதிர்முனையில் இத்தகைய படைப்பாளிகளும் பண்பாட்டுச் செயலாளிகளும் வட்டார வாதத்திற்குள் மெல்ல மெல்லப் போய்ச் சேர்ந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இந்தியா என்ற பெரும்பரப்பிற்குள் மாநில வாதம் தலை தூக்குவது போலவே ஒரு மாநில எல்லைக்குள் வட்டாரவாதம் தலைதூக்கும் ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஓர் அரசுக் கல்லூரி ஆசிரியரின் பணி அனுபவமும் வாழ்க்கை அனுபவங்களும் தான் இதற்கு சரியான உரைகல்லாக அமையும். தென் தமிழ்நாட்டு மக்கள் மதுரைக்கு வடக்கிலிருந்து வந்து தங்கள் ஊரில் இருக்கும் ஒரு அதிகாரியை அந்நியர்களாகக் கருதும்படி தூண்டப்படுகிறது. கொங்கு நாட்டிற்குரிய வட்டார மொழியோடு தஞ்சாவூரில் பணியாற்றும் மனிதர்கள் கேலிக்குரியவர்களாக ஆகி விடுகிறார்கள்.
இந்தப் பின்னணியில் தான் இன்று வட்டாரக் கட்சிகள் தோன்றுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்சிகள் தோற்றத்தில் வட்டாரக் கட்சிகள் போல இருந்தாலும் அவை உண்மையில் சாதிக் கட்சிகள் தான். ஒவ்வொரு வட்டாரத்திலும் பெரும்பான்மையாக இருக்கும் சாதிகள் ஆரம்பிக்கப் போகும் இத்தகைய வட்டாரக் கட்சிகள் தமிழ்நாடு என்ற எல்லைக்குள்ளேயே பல நாடுகளை உருவாக்கும் ஆபத்தைச் செய்யும் என்பது எதிர்கால வரலாறாக இருக்கப் போகிறது.
வட்டார மொழியில் எழுதப் பட்ட இலக்கியம் வட்டாரத்தில் உழைத்து ஓடாகிப் போன மனிதனின் குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளி வந்தன. ஆனால் அந்நோக்கம் ஆதிக்கத்தின் குறியீடாக ஆகிக் கொண்டிருக்கிறது. புதுமைப் பித்தனின் கதாபாத்திரங்கள் பேசிய திருநெல்வேலித் தமிழ் இங்குள்ள ஆதிக்க சாதியின் குரலாக ஆகும் என்றால் அதனை நன்மை எனச் சொல்வதா? தீமையெனத் தள்ளுவதா?
கவி பழமலய்யின் சனங்களின் கதை விழுப்புரம் பகுதியில் வாழும் அப்பாவிக் கிராமத்து உழைப்பாளிகளின் குரல் என்று அறியப்பட்ட நிலையிலிருந்து மாறி பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களின் குரல் என்பதாக அறியப்படும் வாய்ப்பே உள்ளது என்றால் அந்தக் கவிதைகள் ஏற்கத்தக்க கவிதைகளா?  ஆபத்தான ஆயுதங்கள் எனச் சொல்ல வேண்டிய எழுத்துக்களா? இப்படியே கரிசல் காட்டுக் கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம்,  கொங்குவட்டார சண்முக சுந்தரம், சி.ஆர். ரவீந்திரன் எனப் பலரது எழுத்துக்களையும் கேட்டுக் கொண்டே போகலாம்.
மண்ணின் மைந்தர்கள் என்ற குரல் இப்போது இலக்கியத்திலிருந்து நகர்ந்து திரைப்படங்களிலும் வலியுறுத்தப்படுகின்றன. மண்வாசனை அடையாளம் தான் சரியான கலை இலக்கியத்தின் அடையாளம் என்று நம்பப் படுகிறது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் என்ற கோஷமும், பரப்புவாதமும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆதிக்க சாதிகளாக இருக்கும் - பெரும்பான்மை சாதிகளின் கோஷம் என்ற இன்னொரு பக்கத்தையும் கொண்டதாகவே இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை