: 26

மதம் : மனிதன்

மதம் : மனிதன்

ஊடக வெளிச்சம் தன் மீது விழ வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. சாதாரண மனிதர்கள் ஊடகக் கவனிப்பிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள். ஆனால் ஊடகக் கவனிப்பு கிடைத்தபின் அதைத் தக்கவைக்க வேண்டும் என நினைத்துக் காரியங்கள் செய்யும்போது அவர்கள் சாதாரண மனிதன் என்ற நிலையைத் தொலைத்து விடுகிறார்கள்.

கூடுதல் புத்திசாலித்தனமும் முயற்சியும் தேவைப்படும் பட்டம் அது. உயர்ந்த பட்சப் போட்டிகள் நிறைந்த தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண் பெறுவது என்றில்லாமல் , கூடுதல் மதிப்பெண்களின் இறங்குவரிசையில் இடம்பிடித்துப் பெறுவது அந்தப்பட்டம். இண்டியன் அட்மினிஸ்ட்ரேசன் சர்வீஸ் என அழைக்கப்படும் குடிமைப் பணிகளுக்கான தகுதியாகக் கருதப்படும்   ஐ.ஏ.எஸ். பட்டம்  நிச்சயம் சாதாரணப் பட்டம் அல்ல. 
இந்தியாவில் பிறக்கும் பலரது கனவுப்பட்டம் அது. கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லை என்பது போலப் பலருக்கும் அது வெறும் கனவாகவே போய்விடும். ஆனால் கடின உழைப்பு மூலம் பெற வேண்டிய பட்டம் என நம்பும் பலர் அதிக பட்ச வாய்ப்புகள் வரை முயன்று அந்தப் பட்டத்தைப் பெற்றுச் சாதனையைத் தொடங்குவதை நாம் அறிவோம்.
நம்மை ஆண்ட பிரிட்டானியக் காலனி ஆட்சியாளர்களின் நிர்வாக நடைமுறைகளும் தடைகளும் இன்னும் தொடர இந்த ஆட்சிப் பணியாளர்களே காரணம் என்று குற்றச் சாட்டாகச் சொல்லப் பட்டாலும் அவர்களின் தேவையை மாற்றீடு செய்ய வேறு வழிவகைகள் கண்டறியப்படாத நிலையில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான பட்டமும் பதவியும் இந்த ஐ.ஏ.எஸ். என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை. அத்துடன் எந்தவிதக் கல்வியும் பயிற்சியும் இன்றி அதிகாரத்திற்கு வரும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும் இந்தியச் சூழலில் முறையான பயிற்சிகளையும், சட்டம்  மற்றும் விதிகளைப் பின்பற்ற விரும்பும் ஆட்சிப் பணியாளர்களின் இடம் கூடுதலாகிக் கொண்டுதான் இருக்கிறது. 
இந்திய ஆட்சிப் பணியாளர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற உடனேயே ஒருவருக்கு அரசு மாவட்ட ஆட்சித்தலைவர் போன்ற பொறுப்பு மிக்க பதவிகளைக் கொடுத்து விடுவதில்லை. இரண்டாண்டு காலம் பொது மற்றும் சிறப்புப் பயிற்சிகளை வழங்கி, அவர்களைத் தயார் படுத்திய பின்னரே மக்களைச் சந்திக்கும் பணிகளை வழங்குகிறது. அத்துடன் அவர்கள் தங்களைப் பற்றித் தரும் வாழிடம், கல்வி, குடும்பம், சமூகம் போன்ற அனைத்தும் முறையான விசாரணைகளின் பேரில் உண்மையெனக் கண்டறியப்பட்ட பின்னரே ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். தவறெனக் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தள்ளுபடி செய்து விடுவார்கள் என்பதும் நடைமுறை. 
இந்திய ஆட்சிப் பணியாளர் உமாசங்கர் பல நேரங்களில் ஊடக வெளிச்சம் படும் இடத்தில் இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்த வெளிச்சத்தை நாடிச் செல்லும் ஆசை கொண்டவர் என்று சொல்ல முடியாது. தன் மீது பத்திரிகைகளும் ஊடகங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகச் செய்யும் பணிகள் சொந்த வாழ்க்கைக்கு ஆபத்துகள் வராதவைகளாக இருக்கும். ஆனால் உமாசங்கர் எப்போதும் ஆபத்துகள் நிரம்பிய பணிகளை மேற்கொண்டதன் மூலமே  ஊடக வெளிச்சத்தில் நின்றிருக்கிறார்.
மக்கள் ஆதரவு மூலம் அதிகாரத்திற்கு வரும் ஆட்சியாளர்கள், மக்களின் நலனைக் கைவிட்டு விட்டுத் தனது சொந்த நலனைக் குறி வைக்கும் போது அணை போட வேண்டிய பொறுப்பை அதிகாரிகள் கையில் எடுக்க வேண்டும் என்பது இந்திய ஆட்சிப் பணியில் கற்றுத் தரும் பாடங்களில் ஒன்று. அந்த நடைமுறையைத் தொடர்ந்து தனது பொறுப்பாகக் கொள்வது பொறுப்பான ஓர் அதிகாரியின் அடையாளம். அந்த அடையாளத்தைத் தக்க வைப்பதன் மூலம் உமாசங்கர் ஊடகக் கவனத்தைப் பெற்றார் என்பது துணைப்பலன்கள் தானே ஒழிய முதன்மை நோக்கம் அதுவல்ல என்பதை உறுதியாகச் சொல்லலாம். 
சுடுகாட்டுக் கூரைகள் , பொறுப்பான கூடுதல் மாவட்ட ஆட்சித் தலைவரின் அடையாளம், எல்காட் நிறுவனம், அரசு தொலைக்காட்சி எனச் சில பெயர்களை நினைக்கும் போது உமாசங்கரின் பெயர் நினைவுக்கு வருவது இன்று தவிர்க்க முடியாமல் ஆகி விட்டது. நேர்மறை அம்சங்கள் கொண்ட காரணங்களுக்காக அவரது பெயர் நினைவுக்கு வந்தது போல இப்போது எதிர்மறை அம்சத்தோடும் அவர் பெயர் அடிபடத்தொடங்கியிருக்கிறது.
போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து தொழில் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர முயன்றார்கள் என்ற ஆபத்தான குற்றச் செயல் கண்டறியப்பட்ட நேரத்தில் உமாசங்கர் போலிச் சான்றிதழ் வழங்கிப் பணியில் சேர்ந்துள்ளார் என்ற செய்தியும் வந்தது. ஒரு செய்தியின் பின்னணிக் காரணங்களும் வெளியிடப் படும் சூழலும் அதற்குக் குறிப்பான அர்த்தத்தையும் பின் விளைவுகளையும் உருவாக்கும் ஊடக ஆய்வாளர்கள் ஒத்துக் கொள்ளும் ஒன்று. 
போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து தரமான கல்லூரிகளில் இடம் பிடித்து விட முயன்ற மாணாக்கர்களோடு போலிச் சாதிச் சான்றிதழ் அளித்து உயர்ந்த பதவியைப் பெற்ற உமாசங்கர் சமன் படுத்தப்பட்டுள்ளார். போலி மதிப்பெண் வழியாக மாணாக்கர்கள் அடைய நினைத்த இடங்கள் அவர்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. அதை யாரும் தவறெனச் சுட்டவில்லை. ஆனால் உமாசங்கரின் செயல் முழுமையும் தவறு எனப் பொது மனம் நம்பத் தயாரில்லை. 
பொதுமனம் எப்போதும் ஒரே மாதிரியான முடிவுகளையே எடுக்கும் என்பது உண்மையல்ல என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. அவ்வாறு முடிவு எடுக்கும் முன்பு பல காரண காரியங்களை அலசிப் பார்க்கவே செய்கிறது பொதுப்புத்தி. இந்த மாதிரியான சூழலில் சாதாரண மனிதர்களின் பொதுப்புத்தி தேர்ந்த சட்டவல்லுநரின் விவாதத் திறமைகளை விடவும் கூடுதலாகக் கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.
இந்தப்பின்னணியில் நவீன இந்தியச் சமூகத்தின் முக்கியமான பிரச்சினை ஒன்றை நினைவு படுத்திப் பார்க்கத் தோன்றுகிறது. இந்தியப் பெரும்பான்மை மனிதர்களுக்கு, அவர்களின் வாழ்க்கையில் மதத்தின் இடம் எது? சமயஞ்சார்ந்த  நம்பிக்கை மற்றும் சடங்குகளின் இடம் பிரிக்கவே முடியாத வாழ்க்கை முறையாக இருக்கிறதா? இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு விசாரணையைத் தொடங்கினால் ஆச்சரியமூட்டும் உண்மைகள் நமக்குப் புரிய வரலாம். 
தென் தமிழ்நாட்டில் பதினெட்டாம் நூற்றாண்டில் நுழைந்த கிறித்தவச் சமயத்தை அப்பகுதி மக்கள் தங்கள் உலகியல் வாழ்க்கைக்கு மேம்பாடுகள் தரும் நிறுவனமாகக் கருதியே அதனைத் தழுவினார்கள் என்பதை நாம் காணமுடியும். குறிப்பாகக் கிறித்தவ சமயத்தை நாடிச் சென்ற விளிம்புநிலை மக்களான தலித்துகளும், சாணார்கள், பரதவர்கள், நாடார்கள் போன்ற இடைநிலைச் சாதியினரும் தங்களின் மரபான வாழ்க்கை முறையைப் பெருமளவில் மாற்றிக் கொள்ளாமலேயே நகர்ந்தார்கள் என்பதைப் பல சமூகவியல் மற்றும் நாட்டார் வழக்காற்று ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஏற்கெனவே  இருந்த இசக்கியம்மன், சுடலை, பேராச்சி, சொரிமுத்தய்யனார் போன்ற தெய்வங்களின் பெயர்களை நீக்கி விட்டு மரியையும், சூசையப்பரையும், சலோமியையும் பொருத்திக் கொண்டார்கள் என்பதும் அந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டும் உண்மைகள். 
மேற்கு நாடுகளிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரிகளாலும், இங்கேயே உருவான மிஷனரிகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சிகளில் புதிய சமய அடையாளங்கள் தரப்பட்டனவே ஒழிய பழைய சாதி அடையாளங்கள் அப்படியே தொடர்ந்தன என்பதுதான் வரலாற்று உண்மை. சாதி அடையாளத்தைக் கட்டிக்காக்கும் திருமண நிகழ்வுகள் இதற்கு முக்கியமான சான்றுகளாக உள்ளன. மதங்கள் வேறுபட்டாலும் சாதி ஒன்றாக இருந்தால் கொள்வினை கொடுப்பினைகள் தடையின்றி நடக்கவே செய்கின்றன மதத் திருமணச் சடங்குகளோடு சாதியஞ்சார்ந்த திருமணச் சடங்குகளும் செய்யப் படுகின்றன.. தென் மாவட்டங்களில் வாழும் கிறித்தவர்கள் ஒவ்வொருவரும் மதம் சார்ந்த சலுகைகள் கிடைப்பதற்காக ஒரு பதிவும், அரசாங்கம் தரும் சலுகைகளைப் பெற ஒரு பதிவும் எனத் தங்களை இரு பதிவாளர்களாக வைத்திருப்பதை உறுதி செய்யலாம். இத்தகைய போக்கு தென்மாவட்டத்தின் நிலை மட்டும் அல்ல; தமிழ் நாட்டின் பொதுப் போக்கு என்பதைத் தான் உமாசங்கரின் சான்றிதழ் விவகாரம் நமக்குச் சொல்கிறது.
சமயமும், சமயங்கள் வலியுறுத்தும் ஆன்மீகமும், ஆன்மீக வாழ்வின் குறியீடாக இருக்கும் கடவுளும் சாதாரண மனிதர்களின் வாழ்வில் என்னவாக இருக்கின்றன என்றால் வீட்டில் புழங்கும் பாத்திரங்களைப் போலவேதான் இருக்கின்றன என்ற உண்மை புரிய வரலாம். ஆம் அவை உலகியல் வாழ்க்கைக்குப் பயன்படும் ஒரு பொருள்; அவ்வளவு தான். அதனைத் தாண்டி அவர்கள் அதற்கு வேறு இடத்தைத் தரவில்லை.  தமிழ் வாழ்வில் மேலும்மேலும் அறியப்பட்ட மனிதர்கள் வழியாகவே உணர்ந்து கொள்ளலாம். 
பொதுப்புத்தியின் ரகசிய வழி ஒன்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த வகையிலும் உமாசங்கர் அசாதாரண மனிதராகவே தோன்றுகிறார், அசாதாரண மனிதர்கள் தடைகளைச் சந்திப்பது தவிர்க்க முடியாது. அவற்றைத் தாண்டி விடும் து இன்னும் கூடுதலான பலத்துடன் அவர்களின் அசாதாரணத்தனம் தொடரக்கூடும். தோற்று விட்டால் சாதாரண மனிதர்களின் கூட்டத்தில் ஒருவராக ஆகி விடக்கூடும்.  என்ன நடக்கப் போகிறது. ஊடகங்கள் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை