: 43

கல்வியில் கொள்கையின்மை


நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.
அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வி என ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் லட்சியங்களும் இலக்குகளும் முன் மொழியப்பட்டுள்ளன. அப்படியான முன் மொழிவுகளைச் சொல்லாவிட்டால் நமது அரசுகள்  ஜனநாயக அரசுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது. ஆகவே லட்சியங்களையும் திட்டங்களையும் முன் மொழிவதிலிருந்து அவை எப்போது பின் வாங்குவதில்லை.
கற்றவர்களாக ஆக்க வேண்டும் எனத் திட்டமிடும்போதே  என்ன வகையான கல்வியைத் தர வேண்டும் எனக் கொள்கை முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால் நமது அரசுகள் அதைச் செய்வதே இல்லை; தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்துள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதைத் தாண்டி ஒருவருக்குத் தரப்படும் கல்வியின் மூலம் அவர் அடையப்போகும் பலன் என்ன என்பதைக் கொண்டே கல்விக்கான கொள்கையை உருவாக்க முடியும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதில்  எந்தவிதத் தெளிவும் இல்லாததால் கல்வியை வழங்குவதற்கான திட்டமிடலில்  அவசரம் காட்டிய அதே வேகத்தைக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டவில்லை. பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களது அரசுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான எழுத்தர்களையும் மேற்பார்வையாளர்களையும் உருவாக்குவது என்பதை முன் வைத்து அதற்கான கல்வியை வழங்கினார்கள். அதே நிலைபாட்டை நாம் எப்படித் தொடர முடியும்? என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டால் கூடப் போதும் நமக்கான கல்விக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.
நமது பாரம்பரியமான அறிதல் முறை எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமலேயே நமது திட்டமிடல் வல்லுநர் அவற்றைப் புறந்தள்ளி விட்டார்கள். நமது பாரம்பரியமான அறிவையும், தொழில் நுட்பத்தையும் தக்க வைப்பதும் பயன்படுத்தத் தூண்டுவதும் நமது கல்வியின் நோக்கங்களாக இல்லை. அப்படியானதொரு நோக்கம் இல்லாமல் மேற்கின் அறிவையும் கண்டுபிடிப்புகளையும் அறிவதும் பயன்படுத்துவதும் மட்டுமே போதும் எனக் கருதியதால் நமது கல்விக்கொள்கைகள் தீர்மானவைகளாக இல்லை. அதே போல் நமது வாழிடம், பண்பாடு,வாழ்க்கை முறை, இலக்கியம், ரசனை போன்ற அனைத்தும் பாதுகாக்கப் பட வேண்டியவையா? உதறித்தள்ள வேண்டியவையா? என்ற கேள்விகள் கேட்கப்படாமலும், விடைகள் கண்டடையப்படாமலும் காலம் உருண்டோடிக் கொண்டிருக்கிறது.
காலனி ஆதிக்கத்தினரின் வெளியேற்றத்திற்குப் பின் தேசிய இனங்கள் தங்களின் அடையாளத்தை வலியுறுத்திய போராட்டங்களை இந்திய பலவிதமாகச் சந்தித்தது. ஜனநாயக அரசியல் மூலமாகவே பல தேசிய இனங்கள் மாற்றங்களைச் சாதித்தன. அவற்றுள் தமிழர்கள் முதன்மையானவர்கள். 1967 இல் தேசிய இன அடையாளத்தை முன் மொழிந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால் அந்த மாற்றம் வெறும் அரசியல் அதிகார மாற்றமாக மட்டுமே ஆகி விட்டது. தமிழர்களின் தனித்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய திராவிட இயக்கங்கள் அந்தத்தனித்துவம் என்பதை விளக்காமலேயே அரை நூற்றாண்டைக் கழிக்கப் போகின்றன. தனித்துவம் என்ன என்று கண்டறிந்தால் தானே, அது நிகழ்காலத்திற்குப் பொருந்தக் கூடியதா? எனச் சிந்திக்க முடியும். அதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப் படவில்லை.
தமிழர்களின் தனித்துவத்தைக் கண்டறிந்து அதனை வளர்த்தெடுக்கும் நிலை நிறுத்தும் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பே நமது கல்வி அமைச்சர்களுக்குத் தோன்றியதில்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அதே கல்விமுறையை- பயிற்றுமொழி, பாடத்திட்டம், பயிற்றுமுறை என எல்லாவற்றையும் அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதில் கொஞ்சமும் வெட்கம் நமக்கில்லை. கண்ணுக்குப்புலப்படாமல் சிதறிக் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வேலைகளுக்கும் தொழில்களுக்கும் ஓரளவு பொருத்தமான மனிதர்களாக யுவதிகளையும் இளைஞர்களையும்  மாற்றி அனுப்பும் பயிற்சிக்கூடங்களாக  நமது கல்வி நிறுவனங்கள் கருதப்படுவது தொடர்வது வரை கல்விக்கான கொள்கையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பு யாருக்கும் தோன்றப் போவதில்லை


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை