: 38

உயர்கல்வி சந்திக்கும் சிக்கல்கள்


உயர்கல்வியில் காலத்தின் தேவைக்கேற்பச் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்குதேசிய அளவிலும் மாநில அளவிலும் அமைப்புகள் இருக்கின்றன. பல்கலைக்கழக மானியக்குழு, மாநில உயர்கல்வி மன்றம், அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி மன்றம் போன்ற பெயர்களில் இயங்கும் இந்த அமைப்புகளே அவ்வப்போது பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வழிகாட்டு நெறிகளையும் விதிகளையும் உருவாக்கித் தருகின்றன.
பல்கலைக்கழகங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு அவை இயங்கும் வட்டாரத்திற்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, பட்டங்களை வழங்குவது எனப் பணிகளைச் செய்கின்றன. இப்பணிகளைச் செய்ய ஒவ்வொரு அமைப்பிலும் நியமன உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுமாக கல்விநிலைக்குழு, ஆட்சிப்பேரவை, ஆட்சி மன்றக்குழு எனச் சிற்றதிகாரம், பேரதிகாரம் நிரம்பிய அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றின் தலைவராக இருப்பவர்களே துணைவேந்தர்கள்.
உயர்கல்வித் துறையில் இயங்கும் இவ்வமைப்புகள் தோற்றுவிக்கப்பட்ட நோக்கங்கள்அப்பழுக்கற்றவை.ஆனால் நடைமுறையில் மிஞ்சியிருப்பது வேதனையும் விரயமும். கல்வித்துறை அமைப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு விதமான அரசியல்வாதிகள் வெவ்வேறு வாசல்களில் நுழைந்து கல்வித்துறையைக் கழிசடை அரசியலின் நகல்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்கலைக்கழக மானியக்குழு தொடங்கி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வரை ஆளுங்கட்சியின் ஆசியையும், ஆதரவையும் பெற்றவர்களே பிடிக்க முடிகிறது. ஆசியும் ஆதரவும் பெறுவதற்காகக் கல்வியாளர்கள் எல்லாவகையான உத்திகளையும் கையாள்கிறார்கள். கட்சி ஆதரவு நிலைபாட்டை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளுதல் தொடங்கி கனமான பெட்டிகளை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத் தரகர்களுக்கும் தருவதெல்லாம் அண்மைக் காலங்களில் கண் கூடாக நடக்கும் நிகழ்வுகளாகி விட்டன.கடைநிலை ஊழியர்கள் நியமனம் தொடங்கிப் பேராசிரியர் பதவி வரை பணப்பெட்டிகளால் தான் முடிவு செய்யப்படுகின்றன. தாங்கள் கொடுத்த பணத்தை எடுப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை எனச் சொல்லும் கல்வியாளர்கள் தான் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்.
தாங்கள் வந்த பாதையை ஒவ்வொரு கணமும் மறக்காத இவர்கள், கல்வி நிறுவனங்களுக்குள் ஆசிரியராகவும் அதிகாரிகளாகவும் அலுவலராகவும் நுழையும் ஒவ்வொருவருக்கும் கற்றுத் தந்து பலன் அடைவதில் அக்கறை காட்டுவதையே தங்கள் பதவிக்காலச் சாதனைகளாகக் கருதிவிட்டு வெளியேறி விடுகின்றார்கள். மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என இவர்கள் இருக்கும் காலத்தில் கல்வித்துறை வளர்ச்சிக்கும், அதன் பயனாளிகளான மாணவர்களுக்கும் என்ன வகையான நன்மைகளும் மாற்றங்களும் செய்யலாம் என நினைப்பதை விடத் தங்கள் வளமான வாழ்க்கைக்கு எதையெல்லாம் செய்ய முடியும்?தனக்கு வேண்டியவர்களுக்கும், தனக்குப் பதவியை அளித்த ஆண்டைகளுக்கும் என்னவெல்லாம் செய்து நல்ல பெயர் வாங்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகின்றார்கள்.
ஆட்சிக்கு வரும் கட்சிகளால் கல்வித்துறையில் ஏற்படும்  சீரழிவு மேலிருந்து பாதிப்பை உண்டாக்குகிறது என்றால், ஆசிரியர்கள் சங்கங்கள் என்னும் அரசியல் அமைப்புகள் கல்வி நிறுவனங்களைக் கீழிருந்து சீரழிக்கின்றன. கல்லூரிகள் அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் இயங்கும் சங்கங்கள், மண்டலம், மாநிலம் என்ற அளவுகளில் மாநாடுகளை நடத்திப் பேசுவன எல்லாம் நமது கல்வியை முன்னேற்றம் கொள்கை முடிவுகளை முன் வைத்து அல்ல. அவை முக்கியமாக நினைப்பனவெல்லாம் தங்களின் உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கான பணிப்பாதுகாப்பு மற்றும் கூடுதல் சலுகைகளுக்காகத் தான்.நேரடியாகக் கட்சி அரசியலோடு தொடர்புடையனவாகவும், தொடர்பில்லாதது போலவும் தங்களைக் காட்டிக் கொள்கின்ற அச்சங்கங்கள் தாங்கள் இயங்கும் வெளியில் ஒரு இணை நிர்வாக அமைப்பை நடத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து வருகின்றன என்பதுதான் உண்மை. கல்லூரியின் முதல்வருக்கு இணையான அதிகாரத்தை அக்கல்லூரியில் இயங்கும் சங்கத்தின் செயலர் அல்லது தலைவர் பெற்றிருக்கிறார்.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களோடு சம அளவில் அதிகாரத்தையும் ஊழலையும் பகிர்ந்து கொள்வதற்காக  இந்தச் சங்கங்கள் பின்பற்றும் உத்திகள் வெளிப்படையானவை. தொடக்க நிலையில் எதிர்ப்பைக் காட்டிப் பணிய வைத்துப் பேரம் பேசும் தகுதியை உருவாக்கிக் கொள்வதைத் தவறாமல் செய்கின்றன. ஒரு துணைவேந்தரின் பணிக்காலம் முடியும் போது அவர் செய்த விதி மீறல்களுக்கும் ஊழல் நடவடிக்கைக்களுக்கும் உடந்தையாக இருந்து அடையும் பலன்கள் சங்கத்தில் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கும் தனிநபர்களுக்குப் போவதை அதன் உறுப்பினர்கள் பல நேரம் அறிவதே இல்லை.
ஆசிரிய சங்கங்களின் இந்தப் போக்கைக்கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அவை பாடத்திட்டக்குழு, கல்வி நிலைக்குழு போன்றவற்றில் நடக்க வேண்டிய மாற்றங்களுக்கெதிராக முன் வைக்கும் கருத்துக்கள்தரமான கல்வியைத் தடை செய்யும் நோக்கம் கொண்டவை. தங்கள் அமைப்பின் உறுப்பினர்களைச் சமகால அறிவோடு விளங்க வேண்டியவர்களாக ஆக்கும் பொறுப்பைக் கைவிட்டு விட்டு அவர்களின் சோம்பேறித்தனத்தை வளர்ப்பதில் இச்சங்கங்கள் முன்னணியில் நிற்கின்றன. ஓர் அமைப்புக்கு உறுப்பினர் கட்டணம் செலுத்தி விடுவதின் வாயிலாகத் தங்களை முழுப் பாதுகாப்புடையவர்களாகக் கருதிக்கொள்ளும் ஆசிரியர்களால் நிரம்பி வழிகிறது தமிழ் நாட்டின் உயர்கல்வி அமைப்புக்களான கல்லூரிகளும் பல்கலைக்கழ்கங்களும்.
ஆளுங்கட்சிகளின் வேட்டைக்காடாகவும் சங்க நடவடிக்கையென்னும் இணை அரசியலின் வன்கலவிஉடலாகவும் விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்ந்து மாணவர்களின் பயணத்திற்கான திசைவழி தெரியும் காலம் பக்கத்தில் இல்லை. 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை