: 25

ஆமாம் நண்பர்களே! அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அனுபவங்கள் எப்போதும் கடந்தகாலத்தைச் சேர்ந்தவைகளாகவே இருக்கின்றன. கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குக்  கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அந்த நிகழ்வை அதிசயம் என்று தானே சொல்ல வேண்டும்.

மலையடிவாரக் கிராமங்களிலும், ஆற்றங்கரையோர வீடுகளிலும் வாசம் செய்த மனிதர்கள் நகரவாசிகளாகிவிட்ட பின் தங்கள் இளமைக்காலத்தை நினைத்து எழுதும் நினைவுகள் உலக இலக்கியத்தில் முக்கியமான கவிதை வகைகளாக விளங்குகின்றன. நினைவலைகளைப் (Nostalgic) பிடிக்காத மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு மனிதர்களின் நினைவலைகளும் ஒரே நேரத்தில் அவர்களுக்குத் துயரத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் ஆற்றல் பெற்றவை. நமது கடந்த காலத்தை மனதிற்குள் அசை போடுவதை விடவும், நமது நினைவுகளுக்குள் இருக்கும் வெளிகளையும் அதில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களையும், மனிதர்கள் புழங்கும் முறைகளையும் அதனதன் மாற்றங்களோடு காணும் வாய்ப்பு வாழ்க்கையில் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.

இளமைக்கால நினைவுகள் மட்டுமே  இன்பமாகவும் துன்பமாகவும் இருக்கக் கூடிய நினைவலைகளை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தவை என்பதில்லை. நகரவாசிகளுக்கு அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தின் நினைவுகளும் பழகிய மனிதர்களின் முகங்களும் கூட அத்தகைய அனுபவத்தை நிச்சயம் தரும். நீங்கள் ஒரு நிறுவனத்தின் சாதாரணப் பணியாளராக ஓய்வடைந்திருந்தால், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. வருடத்தில் ஒருநாள் அந்த நிறுவனத்தின் வராந்தாக்களில் நடந்து, நீங்கள் உட்கார்ந்து பணியாற்றிய நாற்காலியைத் தடவிப் பார்த்து விட்டு, அங்கிருக்கும் உணவு விடுதியில் மதிய உணவையோ, மாலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு நண்பர்களோடு உட்கார்ந்து சிகரெட் பிடித்த அல்லது வெற்றிலை போட்ட காலத்திற்குள் பயணம் செய்து விட்டு, பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்து விடலாம். சாதாரணப் பதவிகளில் இல்லாமல் ஒரு நிறுவனத்தில் உச்சநிலைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் இத்தகைய வாய்ப்புகளுக்கு இடமில்லை. அந்த இடத்தில் அவர்கள் செலுத்திய அதிகாரமும் அது தந்த உறவுகளும் உண்டாக்கும் கௌரவமும் இந்த அளவுக்கு இறங்கி வர அனுமதிக்காது என்பதுதான் நடைமுறை. அதனைத் தாண்டிச் செல்லும் மனிதர்கள் அபூர்வமானவர்கள். 
தனியார் நிறுவனங்களின் முதலாளிகள் தங்களிடம் வேலை பார்த்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறும் பொருட்டுத் திரும்பத்திரும்ப அழைக்கும் நிலைமைகள் உண்டு. அப்படி வரும்போதும் அவர்கள் தங்களின் கடந்த காலத்தின் நினைவுகளோடு வருவதில்லை; அவர்கள் வகித்த பதவி தந்த அதிகாரத்தின் சுமைகளோடு தான் வந்து போவார்கள். அரசுத்துறை நிறுவனங்கள் இதற்கு மாறானவை. முன்னோடிகளைப் பகை முரணோடு மட்டுமே நினைவில் தேக்கி வைத்திருக்கும் மனிதர்கள் நிரம்பியதாக அவை விளங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு மரத்தின் இருகிளைகளாக இருந்த போதிலும், அடுத்தடுத்து நடக்கும் ஆட்சி மாற்றங்களின் வழியே பகைமுரணை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ளும் தமிழக அரசியலின் தாக்கமும் பண்பாடும் அரசு நிறுவனங்களில் நிர்வாகத் தலைமைகளிலும் வெளிப்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒரு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரும் சந்தித்துக் கொள்ளும் பொதுவெளிகள் தமிழ்நாட்டில் துடைத்தெறியப்பட்ட பின்னணியில் எங்கள் பல்கலைக்கழகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை அதிசயத்தின் கணங்கள் என்றே வருணிக்கத் தோன்றுகிறது. அந்தக் கணங்களை உருவாக்கியவர் இப்போதைய துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன்  என்பது ஆச்சரியத்தை உச்சப்படுத்திய ஒன்று.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக வந்ததால் தனது அரசியல் சார்பை மறைக்க வேண்டும் என நினைக்காதவர் பேரா. இரா.தி. சபாபதிமோகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றிய காலந்தொட்டே திராவிட இயக்கப் பேச்சாளராகவும் அரசியல்வாதியாகவும் அறியப்பட்டவர். இரண்டு மூன்று முறை சட்டசபைத் தேர்தல்களின் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர், துணைவேந்தராக இருந்த இந்த  மூன்று ஆண்டுகளிலும் தன்னை ஒரு திராவிட இயக்க அரசியல்வாதி என்று காட்டிக் கொள்வதில் அவருக்கிருந்த மகிழ்ச்சியை நான் மட்டுமல்ல; பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அறிந்தே இருந்தார்கள். பதவிக்காலம் முடிந்தவுடன் அரசியல்வாதி என்னும் அடையாளத்துடன் பொதுவாழ்வைத் தொடர வேண்டும் என விரும்புகிறார். இந்தச் சட்டசபைத் தேர்தலில் தான் போட்டியிட விரும்பும் தொகுதியைத் தேர்வு செய்து மனுவும் செய்துவிட்டார்.

வெளிப்படையான அரசியல்வாதிக்குள் விரோதமற்ற மனம் இருக்கிறது என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.
பல்கலைக்கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் கூடாது என்பது லட்சியங்களாக மட்டுமே பேசப்படுகின்றன. யதார்த்தத்தில் நேரடி அரசியல் சார்பாளர்களும் மறைமுக ஆதரவாளர்களும் அப்பதவிகளை அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் போக்கு மாநிலப் பல்கலைக்கழகங்களில் மட்டும் தான் என்றில்லை; மையப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களிலும் இதே நிலைமைதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் கட்சி மற்றும் தேர்தல் அரசியலின் ஆணையாகவும் லாபநஷ்டக் கணக்கோடும் பார்த்துப் பழகிப்போன இந்தியா போன்ற ஜனநாயக தேசத்தில் அரசியல் சார்பற்ற மனிதர்களைத் தேடுவது அவ்வளவு எளிய காரியமுமல்ல என்றே தோன்றுகிறது. அரசியல் சார்பற்ற நியமனங்கள் நடக்கின்றன என்று சொல்வதும் நம்புவதும் அவரவர்களின் கனவும் லட்சியங்களும் தான். உண்மை ஒரு போதும் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. எது சார்புடைய அரசியல்? எது சார்பற்ற அரசியல் என்ற பேதங்களே குழம்பிப்போன பின் நவீனத்துவ யுகத்தில் லட்சியங்களும் கனவுகளும் கூடச் சார்புடையவை தானே!

20 ஆண்டுகளைக் கடந்து விட்ட திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அதன் முன்னாள் துணை வேந்தர்களையெல்லாம் அழைத்து, அவர்களின் முன்னாலேயே அவர்களின் ஒளிப்படங்களைத் திறந்து வைத்த நிகழ்ச்சி நடந்தபோது, நிகழ்ச்சி நடந்த அரங்கமும், கலந்து கொண்டவர்களின் மனங்களும் அவர்களை அறியாமல் கடந்த காலத்திற்குள் சென்று விட்டதைப் பார்க்க முடிந்தது. நானும் கூட எனது கடந்த காலத்திற்குள் பயணிக்க முடிந்தது.

பல்கலைக்கழகத்தின் 20 வயதுக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு வருடங்களை நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் கழித்திருக்கிறேன். பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கான அடிப்படைப் பணிகளைச் செய்த தனி அதிகாரியாகவும், ஓராண்டுக் காலம் அதன் முதல் துணைவேந்தராகவும் இருந்த பேராசிரியர் வேதகிரி சண்முக சுந்தரத்தை மட்டும் தான் நான் பார்த்ததில்லை; பழகியதில்லை. தனது 86 ஆவது வயதில் தான் தோற்றுவித்த பல்கலைக்கழகம் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆசையில் வந்த அவர், தன்னால் உருவாக்கப்பட்ட முரசொலி மாறன் என்னும் மாணவருக்கு ஓர் அறக்கட்டளையை நிறுவி ஆச்சரியத்தை உண்டாக்கினார்.

அவரைத் தொடர்ந்து வந்த பேரா.வே. வசந்திதேவி காலத்தில் தான் நான் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து நெல்லைக்கு வந்தேன். எனது பெண்நிலை சார்ந்த கருத்துக்களுக்கு வலுச்சேர்த்த ஆளுமை பேரா. வே.வசந்திதேவி.  தன்னை ஒரு கல்வியாளர் என்று அறிமுகம் செய்யும்போது, பொதுநிலைப் பட்ட கல்வியைக் குறிக்கக் கூடாது என்று எப்போதும் நினைப்பவர். தங்களின் உரிமைகளைக் கேட்கும் அறிவைத் தரும் கல்விக்கான முன்மொழிவுகளைச் செய்த பேராசிரியர் என்று அறிமுகம் கிடைக்க வேண்டும் என்ற நிலைபாடு கொண்டவர். இந்த நிலைப்பாடு தான் அவருக்கு இடதுசாரி அரசியல்காரர் என்ற அடையாளத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.

அவரை அடுத்து வந்த பேரா. க.ப. அறவாணன் எனது துறை சார்ந்த வல்லுநர். அந்த வகையில் எனக்கு முன்பே அறிமுகமானவர். உடையிலும் உருவத்திலும் தனி அடையாளம் கொண்டவராகவே பலரும் அறிவர். ஆனால் காலந் தவறாமையின் அடையாளமாக நான் அவரைப் புரிந்து வைத்திருந்தேன். அந்த விதத்தில் அவரைத் தொடர முயன்று சில நேரங்களில் தோற்றுப் போயிருக்கிறேன். பேரா.க.ப. அறவாணன் விடைபெற்றபோது பேரா. கு சொக்கலிங்கம் துணைவேந்தராக வந்தார். குற்றவியல் என்னும் பாடத்தைக் கற்பித்த அவரது காலத்தைப் பல்கலைக்கழகம், “கடமையும் உரிமையும்” என்ற சொல்லாடலால் நகர்த்தியது. தொழிற்சங்க உரிமைகள் என்ற பெயரில் கடமைகள் தவறினால் தண்டனை உண்டு என்பதை பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உணர்த்தியவர் அவர்தான். கடமை தவறுபவர்களையும், விதிகளை மீறுபவர்களையும் அச்சப்பட வைத்த அந்தக் காலம் அவரது வருகையின் பேரில் திரும்பவும் நினைவு கூரப்பட்டது. தான் ஏன் அப்படி இருக்க நேர்ந்தது என்பதற்கான காரணங்களைச் சொல்லி, தனது காலத்தைத் திருப்பிக் கொண்டு வந்து நிறுத்தி அவர் பேசியபோது எழுந்த கைதட்டல்கள் அந்தக் காலம் திரும்பவும் வர வேண்டும் என நினைக்கும் மனங்களின் வெளிப்பாடுகளோ என்ற எண்ணத்தைத் தந்தது.

இங்கிருந்து விடைபெற்ற பின்பு ஜப்பான் பல்கலைக்கழகம் ஒன்றில் விருந்துநிலைப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் ஜப்பானின் பொதுவாழ்க்கையும் தனிமனித வாழ்க்கையும், தனிமனித ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களால் உருவாகியிருப்பதைச் சொல்லி, அத்தகைய முன்னேறிய சமூகமாக இந்திய சமூகம் மாற வேண்டும்; அதற்கு பல்கலைக்கழகங்கள் பணியாற்ற வேண்டும்; குறிப்பாக இந்தப் பல்கலைக்கழகம் அதில் முன்னோடியாக இருக்க வேண்டும் எனச் சொன்ன போது திரும்பவும் அதே துணைவேந்தராகவே இருந்தார். தங்கள் அடையாளத்தைத் தீர்மானித்துக் கொண்ட மனிதர்களிடம் காலம் தோற்றுத்தான் போகிறது; காலத்தால் மாற்ற முடியாத அந்த அடையாளம் தான் அவரது ஆளுமை.

பேரா.கு. சொக்கலிங்கத்தைத் தொடர்ந்து துணைவேந்தராக வந்த பேரா. சிந்தியா பாண்டியன் மட்டும் அன்று வரவில்லை; ஆனால் செய்தியை அனுப்பி வைத்திருந்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்ட பல்கலைக்கழகம். இந்த 20 ஆண்டுகளில் பாதி ஆண்டுகளைப் பெண்களின் தலைமைக்குக் கொடுத்த பல்கலைக்கழகம்.  பேரா. வே.வசந்திதேவியின் ஆறாண்டுக்காலத்தையும், பேரா.சிந்தியா பாண்டியனின் மூன்று ஆண்டுக்காலத்தையும் சேர்த்து 9 ஆண்டுகள்  பெண்களின் தலைமையில் இருந்தது. ஆணுக்குப் பெண் சமம் எனச் சொன்ன பாரதி பிறந்த எட்டையபுரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் எல்லைக்குள் இருக்கிறது என்பதைக்  காரணமாகச் சொல்ல முடியாது; இருக்கிறது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். 

மனிதர்களின் நீண்ட நெடிய வாழ்க்கையில் மூன்று ஆண்டுகள் பெரிய கால அளவு இல்லைதான். ஆனால் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனத்தின் உச்சப் பதவியில் இருந்தவர்களுக்கு அந்த மூன்று ஆண்டுகளின் நினைவு தான் கொதிநிலைக் காலம். தங்களின் கனவுகள் காட்சியாக விரிந்து கிடப்பதைக் காணும் வாய்ப்பை வேண்டுபவர்கள், தங்களின் கடந்த காலத்தின் வெளிகளுக்குள் ஒருமுறை சென்று வாருங்கள். கடந்த காலம் தானே அனுபவங்கள். 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை