: 140

புலமையின் உச்சம்


 தமிழ் மொழிசெவ்வியல் மொழி  (செம்மொழி என்னும் சொல் பொருத்தமான சொல் அல்ல)  என்னும் உயர் தகுதியைப் பெறுவதற்குக் காரணமாக இருப்பன பாட்டும் தொகையுமாக இருக்கும் சங்க இலக்கியங்களே. காலப் பழைமையோடு குறிப்பிட்ட இலக்கியக் கொள்கை அடிப்படையிலான  வரையறைக்குள் இருப்பதும் அதன் சிறப்புக்கள். இவ்விரு முக்கியக் காரணங்கள் தான் அவ்விலக்கியங்களைச் செவ்வியல் இலக்கியங்கள் எனவும்அவ்விலக்கியங்கள் எழுதப்பட்ட தமிழ் மொழியைச் செவ்வியல் மொழி எனவும்
உலக இலக்கியச் சொல்லாடல்களுக்குள் நுழைத்துள்ளன.  பாட்டும் தொகையுமாக அறியப்படும் இக்கவிதைகளைச் சங்க இலக்கியங்கள் எனத் தமிழில் எழுதப்பட்டுள்ள இலக்கிய வரலாற்று நூல்கள் அழைத்தாலும் அப்படிப் பட்ட பெயர் ஒன்றைச் சங்க இலக்கியங்களாக அறியப்படும் பனுவல்களிலோஅவற்றைத் தொகுத்தவர்களின் குறிப்புகளிலோ காண முடியவில்லை.
ஒரு காலகட்டத்தில் இருந்ததாக நம்பப்படும் இலக்கியம் சார்ந்த பேரமைப்பு ஒன்றின் மூலம் (சங்கம்) அழைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகத்தில் எப்போது தோன்றியது என்பதும்அதன் பின்னணியில் இருந்த ஆகப் பெரிய சக்தி எது என்பதும் இன்னும் விளக்கம் பெறாத ரகசியங்களில் ஒன்று. சங்கத்தோடு சேர்த்து இலக்கியம் மற்றும் அல்லாமல் அரசியல் வரலாறுகளும்சமுதாய நிகழ்வுகளும்பண்பாட்டு அடையாளக் குறிப்புகளும் கூட இன்றளவும் அவ்வாறே குறிக்கப்பட்டே வருகின்றன. அதன் மீதான ஐயங்களை எழுப்பி ஆய்வு செய்யும் போக்குகள் தமிழில் அதிகம் நிகழவில்லை. சங்க இலக்கியங்கள் என்ற சொல்லாட்சி கேள்விக்கப்பாற்பட்ட சொல்லாட்சியாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இச்சொல்லாட்சியின் மீது விமரிசனங்களை வைத்துள்ள ஆ.வேலுப்பிள்ளைக. கைலாசபதிகா.சிவத்தம்பி போன்ற ஈழத்துத் தமிழ் அறிஞர்களும் கூட அதற்கு மாற்றான ஒரு சொல்லாட்சியை உருவாக்கிப் பொருத்தமாக விளக்கிக் காட்டாத நிலையில் சங்க இலக்கியங்கள் என்ற சொல்லாட்சியே இன்றளவும் தொடர்கின்றது. அதன் பின்னணியில் அதிகாரம் சார்ந்த பேரியக்கங்களின்  இலக்கியக் கோட்பாட்டுப் பார்வைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன என்பதும் இன்னோர் உண்மை.
தமிழின் ஆதி இலக்கியங்களான சங்க இலக்கியங்களை வாசிக்கும் அல்லது ஆய்வு செய்யும் மாணவர்கள்ஆய்வாளர்கள்அறிஞர்கள் ஆகியோரின் நோக்கங்களைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால் இரண்டு முக்கியமான போக்குகளைக் கண்டறிய முடியும். சங்க இலக்கியங்கள் அன்றைய காலகட்டத்துப் பண்பாட்டு ஆவணங்கள் எனப் பேசும் போக்கு அவ்விருவகைப் போக்குகளில் ஒன்று.  இப்போக்கு தான் தமிழின் பெரும்பான்மை போக்கு.அத்துடன் அதிகார அமைப்புகளின் ஆதரவு பெற்ற  மைய நீரோட்டப் போக்கு கூட. பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியாட்சியாளர்களாலும்அவர்களின் சார்பாகப் பேசிய மொழி அறிஞர்களாலும் உருவாக்கப்பட்ட மொழிசார் அரசியலின் தொடர்ச்சியாகப் பின் காலனிய காலகட்டத்தில் அவ்வரசியல் உச்சநிலையை எட்டியது. இருபதாம் நூற்றாண்டில் மொழி சார்ந்த கருத்தியல்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கி அரசியல் இயக்கங்களைக் கட்டி எழுப்பியதன் தொடர்ச்சியாக இலக்கியக் கோட்பாடுகள் முழுமையும் பயன்பாட்டுவாத நோக்கம் கொண்டனவாக மாற்றம் பெற்றன. இப்போக்கு முதலில் திராவிட இயக்கத்தவர்களாலும்பின்னர் பொதுவுடைமை இயக்கத்தவர்களாலும் உருவாக்கி வளர்க்கப்பெற்றது. எதிரும் புதிருமாக இவ்விரண்டு இயக்கங்களும் இலக்கியங்களை ஆய்வு செய்து முடிவுகளை முன் வைத்தன என்றாலும் அவை இரண்டும் பின்பற்றிய வாசிப்புக் கோட்பாடுகளும்திறனாய்வு முறைகளும் வெவ்வேறானவை அல்ல. அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களை ஆய்வு செய்து திராவிட இயக்க அறிவாளிகளும்அதன் ஆதரவுப் புலமையாளர்களும் அக்காலகட்டத்தைப் பொற்காலக் கருத்தியலுடன் இணைத்துப் பேசிய போதுஅதனை மறுத்துப் பேச விரும்பிய பொதுவுடைமை இயக்கத்தின் அறிவாளிகளும் ஆதரவுப் புலமையாளர்களும் வர்க்க வேறுபாடுகள் நிரம்பிய காலகட்டம் என்னும் கருத்தியலுடன் இணைத்தனர். முடிவுகளை முதலில் தீர்மானித்துக் கொண்ட இருசாராருக்கும் பயன்படும் தகவல்களையும் நிகழ்வுகளையும் தங்களின் பனுவலாக்கத்தில் பொதிந்து வைத்திருந்தார்கள் என்பதுதான் பத்துப்பாட்டிலும் எட்டுத்தொகையிலும் கவிதைகள் எழுதியுள்ளவர்களின் சிறப்புகள். அக்கவிதைகள் “ எந்தவித வேறுபாடுகளும் அற்ற பொற்கால வெளிப்பாடுகளே சங்க இலக்கியங்கள் ” எனச் சொன்னவர்களுக்கும்,  “இல்லைஇல்லை! பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய வர்க்கச் சமுதாயத்தின் பிரதிபலிப்பே சங்க இலக்கியங்கள்” எனச் சொல்ல விரும்பியவர்களுக்கும் அதே பிரதிகள் ஆதாரங்களாக இருந்தன என்பதைச் சிறப்புக் கூறாகத் தானே மதிப்பீடு செய்ய வேண்டும்.
உலக இலக்கியப் பார்வையோடு தங்களை இணைத்துக் கொண்டு தமிழின் சங்க இலக்கியங்களை ஆய்வுக் களமாகக் கருதும் ஆய்வாளர்களால் முன்னெடுக்கும் ஆய்வைப்போக்கை  இரண்டாவது போக்கு எனச் சுட்டிக் காட்டலாம். தொடக்க நிலையில் இத்தகைய ஆய்வுகளே  கல்விப்புல ஆய்வாளர்களில் சிலரால் (மு.வ.,தமிழண்ணல்கு.கோதண்டபாணிப் பிள்ளை) முன்னெடுக்கப்பட்டன என்றாலும்தங்களின் வழித் தோன்றல்களை அவர்கள் உருவாக்காமல் போனது மட்டுமல்லாமல் பெரும்பான்மை போக்கோடு தங்களை ஐக்கியமாக்கி அடையாளப் படுத்திக் கொண்டதால்அப்போக்கு இன்று கைவிடப் பட்ட ஆய்வு முறையாகத் தோற்ற மளிக்கிறது. ஆனால் அதுவே வளர்த்தெடுக்கப்பட வேண்டிய போக்கு எனச் சொல்வதில் எனக்குப் பின் யோசனையே கிடையாது. அப்படியான முயற்சிகளைப் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்ட உருவாக்கங்களில் ஈடுபடும் வல்லுநர்கள் உடனடியாக முன் எடுக்க வேண்டும் எனக் கூறவும் விரும்புகிறேன். அப்படிச் செய்யவில்லையென்றால்சங்க இலக்கியங்களை அதன் செவ்வியல் தன்மையோடு வாசிக்கவும்விவாதிக்கவும் வல்ல மாணவத் தலைமுறைகள் உருவாகாமல் தடுத்த குற்றத்தைச் செய்தவர்களாக ஆகிவிடுவார்கள்
கல்விப்புல ஆய்வுகளில் விரும்பப்படாத போக்காகவும்கல்விப்புலமல்லாத சொல்லாடல்களின் மரபு பற்றிய எதிர்மறைப் பார்வையோடும் அரைகுறைப் புரிதலோடும் கைவிடப்பட்ட ஒன்றாக இருக்கும் இத்திறனாய்வு முறை இன்னும் மறைந்து விடவில்லை என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பொன்றை அண்மையில் வாசித்து முடித்தேன்.  இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம் என்னும் தலைப்பில் பேராசிரியர் அ.அ.மணவாளன் எழுதிய அக்கட்டுரைகளில் சிலவற்றை ஏற்கெனவே வெவ்வேறு தொகுப்புகளில் வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்போது முழுத்தொகுப்பாக வாசிக்கும் வாய்ப்பை நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது. அத்தொகுப்பில்
1.         பனம்பாரனாரின் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்
2.         தொல்காப்பியமும் அரிஸ்டாடிலின் கவிதையியலும்
3.         சங்க இலக்கியக் கொள்கைகள்
4.         அகப்பொருள் மரபும் திருக்குறள் காமத்துப்பாலும்
5.         அகப்பொருள் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம்
6.         அகப்பொருள் மரபுகளும் பக்தி இலக்கியங்களும்
7.         அகப்பொருள் மரபுகளும் சிற்றிலக்கியங்களும்
8.         சங்க இலக்கிய உவமைகளில் கற்பனை
9.         சங்க இலக்கியத்தில் கைக்கிளைப் பாடல்கள்
10.       வடமொழி இதிகாசப் பொருண்மைக்குச் சங்க இலக்கியத்தின் நன்கொடை
11.       சங்க இலக்கிய உரைகள் - சில ஐயங்கள்
12.       சங்க இலக்கியத்தின் மொழி பெயர்ப்பின் பங்கு
13.       சங்க இலக்கியமும் காதா சப்த சதியும்
எனத்தலைப்பிட்ட 13 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் திறனாய்வின் அடிப்படைச் செயல்பாடுகளான ரசனையைத் தூண்டுதல்,பனுவல்களின் கட்டமைப்பு முறையைப் பகுப்பாய்வு செய்தல்இலக்கிய வரலாற்றில்(உள்ளூர் இலக்கிய வரலாற்றில் அல்லதேசிய மற்றும் உலக இலக்கிய வரலாற்றில்) சங்க இலக்கியங்களின் இடத்தை உறுதி செய்தல் என்ற மூன்று கூறுகளையும் முக்கியமானதாகக் கருதியுள்ளன என்பதை முக்கியமானதாக நினைக்கிறேன். காத்திரமான இலக்கியப் பனுவல்களைக் கொண்டிருக்கும் மொழிகளின் பொதுக்குணத்தோடு சங்க இலக்கியங்கள் எவ்வெவ்வகையில் பொருந்திப் போகின்றன என்பதைப் பேசும் கட்டுரைகளோடு சங்க இலக்கிய மரபுபின் வந்த தமிழ் இலக்கிய மரபில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விரிவாகப் பேசும் கட்டுரைகள் இத்தொகுப்பின் பாதியாக உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் ஆய்வாளர்கள் மட்டுமே படிக்க வேண்டிய கட்டுரைகள் அல்ல. தமிழ் மொழியைத் தனது வெளிப்பாட்டுச் சாதனமாகவும்தனது தன்னிலையை உருவாக்கிய கருத்தியல் சாதனமாகவும் நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை எனக் கூறுவேன். பேராசிரியர் அ.அ. மணவாளரின் புலமைக்கு வணக்கங்கள்.

இலக்கிய ஒப்பாய்வு: சங்க இலக்கியம்
டாக்டர் அ.அ.மணவாளன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்சென்னை -98
பக்.254. விலை.ரூ.120
============================================================= 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை