: 33

ஒன்றியங்களால் ஆனது இவ்வுலகு


பெரும்பான்மை - மக்களாட்சிக் காலத்தின் புனிதச் சொல். 
எல்லாப் புனிதச்சொற்களின் பின்னால் தன்னலம் ஒளிரும்; அபத்தம் ஒழிந்துகொள்ளும். இது எனது நம்பிக்கை. வரலாறு பலதடவை இதை நிரூபித்திருக்கிறது. இன்று திரும்பவும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ‘பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்’ அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். 48.1சதவீதம்பேர் பிரியவேண்டாம் என்றுசொல்ல, 51.9 சதவீதம்பேர் பிரிவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். பெரும்பான்மையென்பதைப் புனிதச் சொல்லாக ஆக்கிய சதவீதம் 3.8 சதவீதம் தான். புனிதத்தின் முதல் பலி. அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகிவிட்டார்.

'முடிவைப்பார்; பாதையைப் பார்க்காதே' என்பதைக் கடைப்பிடித்து உருவாக்கப்படும் புனிதச்சொற்கள் எப்போதும் தன்னலம்கொண்ட சிறுகூட்டத்தால் உருவாக்கப்படுகின்றன. பக்கத்தில் இருப்பவர்களை ஏதாவதொரு காரணம்சொல்லிப் பகைவர்களாகப் பார்க்கச்சொல்லும் கூட்டம் மனிதர்கள் கொள்ளும் ‘பகைமை’ இயல்பானது எனப் பேசிச் சமாளித்து வருகிறது. உலக அளவில் உண்டாக்கப்படும் பகைமைக்குப் பின்னால் மனிதர்கள் பின்பற்றும் சமயநடவடிக்கைகள், நிலவியல் அடிப்படையில் உருவாகும் நிறம் மற்றும் உடல்வாகு, அதன் வழியாக அடையாளப்படும் இனம், குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் இருப்பவர்களோடு தொடர்புகொள்ள உருவாக்கிக்கொள்ளும் தகவல் கருவியான மொழி, அதன்வழியாக உருவாகும் பண்பாடு போன்றனவெல்லாம் புனிதச்சொற்களின் அர்த்தத்தை உருவாக்குகின்றன. ஆனால் இவையனைத்தும் அதனதனளவில் தன்னலத்தை ஊட்டிவளர்க்கும் கருவிகள் என்பதை உணர்வதில்லை மனிதக்கூட்டம்.
வாய்க்கால் மற்றும் வரப்புத்தகராறில் தொடங்கிக் கொலைகளில் முடியும் பங்காளிச்சண்டைக்குப் பின்னால் இருக்கும் தன்னலம்தான் உலக அளவில் பெரும்போர்களாக மாறியிருக்கின்றன. குட்டிகுட்டி நாடுகளாகப் பிரிந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே நடந்த பங்காளிச்சண்டைகள் தான் இரண்டு உலகப்போர்களையும் உருவாக்கிய உண்மையை வரலாற்றுப் புத்தகங்கள் வெளிப்படையாகச் சொன்னதில்லை. இரண்டு உலகப்போர்களிலும் வெற்றிபெற்ற அணியின் தலைமைப் பங்காளியான பிரிட்டனின் தன்னலம், இயல்பான புனிதச் சொல்லாடல்களால் மூடி மறைக்கப்பட்டன.
தேசங்களுக்கான அடையாளங்களைக் கொண்டிருந்தபோதும் ஒன்றியங்களாக இருப்பதன் பொருளாதார நலனும் அரசியல் அதிகாரமும் வல்லாண்மை மிக்கவைதான். என்றாலும் பங்காளிச் சண்டைகளைத் தவிர்க்கும் என்பது அதன் நேர்மறைப் பலன. சோவியத் ஒன்றியம் உடைந்ததின் பலன்களை அனுபவிக்கின்றன அவற்றின் உறுப்பு நாடுகள். சோவியத் ஒன்றியத்தின் நட்பு ஒன்றியமாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் உடுக்கை இழந்தவன் கைபோலத் தவித்துக்கொண்டிருந்த வரலாற்றை உலகம் கவனிக்கவில்லை. தன் கைகளே தங்களுக்கு உதவமுடியும் என்பதை உணர்ந்த கிழக்கு ஐரோப்பிய மக்கள் உழைத்தார்கள். ஓடி ஓடி உழைத்தார்கள். சோசலிசக் கட்டுமானத்திலேயே உழைப்பின் அவசியத்தை உணர்ந்திருந்த போலிஷ் நாட்டினரும் ருமேனியர்களும் ஹாலந்தினரும் கடும் உழைப்பாளிகள். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதைக் கைக்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டதைப் பயன்படுத்தித் தங்களது உழைப்பை ஜெர்மனி, நார்வே, சுவீடன், பிரிட்டன் என தொழிற்சாலைகள் நிரம்பிய நாடுகளுக்குச் சென்று வழங்கினார்கள். இழப்பதற்கு எதுவுமில்லை; உடல் உழைப்பைத் தவிர என்ற நிலையில் அவர்கள் தந்த உழைப்பின்வழியாக வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து உழைப்பாளிகள், பிரிட்டனின் வேலைவாய்ப்புகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற பொய்ப்பிரசாரத்தை முன்வைத்துப் பேசும் கூட்டம் நமது தேசம் நமக்கானதாக இருக்கவேண்டும் என்று பேசுகின்றது. இதன் மறுதலையாக பிரிட்டன், ஜெர்மனி, பிரெஞ்சு நாட்டுப் பெருமுதலாளிகளின் வியாபாரக்குழுமங்களும் தொழில் குழுமங்களும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் வியாபாரங்களையும் முதலீடுகளையும் அதன்வழியாக வரும் லாபத்தின் பங்கு தங்கள் நாட்டுக்கு வருவதைப் பற்றிப் பேசுவதில்லை. அமெரிக்க ஒன்றியத்திலும் அப்படியொரு குரல், புதிய அதிபர் வேட்பாளர் வடிவில் வந்துள்ளது. அவரது குரல் அண்டை நாட்டு உழைப்பாளிகளான மெக்சியர்களைக் கைகாட்டி ஓங்கி ஒலிக்கிறது. ஆஸ்திரேலியாவிற்குள் இனி ஆசியர்கள் வரவேண்டாம் என்ற குரல் எழும்பப்போகிறது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்கிவிடாமல் தடுப்பதில் இருப்பது யாருடைய நலன் என்பது புரியாத புதிர். வளைகுடா நாடுகளுக்குள் வரும் இந்தியர்கள், இலங்கையர்களுக்கெதிரான குமுறல்கள் பலகாலமாகக் கேட்டுக்கொடிருக்கின்றன. தென்னாசிய நாடுகளின் ஒன்றியத்தை உருவாக்க நினைத்தபோது எதிர்ப்புகள் உள்ளும்புறமும் எழுந்தன. எழுப்புபவர்கள் சொல்லும் ஒருவார்த்தை தேசப்பற்று எனும் புனிதச்சொல். தேசப்பற்றின் பின்னிருப்பதும் பங்காளிச்சண்டைதான். இந்தப் பின்னணிகளோடு ஒரு வாக்கியம் அர்த்தமுடையதாக இன்னும் இருக்கிறது.
உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். இது புனிதச்சொல்லோ வாக்கியமோ அல்ல. கேள்விகளற்று ஏற்றுக்கொள்வன மட்டுமே புனிதச்சொற்கள். ஒன்றிணைப்பிலிருந்து உருவாவது ஒன்றியம். ஒன்றியங்களாலானது இவ்வுலகு


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை