: 44

பழைய பாதைகள்; பழைய பயணங்கள்


”இந்தத் தேர்தல் தரப்போவது புதிய அனுபவம்” -ஐந்தாண்டுக்கொரு முறை வரும் தேர்தலைக் கணிக்கமுயல்பவர்கள் ஒவ்வொரு தடவையும் சொல்லும் வாசகம் இது. திரும்பத் திரும்பச் சொல்லப்படும் சலிப்பு வாக்கியம் என்றாலும், இந்தச் சலிப்பு வாக்கியத்தைச் சுவாரசியமாக்குபவை ஊடகங்கள்தான். ஒவ்வொரு நாளையும் புத்தம்புதிய ஒன்றுமூலம் தொடங்கவேண்டும் என்று நினைப்பது ஊடகப்பணிக்கோட்பாட்டு. ஊடகங்களால் நிகழ்த்தப்படும் இந்தத் தேர்தலையும் அவை புத்தம்புதியது எனச் சொல்லி முன்வைக்கின்றன.
ஊடகங்களுக்குத் தேவை புதியன. முகங்கள், விவாதங்கள், நிகழ்வுகள், செயல்பாடுகள், கருத்துகள், சொல்லாடல்கள், முன்மொழிதல்கள் என ஒவ்வொன்றிலும் புதியன வேண்டும். ஆனால் நடப்பதென்னவோ பழையனவாகவே இருக்கின்றன என்றாலும் புதிய வண்ணங்களும் தென்படுகின்றன. அந்தப் புதிய வண்ணங்களில் ஒன்றாகத் தேர்தல் அறிக்கைகளைச் சொல்லலாம். தேர்தல் ஓட்டத்தில் முதலில் இறங்கும்  அ இஅதிமுக, ‘தேர்தல் அறிக்கை என ஒன்றை வெளியிட்டுத்தான் ஆகவேண்டுமா?’ என்று சலிப்போடு தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தது; கடைசியில் போனால் போகிறது என்று வெளியிட்டுவிட்டது.

பா.ஜ.க., பா.ம.க., நா.த.க. மக்கள் நலக்கூட்டணி, தி,மு.க., அ இஅதிமுக. என ஆறுபேரும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டுப் போட்டிக்களத்தில் இறங்கிவிட்டார்கள் நடக்கப்போகும் ஓட்டப்பந்தயத்தில் ஆறுபேரும் கோட்டைத் தாண்டலாம். ஆனால் முதலில் வருபவருக்குக் கேடயம் என்பது ஓட்டப்பந்தயவிதி. ஆனால் சில கட்சிகள் இந்தப் பந்தயத்தை தொடரோட்டமாக நினைத்துத் தனித்தனித் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளன. நாங்களும் ஓடினோம் எனக் காட்டும் நோக்கமாக இருக்கலாம். தி.மு.க.வின் கூட்டணியில் இருக்கும் காங்கிரசும், மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் த.மா.கா.வும், தேமுதிகவும் தனித்தனியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பதை வேறெப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?
கடைசியாக வந்துள்ள அ இஅதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும்வரை காத்திருந்து  வாசித்துப் பார்த்தபின் தோன்றிய  உணர்வு இது: இரண்டு பீட்சா; மூன்று பானையில் பழைய சோறு. ஒரு கிண்ணியில் மாங்காய் வடு.
பா,ம.க.வும் நா.த.கட்சியும் முன்வைத்துள்ள தேர்தல் அறிக்கைகள் காகிதத்தட்டில் வைத்துத் தரப்பட்டுள்ள பீட்சாக்கள்.. ஆட்சியைப் பிடிக்கப்போவதில்லை; பிடிப்பது இந்தத் தேர்தலில் நோக்கமுமில்லை என்று தெரிந்தபின் தீர்மானமாக முடிவு எடுத்த இந்த இரண்டு கட்சிகளும் பழைய பானையில் சமைக்காமல் புதிய பண்டமாகத் தேர்தல் அறிக்கையைத் தந்துள்ளன. அதற்காக வெளியில் தெரியாத ரகசியச் செய்முறைகளைப் பின்பற்றி உருவாக்கியிருக்கின்றன. வெளிநாட்டு உள்நாட்டுச் சமையல் குறிப்புகளைக் கொண்டு சமைக்கப்பட்டுள்ள இந்தப் பீட்சாவைத் தமிழ்நாட்டு மக்கள் சாப்பிட்டுப் பார்ப்பார்களா? என்று தெரியவில்லை. பழைய கடைக்காரர்கள் என்றாலும், புத்தம்புதிய கண்ணாடிகளை வாங்கிப் பீட்சா செய்து காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். பரோட்டோவைத் தமிழர் உணவாக மாற்றிய தமிழர்கள், பீட்சாவைச் சாப்பிட ஆரம்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கை இந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கிறது. ”நாங்கள் ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கிறோம்” என்பதை உணர்த்து விரும்புவதே அவர்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவ்விரண்டு கட்சிகளும் முதன்மையாக நம்பிய கருவி தேர்தல் அறிக்கைதான். அதனை முன்வைத்து முதன்மைப் போதகர்களாகப் பவனி வருகிறார்கள் இளைய தலைவர்களான அன்புமணியும் சீமானும்.
திமுகவும் அஇஅதிமுகவும் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தேர்தலிலும் புதியதான இருப்பதில்லை. நீண்ட அனுபவங்களைக் கொண்ட அந்தக் கட்சிகளுக்குத் தங்களின் வாக்கு வங்கிகள் எவை என்பது தெரியும். அதனைச் சரியாகக் கணக்கிட்டு நிலை நிறுத்திக்கொள்ளவும், வெற்றிக்குத் தேவையான கூடுதல் வாக்குகளைப் பெறும்பொருட்டுப் பொதுத்தளப் பார்வையை வெளிப்படுத்துவதுமே அவ்விரண்டு கட்சிகளின் வெற்றி ரகசியம். பிராமணரல்லாத இடைநிலைச் சாதிகளிலிருந்து உருவான நடுத்தரவர்க்கம் திமுகவின் ஆதார வாக்குவங்கி. அரசுப் பணியாளர்களாகவும் பொதுத்துறைகளின் ஊழியர்களாகவும் தனியார்துறையில் பணியாளர்களாகவும் இருக்கும் இவர்களின் நலன்களுக்கான குறிப்புகள் தூக்கலாகவே இருக்கின்றன. இக்குறிப்புகளோடு பொதுத்தளக்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் அனைத்துத் தரப்பு மனிதர்களின் கவனத்தையும் ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கை அந்தத் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுகிறது.
ஆளும் அஇஅதிமுகவின் வாக்குவங்கி கிராமப்புற விவசாயிகளும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்களும் என்பது பல தேர்தலில் நிரூபிக்கப்பட்ட உண்மை. சிறுகுறு விவசாயிகள் எனப் பட்டியலிடப்படும் குடும்பங்களுக்காகவும், உதிரித் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடியாகப் பங்கேற்கும் விதமாகவும் அமையும் பல நலத் திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது ஆளுங்கட்சி. தொடர்ச்சியாகத் தங்கள் உடல் உழைப்பைச் செலுத்தத் தயாராக இருக்கும் மனிதர்களுக்குத் தேவை அரசின் ஊக்கம் மட்டுமே. அத்தகைய ஊக்கத்தை அளிக்கும் மானியங்களையும் இலவசங்களையும் முன்வைக்கும் இந்த அறிக்கையை நம்பி அதன் வாக்குவங்கி தொடர்ந்து வாக்களிக்கக்கூடும். ஆனால் பொதுத்தள வாக்குகளை எதிர்நோக்கி அதன் அறிக்கையில் எதுவும் இல்லை.
ஆளும் கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் மாற்று எனத் தங்களை நம்பவைக்க முயன்றுள்ள மக்கள் நலக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை முற்றிலும் புதிய பண்டமல்ல. ஆளும், ஆண்ட கட்சிகளின் திட்டங்களிலும் நடைமுறைகளிலும் இருந்த தவறுகளைச் சரிசெய்து, சரியான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம், அனைத்துத் தரப்பினருக்குமான குறைந்த பட்ச நலன்கள்  கிடைக்கச் செய்வதை உறுதிசெய்வோம் என்பதான முன்மொழிவே அதிகம் காணப்படுகிறது.
தமிழகத்தில் வாழும் மனிதர்களைக் கூறுகட்டித் தங்கள் வாக்குவங்கிகளாக நினைக்கும் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கைகளை அவர்களை நோக்கியே முதன்மையாக முன்வைக்கின்றன. அவர்களின் நலன்களைக் கவனத்தில் வைத்திருக்கிறோம் என்பதைத் தனித்தனியாக எண்ணிட்டுப் பட்டியல் போட்டுக்காட்டுகின்றன. அதன்மூலம் உங்கள் நலன்புரிச் சங்கம் நாங்களே என்பதைச் சொல்லமுயல்கின்றன. இது பழைய பாதைதான். பழைய பயணம்தான்.
தங்களின் வாக்குவங்கிகளுக்குத் தேவையானவைகள் இவை என்பதை அறிந்துசொல்லும் அரசியல் கட்சிகள் அவற்றைச் செய்யத் தேவையான நிதித்தேவை, உள்கட்டமைப்பு உருவாக்கம், அதனைச் செயல்படுத்தும் நிர்வாக அமைப்பில் செய்யப்போகும் மாற்றம் பற்றி எப்போதும் பேசியதில்லை. இப்போதும் இந்தத் தேர்தல் அறிக்கைகளிலும் பேசவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்பதை எப்படிப் புரிந்துகொண்டுள்ளன என்பதைப் பற்றிய அடிப்படை வெளிப்பாட்டைக் கூட ஆண்ட கட்சியும் ஆளும்கட்சியும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை.இப்போதும் வெளிப்படுத்தவில்லை. மாற்று எனவும், புதியன எனவும் காட்டும் மக்கள் நலக்கூட்டணியும், பா.ம.க.வும், நா.த.க.வும்கூடக் கவனப்படுத்தவில்லை. இனிவரும் ஐந்தாண்டுகளும் கழிந்துபோன ஐந்தாண்டுகளாகவே இருக்கப்போகின்றது


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை