: 26

மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர்ச் சரக்குகள்


ஆங்கிலத்தில் ஓரியண்டல்(Oriental),ஆக்சிடெண்டல்(Occidental) என இரண்டு சொற்கள் உள்ளன. அவ்விரு சொற்களையும் எதிர்ச்சொற்களாகப் பயன்படுத்தும் போக்கு 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளின் வணிகக் குழுமங்கள் வியாபாரத்திற்காக ஆசியஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வந்த போது
அவர்கள் சந்தித்த மனிதர்களின் இயங்குநிலையை விளக்கும் சொல்லாக  ஓரியண்டல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சமயம் போன்ற பழைய நிறுவனங்களின் நம்பிக்கை சார்ந்த விதிகளானாலும்சரிஅரசுகல்வி நிறுவனங்கள்,சட்டம்- நீதிமன்றம்மருத்துவமனை போன்ற புதிய அமைப்புகளின் விதிகளானாலும்சரி மனிதனின் தேவையை மையப்படுத்தி உடனடி மாற்றங்களுக்குத் தயாராகும் - ஆக்சிடெண்டல்(Accidental)- தற்காலிக மனப்போக்கு ஐரோப்பிய வாழ்க்கை முறையில் இருக்கிறது. ஆனால் நாங்கள் சந்தித்த - ஐரோப்பா அல்லாத கண்டத்து மனிதக் கூட்டங்களிடம்அதிலும் குறிப்பாக ஆசிய நாடுகளான இந்தியாசீனாஜப்பான்தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளின் மனிதர்களிடம் அத்தகைய போக்கு இல்லை. மேற்குலகத்தவர்களாகிய வெள்ளையர்களிடமிருந்து பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என விளக்கினார்கள்.

இந்த வேறுபாடுகளைக் குறித்த அறிவே பின்னர் கீழைத்தேயவாதச் சிந்தனைகள் x                                                                       மேலைத்தேயவாதச் சிந்தனைகள் என எதிரெதிர் நிலைப்பாடுகளுடன் கூடிய சொல்லாடலாகக் க் கலைஇலக்கியம்பண்பாடுதத்துவம்  போன்ற மென்புலத் துறைகளிலும் அவற்றைத் தொடர்ந்து அரசியல்பொருளாதாரம்சமூகவியல் போன்ற வன்புலத்துறைகளிலும் புழக்கத்தில் இருந்து வந்தன. காலனிய நாடுகளாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் இருந்து வந்த காலங்களில் எழுதப்பட்ட நூல்களில் இதே சொல்லாடல்கள் காலனிய நாடுகள் xகாலனிய ஆதிக்க நாடுகள் என்ற முரணாக மாறின. காலனிய நாடுகளின் எழுச்சிகளும் விடுதலைகளும் முடிவுற்று அரசியல் விடுதலைகள் சாத்தியமான பின்னர் அந்தச் சொல்லாடல்கள் காலனிய காலம் பின்காலனிய காலம் என்பதாக வடிவம் பெற்றன. இவையே இப்போது உலகமயச் சூழலில் வேறு வகையான முரண்களாகத் தோற்றம் அளிக்கவும் பரிமாணம் கொள்ளவும் முயல்கின்றன. அவற்றில் ஒன்று அடையாளத்தைத் தேடுதலும் தக்கவைத்தலும்.

ஏகாதிபத்தியப் பொருளாதார உறவுகள்உலகமயப் பொருளாதார உறவுகளாக மாற்றம் பெற்றுள்ள இன்றைய சூழலில் அடையாளத்தைத் தேடுதலும் தக்க வைத்தலும் வரவேற்கத்தக்க ஒன்றாகவும் உடனடியாகக் கைக்கொள்ள வேண்டிய புரட்சிகரச் செயல்பாடாகவும் பேசப்படுகின்றனமுன் வைக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் எதிர்வுகளாகவே நிறுத்திப் பார்த்து அதில் ஒன்றின் ஆதரவாளர் களாகத் தம்மை நிறுத்திப் பேசியே பழக்கப்பட்டுப் போனவர்கள் இப்போதைய சூழலில் - அரசியல்,பொருளாதாரம்சமூகம்கல்விகலைஇலக்கியம் என எல்லாத் தளங்களிலும் நமது அடையாளத்தைத் தேடுதலும் தக்க வைத்தலுமே சரியான மாற்று நிலைப்பாடு என வலியுறுத்துகின்றனர். இந்த வலியுறுத்தல்களும் முன்மொழிவுகளும் அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை என்பது எனது எண்ணம். உலகமயமாகும் முதலாளியப் பொருளாதார உற்பத்தியின் தொடர் சங்கிலிகளை அறுக்க வேண்டும் என்பதற்காக- கண்ணுக்குப் புலப்படாது அடியாளத்தில் நெளியும் அதன் ஆதிக்கக் கண்ணிகளைச் சிதைக்க வேண்டும் என்பதற்காக அடிப்படை வாதங்களை ஆதரிக்கும் நிலைபாட்டை இந்த வலியுறுத்தல்கள் முன் வைக்கின்றனவோ எனத் தோன்றுகிறது. அதிலும் சாதிய முரண்களின் மேல் கட்டப்பட்டுள்ள இந்தியச் சூழலில் பின்னோக்கிய இந்தப் பயணங்கள் சாதியத்தை ஏற்கச் செய்யும் ஆபத்தைக் கொண்டு வந்துவிடும் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் எழுபத்தைந்து வயதைத் தாண்டியவராக வாழும் சிலருக்குக் காலனிய ஆட்சிக்கெதிராக நடந்த போராட்டங்களின் நிழல் படிந்த ஞாபகங்கள் நினைவில் இருக்கலாம். நிழலை விலக்கி ஞாபகங்களைச் சொல்லும் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. காரணம் நிகழ்கால இந்திய சமூகம் விடுதலைக்குப் பிந்திய மனிதர்களால் நிரம்பி விட்டது. மொத்த மக்கள் தொகையில் ஆறில் ஐந்து பங்கு 1947 க்குப் பின் பிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கெடுப்பு சொல்கிறது. அதிலும் 2000 க்குப் பிந்திய இந்திய சமூகம் என்பது முற்றிலும் வேறானதாக இருக்கிறது. இப்போது கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ படிக்கும் மாணாக்கர்களிடம்  வந்தே மாதரம்’ என்ற சொல் பற்றிக் கேட்டால் ஏ.ஆர். ரகுமானின் ஆல்பத்தின் பெயர் என்பது மட்டும் தான் தெரியும். இந்தத்தலைமுறை எந்தப் பொருள் குறித்தும் அதன் மூலத்திற்குள் சென்று தேடுவதில்லை என்று வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ராணியாரை நீடுழி வாழ்க என வாழ்த்துவதற்காக எழுதப் பட்ட அந்தப் பாடல் சுதந்திரப் போராட்ட காலத்தில் சூழலால் அர்த்தம் மாறியது என்பதை இந்தத் தலைமுறை நினைத்துப் பார்க்கப் போவதில்லை. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்த மடம் எனும் வங்கமொழி நாவலிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்த போது , “வந்தே மாதரம் என்போம்மா நிலத்தாயை வணங்குதும் என்போம்” என்று எழுதிஅந்த வரிகளுக்குள் தேசப்பற்று என்னும் உணர்ச்சியைப் பிடித்துத் திணித்தான் பாரதி என்று விளக்கும் நூல்கள் இருக்கின்றன என்று சொல்லிப் பட்டியல்களைத் தந்தால்அவர்கள் அவற்றை எடுத்துப் படிக்கப் போவதில்லை. இப்போதைய தேவைக்கான தகவல்களை மட்டும் தரும் கல்வியாக உயர்கல்வி மாறிக் கொண்டிருக்கும் ஆபத்து உணரப் படவேண்டும். ஐரோப்பிய மனநிலையை நேர்மறையாகவோஎதிர்மறையாகவோ தனக்குள் உள்வாங்கியதாகவே இந்தியத் தன்னிலை அல்லது தமிழ்த் தன்னிலை என்பது உருவாகி இருக்கிறது. இது நிகழ்கால இருப்பு .

பிரிட்டானியர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில்அதன் ஆளுகைப்பரப்பாக இருந்த பிரதேசங்களிலும் கூட பிரிட்டானிய இந்தியர்கள் என்ற தன்னிலை முழுமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அதே போல் இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நிகழ்ந்த கால கட்டத்திலேயே கூட அதன் ஈர்ப்பு எல்லைக்குள் வராதவர்களாகப் பல கோடிப் பேர் இருக்கத்தான் செய்திருப்பார்கள். அவர்களின்  உருவாக்கம்  காலனி ஆட்சியாளர்களின் திட்டமான பிடிமானத்தால் உருவாகாமல்அதன் நேர்மறைத் தன்மையிலிருந்தும் எதிர்மறைத் தன்மையிலிருந்தும் உருவாகியிருக்கக் கூடும். அப்படியான உருவாக்கம் ஒருவிதத்தில் விலகிய நிலையின் வெளிப்பாடு. இது கடந்த கால வரலாறு.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டானியர்கள் வெளியேறிவிட்டார்கள்ஆட்சியதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாறிவிட்டது . ஆனால் பிரிட்டானியர்கள் இந்தியாவில் இருந்த போது  இந்திய சமூகத்தை என்னவாக மாற்ற நினைத்தார்களோ அதன் சாயல் எல்லாத் தளங்களிலும் படிந்து கிடக்கிறது. ஐரோப்பியர்களின் மொழி இங்கு கல்விப்புல மொழியாகவும்தொடர்பு மொழியாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியர்கள் வெளியேறிய பின்னும் ஐரோப்பிய அறிவு இங்கு தங்கியிருந்ததுதங்கியிருக்கிறது. அதனை முற்றிலும் விலக்கி அனுப்பி விட வேண்டும் என்ற வேட்கை பலரால் முன் வைக்கப்பட்டதும் உண்டு. என்றாலும் இந்திய வெகுமக்களிடம் அவை முழுமையான செல்வாக்கைப் பெற்று விடவில்லை என்பதும் உண்மை.

இந்தியப் பண்பாட்டின் பெருமையும் தமிழ்ப் பண்பாட்டின் பாரம்பரியமும் ஆரவாரமான கூச்சல்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பியர்களின் பண்பாடு விரும்பத் தக்க பண்பாடு என்று கருதுபவர்கள் வெளியில் அதிகம் பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் நம்பும் அதைப் பேசிக் கொண்டிருக்காமல் நடைமுறையில் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆழமான உண்மை.

இந்தியப் பண்பாட்டை அல்லது தமிழ்ப் பண்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாதிடுவது உண்மையில் நன்மையின் பாற்பட்டதாஅதனை ஏற்றுக் கொண்டு ஐரோப்பியப் பண்பாட்டை விலக்கி விடும் வேலையைத் தொடங்கலாமாஉண்மையில் பண்பாடு என்பது எதில் இருக்கிறதுஉடுத்தும் உடை வழியாகவும் உண்ணும் உணவின் வழியாகவும் வெளிப்படுவதுதான் பண்பாட்டின் வெளிப்பாடா?
இந்தியப் பாரம்பரிய அறிவைப் பெற்றுக் கொள்ளும் விதமாக நமது கல்வி நிறுவனங்களை மாற்றி விட்டு ஐரோப்பியக் கல்விமுறையையும்ஐரோப்பிய அறிவையும் வெளியேற்றி விடலாமாஐரோப்பிய மனநிலை நீங்கி விட்டால் உண்டாக்கப்படும் இந்திய மனநிலையில் இருப்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளத் தக்க மன நிலை தானா?  பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட வேண்டிய இந்தக் கேள்வியை இங்கே ஒரேயொரு தளத்தில் மட்டும் விவாதிக்கலாம். அதன் வழியாக மற்ற தளங்களுக்கும் நாம் நகர்த்திக் கொள்ளலாம்.

ஆங்கிலேயர்களை வெளியேறச் சொன்ன போது உண்டாக்கப் பட்ட உணர்வு தான் தாய் மண்ணை வணங்குதல். ஆனால் இன்று அந்தச் சொல்லாடல் என்ன அர்த்தத்தில் இருக்கிறதுஎது தாய் மண் என்று கேள்வி தான் விதம் விதமாக கேட்கப் படுகிறது. இந்தியா என்ற தேசத்தின் மண்ணாதமிழ்நாடு அல்லது கேரளம் அல்லது கர்நாடகம் என்ற மாநிலத்தின் தாய்மண்ணாதேசிய வாதத்திற்கு எதிராக மாநிலவாதம் பேசிய கட்சிகள் உருவாக்கும்  மண்ணின் மைந்தர்கள் என்ற கருத்துப் படிமம் நன்மையா?தீமையா?

உலக அளவில் அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகாரமுறைமையும்பன்னாட்டு வணிகக் குழுமங்களும் இங்கே வருகின்ற போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும்முல்லைப் பெரியாறு நீரைத் தமிழ் நாட்டிற்குத் தரக்கூடாது எனச் சொல்லும்போது உச்சரிக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் என்ற சொல்லாட்சியும் ஒரே பொருள் உடையதுதானா?

இந்த சொல்லாட்சிகள் இலக்கியம்பண்பாடு போன்ற தளங்களிலும் இன்று விரிவாக விவாதிக்கப் படுகின்றன. உலகம் தழுவிய இலக்கிய வகைகளையும்பொது மனிதர்களையும் எழுதுவதை விட்டுவிட்டு ஒவ்வொரு வட்டாரத்தையும் முக்கியப்படுத்தும் வட்டார எழுத்து முறையும்விளிம்பு நிலை மனிதர்களும் இலக்கியங்களிலும் கலைகளிலும் பதிவு பெற வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது. இந்த வலியுறுத்தல் ஆதரிக்கப்பட வேண்டிய ஒன்று எனச் சொல்லும் அதே நேரத்தில் எதிர்முனையில் இத்தகைய படைப்பாளிகளும் பண்பாட்டுச் செயலாளிகளும் வட்டார வாதத்திற்குள் மெல்ல மெல்லப் போய்ச் சேர்ந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இந்தியா என்ற பெரும்பரப்பிற்குள் மாநில வாதம் தலைதூக்குவது போலவே ஒரு மாநில எல்லைக்குள் வட்டாரவாதம் தலைதூக்கும் ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஓர் அரசுக் கல்லூரி ஆசிரியரின் பணி அனுபவமும் வாழ்க்கை அனுபவங்களும்  இதற்கு சரியான உரைகல்லாக அமையும். தென் தமிழ்நாட்டு மக்கள் மதுரைக்கு வடக்கிலிருந்து வந்து தங்கள் ஊரில் இருக்கும் ஒரு அதிகாரியை அந்நியர்களாகக் கருதும்படி தூண்டப்படுகிறது. கொங்கு நாட்டிற்குரிய வட்டார மொழியோடு தஞ்சாவூரில் பணியாற்றும் மனிதர்கள் கேலிக்குரியவர்களாக ஆகி விடுகிறார்கள்.

வட்டார மொழியில் எழுதப் பட்ட இலக்கியம்வட்டாரத்தில் உழைத்து ஓடாகிப் போன மனிதனின் குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளி வந்தன. ஆனால் அந்நோக்கம் ஆதிக்கத்தின் குறியீடாக ஆகிக் கொண்டிருக்கிறது. புதுமைப் பித்தனின் கதாபாத்திரங்கள் பேசிய திருநெல்வேலித் தமிழ் அங்குள்ள ஆதிக்க சாதியின் குரலாக ஆகும் என்றால் அதனை நன்மை எனச் சொல்வதாதீமையெனத் தள்ளுவதா

கவி பழமலய்யின் சனங்களின் கதை விழுப்புரம் பகுதியில் வாழும் அப்பாவிக் கிராமத்து உழைப்பாளிகளின் குரல் என்று அறியப்பட்ட நிலையிலிருந்து மாறி பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர்களின் குரல் என்பதாக அறியப்படும் வாய்ப்பே உள்ளது என்றால் அந்தக் கவிதைகள் ஏற்கத்தக்க கவிதைகளா?  ஆபத்தான ஆயுதங்கள் எனச் சொல்ல வேண்டிய எழுத்துக்களா
இப்படியே கரிசல் காட்டுக் கி.ராஜநாராயணன்பா.செயப்பிரகாசம்,  கொங்குவட்டார சண்முகசுந்தரம்சி.ஆர். ரவீந்திரன் எனப் பலரது எழுத்துக்களையும் கேட்டுக் கொண்டே போகலாம். மண்ணின் மைந்தர்கள் என்ற குரல் இப்போது இலக்கியத்திலிருந்து நகர்ந்து திரைப்படங்களிலும் வலியுறுத்தப் படுகின்றன. மண்வாசனை அடையாளம் தான் சரியான கலை இலக்கியத்தின் அடையாளம் என்று நம்பப் படுகிறது. ஆனால் மண்ணின் மைந்தர்கள் என்ற கோஷமும்பரப்புவாதமும் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆதிக்க சாதிகளாக இருக்கும்- பெரும்பான்மை சாதிகளின் கோஷம் என்ற இன்னொரு பக்கத்தையும் கொண்டதாகவே இருக்கிறது என்பதையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.
நன்றி:அம்ருதா,மே.2011


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை