: 108

பொங்கலோ பொங்கல் :குமரி முதல் வார்சா வரை


பொங்கல் கொண்டாட்டம் எப்போதும் விரும்பப்படும் ஒன்று. மதுரையை விட்டு பாண்டிச்சேரிக்கு வந்த பிறகுதான் பொங்கல் கொண் டாட்டம் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டாடப்படும் பண்டிகையாக மாறியது. அதற்கு முன்பு மூன்று நாள் கொண்டாட்டத்தில்  ஒருநாளா வது பக்கத்து ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளுக்குப் போய் வருவேன்.  அமெரிக்கன் கல்லூரி யில் படித்த காலத்தில் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டிலும்  சிங்கம் புணரிக்குப் பக்கத்தில் நடக்கும் மஞ்சு விரட்டிலும் கலந்துகொண்டிருக்கிறேன். இரண்டுக்கும் அழைத்துப்போனவர்கள் வகுப்புத்தோழர்களே..
அலங்காநல்லூருக்கு  அழைத்துப் போனவர் குலமங்கலம் பண்ணையார் மகன் கணேசன்.   எங்கள் வகுப்பில் இருந்த பெரும் நிலக்கிழாரின் மகன் அவர். குலமங்கலம் அம்பலகாரக் குடும்பத்தைச் சேர்ந்த கணேசன் கல்லூரியின் தலைவர் தேர்தலில் நின்று கணிசமான ஓட்டுகள் வாங்கியவர். இப்போது வழக்குரைஞராக இருக்கிறார்.  சிங்கம்புணரிக்குக் கூட்டிப்போனவர் இமயவரம்பன். இரண்டிலுமே மாடணைதல் உண்டு என்றாலும் இரண்டுமே வெவ்வேறானவை. அலங்காரநல்லூரில் நடப்பது ஜல்லிக்கட்டு. வாடிவாசலுக்குள்ளிருந்து ஒவ்வொரு மாடாக வெளியேறும்போது வாடிவாசலுக்கு வெளியே நிற்கும் காளையர்கள் தாவிப்பாய்ந்து திமிலில் தொங்கிக்கொண்டே போய் அதன் ஓட்டத்தை நிறுத்துவார்கள். சில மாடுகள் வாடிவாசலிலிருந்து வெளியேறி நின்று ‘ யார் வருகிறார்கள்; வாங்க பார்க்கலாம்’ எனத் திரும்பி நின்று காலை வாரி கொம்புகளை ஆட்டி நிற்கும்.
ஆனால் சிங்கம்புணரி மஞ்சிவிரட்டு அப்படியல்ல. பெரும்பாறைகளுக்கு நடுவில் இருக்கும் மைதானத்தில் எல்லா மாடுகளும் அவிழ்த்துவிடப்படும். ஒவ்வொரு மாட்டைச் சுற்றியும் கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் நின்று அணைத்து, விரட்டிக் கொண்டாடுவார்கள்.

கணேசனின் அழைப்பின் பேரில் அலங்காநல்லூருக்குக் கிளம்பிய அதே உற்சாகம் வார்சாவிற்கு வந்தபின் கொண்டாடிய பொங்கலிலும் இருந்தது. வார்சாவுக்கு வந்த ஒருமாதத்திற்குள் வந்து போன தீபாவளியைக் காட்டிலும் மூன்று மாதங்கள் கழித்து வந்த பொங்கல் மீது ஏற்பட்ட ஈடுபாட்டிற்குக் காரணம் தமிழ்நாட்டைப் பிரிந்த காலநீட்சியாக இருக்கலாம். அல்லது எப்போதும் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பொங்கல் தான் தமிழர்கள் கொண்டாட வேண்டிய நாள் என்ற சிந்தனையோட்டமுமாகவும் இருக்கலாம். தீபாவளிக் கொண்டாட்டத்தை விடவும் பொங்கல் கொண்டாடும் காலம் கிராமத்துப் பொருளாதாரத்தில் மகிழ்ச்சியான காலம். அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெல்மணிகளுக்குத் தோட்டத்தில் பொங்கல் வைத்து விட்டு, அடுத்த நாள் வீட்டில் பொங்கல் வைப்போம். இது மாட்டுப் பொங்கல். அறுவடைக்கு நாள் குறித்துப் பொங்கல் வைப்பதற்கும் தை முதல் தேதிக்குப் பொங்கல் வைப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை. மஞ்சள் சேலையை மடித்து மடித்து அடுக்கிய நெல் மணிகள் பரப்பிய தோட்டக்காடு போல வெண்பனி பூசிய வார்சா தெருக்கள் கண் முன் விரிகின்றன. இரண்டு நாட்களாகப் பனிபொழிவு தொடர்ச்சியாக இருக்கிறது.
எங்கள் கிராமத்தில் பொங்கலுக்கான வேலைகள் ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கி விடும். காரை வீட்டை வெள்ளையடிப்பதற்காகச் சுண்ணாம்புக்கல் வாங்கிப் பானையில் வேக வைப்பதில் தொடங்கும் ஆர்வம், மாடுகளின் கொம்புகளில் வண்ணம் தீட்டுவதிலும் நீண்டு வாளில் புள்ளி வைப்பது வரை தொடரும். வண்டியையும் மாடுகளையும் தாழங்குளத்தில் இறக்கிக் கழுவிக் கொண்டு வந்து வண்ணம் தீட்டுவோம்.  மாட்டுக் கொம்புகள் கூர்மைப்படுத்தப்பட்டு எண்ணெய் தடவிப் பிறகு வண்ணம் தீட்டப்படும். 
மாமா காங்கிரஸ்காரராக இருந்த காலத்தில் மூவர்ணம் தீட்டிக் கொண்ட மாட்டின் கொம்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கறுப்பு சிவப்புக்கு மாறியதை மாமா மௌனமாக ஏற்றுக் கொண்டதை நினைத்தால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட அனுபவம் கொண்ட மாமா எம்ஜியார் ரசிகராக இருந்து அ இ அதிமுகவின் ஒரு பிரிவுக்கு ஒன்றியத் தலைவராக உயர்ந்த நடு அண்ணனைக் கோபமாகத் திட்டினாலும் கொம்புகளில் தீட்டிய வண்ணங்களைக் களையச்சொல்லவில்லை. மாற்றி மூவர்ணங்களைப் பூசச் சொல்லவில்லை வீட்டில் நடக்கும் மாற்றம் நாட்டில் நடக்கப்போகும் மாற்றத்தின் அறிகுறி என்பதை அமைதியாக ஏற்றுக் கொண்டார். அடுத்து வந்த தேர்தலில் அவர் சார்ந்து காங்கிரஸ் தோல்வி அடைவதை வானொலிப் பெட்டியில் கேட்டுக் கொண்டிருந்ததைப் போலவே மாட்டுக் கொம்புகளில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். மாட்டுப் பொங்கலன்று சலங்கை ஒலிக்கச் சினிமா தியேட்டரை நோக்கிக் கூட்டு வண்டிகளில் போன காலம் அது; எனக்கு நினைவாகவாவது இருக்கிறது. எனது சந்ததிக்கு அதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழர்கள் எதையெதையோ தொலைக் கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் பண்பாட்டு நகரங்கள் சிலவற்றை அப்படியே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் நடக்கும் விழாக்களின் அடையாளத்தோடு. .

கணேசனின் அழைப்பின் பேரில் அவரது சொந்த ஊரான குலமங்கலத்தில் தங்கி விட்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டுக்குப் போனது  போலவே இன்னொரு முறை, இமயவரம்பனின் சொந்த ஊரான சிங்கம்புணரிக்குப் போயிருந்தோம். அங்கிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் நடந்தது ஜல்லிக்கட்டு அல்ல; மஞ்சு விரட்டு. பாறைகளுக்கு நடுவில் இருக்கும் மைதானத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு எல்லாப் பக்கங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும். பார்வையாளர்கள் பாறைகள் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருக்க பங்கேற்பாளர்கள் களத்தில் இருங்கி மாடுகளை விரட்டுவார்கள். ஆனால் அலங்காநல்லூரில் ஒரு வரன்முறைப்படி ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக வெளியேறிப் போகும்போது அடக்கும் ஆசை கொண்டவர்கள் அவற்றின் மீது பாய்ந்து தழுவுவார்கள். ஏறு தழுவுதல் தமிழர்களின் அடையாளமாக இருந்தது; இருக்கிறது என்பதை மறந்து விட முடியாது. மாற்றும் முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் எனத்தெரியவில்லை
பள்ளி மாணவனாகவும் கல்லூரியில் படிக்கும்போதும் மதுரை மாவட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டுகளில் பார்வையாளனாக மட்டுமே இருந்தவனல்ல. எங்கள் வீட்டில் எங்கள் அம்மாவின் சின்னம்மாக்களுக்கு மட்டுமே கட்டுப்படும் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இருந்தது. அவர்கள் இருவரும் இருபுறமும் நிற்க அந்தக் காளை திமில் உயர்த்தி நிற்கும் புகைப்படம் இன்னும் இருக்கிறது. நான் பிறக்காததற்கு முன்பு எடுத்த படம் அது. எனது பூர்வீகக் கிராமங்களான அதிகாரிபட்டி (தந்தையின் கிராமம்) யிலும்,தச்சபட்டி (அம்மாவின்கிராமம்) யிலும் நடக்கும் ஜல்லிக் கட்டுகளிலேயே நூறு மாடுகள் கலந்து கொண்ட காலங்கள் காணாமல் போய்விட்டன. பெரியண்ணனோடு சேர்ந்து எழுமலை, கிருஷ்ணாபுரம், வடக்குப் பட்டி, ஆத்தாங்கரைப் பட்டி, உத்தப்புரம் எனச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நடக்கும் ஜல்லிக் கட்டுகளைப் போய்ப் பார்த்தும் இருக்கிறேன். சின்னக் காளைகளின் திமில்களைத் தழுவவும் செய்திருக்கிறேன். 
வார்சாவில் கொண்டாடப் போகும் தலைப்பொங்கலுக்கான வேலை களையும் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விட்டோம். காரணம் இந்தத் தைப் பொங்கலை ஒரு கூட்டு நிகழ்வாக ஆக்கி விடுவது எனத் தீர்மானித்து வார்சாவில் இருக்கும் தமிழர்களை திரட்ட முடிவு செய்தோம். பொங்கல் தினத்தன்று விடுமுறையெல்லாம் கிடையாது என்பதால் கூட்டுப் பொங்கல் சாத்தியமா என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் பொங்கல் ஞாயிற்றுக் கிழமையில் வந்ததால் அந்தச் சிக்கல் எழாமலேயே போய்விட்டது. அதிகக் கூட்டத்தைக் கூட்டுவதால் ஏற்படும் சிக்கலும் ஒருபக்கம் இருந்தது. பன்னிரண்டு பேர் வரை கூடும் வாய்ப்பு ஏற்பட்டது. இருபது பேர்வரை இருக்கலாம் என நினைத்துப் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பும் இந்திய நண்பர்களையும் போலந்து நண்பர்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தபோது  நான் எனது மூன்றாமாண்டு மாணவிகள் காஸ்சாவையும் மரிஸ்யாவையும் அழைத்திருந்தேன். மரிஸ்யாவின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே வர இயலவில்லை.  காஸ்சா வந்ததோடு சேலையெல்லாம் கட்டி அசல் தமிழ்ப் பெண்ணாகவே மாறி விட்டதில் அசல் தமிழர்கள் எல்லாம் அசந்து போனார்கள். நானும் சந்திரசேகரும் வடைச் சட்டியில் உளுந்த வடை போட்டுக் கொண்டிருந்த போது அருகில் வந்தாள். சந்திரசேகர் அவளது தமிழ் அறிவை சோதிக்க நினைத்தாரோ என்னவோ, என்னது இது என்றார். மெதுவடை என அவள் சொன்ன போது நானே அசந்து விட்டார்.. சொல்லி விட்டு வடைகளின் பெயர்களாக மசால் வடை, ஆமை வடை, தயிர்வடை, ரச வடை என அடுக்கியபோது கொஞ்சம் கலங்கித் தான் போனேன். நாமே உளுந்த வடை, பருப்பு வடை என்பதை மட்டும் தானே சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பதே எனது கலக்கத்திற்குக் காரணம்.
சந்திரசேகர் மும்பையின் நவீன் குடும்பத்தை அழைத்தார். மற்ற வர்கள் எல்லாம் தமிழர்கள் தான். தமிழர்கள் என்பதை விடத் தமிழ்ப் பூர்வீகம் கொண்டவர்கள் என்று மட்டும் தான் சொல்ல வேண்டும். தமிழ்  பேசுகிறார்கள். ஆனால் எழுதத் தெரியாது. எங்கள் மாணவிகள் பேசுவது போலக் கொஞ்சம் கொஞ்சம் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கூடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். சந்திரசேகர், அப்பா ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் வட இந்திய நகரங்களில் படித்து விட்டு வடமாநிலங்களிலும் இலங்கை, இங்கிலாந்து, போலந்து எனப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். சொந்த ஊர் லால்குடி. அவருடைய மனைவியும் அதே ஊர்தான்.விக்னேஷின் அப்பா தஞ்சாவூர்; அம்மா பாலக்காடு. சிட்டி வங்கியின் மென்பொருள் பொறியாளர். அர்ச்சனா இந்தியைப் பகுதி ஒன்றில் படித்த சென்னைப் பொண்ணு. ராய் சுப்பிரமணியம் போலந்திலேயே பள்ளி, கல்லூரிப் படிப்பைப் படித்தாலும் தமிழ் எழுதத் தெரிந்த கன்யாகுமரிக்காரர். என்னைப் போல இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் போன தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணியனின் மகன்.  ராஜகோபால் க்ராக்கோ பல்கலைக் கழகத்திற்கு வந்திருக்கும் இன்னொரு தமிழ்ப் பேராசிரியர்; டெல்லி யிலிருந்து வந்திருக்கிறார். சொந்த ஊர் திருத்தணி.
சந்திரசேகர் வீடு தான் தனி வீடு. அதனால் அங்கேயே கொண்டாட்டம். காலை முதலே ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். மதியம் ஒரு மணிக்குள் எனது மனைவி விஜயலட்சுமியும் சந்திர சேகரின் மனைவி அகிலாதேவியும் சேர்ந்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல், பொரியல், கூட்டு, அவியல், இட்லி, வடை என வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். பொங்கலின் அடையாளங்களான கரும்பு, மஞ்சள், மாவிலை, கண்ணுப்பீழைப்பூ என எதுவும் இல்லை. மாடு குளிப்பாட்டவில்லை; காப்பு கட்டவில்லை; போங்கலோ பொங்கல் எனக் குலவையிட்டுப் பாடவில்லை என்றாலும் மனம் திருப்தியில் களித்தது. பொங்கலைப் படைத்துச் சாப்பிட்ட போது ஒரு திருப்தி இருந்தது. அதைச் சாப்பிட்ட திருப்தி என்பதை விட சேர்ந்து கொண்டாடிய திருப்தி எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும்.  திருத்தணியைச் சேர்ந்த ராஜகோபாலும் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த ராயும் இருந்ததைக் கொண்டு வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்துத் தமிழர்களின் கொண்டாட்டம் என ராஜகோபால்  சொன்ன போது, ”இல்லை குமரிமுதல் வார்சாவரை இருக்கும் உலக மனிதர்களின் பொங்கல் கொண்டாட்டம்” எனச் சொன்னேன். மகாராஷ்டிரத்தின் நவீன் குடும்பமும் போலந்தின் காஸ்சாவும் ஒதுங்கி நிற்காமல் கலந்து நின்ற நாள் ; திரும்பத் திரும்ப எத்தனை ஆண்டுகளுக்கு நினைவில் இருக்கப் போகும் நாளோ. இந்த நினைவை அழிக்க இன்னொரு பிடித்தமான நிகழ்வு நிகழ வேண்டும்.
சமய நம்பிக்கை சார்ந்து கொண்டாடப்படும் தீபாவளி, ஏகாதசி, சிவராத்திரி போன்ற பண்டிகைகள் எப்போதும் குடும்பப் பண்டிகைகளாக இருக்க, பொங்கல் பண்டிகையின் நிகழ்ச்சி நிரல் குடும்ப எல்லையைத் தாண்டி சமூக நிகழ்வின் குணங்களுக்குள் நகர்வதைக் காணலாம். குறிப்பான கடவுளுக்கு நன்றி சொல்வதோ, ’என்னை ஈடேற்று’ என வேண்டுவதோ பொங்கலின் போது நடப்பதில்லை. தொடர்ந்து மனிதர்கள் மாற வேண்டும்; உழைப்புசார்ந்த உயிரினங்களின் உறவும் பொருட்களின் பயன்பாடும் உணரப்பட வேண்டும் என்பதோடு, தனி மனிதர்களாக இருப்பதைக் குறைத்துச் சமூக பிணைப்புக்குள் நுழைய வேண்டும் என்ற இயங்கியல் நியதிகளைப் பொங்கலில் காண முடியும். போகிப் பண்டிகை பழையன கழித்துப் புதியன ஏற்றலின் நாளென்றால், விவசாய சமூகம் தனது அடிப்படைக் கருவிகளான நிலம், நீர், மாடு, வீடு, வாசல் என ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து அதனைக் காத்துக் கொள்ளும் பொருட்டுக் காப்புக் கட்டிப் பொங்கல் வைத்துப் பூரிக்கும் நாளாக இருக்கிறது. மாட்டுப் பொங்கலோ மனிதனும் மாடும் கொள்ளும் நட்பு முரணின் அதியற்புத அடையாளம். அதிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் நடக்கும் கொடுக்கல்-வாங்கல் தக்க வைக்க வேண்டிய ஒரு தத்துவ இழை. அடக்க முயல்வதும், அடக்கிக் களிப்பதும் மட்டுமல்ல அதன் வினைகள். தன்னை இழப்பதும், இழப்பை ஏற்பதும் கூட அதன் வினையின் பகுதிகள். தொடர்ந்து வரும் காணும் பொங்கலன்று கடல், ஆறு, குளம் என நீரைத் தேடிக் காண்பதும், சிறுவர்கள் பெரியவர்களைக் கண்டு வணங்கி அவர்கள் தரும் சிறு பரிசைக் கொண்டு மகிழ்வதும் என அந்த நிகழ்ச்சி நிரல் வரிசைக்குள் வாழ்வின் பல அடையாளங்கள் இருக்கின்றன என்பதைக் கடந்த பத்தாண்டுகளாகத் தான் புரிந்து கொள்கிறேன் என்று சொல்லலாம்.
கூட்டாகப் பொங்கல் கொண்டாடுவதைத் தடுக்க நினைத்ததா என்று தெரியவில்லை. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி பனி பெய்யத்தொடங்கி விட்டது. வெண்பஞ்சு மேகங்கள் தரைக்கு இறங்கி வரும் காட்சி போலக் கட்டியாக இல்லாத பனிப் பொழிவுகள் அசைந்து அசைந்து தரையிறங்கிப் படிந்தன. சனிக்கிழமைக் காலையில் தெருவெங்கும் வெண்போர்வை போர்த்தியிருந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் வண்ணங்கள் காணாமல் போய்விட்டன. பனியின் பாலங்கள் படிகமாகப் பூசியிருந்தன. கிறிஸ்துமஸ் மரங்களின் உச்சியில் பனிப்பூக்கொண்டைகள் அசைந்தன. பெருஞ்சாலைகளில் உப்புக்கரைசலைக் கொண்டு பனிக்கட்டிகள் உடைக்கப்பட்டு வழி ஏற்படுத்தும் வேலைகளும் நடந்தன. வேகம் குறைத்து வாகனங்கள் நகர்ந்தன. தடிமனான காலணிகளைத் தரையில் ஊன்றி நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  
வரிசையாக வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களின் பொருட்களின் பெயர்களைக் காஸ்சாவுக்குச் சொல்லிக் கொண்டே வந்தேன். வெள்ளைப் பொங்கல் என்று சொன்னபோது அவளுக்கு வெள்ளைக் கிறிஸ்துமஸ் நினைவுக்கு வந்து விட்டது.  வார்சாவுக்கு வந்தபோது கிறிஸ்துமஸ் வெண்பனி பூசிய கிறிஸ்துமஸாக இருக்கும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு வென்பனி இறங்கவில்லை. மழையும் தூறலும் தான் கிறிஸ்துமஸின் அடையாளமாக இருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாகப் போலந்தில் பொங்கல் வெள்ளைப் பொங்கலாக மாறிவிட்டது எனச் சொன்னேன். வண்ணமற்ற வண்ணமான வெண்மை போர்த்திய போலந்துத் தெருக்களில் பனியின் தகடுகள் இன்னும் கூடலாம் என்றே வானிலை முன்னறிவுப்புகள் சொல்லிக் கொண்டிருந்தன.
கண்மூடித்தனமான ஈடுபாடும்சரி, முரட்டுத்தனமான வெறுப்பும்சரி ஒரு கட்டத்தில் நெகிழ்ந்து நொருங்கிச் சரிவதை நான் என்னுள் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.  இதை நேரடியாகச் சொல்லும் மரபுத் தொடராகப் பலரும் என்னிடம் சொன்னதைத் திரும்பவும் இப்போது நினைத்துக் கொள்கிறேன். “நாற்பது வயது வரை கம்யுனிசத்தில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்தால் அவனைச் சந்தேகிக்க வேண்டும்; நாற்பது வயதுக்கு மேலேயும் ஈடுபாடு காட்டினாலும் அவனைச் சந்தேகிக்க வேண்டும்” என்பதுதான். அந்த மரபுத் தொடர். இதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்குள் வர மனம் தயங்கினாலும், நகரும் நிலையை எனது அனுபவங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. காலம் சார்ந்த அனுபவங்கள் மட்டுமே இப்படி மாற்றுகின்றன என்பதல்ல. நம் ஊரையும் உறவினர்களையும் சொந்த அடையாளங்கள் என நினைத்த வற்றை விட்டு விலகிச் சென்று புதியபுதிய இடங்களுக்குள்ளும், புதியபுதிய மனிதகளுக்குள்ளும், புதிய பண்பாட்டுக்குள்ளும் நுழைந்து நம்மைத் தொலைத்தும் நம்மைத் தேடியும் கண்டுபிடிக்கும் போது நம் அடையாளம் என்னவாக மாறுகிறது என்ற ரசாயன மாற்றம் அனுபவிக்க வேண்டிய ஒன்று.
நான் பிறந்த தச்சபட்டி என்னும் மிகச் சிறிய கிராமத்திலிருந்து உத்தப்புரம், எழுமலை, திண்டுக்கல், மதுரை எனக் கல்விக்காக நடந்த பயணங்களும் நகர்வுகளும் கற்றுத்தந்த அனுபவங்கள் ஒருவிதம் என்றால், பணியின் பொருட்டு பாண்டிச்சேரி, திருநெல்வேலி, போலந்தின் வார்சா என வாழ நேர்ந்துள்ள வாழ்நிலை அனுபவங்களும் வேறுவிதமானவை. ஆய்வுக்காகவும் நினைப்பதைக் கட்டுரையாக எழுதும் எழுத்தாளனாகவும் ஆசிரியனாகவும் தமிழ்நாட்டுக் கிராமங்களினூடாகவும் இந்தியப் பெருநகரங்களின் வழியாகவும் செய்ய நேர்ந்த பயணங்கள் தந்த அனுபவங்கள் எழுதித் தீர்க்க வேண்டியவை. மதுரையில் செயல்பட்ட நிஜநாடக இயக்கத்தில் ஒரு நாடகக்காரனாக தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் கிராமங்களிலும் பயணம் செய்தது போலவே பாண்டிச்சேரிக்குப் போன பின்பு  பெங்களூர், மைசூர், ஐதராபாத், விசாகப் பட்டினம், திருவனந்தபுரம், கள்ளிக்கோட்டை, திருச்சூர், மும்பை, டெல்லி எனப் பெருநகரப் பயணங்கள் வாய்த்தன. . ஒரு பேராசிரியராக அலுவலகப் பயணங்களை ஏற்பாடு செய்து கொண்டு கேரளாவுக்குள்ளும் கர்நாடகத்திற்குள்ளும் நுழைந்து விட்டு மறதியை உறவாக்கி அதன் சிறு கிராமங்கள் சிலவற்றைப் பார்த்துத் திரும்பியிருக்கிறேன். அவசரப் பயணம் என்றாலும் அரேபியத்தலைநகர் ரியாத்துக்கும் தம்மாமுக்கும் போய் வந்த அயல்நாட்டுப் பயணங்களும் சொல்லித் தந்தவை ஏராளம். ஆம் பயணங்களும் வெளிகளும் நினைக்க நினைக்கப் பக்கத்தில் வருவதும் விலகிப் போவதுமாக விரிந்து கொண்டே இருப்பன. இன்னும் இருக்கப் போகின்றன. போலந்தில் இருக்கப் போகும் நாட்கள் பயணங்களின் படிகமாகத் தங்கப் போகின்றன.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை