: 58

எனது வாசிப்பினூடாக கோ கேசவனின் நினைவுகள்

நாட்டுப்புற இசையில் முற்போக்குப்பாடல்கள் பாடும் பாடகராக இருந்த கே..குணசேகரன் அப்போதுதான்   ஆய்வுப்பட்டத்திற்காகப் பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார். அப்போது நான் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். அவர்தான் எனக்கு அவர்களிருவரையும் கோ.கேசவன், .மார்க்ஸ் அறிமுகப்படுத்தினார். இடதுசாரி மேடைகளின் பாடகர் என்ற வகையில் அவருக்கு இவர்களிருவரும் முன்பே அறிமுகமாகியிருந்தனர். நேரில் பார்க்கவில்லையே தவிர அவர்களில் கோ.கேசவனின் பெயரை முன்பே அறிந்திருந்தேன். அவரது .கைலாசபதியின் முன்னுரையோடு வந்திருந்த மண்ணும் மனித உறவுகளும் (1979) நூலை வாசித்திருந்தேன்.  “சங்ககாலம் -பொற்காலம்என்ற திராவிட இயக்கத்தினர் மற்றும் அதன் ஆதரவாளர்களாக இருந்த தமிழ்ப்பேராசிரியர்களின்  புனைவுக் கருத்தியலை மறுப்பதற்கான விவாதங்களை இடதுசாரிகள் முன்வைத்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. வர்க்கவேறுபாடுகள் சங்க காலத்தில் இருந்தன செம்மலரில் கே.முத்தையா போன்றவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். அப்படியான நேரடிப்பேச்சாக இல்லாமல், ஒரு காலகட்டத்து இலக்கியத்திற்குள் மனிதர்களின் இருப்புக்கும் உருவாகும் உற்பத்தி முறைக்கும் தொடர்பிருக்கும் என்ற கருதுகோளின்மேல் எழுப்பப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதியாக இருந்த கோ.கேசவனின் நூல் எனக்குப் பிடித்திருந்தது. அதற்கும் முன்பே கைலாசபதியின் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ்நாவல் இலக்கியம், இலக்கியமும் திறனாய்வும் போன்ற நூல்களை வாசித்துப் பழக்கமிருந்ததால் அவரது மண்ணும் மரபுகளும் நூலை வாசிப்பதில் சிக்கல் எழுந்திருக்கவில்லை.

பாரதியார் நூற்றாண்டையொட்டி நான்குபேர் சேர்ந்து எழுதிய பாரதி பற்றிய நூலொன்றோடு இருவரும் வந்திருந்தனர்அந்நூலில் அவர்களில் ஒருவரது பங்களிப்பு இருந்ததாக நினைவு. பின்னர் அறியப்பட்ட  இந்தப் பெயர்களில் அல்ல; வேறு புனைபெயரொன்றில். பல்கலைக்கழகத்தில் அப்போது மூன்று பேராசிரியர்கள் நவீன இலக்கியங்களோடு தொடர்புடையவர்களாக - பாடம் நடத்துபவர்களாக இருந்தனர். அகிலனின் சிறுகதைகளில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றிருந்த சு.வேங்கடராமன், ஆராய்ச்சி குழுவில் இருந்த தி.சு.நடராசன். எழுத்து பத்திரிகை தொடங்கிய காலம் முதல் சி.சு.செல்லப்பாவின் நண்பராகவும் தமிழ்ப் புதுக்கவிதைகளைத் தொடக்க காலத்திலிருந்தே ஆதரித்து எழுதிவந்ததோடு கல்வித்துறைப் பாட்த்திட்டத்திற்குள் கொண்டுவரக் காரணமாகவும் இருந்த  சி.கனகசபாபதி. அம்மூவரில் சி..வை  மட்டும் சந்தித்துவிட்டுக் குணசேகரனோடு பேசிக்கொண்டிருந்தனர்பேச்சிலும்கூட .மா.தான் அதிகம் பேசினார். கோ.கே. மௌனமாகவே இருந்தார்.

அதன்பிறகு அவரைச் சந்தித்தது மீரா., அன்னம் புத்தக்கடையொன்றை மதுரையில் ஆரம்பித்த பின்னரே.  அந்தக் கடைக்கு வாரக்கடைசிகளில் பெரும்பாலும் கோ.கேசவன் வருவார் என்று விற்பனையாளராக வேலைபார்த்த  அமெரிக்கன் கல்லூரியில் எனக்கு இளவலாக இருந்த சண்முகசுந்தரம் சொன்னார். மதுரையின் இலக்கியக்கோழிகளுக்கும் குஞ்சுகளுக்கும் அடைகாக்கும் இடமாக ஆனது. எழுத்தின் வழியாகத் தெரிந்துகொண்ட பலரின் முகங்களை அங்கேதான் பார்த்துக் கொண்டேன்.

இரண்டுமூன்று முறை அந்தக் கடையில் கேசவனைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தக் கடையில்தான் அவரின் முக்கியமான இரண்டு நூல்களையும் வாங்கினேன். முதலில் வாங்கியது அன்னம் வெளியீடான  பள்ளு இலக்கியம் - ஒரு சமூகவியல் பார்வை” (1981) என்ற நூல். இடதுசாரிப்பார்வையில் ஒரு குறிப்பிட்ட இலக்கியவகையை ஆய்வுசெய்வதற்கு மாதிரியாக வந்த நூல். இலக்கிய வகையின்  தோற்றக்காரணம், அதன் கட்டமைப்பில், வெளிப்பாட்டில், தகவல்களில் என ஒவ்வொன்றிலும் எழுதுபவரின் ஆதரவுப்பார்வை அல்லது வர்க்கப்பார்வை இடம்பெறும்  என்பதை ஏற்கத்தக்க வகையில் முன்வைத்து விவாதித்த நூல். கல்விப்புலத்திற்குள்ளும் வெளியேயும் கோ.கேசவனைக் கவனிக்கத்தக்க ஆய்வாளராக - திறனாய்வாளராக முன்வைத்தது அந்நூல். வந்த ஓராண்டிற்குள் விற்றுத்தீர்ந்து மறுபதிப்புகண்ட ஆய்வுநூல் அது. அங்கு வாங்கி வாசித்துப் பலனடைந்த இன்னொரு நூல் ஜார்ஜ் தாம்சனின் மனித சமூக சாரம்/ கலை அறிவியலின் மூலாதாரங்கள்  - Human Essance- தமிழில் மொழிபெயர்த்தவர் கோ.கேசவன். அதனை வாசித்தபிறகு அவர்மீது கூடுதல் ஈர்ப்பு ஏற்பட்டது. அவரது கட்டுரைகள், நூல்கள் குறித்துப் பேசலாமெனத் தொடங்கும் எந்த உரையாடலையும் அவர் வளர்த்தெடுப்பவரல்ல என்பது என் அனுபவம். பள்ளு இலக்கியங்களைக் குறித்த ஆய்வுக்குப் பிறகு அவர் எழுதி இயக்கமும் இலக்கியப்போக்குகளும் (1982)குறித்துக் கேட்க நினைத்த கேள்விகளுக்கு- ஐயங்களுக்குப் பதில்பெற நினைத்துப் பல தடவை தொடங்கித் தோல்வி கண்டிருக்கிறேன்.

எல்லாக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பதில் அவரிடம் உண்டு என்றாலும் அதனைப் பேச்சுவடிவில் சொல்லிவிட அவரால் இயலாது என்று புரிந்துகொள்ளச் சில ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது. 1984 இல் அன்னம் வெளியீடாக வந்த இலக்கியவிமரிசனம் - ஒரு மார்க்சியப்பார்வை என்ற நூலைக் குறித்துக் கடுமையான விமரிசனங்களும் விவாதங்களும் நடந்தன. கலை, இலக்கியத்தின் அழகியல் கூறுகளை, புனைவின் இடத்தை மறுதலித்த பார்வையை அவரது நூல் முன்மொழிகிறது எனப் பலரும் கூறினார்கள். மார்க்சியத்தைக் கறாரான சட்டகமாக்கி இலக்கியத்தை அணுகவேண்டுமெனக் கேசவன் நினைக்கிறார் என்பதான  விமரிசனங்களுக்கு அன்னம் விடுதூது, புறப்பாடு, பரிமாணம், நிகழ் போன்ற இதழ்களில் - எம்.. நுஃமான்,எஸ்.சி.எஸ்., ஞானி, எஸ்.வி.ராஜதுரை,  போன்றோரின் விமரிசனங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றவில்லை. .கைலாசபதி, .நா.சு. குழுவின் திறனாய்வுகளை மதிப்பீடு செய்து வெளியிட்டதிறனாய்வுப்பிரச்சினைகள்என்றொரு நூலை வெளியிட்டதுபோலத் தனது நூல் மீது வந்த விமரிசனங்களுக்குமார்க்சியத் திறனாய்வுச் சிக்கல்கள்” (1986),  என்றொரு நூலை எழுதி இரண்டாண்டுகளுக்குப் பின் தனது நம்பிக்கைகளை உறுதிசெய்தார். நுஃமானின் கேள்விகளிலும் விவாதங்களிலும் எழுப்பப்பட்ட அழகியல் கூறுகள் முக்கியமானவை எனக் கருதிய என் மனம் பின்னர் வந்த கேசவனின் நூல்களை விமரிசனப்பார்வையோடு வாசிக்க ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஏற்புடன் வாசித்த மனத்தை விலகச் செய்தவர் நுஃமான் என்பதை இப்போது சொல்லித்தான் ஆகவேண்டும். கதைப்பாடல்களும் சமூகமும், இந்திய தேசத்தின் தோற்றம், நாட்டுப்புறவியல் ஒரு விளக்கம், சோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும், திராவிட இயக்கமும் சிங்காரவேலரும்,திராவிட இயக்கத்தில் பிளவுகள் போன்றனவற்றை அப்படித்தான் வாசித்தேன். அதற்குப் பிறகு நான் பாண்டிச்சேரியிலும் அவரைச் சந்தித்திருக்கிறேன். அவருக்குத் தொண்ணூறுகளில் கிளர்ந்த தலித் கலை இலக்கிய எழுச்சியையும் இயக்கச் செயல்பாடுகளையும் ஏற்க இயலாத மனம் இருந்ததை உணரமுடிந்தது. தலித் இயக்கங்களின் திரட்சியையும் கறரான வர்க்கப்பார்வையுடன் விமரிசனம் செய்தார். சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் போன்றவற்றில் அவர் எழுதிய நூல்கள் பின்னர் விழுப்புரத்திலிருந்து செயல்பட்ட சரவணபாலு பதிப்பகத்தின் வழியாகத் தொகுக்கப்பட்டன. அவை முன்வைத்த கருத்துகளில் ஏற்புடைமை இல்லாததால் அவற்றின் பெயர்கள்கூட இப்போது நினைவில் இல்லை. பாரதியை மையப்படுத்திச் செய்யப்பட்ட அவரது முனைவர் பட்டமும் பின்னர் நூலாக வந்தது. வாங்கி வாசிக்கவில்லை.

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை