: 50

ஏழாம் அறிவு: திரைப்பட விமரிசனம் அல்ல தொலைந்து போன இந்திய அறிவு“ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே விமரிசனம் எழுதி விடும் நபர்” என என்னைக் குறித்து, லட்சுமி மணி வண்ணன் தனது சிலேட்டுப் பத்திரிகையில் எழுதியது கிண்டல் குறிப்பா? உருவேற்றி அனுப்பிய மந்திரத் தகடா என்று தெரியவில்லை. மூன்று வருடங் களுக்குப் பிறகு தன் வலிமையை இழந்து விட்டது.
மாதம் தோறும் சினிமாவைப் பற்றிக் கட்டுரை எழுதிய நான், அவர் சொன்னது சரிதான் எனத் தோன்றியதால் கொஞ்சம் நிறுத்தி வைத்தேன். அதற்காக மொத்தமாக நிறுத்தி விட்டேன் என்று நினைத்து விட வேண்டாம்.
கவி. என்.டி.ராஜ்குமாரிடம் கற்ற மந்திர வார்த்தைகள் எல்லாம் நம்மிடம் பலிக்காது என்பதைக் காட்டுவதற்காக அவ்வப்போது எழுதிக் கொண்டுதான் இருந்தேன். வருசத்திற்கு இரண்டு மூன்று கட்டுரைகள். 2012 இல் சசிகுமாரின் ஈசன், சுசீந்திரன்- பாஸ்கர் சக்தி கூட்டணியில் உருவான அழகர்சாமியின் குதிரை, பாலா-எஸ்.ராம கிருஷ்ணன் கூட்டணிப் படமான அவன் இவன். இப்போது ஏழாம் அறிவு. ஏழாம் அறிவு பற்றிய இந்தக் கட்டுரையைத் திரைப்பட விமரிசனம் என்று நினைக்க வேண்டாம்.
எனது கட்டுரைகளைக் கொஞ்சம் கவனித்து வாசித்தவர்களுக்கு நான் எப்போதும் சினிமா விமரிசனம் எழுதவில்லை என்ற  ரகசியம் தெரிந் திருக்கக் கூடும். எனது சினிமாக் கட்டுரையைப் படித்து விட்டு அடுத்த நாளே திரையரங்கிற்கு ஒருத்தரும் போயிருக்கவும் மாட்டார்கள். அல்லது அ.ரா., எழுதிக் கண்டித்துவிட்டார்; எனவே நான் இந்தப் படத்தைப் பார்க்கப் போவதில்லை என முடிவு எடுத்திருக்கவும் மாட்டார். நான் எந்த சினிமாவையும் அதன் உள்ளே இருந்து பார்த்து விமரிசனக் கருத்தைச் சொன்னவன் அல்ல. வெளியில் பார்வையாளர்களோடு பார்வையாளனாக இருந்தே படங்களைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். பார்வை யாளர்களின் கும்பல் மனோபாவத்தை உருவாக்கும் கூறுகள் ஒரு படத்தில் எப்படிக் கட்டமைக்கப் படுகிறது என்பதை அவர்களோடு இருந்து பார்த்து, அதன் விளைவுகளை திரைப்படத்தைத் தாண்டி, தமிழ்ச் சமூகத்தில், தமிழர்களின் சமூக உளவியலில், தனிமனிதத்தன்னிலையில் எத்தகைய தாக்கத்தை உடனடியாக உண்டாக்கும்; நீண்ட காலத்திற்குப் பின், அதன் தாக்கத்தால் உண்டாகும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனப் பேசுவதாகவே எனது கட்டுரைகளை எழுதியிருப்பேன். இந்தப் பொதுத் தன்மையிலிருந்து சில நேரங்களில் விலகி ஒரு இயக்குநரின் தனித்திறன் சார்ந்து உருவாக்கும் நேர்மறைக்கூறுகளையும் எதிர்மறைக்கூறுகளையும் எடுத்துச் சொல்லிப் பாராட்டவோ, கண்டனம் கூறவோ கூட எனது சினிமாக் கட்டுரைகள் முயன்றிருக்கின்றன.
சினிமா என்னும் நவீனக் கண்டுபிடிப்பு ஒரே நேரத்தில் கலையாகவும், ஊடகமாகவும் வியாபாரமாகவும் இருக்கும் சாத்தியங் களால் வெகுமக்கள் பண்பாட்டுத் தளத்தில் ஏற்படும் சிக்கல்களைப் பேசுவதே எனது சினிமாக் கட்டுரைகள். இப்படியான கட்டுரைகளை எழுத ஒரு திரைப்படத்தை வெவ்வேறு திரையரங்குகளில் வெவ்வேறு ஊர்களில் கூடப் பார்த்திருக்கிறேன்.  அத்தகைய வாய்ப்பில்லாததால் எனது மடிக் கணிணியின் திரையில் ஏழாம் அறிவு படத்தைத் தனியாகப் பார்த்தேன். ஆம். புதிதாக வந்த ஒரு தமிழ்ச் சினிமாவை தனியாக அமர்ந்து பார்த்தது இதுதான்.

சினிமா அதன் தோற்ற வடிவத்தில் கூட்டுக் கலையாகவும் - கூட்டத் திற்கான ஊடகமாகவும் இருந்தது. வியாபாரிகள் அதனை – அதே வடிவத்தில் பெரும் லாபம் ஈட்டும் வியாபாரமாக ஆக்கிக் கொண்டார்கள். இப்போது வந்திருக்கும் தொழில் நுட்பம் அவர்களின் லாபத்தின் அளவைக் குறைக்காமல் பலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வர்த்தகமாக ஆக்கி வருகிறது. அதன் விளைவுகள் வியாபாரிகளுக்கு வியாபாரம் சார்ந்த எச்சரிக்கை சமிக்ஞைகளையும், பார்வையாளர்களுக்குத் தனித்திருக்கும்  மனநிலையையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் எது குறித்துப் படம் எடுப்பது என்பதை யாரும் திட்டமிட்டு விட முடியாது. படம் எடுப்பவன், தன்னைக் கலைஞனாகக் கருதினால் பரந்த வெளியில் அலையும் தனிமனிதத் தன்னிலைகளைக் கண்டடைய வேண்டும். வியாபாரியாக இருந்தால், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பொது மனிதக் குறியீடுகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். வெளிப்பார்வைக்கு இவை இரண்டும் ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் வெவ்வேறு திசைவழிகள் பயணம் செய்பவை..
இதைப் புரிந்து கொண்டவர்கள், திரைப்படம் சார்ந்த பல தொழில்களையும் தங்கள் வலைப்பின்னல்களுக்குள் கொண்டு வந்து திரும்பவும் ஒரு சினிமா தரும் எல்லா லாபத்தையும் தங்கள் பையில் போட்டுக் கொள்ளப்பார்க்கிறார்கள். எந்திரன் அப்படியான முயற்சியில் வெற்றி அடைந்த ஒன்று. அதே பாணியில் இல்லையென்றாலும் ஏழாம் அறிவும் அதனை நகல் எடுக்க முயன்று பாதிக்கிணறைத் தாண்டிய படம். எனவே நிகழ்காலத்தில் ஒரு சினிமாவைப் பற்றிய பேச்சு முழுவதும் படத்திற்குள்ளேயே இருக்க முடியாது. படத்திற்கு வெளியேயும், படத்தைச் சுற்றியும் உண்டாக்கப்படும் கண்ணாமூச்சி விளையாட்டுகளையும் சேர்த்துத்தான் பேசியாக வேண்டும்.
ஏழாம் அறிவு தமிழர்களின் தொன்மை அறிவைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லும் படமாக முன் வைக்கப்பட்டதைத் தமிழ் தொலைக் காட்சிகளின் முன்னோட்டக் காட்சிகளிலும், திரை விமரிசனக் கருத்தாடல்களிலும் பார்த்திருக்கலாம்.- உடல் அமைப்புக்குள் வலிமையை உருவேற்றும் வர்மக்கலை,போர்க்கலை போன்றவற்றோடு மருத்துவ அறிவை இணைத்த ஒருகலவையை தோண்டிக் காட்டி, -போதிதர்மன் என்னும் தொன்மக்குறியீட்டை மறு உயிர்ப்பு செய்து நிகழ்காலத்தோடு தொடர்பு கொள்கிறது படம். இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதனை முக்கியமாக எடுத்துக் கொண்டார்களோ தெரியவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்/ இந்தியர்கள் தொன்மையைக் கைவிட்டு விட்டு நிகழ்காலத்தில் வைத்தே புரிந்து கொள்கிறார்கள். இங்குள்ள பலரும் என்னோடு விவாதிக்கும் போது இரண்டு கேள்விகளை மையப்படுத்தியே விவாதங்களை வைக்கிறார்கள். ஒன்று தமிழ் அறிவை/இந்திய அறிவைப் பயன்படுத்திக் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்ட துயரம். இன்னொன்று இதற்குக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை.
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எப்போதும் சொல்லும் குற்றச்சாட்டு, அது மூளையுள்ளவர்களை- அறிவாளி களைப் பயன் படுத்திக் கொள்வதைத் தவிர்த்து விட்டு முட்டாள்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்பது தான். ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் ஐ.ஐ.டி.களிலிருந்தும் ஐ.ஐ.எம்.களிலிருந்தும் வெளியேறும் பட்டதாரிகளில் பெரும்பாலோர் இந்தியாவை விட்டு வெளியேறும் புள்ளிவிவரங்களை தருவார்கள். மிகச் சிறந்த மருத்துவப் பட்டதாரிகள் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள் என்பார்கள். இப்போது பன்னாட்டு தகவல் தொழில் நுட்பக் குழுமங்களுக்கு வேலை செய்யப் போகும் பொறியாளர்களின் எண்ணிக்கையைச் சொல்கிறார்கள். இந்த எண்ணிக்கை யெல்லாம் பொய் என்றோ, இந்த அறிவெல்லாம் இந்தியர்களுக்குப் பயன்படாமல் வெளியே போய்க்கொண்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மை தான். பண ஏற்றுமதி, பொருள் ஏற்றுமதிகளை விட மூளை ஏற்றுமதி ஆபத்தானது என்பதை யார் தான் மறுக்க முடியும்.
இந்தக் கருத்தியலைப் பொதுப்புத்தியின் கருத்தியலாக மாற்ற நிகழ்கால ஊடகங்கள் பலவழிகளிலும் முயல்கின்றன. அச்சு ஊடகங்கள் தொடங்கி காட்சி ஊடகங்கள் வரை தீவிரமாக இந்த விவாதத்தை எழுப்பிக் கொண்டிருப்பதைக் கூர்மையாகக் கவனிக்கும் யாரும் புரிந்து கொள்ள முடியும். இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேலே மேலே வந்தவர்களையே அதற்கு எதிரான நிலைபாட்டிற்குள் தள்ளும் நோக்கம் கொண்ட தீவிரச் செயல்பாட்டின் ஒரு வடிவம் தான் ஏழாம் அறிவு திரைப்படம். திரைப்படத் தொழில் நுட்பங்கள் கைவரப் பெற்ற  21 ஆம் நூற்றாண்டுத் தமிழர்களான ஏ.ஆர். முருகதாஸ்+–உதயநிதி ஸ்டாலின் + சூர்யா  கூட்டணியின் தயாரிப்பாக ஏழாம் அறிவு வருவதை வேறெப்படிப் புரிந்து கொள்ள முடியும். இம்மூவரின் போன தலைமுறை நவீன ஐரோப்பியக் கல்வியின் சாத்தியங்களையும், அதற்கு வழி வகுத்த இட ஒதுக்கீட்டின் பலனையும் ஒருசேர அனுபவித்த தலைமுறை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. அதிலும் இட ஒதுக்கீட்டையே சமூக மாறுதலுக்கான கோட்பாடாக முன் வைத்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு அது தந்த பலன் தான் இந்த பணபலமும் அதிகாரமும் என்பது தெரியாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. தெரியாது என்றால் அவரது தாத்தாவோடு நீண்ட விவாதம் ஒன்றை நடத்திப் புரிந்து கொள்ள முயலலாமே தவிர அதற்கெதிரான படம் எடுத்துக் காசு பார்க்கும் காரியத்தில் இறங்கக் கூடாது. நாய் விற்றக் காசு குரைக்காது என்பது போல கொள்கையைக் கையளிப்புச் செய்து விட்டுச் சேர்க்கும் பணமும் கசக்காது என அவர் சொல்லலாம். ஆனால் நீங்கள் செய்வது வியாபாரம் அல்ல; நம்பிக்கைத் துரோகம் அல்லது கொள்ளை. 
தொலைந்து போன தமிழின் தொன்மை அறிவு என்ற முகமூடிக்குள் நுழைந்து கொண்டு அறிவு என்பதை மறு விளக்கம் செய்ய முயல்கிறது படம். கல்வி நிலையம் சார்ந்த- படிப்பறிவு மட்டுமே அறிவு என ஒரு புறம் பேசிக் கொண்டே இன்னொரு புறம் அறிவு என்பது வம்சாவளியாக வருகிறது – உயிரணுக்களின் திசுக்களில் தங்கியிருக்கிறது -என்ற வாதத்தையும் வைக்கிறது.  இதனை ஏற்றுக் கொள்ளும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என நான் சொல்ல வேண்டியதில்லை. அறிவைத் தேடுவதற்கென- மூளை உழைப்புக்கென பிரமன் படைத்த கூட்டத்திடம் அந்தப் பொறுப்பை விட்டு மற்றவர்கள் அவரவர்களுக்கு விதிக்கப் பட்ட உடல் உழைப்புக்கான பணிகளுக்குத் திரும்ப வேண்டும். மனுவின் மறு உயிர்ப்புக்குப் போதிசத்துவனை உயிர்ப்புச் செய்ததைத் திறமை என்று சொல்வதா? துயரம் என்று வருத்தப்படுவதா எனத் தெரியவில்லை. .
மூளை ஏற்றுமதியை எப்போதும் பேசுபொருளாகச் சொல்லும் அயல்நாட்டுத் தமிழர்களிடம் நான் வைத்துக் கொண்டிருக்கும் கேள்வியை இப்போது இங்கே முன் வைக்கிறேன். இட ஒதுக்கீடு தான் இந்திய அறிவை வெளிநாடுகளுக்கு விரட்டி விட்டது என்பது ஒரு புறம் உண்மை தான். அதனால் வெளியேறியவர்கள் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அதே இட ஒதுக்கீடு தான் இந்தியாவின் 50 சதவீத மக்களை நவீனக் கல்வியின் வழியாக இன்று உலகம் நம்பும் அறிவுத்தோட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது. அங்கு நுழைந்தவர்கள் எந்தக் கனி அறிவை விருத்தி செய்யும் கனி என்பதை அறியாமல், மயக்கம் தரும் பழங்களையும் தின்று ருசி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவிதமான தேடல்களிலும் இப்படித்தான் நடக்கும். அத்தோடு வெளியேறுபவர்கள் தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்துக் கனிகள் புளித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அடுத்தவன் தோட்டத்திற்குள் நுழைபவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது. ஆங்கிலேயர்கள் கல்வியைத் தந்தார்களே ஒழிய, அதன் வழியாக மட்டுமே அறிவைப் பெற முடியும் என எப்போதும் அவர்கள் சொன்னதில்லை. ஆங்கிலம் படிப்பதே அறிவு என நினைத்துக் கொண்டு, அதுதான் உலகத்தின் வாசல் எனக் கருதியவர்கள் தான் இப்போது வெளிநாடுகளில் தங்கள் மூளையை விற்றுக் கொண்டிருப்பவர்கள். அரபு நாடுகளுக்குச் சித்தாளாகவும் கொத்தனார்களாகவும் சுமைதூக்கவும் சென்றவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய விவசாயம், இந்திய நீரோட்டம், இந்தியக் கட்டுமானம், இந்தியப் புவியறிவு, இந்தியக் கணிதம் ,இந்திய மருத்துவம் இந்தியத் தொல்மனம் என எல்லாவற்றையும் இந்திய மொழிகள் வழியாகவே கற்க முடியும் என்பதை உணராமல் அவற்றை ஆங்கிலம் வழியாகக் கற்றுக் கொண்ட கூட்டம் தான் இந்தியக்கிராமத்து மனிதர்களுக்குத் துரோகம் செய்த கூட்டம். ஆனால் ஐரோப்பியர்கள் இந்த அறிவுகளுக்காக கீழைத் தேயங்களின் (ஓரியண்டல்) மொழிகளைக் கற்றுக் கொண்டிருக் கிறார்கள். அயல் நாடுகளுக்குத் தாவிவிட்ட இந்தக் கூட்டத்திற்கு எப்போதும் தங்களின் செயல்பாடுகள் சார்ந்தும் ஆசைகள் குறித்தும் குற்ற வுணர்வே ஏற்படுவதில்லை. அவர்கள் செல்லும் பாதை மட்டுமே முன்னேற்றமான பாதை என நம்பிக் கொண்டிருக்கிறது. சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு மனம் கசியாமல் தங்கள் சொகுசான வாழ்க்கைக்காக அயல் தேசங்களுக்குப் போய்விட்டு, இப்போது எங்கள் மூளையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

உண்மையில் இந்தியாவின் பிரச்சினை இட ஒதுக்கீடும், மூளை ஏற்றுமதியும் மட்டும் தானா என்பதை அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்கள்/ நெஞ்சைத் தொட்டுச் சொல்ல வேண்டும். தனிமனித வெளியிலும் பொது வெளியிலும் பெண்களுக்கான இடத்தை நீங்கள் இருக்கும் நாடுகள் எப்படி வழங்குகின்றன என்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். அரசு வேலையாயினும்சரி, தனியார் துறைப் பணிகள் ஆனாலும் சரி பெண்களுக்கான இடம் சமபங்காகவே இருப்பதை ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் நாம் காண முடியும்.  பெண்களின் மூளையையும் உழைப்பையும் இந்தியா பயன்படுத்த வேண்டும் எனச் சொல்வதற்குப் பதிலாக அங்கும் வந்து சாம்பார், சோறு சமைக்கும் வேலைகளையே தந்து கொண்டிருக்கிறோம். அடுப்படிகளில் அவர்கள் கழிக்கும் நேரத்தை குறைத்துப் பொதுவெளிக்குள் அவர்களை அனுப்பும் வகைகளைப் பரிந்துரை செய்வதைப் பற்றிப் படம் எடுக்காமல் ஆணைச் சார்ந்து வாழும் இந்தியக் குடும்ப அமைப்பின் பெருமைகளைப் பற்றிச் சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் (NRI)எடுத்த 180, போன்ற படங்களைப் பார்த்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இல்லாத ஒன்றைச் சொல்லி இருப்பதாகக் காட்டி வியாபாரம் செய்யும் தந்திரம் தமிழ்ச் சினிமாவின் வெற்றிப் பட இயக்குநர்களின் உத்தி. அதில் கைதேர்ந்தவர் என்பதை ஒவ்வொரு படத்திலும் சரியாகக் காட்டி வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். ஏழாம் ஆறிவும் அதிலொரு நகர்வு தான். தங்கள் படங்களுக்கான பார்வையை உருவாக்கும் போது தங்களை வெளியே நிறுத்திக் கொண்டே இவர்கள் யோசிக்கிறார்கள். தங்களிடம் இல்லாத தேசப்பற்று அரசு அதிகாரிகளிடம் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். நகரங்களின் அனைத்துச் சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு மண்வாசனைப் படங்களை எடுக்கிறார்கள். சாதி இறுக்கத்தையும் பெண்ணடிமைத் தனத்தையும் கூடுதலாக்கும் கிராமிய வாழ்க்கையை மண்வாசனையென்றும், கைகழுவக் கூடாத பண்பாட்டு அடையாளம் எனவும் பேசுவதன் அபத்தத்தை அவர்கள் உணர்வதில்லை. லஞ்சம், ஊழல், பொறுக்கித்தனம் போன்றவற்றிற்கு எதிராகக் கறுப்புப் பணத்தில் படம் எடுக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற. கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துப் பேசும் தமிழ்ப் பண்பாட்டுப் படத்தின் வெளியீட்டுக்குப் பின் அந்தப் படத்தின்  நடிகைகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதைப் பற்றி நினைத்துக் கொள்வதே இல்லை.
தன்னை உள்ளடக்கியதாகச் சமூகத்தைப் பார்க்கிற போது மட்டுமே ஒருவன் படைப்பாளியாக – கலைஞனாக ஆக முடியும். மற்றமைகளைப் பற்றி யோசிக்கும்போது தானும் அதில் ஒருவன் எனவும், அதிலிருந்து விலகி அந்நியனாக உணர்கிறேன் எனச் சொல்லும்போது படைப்பாளி தன்னைக் குற்றவாளியாக உணர்வான். தனது குற்றவுணர்வைத் தான் சார்ந்த குழுவின் குற்றவுணர்வாக மாற்றிக் காட்டுவதில் தான் தேர்ந்த படைப்பாளியின் படைப்புக் கோணம் வெளிப்படும். அப்படியான கலைஞர்களைத் தமிழ்ச் சினிமா தரும் என்ற நம்பிக்கையை இப்போதும் கைவிட வேண்டியதில்லை.

நன்றி : அம்ருதா, ஜனவரி, 2012


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை