: 34

மீட்டெடுக்க வேண்டிய தனித்தன்மைநம்முன் நிகழும் நிகழ்வுகளுள் எவை நம்பிக்கை சார்ந்தவை? எவை பாவனை சார்ந்தவை எனக் கண்டுபிடிப்பது எல்லோருக்கும் சுலபமல்ல. அப்படிக் கண்டு பிடிப்பதில் தேர்ந்தவர்களும் கூட தொடர்ச்சி யான கவனிப்பின் மூலமே சாத்தியப் படுத்து கின்றனர். சாத்தியப்படும் நிலையில் சிலவற்றை நம்பிக்கைகள் என்கிறார்கள்; சிலவற்றைப் பாவனைகள் என்கின்றனர். நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன; பாவனைகள் அம்பலமாக்கப்படுகின்றன.

நிகழ்காலத் தமிழகத்தில் தமிழ் மொழி, இலக்கிய மேம்பாட்டிற்கு அதிகப் பலன்கள் கிடைக்கும் காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின்- திரு மு.கருணாநிதியின் ஆட்சிக் காலமே என்பது நம்பிக்கையா? பாவனையா? என்பது இப்போது விவாதிக்க வேண்டிய ஒன்றல்ல. ஆனால் 1981 இல் மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்றான “ தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் நிறுவப்படும்” என்பது உடனடியாக நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றியவர் அப்போதைய முதல்வர் திரு எம்.ஜி.ராமச்சந்திரன். அவர் செயல்படுத்தத் தொடங்கிய போது, அது ’பாவனை’ என்றே பலராலும் நினைக்கப்பட்டது. தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றும் நோக்கத்தோடு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் என ஒன்று சென்னை தரமணியில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அதன் தரத்தை உயர்த்தாமல்- அதற்குக் கூடுதல் நிதியை வழங்கிக் காத்திறமான பணிகளை முடுக்கி விடும் வேலைகளைச் செய்யாமல் - தனியாக ஒரு பல்கலைக்கழகம் எதற்காகத் தொடங்கப்பட வேண்டும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட காலத்தில் நான் மாணவனாக இருந்தேன். திரு. மு. கருணாநிதியை விடவும் தமிழுக்குக் காத்திறமான பங்களிப்பு செய்தவர் எனக் காட்டிக் கொள்ளும்- பாவனை செய்யும்- நோக்கத்தோடு அப்போதைய முதல்வர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார் எனக் குற்றம் சாட்டும் தொனி அக்கேள்விகளுக்குப் பின்னால் இருந்தது.
இந்த நினைவுகள் தோன்றக் காரணம் அண்மையில் தஞ்சைப் பல்கலைக்கழகத்திற்குப் பேரா.ம.திருமலை அவர்கள் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதும், அவர் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கையும் தான். தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைத்த அடையாளத்தை அவரது காலத்தில் மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆசை எனது நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கான அடையாளங்களை உருவாக்கியவர் அதன் முதல் துணைவேந்தர் பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியன். இயல், இசை, நாடகம் எனச் சொல்லப்பட்ட முத்தமிழோடு அறிவியல், வரலாறு, கல்வெட்டியல், சித்த மருத்துவம் அயல்நாட்டுத் தமிழுறவு, கடலாய்வு எனக் கல்விசார் துறைகளைத் திட்டமிட்டதோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஆய்விதழ் வெளியீடு, மாபெரும் நூலகம், தமிழோடு தொடர்புடைய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்காக இளம் ஆய்வாளர்களுக்குப் பயிற்சி, மலேசியா, இலங்கை, சீனம், ஜப்பான், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பாவிலிருக்கும் இந்தியவியல் துறைகளுக்கும் மாணவ, ஆசிரியப் பரிவர்த்தனை, அகராதி தயாரித்தல், களஞ்சியத்திட்டம், இவற்றையெல்லாம் நூலாக்கிடும் வசதி கொண்ட அச்சகத்தோடு கூடிய பல்கலைக்கழகப் பதிப்புத்துறை எனப் பேரா.வ.அய். சுப்பிரமணியம் முன் வைத்த திட்டங்கள் குறுகிய காலத்திட்டங்கள் அல்ல. அனைத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்.
பேரா.வ.அய். சுப்பிரமணியனின் முன்மொழிதல்களை ஏற்று நிதி ஒதுக்குவதிலும், பணி நியமனங்களிலும், நிர்வாகத்திலும், கல்விச் சூழலை உருவாக்குவதிலும் அரசியல் நோக்கங்களைத் தாண்டி திரு எம்.ஜி.ராமச்சந்திரன் வினையாற்றினார் என்பதையும் கல்வியாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் தொடர்ச்சிகள் துயரமானவை. அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப் பட்டவைகளைத் திமுக ஆட்சியின் போது கண்டு கொள்ளாமல் இருப்பதும், திமுக முன்மொழிந்த திட்டங்களை அஇஅதிமுக கிடப்பில் போடுவதும் முப்பது ஆண்டுகாலத் தமிழக வரலாறு. தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்ந்தும் அவ்வாறு நடக்கவில்லை எனக்கூறி விட முடியாது.
தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த ஆய்வுப் பல்கல்கலைக்கழகமாகவும், பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவதற்குரிய நிறுவனமாகவும் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொடக்க நோக்கம், பேரா. வ.அய். சுப்பிரமணியனைத் தொடர்ந்து துணைவேந்தராக வந்த பேரா. ச. அகத்தியலிங்கத்தின் காலத்தில் கூட ஓரளவு தொடரவே செய்தது. ஆனால் மூன்றாவது துணைவேந்தராக வந்த பேரா.சி.பாலசுப்ரமணியன் காலத்தைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தனித்தன்மை தொலையத் தொடங்கிய காலம் எனச் சொல்ல வேண்டும். அப்போது தொலைந்து போன அடையாளமும் தனித்துவமும் பின்னர் வந்த ஒரு துணைவேந்தராலும் மீட்டெடுக்க முடியாததாகவே ஆகி விட்டது. தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியே இந்த 30 ஆண்டுகளிலும் நடந்துள்ளது என்பதை நினைத்துக் கொண்டால் வேதனை இன்னும் கூடவே செய்யும்.
நிதி ஒதுக்கீடு செய்வதில் இணைப்புக் கல்லூரிகளைக் கொண்ட மாநிலப் பல்கலைக்கழகங்களிடம் நடந்து கொண்ட வழி முறையையே அரசு நிர்வாகம் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடமும் கடைப்பிடித்த போது தமிழுக்கான பல்கலைக்கழகம் என்ற நிலை காணாமல் போய்விட்டது. ‘உங்களுக்கான நிதியை நீங்களே உருவாக்க முயலுங்கள்’ எனச் சொன்னதை ஏற்றுக் கொண்டு திசை மாறியது. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் மொழிவளம் என்னும் தன் முதன்மை நோக்கத்தைக் கைவிட்டு பட்டப்படிப்புகளைத் தொடங்குதல், அஞ்சல்வழிக்கல்வி நிறுவனத்தை ஏற்படுத்துதல் எனத் தன் முகத்தை மாற்றியது. அதிலும் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டை நடத்துவதில் அப்போதைய அரசோடு இணைந்து செயல்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகம் தமிழகக் கல்வியாளர்களை மதிக்காமல் நடந்தது மட்டுமல்லாமல், அயல்நாடுகளிலிருந்து வந்திருந்த இந்தியவியல் துறைப்பேராசிரியர்களையும் கூடத் தவறாக வழி நடத்தியது என்பதுதான் உண்மை. நான் பணியாற்றிக் கொண்டிருக்கும் வார்சா பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் இந்தியவியல் துறைப் பேராசிரியர்களோடு நடத்திய உரையாடல்களிலிருந்து இதனைச் சொல்கிறேன். அவர்களின் உரைகளின் சாரம் அரசியல் நோக்கத்திற்காகத் தொலைக்காட்சிகளில் திரித்துச் சொல்லப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பேரால் அழைக்கப் பட்டதாலேயே நாங்கள் கலந்து கொண்டோம்; ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமும், அப்போதைய துணைவேந்தரும் அரசாங்கத்தின் அமைச்சர்களைப் போலவே நடந்து கொண்டார்கள் என்று மதிப்புமிக்க இந்தியவியல் பேராசிரியர் வருத்தப்பட்டார்.
வெகுமக்கள் அரசியலுக்குப் பயன்பாடு ஏற்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனங்கள்  நடைபெறுகின்றன. இந்தப் போக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வெளிப் படையாக அறிவிக்கப்பட்ட கொள்கை. திராவிட இயக்க அரசியல் சார்பு கொண்ட பேராசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு என்பதில் தொடங்கி நேரடி அரசியலில் ஈடுபாடு காட்டியவர்களுக்கும் துணைவேந்தர் பதவிகள் வழங்கப்பட்டன. தேர்தல் அரசியலில் களம் கண்டவர்கள் துணைவேந்தர்கள் ஆனதும், துணைவேந்தர்கள் ஆனபின் தேர்தல் அரசியலுக்கு ஆசைப்பட்டார்கள் என்பதும் கடந்த கால வரலாற்றில் ஒரு பாதை. இன்னொரு பாதை ஓட்டு வங்கிக்கேற்பத் துணைவேந்தர் பதவிகளை வழங்குவது. தமிழ்நாட்டின் ஆகக்கூடிய எண்ணிக்கை கொண்ட சாதிச்சங்கங்களும் சாதிக் கட்சிகளும் தங்கள் சாதியைச் சேர்ந்த நபர்களுக்குத் துணைவேந்தர் பதவிகளைப் பெற்று விடுவதில் தீவிரம் காட்டி வெற்றியும் பெற்றன. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களாக வந்தவர்களிலும் இந்த நடைமுறைகளின்படி பதவிகளைப் பெற்றவர்களும் உண்டு. ஆனால் இப்போது பேரா. ம.திருமலையின் நியமனத்தில் இத்தகைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது எனது அனுமானம்.  இது வெறும் அனுமானம் என்று நினைத்து விட வேண்டாம். அதற்கான காரணங்களும் உண்டு.
ஓட்டு வங்கி அரசியலில் எந்தத் தொகுதியிலும் தீர்மானிக்கும் எண்ணிக்கை கொண்ட சாதியைச் சேர்ந்தவர் அல்ல பேரா.ம.திருமலை. ஒருவகையில் எனக்கு ஆசிரியர். மதுரைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவனாகச் சேர்ந்த போது “ ஜெயகாந்தன் –தகழி சிவசங்கரன் பிள்ளை நாவல்கள்- ஒப்பீடு” என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டத்தை முடித்து விட்டு மேலாய்வுப் பணியில் இருந்தார். பல்கலைக்கழகங்களில் மேலாய்வுப் பணியில் இருப்பவர்கள், அதிகாரப் பூர்வமற்ற வகையில் முதுகலை வகுப்புகளை எடுப்பார்கள். தற்கால இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய எனக்கு அவரோடு தொடர்பு இருந்ததில் ஆச்சரியம் இல்லை. பொதுவாகப் பிறமொழி வெறுப்பு கொண்ட தமிழ்ப் பேராசிரியப் பாரம்பரியத் திலிருந்து விலகியவர். மலையாளம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் அவருக்குத் தெரியும். பின்னர் மதுரைப் பல்கலைக் கழகத்திலேயே ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார், தனது ஒப்பியல் துறைசார்ந்து ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர். சிறுகதை, நாவல் தொடர்பாகவும் ஒப்பியல் ஆய்வு தொடர்பாகவும் நூல்களை எழுதியுள்ளார். பேராசிரியராக மட்டுமல்லாமல் நிர்வாக அனுபவங்களும் அவருக்கு உண்டு. பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பல நூல்கள் அச்சாகக் காரணமாக இருந்தார். தொலைநெறிக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பொறுப்பு, தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி எனப் பல நிர்வாகப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்.
இவற்றையெல்லாம் தாண்டி, தமிழ்ப் பேராசிரியர்களிடம் இருக்கும் மொழிப்பற்று என்னும் போலி முகமூடியை அணிந்து கொள்ளாதவர் என்பதைக் கூடுதல் தகுதியாகக் கருதுகிறேன். அதுதான் அவரை இந்த அரசு துணைவேந்தராகத் தேர்வு செய்ததற்கான காரணமாகக் கூட இருக்கலாம். திராவிட இயக்க அரசுகளிடம் பதவிகளைப் பெறுவதற்காகத் தமிழ்ப் பேராசிரியர்கள் காட்டும் அறிவியல் பார்வையற்ற அக்கறைகளே மொழிப் பற்றாக நினைக்கப் படுகிறது. அத்தகைய மொழிப்பற்றை பேரா.ம.திருமலையிடம் நான் எப்போதும் கண்டதில்லை. அதன் காரணமாகவே தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் துணைவேந்தராக இருக்கப் போகும் காலம் நம்பிக்கைக்கீற்றுகள் தோன்றக் கூடிய காலம் என நினைக்கிறேன். அதே நேரத்தில் அரசியலற்றவர்களே துணைவேந்தர்களாக வர வேண்டும் என்பதும் எனது வாதம் அல்ல. அரசியல் சார்பு, கருத்தியல் அரசியலாகவும், ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் அரசியலாகவும், அதற்காகக் கல்வி முறைகளைத் திட்டமிடும் அரசியலாகவும் இருக்க வேண்டும். அதற்கு மாறாக வெகுஜன அரசியல் நோக்கத்தோடு ஒத்துப் போகும் பேராசிரியர்களைத் துணைவேந்தர்களாக நியமனம் செய்தால் விளைவுகள் மேலும் மோசமாகவே ஆகி விடும் என்பதற்குத் தமிழகப் பல்கலைக்கழகங்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் காட்சிகளாக இருக்கின்றன.
திரு எம்.ஜி. ராமச்சந்திரன் பாவனைக்காகச் செய்தாரா? நம்பிக்கையில் செய்தாரா? என்ற கேள்வியைத் தாண்டி ’தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம்’ என்ற உணர்வு திரும்பவும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதைப் பார்த்துத் தொடங்கப்பட்ட கன்னடப் பல்கலைக்கழகம் சாதித்தவைகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சாதிக்கவில்லை என்பதை ஒரு குழு அமைத்து உறுதி செய்துவிடலாம். தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் மற்ற பல்கலைக்கழகம் போல இணைப்புக் கல்லூரிகள் கொண்ட பல்கலைக்கழகம் அல்ல என்பதைத் துணைவேந்தர் உணரவேண்டும். அந்த உணர்வை தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும், மைய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவிற்கும், கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு நிதிகளை வழங்கும் அமைப்புகளுக்கும் உணர்த்தப்பட வேண்டும். அவைகளோடு தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இந்திய தேசம் என்ற எல்லையைத் தாண்டிப் பல்வேறு நாடுகளில்  தமிழ் கற்பிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஆசியக் கண்டத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்; தமிழர்கள் தமிழைக் கற்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல; தமிழைத்தாய்மொழியாகக் கொண்டிராதவர்களும் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் தனித்தன்மை, பழைமை ஆகியவற்றின் மீது காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நான் இருக்கும் போலந்து நாட்டில் நான்கு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பாடமாக இருக்கிறது, இந்தியவியல் துறைகள் ஒவ்வொன்றிலும் சமஸ்கிருதத்தை நினைக்கும் அதே நேரத்தில் இன்னொரு இந்தியச் செவ்வியல் மொழியாகத் தமிழையே நினைக்கிறார்கள். அந்தப் பெருமையின் சொந்தக்காரர்கள் நாம் என்ற பெருமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான களனாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தான் விளங்க முடியும். நடந்து போனவைகளைப் பற்றிப் பேசிப் பயனில்லை. நடக்கவேண்டியவைகளை நல்லவைகளாகத் திட்டமிட வேண்டும். அதற்கான பார்வையும் தெளிவும் பேரா. ம.திருமலைக்கு உண்டு.
நன்றி: அம்ருதா/மார்ச்,2012


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை