: 100

வந்தார்கள்; வென்றார்கள்; செல்லவில்லைஆதியிலே வார்த்தை இருந்தது; அது தேவனாயிருந்தது; தேவனோடு இருந்தது என ஆதியாகத்தின் முதல் வசனம் ஆரம்பிப்பது போலச் சில வரலாற்று நூல்களில், “ஆதியிலே பாரதவர்ஷம் என்றொரு கண்டம் இருந்தது; அக்கண்டத்திற்குள் 56தேசங்கள் இருந்தன; அத்தேசங்களின் ராஜாக்கள் அவ்வப்போது நடக்கும் சுயம்வரங்களில் தலையை நீட்டுவதற்காக வரிசையில் நிற்பார்கள் எனப் பலரும் படித்திருக்கலாம். படிக்கவில்லை என்றால் பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பெரிய எழுத்துக் கதைகளை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள். 

வாசித்து விட்டு இவையெல்லாம் கற்பனையான புராணங்கள் தானே; எப்படி வரலாறு ஆகும் எனக் கேட்கலாம். புராணம், புனைகதை, வரலாறு என்பனவற்றிற்குப் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அவற்றைப்  புராணங்கள் சார்ந்த வரலாற்று நூல்கள் என வகைப் படுத்திக் கொள்ளுங்கள். வேறு வழியில்லை. பாரதநாடு பழம்பெரும் நாடு என்ற வாக்கியத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் புராணங்கள் சார்ந்த வரலாற்று நூல்களையும் நம்பத்தான் வேண்டும். அதற்காகப் பாரத வர்ஷத்தின் வடவெல்லை பனிசூழ் இமயமலை என்றோ, கடல்சூழ் குமரிமுனை தான் தென் எல்லை என்றோ அந்த வரலாற்று நூல்களில் தேடிப் பார்க்க வேண்டியதில்லை. 56 தேசங்களையும் அதன் ராஜாக் களையும் மனதில் வழக்குச் சொற்கோவையாக வைத்துக் கொண்டால் போதும். இந்தியத் துணைக்கண்டத்தின் ஆன்மீகப் பெருமையைப் பேச இந்த வழக்குச் சொற்கோவை அவசியமான ஒன்று. 

இந்தப் பரதக் கண்டத்திற்குள் படைகொண்டு வந்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது ”வந்தார்கள்; வென்றார்கள்: சென்றார்கள்” என இன்னொரு வழக்குச் சொற்கோவையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கிரேக்கத்திலிருந்து அலக்ஸாண்டர் வந்தார்; வென்றார்; சென்றார். சரி. அதற்குப் பிறகு ”யார் யார் தான் வந்தார்கள்? யாரை வென்றார்கள்? எங்கே சென்றார்கள்?” உடனே கஜினி முகம்மது, கோரி முகம்மது, எனப் பெயர்களை அடுக்க நினைத்தால் வரலாற்றுப் பிழை செய்தவர்களாக ஆகி விடுவோம். காரணம் அவர்களின் பூர்வீகமாகச் சொல்லப்படும் காந்தாரம் (இப்போதைய ஆப்கனிஸ்தான்,) பழைய பரதவர்ஷத்தின் பகுதி தான். அதனால் இசுலாமியர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இசுலாம் என்னும் சமயநெறி வேண்டுமானால் வெளியிலிருந்து வந்த நெறியாக இருக்கலாம். அதன் பரவலை ஏற்றுக் கொண்ட மக்கள் பண்டைய பாரத வர்ஷத்தின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் தான். ஆக இசுலாமியர்களை “வந்தவர்கள்; வென்றவர்கள்; சென்றவர்கள்” என்ற பகுப்புக்குள் சொல்ல முடியாது.

அதுபோலவே 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கடலோரங்களில் வந்திறங்கிய – போர்ச்சுகீசியர்களையும், பிரெஞ்சுக்காரர்களையும், ஆங்கிலேயர் களையும் ”வந்தார்கள்” என்று வேண்டுமானால் சொல்லலாம். ” வந்தார்கள்; வென்றார்கள் என்றோ, வென்றார்கள்; சென்றார்கள் என்றோ சொல்லி விட முடியாது” போர்த்துக்கீசியர்களையும் பிரெஞ்சுக்காரர்களையும் கூடச் சென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆங்கிலேயர்களை அப்படிச் சொல்லாமல், “வந்தார்கள்; நின்றார்கள்; இன்னும் நிற்கிறார்கள்” எனச் சொல்ல வேண்டும். ஆம் அவர்கள் சென்றிருக்கலாம்;ஆனால் இந்தியர்களின் மனத்திற்குள்ளும், வாழ்க்கை முறைக்குள்ளும் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட முடியுமா? அல்லது மறைக்க முடியுமா? 

ஐரோப்பியர்கள் இந்தியாவுக்கு எதற்காக வந்தார்கள்? என்று கேட்டுப் பின்னோக்கிப் போனால் முக்கிய நோக்கம் வியாபாரமாகவும், மதம் பரப்பலும் என்ற பதிலே கிடைக்கும். வணிக நோக்கத்தோடு கப்பல்களில் வந்தவர்களுக்கு இந்திய ஏலக்காயும், மிளகும் ஏக்கத்துக்குரியனவாக இருந்தன. தக்காணத்துப் பருத்தியும், பனாரஸ் பட்டும் ஆசைக்குரிய பொருட்களாக ஆயின. பீகாரின் இரும்புத்தாதும், வங்காளத்தின் மாங்கனீஸும் கவனத்தை ஈர்த்தன; கோகினூர் வைரமும் செங்கோட்டை ஓவியங்களும் சிந்தையையும் கண்களையும் கவரும் காட்சிப் பொருட்களாக மாறிப் போயின. ஆகவே வந்தவர்கள்; நின்றார்கள்; நிதானமாகப் படித்தார்கள்; பாடங்கற்றார்கள்; படிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். ஆம். எல்லாப் பாடங்களையும் படித்தார்கள்; படிப்பித்தார்கள்.

கடவுள் பற்றிய கருத்துக்களிலிருந்து விலகிக் கடல் மீனாகவும், தரையின் மணலாகவும் ஒதுக்கப்பட்ட- ஒடுக்கப்பட்ட- மக்களை மீட்டெடுக்க கல்வியே கருவி என நினைத்திருக்கிறார்கள். மீட்டெடுப்பதற்கான வழியாகவும் சத்தியமாகவும் வேதாகமம் என்னும் ஒற்றை ஆயுதம் போதும் என்று நினைவோடு வந்தார்கள் என்றாலும் வந்தவர்கள் அதை மட்டுமே செய்யவில்லை. இங்கு வந்தவர்கள் பாமர மக்களையும் சந்தித்தார்கள்; அவர்களைப் படிப்பதற்காக அவர்களின் மொழியைப் படித்தார்கள். அவர்களை ஆட்சி செய்வதற்காக அவர்களிடம் அதிகாரம் செயல்படும் விதத்தைப் படித்தார்கள். அதற்காக வரலாற்றையும் வழக்காறுகளையும் தொகுத்தார்கள்; ஆய்வு செய்தார்கள் அப்புறம் தான் அவர்கள் வென்றார்கள். அதன் பிறகு போனார்கள்; ஆனாலும் போய்விடவில்லை; இன்னும் இருக்கிறார்கள். ஆம் ஐரோப்பியர்கள் வென்றது வெற்று மணல் பரப்புகளை அல்ல. மக்களின் மனப்பரப்பை. அங்கிருந்து வெளியேறாமல் இப்போதும் இருக்கிறார்கள்.

17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் இன்னும் வெளியேறிவிடவில்லை அப்படி வெளியேறி விடாமல் இருக்க அவர்கள் கைக்கொண்ட ஆயுதங்களுள் முதன்மையானது அறிவுதான். தங்களுக்குள் மோதிக்கொண்ட பாரத வர்ஷத்துச் சிற்றரசர்களுக்குத் தேவையான யோசனைகளையும் ஆயுதங்களையும் வழங்கித் தங்கள் வியாபாரப் பரப்பை விரிவாக்கிய கிழக்கிந்தியக் கம்பெனி, ஆட்சியதிகாரத்தின் பரப்பாக இந்தியா என்ற நாட்டை உருவாக்கி விக்டோரியா மகாராணியிடம் கையளிப்புச் செய்த ஆண்டு1857. அதற்குப் பிறகுதான் இந்தியாவுக்கான சட்டங்களும் நடைமுறைகளும் இங்கிலாந்துப் பாராளுமன்றங்களில் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. அப்படி உருவாக்குவதற்கு முன் ஆங்கிலேயர்கள் தங்களின் மனத்தை மட்டுமே முதன்மையாகப் பயன்படுத்தாமல், இப்பரதவர்ஷத்தின் அனைத்துக் கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தின் போது செயல்பட்ட அதிகாரிகளின் பதிவுகளை லண்டனுக்கு அனுப்பச் சொல்லி அவற்றை படித்து இந்தியாவையும், இந்திய மனிதர்களின் மனங்களையும் புரிந்து கொண்டு இந்நிலப்பரப்பில் வாழ்பவர்களுக்குத் தேவையான –அடங்கி இருப்பவர்களாக ஆக்குவதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்கினார்கள்.

இதற்கு எழுதப்பட்ட நூல்களை மட்டுமே நம்பவில்லை; வாய்மொழியாகக் கிடைக்கும் தரவுகளையும் முக்கிய மானவைகளாகக் கருதினார்கள் என்பதற்குப் பல சான்றுகள் இன்றும் இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும்போதே அத்தகைய சான்றுகளின் தொகுப்புகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். அவற்றைத் தொகுக்க மேற்கொண்ட அர்ப்பணிப்பையும் ஆய்வுமுறைகளையும் நோக்கத்தையும் அறிந் திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக-இங்கே-வார்சாவில் – ஓர் நூல் ஒன்றைப் பார்த்தேன்; படித்தேன். படித்த பின்பு ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப் படுத்தி ஆட்சி செய்ய எவ்வளவு தூரம் புத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிற. அந்த அரிய நூலைப் பற்றிச் சொல்வதற்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆட்சியதிகாரத்துக்கு உதவி செய்த ஆய்வுகளைக் கொஞ்சம் சுட்டிக் காட்டலாம். ஒற்றைக் கண்டமாக- பாரதவர்ஷமாகச் சொல்லப்பட்டாலும், பிரிந்து இருப்பதில் பாரதவர்ஷத்து மனிதர்களுக்கு இருந்த களிப்பையும் ஈடுபாட்டையும் அறிந்து கொள்வதற்காகப் பல ஆய்வுத்திட்டங்களை ஆங்கிலேய அரசாங்கமும், நிர்வாகத்துக்கு உதவிய அறிஞர்களும், மதம் பரப்ப விரும்பிய பாதிரிகளும் செய்துள்ளார்கள். குறிப்பாகத் தமிழ் மொழியில்- தமிழ்நாட்டிலேயே-அத்தகைய தரவுகள் ஏராளமாகத் தொகுக்கப் பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன என்பதை நாம் அறிவோம்.

சென்னையில் செயல்படும் ஆசியவியல் நிறுவனம் மறுபதிப்புச் செய்துள்ள பல நூல்கள் அத்தகைய ஆய்வுகள் தான். கால்டுவெல் பாதிரியின் திராவிட மொழிகளுக்கான ஒப்பிலக்கணம், எட்கர் தர்ஸ்டன் தொகுத்துக் கொடுத்ததென்னிந்தியக் குடிகளும் குலங்களும் போன்றன இங்கே நினைவில் கொண்டு வரவேண்டிய நூல்கள். அதேபோல் கர்னல் மெக்கன்சியின் உத்தரவின் பேரில் தொகுக்கப்பட்ட பாளையப்பட்டுகளின் வம்சாவளிக் கைப்பீதுகளையும் அவற்றோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரிட்டனின் ராணியின் கீழ் ஆட்சியதிகாரம் வந்த பின்பு ஒவ்வொரு ஜமீன்களும், ஊர்களும், பெருந்தனக்காரர்களும் தாங்கள் அனுபவித்து வந்த உரிமைகளைக் குறித்து ஒரு கையேடு தயாரித்து ஐரோப்பிய வருவாய் அதிகாரிகள் வசம் ஒப்படைத்துள்ளனர். அக்கையேடுகளே வம்சாவளிக்கைபீதுகள். அவற்றில் சொல்லப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மைக்கு ஏற்ப அனுபோக உரிமைகளும், மானியங்களும் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்றும் ஒவ்வொரு ஊரையும் கோயிலையும் , சாதியையும் அதன் ஆழத்திற்குள் சென்று ஆய்வு செய்பவர்களுக்கு இவையெல்லாம் தரவுகளாகப் பயன்படுகின்றன.
ஆங்கிலேயர்களே வெளியிட்ட நூல்களும் தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ள வம்சாவளிக் கைபீதுகளும் நிகழ்கால இந்தியாவில்- காலனியத்திற்குப் பிந்திய விடுதலை இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் நேர்மறைத் தாக்கங்களையும் எதிர்மறைப் போக்கு களையும் உருவாக்கியுள்ளன. அது பற்றிப் பின்னர் பேசலாம். இப்போது  எதிர்மறைப் போக்கை உருவாக்காமல் நேர்மறையான பயன்பாட்டை மட்டுமே கொண்ட நூல் ஒன்றைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். அந்த நூலைத் தான் நான் பணியாற்றும் போலந்து நாட்டு வார்சா பல்கலைக்கழக நூலத்தில் பார்த்தேன். இத்தகைய தொகுப்புகளும் ஆய்வுகளும் அவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நூல்களுமே ஐரோப்பியர்களை – ஐரோப்பிய அறிவை இன்னும் இந்தியாவில் தங்க வைத்திருக்கிறது என நினைப்பதால் கட்டாயம் சொல்லியாக வேண்டும். 
வார்சாப் பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயவியல் துறையின் நூலகத்தில் இருக்கும் அந்த நூலின் பெயர் பிரிட்டானிய இந்தியாவில் தொகுக்கப்பட்ட அரசாங்கக் கோப்புகளில் கிடைத்த பயன்பாட்டுச் சொற்களின் - வருவாய் மற்றும் நீதித்துறைக்கான கலைச்சொற்களின்- தொகுப்பு (GLOSSSARY  OF  JUDICIAL AND REVENUE TERMS, AND OF USEFUL WORDS OCCURING IN OFFICIAL DOCUMENTS RELATING TO THE ADMINISTRATIONS OF THE GOVERNMENT OF BRITISH INDIA) என்னும் நீளமான பெயர்.   இத்தொகுப்பில் அரபி, பெர்சியன், இந்துஸ்தானி, சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் போன்ற முக்கியமான இந்திய மொழிகளில் இருந்து சொற்களைத் தொகுத்ததோடு முக்கியமில்லாத மொழிகளிலிருந்தும் சொற்கள் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் விளக்கம் பெற்றுள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனியின் புத்தக விற்பனையாளர்களா லண்டன், ஆலன் & கோ என்ற  நிறுவனம் வெளியிட்ட இந்நூலின் பின்புலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நூலகத்துறையும்,. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக சமஸ்கிருதவியல்துறையின் பேராசிரியர்களும் வேலை செய்திருக்கிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனிக்காக இந்தப் பணியை மேற்கொண்ட முக்கியமான அதிகாரியாக அதன் இயக்குநர் ஹோரஸ் ஹெய்மன் வில்ஸன் இருந்துள்ளார். அவர் எழுதிய முன்னுரை 1855, ஜனவரி எனத்தேதியிட்டு அச்சாகி உள்ளது.
வார்சா பல்கலைக்கழகத்தின் கீழைத் தேயவியல் நூலகத்திற்கு இந்த நூல் வந்த வரலாறே சுவை யானதாக இருக்கிறது. அந்த வரலாறு அங்கிருக்கும் ஆய்வாளர் களும் மாணவர்களும் சொன்ன வாய்வழித்தகவல் தான் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். முதல் உலகப்போருக்குப் பின் முக்கியமான பல நூல்களை ஜெர்மானியர்கள் இங்கிலாந்திலிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். எடுத்துச் சென்று ஜெர்மானிய தேசிய நூலகத்தில் வைக்கப்பட்டவைகளில்-முக்கியமானவையெல்லாம் ஆசிய நாடுகளைப் பற்றி ஆங்கிலேயர்கள் தொகுத்த நூல்கள் தான். மாக்ஸ்முல்லர் போன்ற ஜெர்மானியர்களின் பார்வையில் அவை பட்டதன் பலனாகவே பின்னர் உலக அறிவுக்குள் அவை சென்றுள்ளன. அந்நூல்கள் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ரஷ்யர்களிடம் சென்றுள்ளது.  ரஷ்யர்களிடம் சென்ற பல நூல்கள் அதன் நட்பு நாடுகளின் நூலகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. போலந்து, சோவியத் யூனியனின் நட்பு நாடுகளுள் ஒன்றாக இருந்ததால் வார்சாவின் கீழைத் தேயவியல் துறைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்நூலின் பக்கங்களில் இருக்கும்  நூலக  முத்திரைகள் வாய்மொழித் தகவல்களுக்கு ஆதாரமாக உள்ளன. ஜெர்மானிய முத்திரையையும் ரஷ்ய முத்திரையையும் மூடிவிடுவதுபோல அவற்றின் மேலேயே போலந்து நாட்டு வார்சாப் பல்கலைக்கழக முத்திரை இப்போது இருக்கிறது.

இந்தியாவின் முக்கிய மொழிகளில் இருந்து தொகுக்கப்பட்ட நீதியியல் மற்றும் வருவாய் தொடர்பான சொற்களைத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக் கொண்டு ஆட்சியதிகாரம் செய்தவர்களை வாளின் வழி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் எனச் சொல்ல முடியுமா? நிச்சயமாகச் சொல்ல முடியாது. புத்திசாலித்தனத்தின் வழி- அறிவின் வழி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். வாளின் வழி –ஆயுதத்தின் வழி  கைப்பற்றிய அதிகாரத்தை இன்னொரு வலிமையான ஆயுதத்தால் வெளியேறச் செய்து விட முடியும். ஆனால் அறிவு என்னும் ஆயுதத்தால் கைப்பற்றப் பட்ட அதிகாரம் மனங்களுக்குள் சென்று பதிந்து நிற்கிறது. இந்தியர்கள் மனங்களைக் கழுவிக் கொள்ள முடியாமல் திரும்பத்திரும்ப மூழ்கிக் கொண்டே இருக்கிறோம். அறிவுக் குளத்தில் குளிக்கும் சுகத்தை வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா? செய்தவர்கள் எனச் சொல்ல முடியாது  A 4 அளவில், 600 பக்கங்களில் அச்சாகியுள்ள அந்நூலில் தமிழ்ச் சொற்கள் கையால் எழுதப்பட்டு  பழைய அச்சு முறையான மொத்தச் சொல்லையும் ஒரே அச்சாக்கப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் எவ்வாறு உருவம் பெற்றிருந்தது என்பதை அறிய முடிந்தது. பழைய நூலைக் கவனமாக எடுத்துப் படித்து முடித்த பின்பு இணையத்தில் கூகிளில் போட்டுத் தேடிப் பார்த்தேன். அந்த நூல் அப்படியே இந்த வருடம் (2012) மறு அச்சு செய்யப்பட்டு விற்பனைக்குக் கிடைப்பதாக அமேசான் இணையத்தளம் சொன்னது. தற்போதைய விலை பிரிட்டானிய பணம் 55.99 பவுண்டு. இந்திய ரூபாய் மதிப்பில் 3600/-].
நன்றி: அம்ருதா.2012,ஜூன்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை