: 52

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் எல்லா நடவடிக்கைகளையும் கேலியும் கிண்டலுமாகப் பதிவு செய்யும் நபர்கள் தான் எனது முகநூல் வட்டத்தில் நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படிக் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் தங்களை இடதுசாரிகள் அல்லது இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கைகளின் ஆதரவாளர்கள் எனக் கருதிக் கொள்பவர்கள். நானும் கூட என்னை இடதுசாரிக் கருத்தியலிலும் பொருளாதாரக் கட்டமைப்பிலும் நம்பிக்கை கொண்டவ னாகவே இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மற்றவர் களுக்குத் தோன்றுவது போல போகிற போக்கில் புறங்கையால் ஒரு பதிவைப் போட்டுக் கேலியாக ஒதுங்கிப் போக மனம் தயாராக இல்லை.
ஐரோப்பாவில் இருப்பதால் இப்படித் தோன்றுகிறது என என்னை அறிந்த நண்பர்கள் நினைக்கக் கூடும். 
இடதுசாரிக்கருத்தியல் அல்லது பொருளாதாரக் கொள்கை என்ற நோக்கத்திலிருந்து பார்க்கும்போது இந்த அரசின் கொள்கை முடிவுகள் மக்களை மையப்படுத்தாத – பெருமுதலாளிகளை மையப் படுத்திய கொள்கை முடிவுகளாகத் தோன்றுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஒருபடி மேலாகப் போய் ஏகாதிபத்தியச் சார்பு அமெரிக்க அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப எடுக்கப்படும் முடிவுகள் எனவும்,  இந்திய மக்களுக்கு எதிராக அந்நிய தேசத்துப் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கும்பல் போலவும் மன்மோகன்சிங் தலைமையில் செயல்படும் அரசை விமரிசனம் செய்யவும் தோன்றுவது வெளிப்படையானது.அந்த எண்ணத்தில் தான் இணையதளங்களில் எழுதும் –குறிப்பாக முகநூலில் உடனுக்குடன் பதிவுகளைப் போட்டு விடும் நண்பர்கள் பதிவுகளைத் தட்டுகிறார்கள்.
 இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கை என்பது எப்போதும் ஒரு தொடர்புக் கண்ணியில் கடைசியில் இருக்கும் பெருங்கூட்டத்தின் நலனை மையப்படுத்தியதாக இருக்கும் எனப் புரிந்து வைத்துள்ளேன். அந்தப் புரிதலின் படி பார்த்தால் வர்த்தகத்தில் – அது சில்லறையாகப் பொருட்களை விற்கும் சிற்றங்காடி வர்த்தகமோ, பேரங்காடி வர்த்தகமோ அதில் ஏமாற்றப்படாமல்- சுரண்டப்படாமல் இருக்க வேண்டிய பெருங்கூட்டம் அங்கிருந்து பொருட்களை வாங்கும் பயனாளிகள் தான். அவர்களுக்கு நியாயமான விலையில்- தரமான பொருட்கள்- கிடைக்க வேண்டும் என நினைப்பது ஓரளவு சரியான பார்வை. அத்தோடு அந்தப் பொருட்களை உற்பத்தி செய்தவனுக்கும் நியாயமான விலை கிடைக்க வேண்டும் என நினைப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு மாறாக உற்பத்தியாளனுக்கும், பயனாளிக்கும் இடையில் இருக்கும் வியாபாரிகளுக்கு ஆதரவாக இருப்பது எந்த வகையான இடதுசாரிப் பொருளாதாரக் கொள்கை எனத் தெரியவில்லை.
நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களைத் தர முடியும் என்பதோடு கூடுதலான வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனச் சொல்லித் தான் மன்மோகன் அரசு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனத்திற்கு அனுமதி என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் உறுதியாகப் பலன் அடைவார்களா என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்டால் முழுமையான உத்தரவாதத்தை அவர் சொல்ல மாட்டார். எதையும் உறுதியாகக் கூறும் இடதுசாரிகளைப் போலப் பேசிப் பழக்கமில்லாத அவர்,  சொல்லும் பதில்கள் மழுப்பலான பதில்கள் போலவே தோன்றும். அவருக்குப் பதிலாக அவரது அரசில் இருக்கும் இன்னொரு நபர் உறுதியான பதிலைச் சொன்னாலும் நம்புவதற்கு நாம் தயாராக இல்லை. ஆனால் அவருக்கும், அவரது ஆலோசனையைக் கேட்டு நடக்கும் அரசு அமைப்புக்கும் அப்படியொரு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையைப் பொய்யான நம்பிக்கை எனச் சொல்ல என் மனம் ஒப்பவில்லை.
இதே போல் தான் இந்திய விவசாயத்தை இப்போது இருக்கும் நிலையிலேயே நீண்ட காலத்துக்கு வைத்திருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு ’இந்திய விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளதையும் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிந்திய இந்தியாவில் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகச் சிறுவிவசாயிகளும், குறுவிவசாயிகளும் லாபகரமான தொழிலாக விவசாயத்தைக் கருதவில்லை; அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பதால் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். எதுவும் தெரியாது என்றாலும் கைகளால் ஆன தொழிலைச் செய்ய முடியும் என நினைப்பவர்கள் உள்ளூரிலேயே வேறு தொழிலுக்கு மாறி விட்டார்கள், உள்ளூரில் அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறுநகரங்களுக்குச் சென்று அன்றாடக் கூலிகளாக வேலை செய்து விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படிச் சென்று திரும்பும் வாய்ப்பும் மனமும் இல்லாதவர்கள் தொழில் நகரங்களில் குடியேறி வாரக் கூலிகளாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நகர்வுகள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன என்றாலும் பொதுவான போக்கு விவசாயத்தை நம்பிக்கையோடு பார்க்கும் மனநிலை முடிந்து விட்டது. விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத்தின் இடத்தை கருமருந்து சார்ந்த தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழிலும் நுழைந்து இடப் பெயர்ச்சியைக் குறைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பீடித் தொழில் அந்த இடத்தில் இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் அப்படியொரு தொழில் இல்லாததால் மதுரை மாவட்டக் கிராமங்களில் ஒவ்வொன்றிலு மிருந்தும் மொத்த மக்கள் தொகையில் பாதிப் பேர் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து விட்டார்கள். இங்கெல்லாம் நானே நேரடியாகப் பார்க்கவும் பழகவுமான வாய்ப்புள்ள கிராமங்கள் இருக்கின்றன என்பதால் இம்மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்கிறேன். இதைப் போல வேறு இடங்களில் வேறு வகையான வாய்ப்புகள் விவசாயத்தை ஒதுக்கி விடக் காரணிகளாக இருக்கலாம். 
இம்மூன்று மாவட்டங்களிலும் கூட தலித்துகள் சொந்தக்குடிகளையும் சேரிகளையும் விட்டு வெளியேறுவது குறைவுதான். அதே நேரத்தில் கிராமங்களிலேயே தங்கி விவசாயக் கூலிகளாக ஆசைப்படுகிறார்கள் என்று நினைத்து விட வேண்டாம். விவசாயத்தோடு இருந்த தொடர்பை மனரீதியாக முறித்துக் கொள்ள முன் வந்தவர்கள் அவர்கள் தான். விவசாயம் சார்ந்த இடைநிலைச் சாதிக் குழுக்களிடம் இருக்கும் ஆதிக்க மனோபாவம், அடிமைகளாகக் கருதியதால் இயல்பாகவே விவசாயம் சார்ந்த வெளிகள் அவர்களுக்குத் துயரம் பரவிய களன்களாகவே இருந்தன. அதிலிருந்து விடுபட நினைத்தவர்களுக்கு நகரங்களில் வளர்ந்து ஓங்கிய கட்டுமானத் தொழில்கள் காட்சியில் பட்டன. சித்தாளாகவும் கொத்தனாராகவும் உருமாறி நகரங்களுக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டம் கால் நூற்றாண்டுக்கு முன்பு கழனிகளில் வேளாண் கூலிகளாக இருந்தவர்கள்.  விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு நகரங்களுக்குப் போய் வரும் அவர்களின் மாற்றத்தைப் பொறுக்க முடியாத ஆதிக்கசாதியினரின் மனம் – பேருந்தில் இடம் இருக்கிறது என்பதால் என் பக்கத்தில்யே உட்கார்கிறார்கள் என்ற ஆற்றாமையும் அடாவடித் தனங்களும் தான் தென்மாவட்டங்களில் கலவரமாக இப்போதும் வெடிக்கின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளைச் சொந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி அனுப்பாமல் பெண்ணடிமைத் தனம் பேணும் இவர்கள், தங்களிடம் அடிமைகளாக இருந்தவர்களின் பிள்ளைகள் பேருந்துகளில் ஏறிப் பயணம் செய்து பட்டங்கள் பெற்றுப் பதவிகளை பெறுவதைக் கண்டு பதற்றம் கொள்வது கூடுதல் நிகழ்வுகள் தான்.  
சோசலிசத்தின் பேரில்- பொதுத் துறைகளின் பேரில் வைத்த நம்பிக்கை தான் கனரகத் தொழில்கள் தொடங்கி ஜவுளி ஆலை, கரும்பாலை, காகித ஆலை, கல்லுடைக்கும் தொழில் என எல்லாவற்றையும் அரசின் தொழில்களாக ஆக்கச் செய்தது. வங்கிகளைத் தேசிய உடைமையாக ஆக்கச் சொன்னது. போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கித் தனியார் முதலாளிகளைத் துரத்தி அடித்தது. பெரும்பெரும் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைத்துப் பாசன வசதியைப் பெருக்கித் தந்ததோடு நேருவின் அரசாங்கம் விவசாயத்திலிருந்து விலகிக் கொண்டது. அரசுப் பண்ணைகளை உருவாக்கவில்லை. பொதுத்துறையின் கீழ் ஒரு தொழிலாக விவசாயத்தைக் கொண்டு வர வேண்டும் என நினைத்துப் பார்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் என்ன ஆகி இருக்கும்  பெரும் பண்ணையார்களிடமிருந்து நிலத்தை வாங்கி நிலமில்லா விவசாயிகளுக்குக் கொடுத்ததற்குப் பதிலாக விவசாயத்தைத் தொழிலாகக் கணித்து அதில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை –மாதச் சம்பளத்தை உறுதி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கும் சுவாரசியம் பலப்பலவாய் விரிகிறது. கிராமங்களில் நிலவிய சாதி ஏற்றுத்தாழ்வுகளுக்கு நிச்சயமாக அது நெருக்கடியாகவே இருந்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்தக் காரணத்தினாலேயே அப்படியொரு எண்ணம் தோன்றாமலமேயே போயிருக்கலாம். நேருவுக்குத் தோன்றியிருந்தாலும் மற்றவர்கள் தடுத்திருக்கலாம்.
 நேருவின் பொருளாதாரக் கொள்கைகளையும் அரசாங்க நடைமுறைகளையும் நிராகரிப்பதற்கான  காரணங்கள் எதையும் சொல்லாமல் கை விட்டுவிட்டுப் போகும் மன்மோகன்சிங்கும் அவரது கூட்டாளிகளும் இந்த இடத்தில் முக்கியமான மாறுபாடு ஒன்றைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்திய வேளாண்மையை அதன் பாரம்பரியமான பிடியிலிருந்து நகர்த்தித் தொழில் கட்டமைக்குள் கொண்டுவரும் திட்டத்தை இப்போது முன் வைக்கிறார்கள். அந்நிய மூலதனத்தை அறிமுகம் செய்யும் கொள்கை முடிவின் போது சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கூச்சல் கேட்டதுபோல். “ இந்திய விவசாயம் முற்றிலும் அழிந்து விடும்” என்ற கூச்சல் அதைவிடக் கூடுதலாகக் கேட்கத்தான் போகிறது.  ஆனால் இந்திய விவசாயத்தின் மாறாத அம்சங்கள் தான் – நிலப்பிரபுத்துவப் பண்பாட்டையும், சாதி ஆதிக்கத் துயரத்தையும் இந்தியாவில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது; மறுத்துவிட முடியாது. தொழில் கட்டமைப்பின் கீழ் இந்திய விவசாயம் வரும்போது அதில் ஈடுபடுபவர்கள் லாபகரமான உற்பத்திக்காகச் சிந்திப்பார்கள். வேளாண்மைக்குச் சிந்தனையே தேவையில்லை என நினைக்கும் பாரம்பரிய மனம் கொஞ்சம் ஆட்டம் காணத்தான் செய்யும். ஆனால் வேறு வழியில்லை.
 இந்த இடத்தில் எனக்கு ஒரேயொரு வேண்டுகோள் இருக்கிறது. மன்மோகன் சிங் நினைத்திருந்தாலும் அதைச் சொல்லியிருக்க  முடியாது என்பதும் உண்மைதான். அப்படிச் சொல்வது காங்கிரஸுக்குள்ளேயே கூடக் கூச்சல் குழப்பத்தை உண்டாக்கும் என நினைத்துக்கூடச் சொல்லாமல் விட்டிருக்கலாம். ஆனால் இனியும் அதைத் தள்ளிப்போட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மன்மோகன் சிங்குக்கு அடுத்துக் காங்கிரசின் பிரதம வேட்பாளரான ராகுல் காந்தி, நேரு–இந்திரா ஆகியோரின்  குடும்ப வாரிசாக மட்டும் தான் இருக்கப் போகிறார்.. நிச்சயமாக அவர்களின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளுக்கான வாரிசாக இருக்கப் போவதில்லை. அப்புறம் ஏன் தயக்கம். நேருவின் பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் தவறானவை என வெளிப்படையாகச் சொல்லிவிடலாம். 1990 இலேயே சொல்லி இருந்தால், அந்தக் கொந்தளைப்பு கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போயிருக்கும். இப்போதாவது தைரியமாகச் சொல்லி விட்டு அடியை எடுத்து வைக்கலாம் தயக்கம் எதுவுமின்றைப் பன்னாட்டு மூலதனத்திற்கும் சந்தைக்கும் தனியார் மயத்திற்கும் தாராளமாகக் கதவுகளைத் திறந்திருக்கலாம்.
உள்நாட்டு மூலதனமோ, பன்னாட்டு மூலதனமோ இந்தியாவில் தொழில் வளர்ச்சியைப் பெருக்கினால் சரி என நினைக்கும் நிகழ்காலக் காங்கிரஸ் அரசாங்கம் அரசின் வேலைகளைச் சுலபமாக்கிக் கொள்ளும் மறைமுகத் திட்டத்தையும் வைத்திருக்கிறது. எல்லா வற்றையும் அரசுத் துறை அல்லது பொதுத்துறையாகக் கையாண்ட நேருவியப் பார்வை ஒருவிதத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்புடையதுதான். ஆனால் அதன் மூலம் பலனடைந்த வர்க்கம் எதுவெனக் கவனித்தோடு நினைத்துப் பார்க்கும்போது சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கும் உழைக்கும் மனிதர்கள் அல்ல என்பதும் புரிகிறது. உழைக்கும் மனிதர்களின் குடும்பங்களிலிருந்து சிலரைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கமாக ஆக்கிச் சொந்தக் குடும்பத்தாரிடமிருந்து அந்நியமாக்கிப் பிரித்தெடுத்து நகரவாசிகளாக ஆக்கிய வேலையைத் தான் நேருவின் திட்டங்கள் செய்தன,  நகரவாசியாகி விட்ட நடுத்தர வர்க்கத்தினர் தங்களுக்கு வாழ்வளிக்கும் அமைப்புகளில் இருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதன் நலன்களுக்கு எதிராகப் போய்த் தங்களுக்குக் கிடைத்த சலுகைகள் தங்களின் வாரிசுகளுக்குக் கூடக் கிடைக்காத நிலைமைக்குத் தள்ளி விட்டார்கள். சீர்கெட்டுக் கிடக்கும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் வேலையை இருபதாண்டுகளாக அதிகாரத்தில் இருக்கும் அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன என்றால் அதனைத் தூண்டித் துரிதப் படுத்தும் வேலையைச் செய்ததில் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கும் பங்குண்டு; நிர்வாகம் செய்த நிர்வாகிகளுக்கும் பங்குண்டு. தொழிலாளர் நலன்களை மட்டும் கவனத்தில் கொண்டு போராட்டங்கள் நடத்திய தொழிற்சங்கங்களுக்கும் பங்குண்டு. இவர்களின் முகங்களும் அடையாளங்களும் எதுவெனக் கேட்டால் நேருவின் சாயல் என்று தான் சொல்ல வேண்டும் இவர்களின் பங்களிப்புகளையும் பாதகச் செயல்களையும் பேசாமல் அரசமைப்பின் உச்சத்தில் இருக்கும் மன்மோகன் சிங்கை மட்டும் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும் ?
பன்னாட்டு மூலதனத்தை அனுமதித்து, உலகமயப் பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவின் முகத்தை – அதன் பொருளாதார அடித்தளத்தில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் – மேல்கட்டுமானங்களான பண்பாடு, கருத்தியல், வாழ்க்கை முறை, சிந்தனைத் தளம் என எல்லாவற்றிலும் மாற்றத்தை – கொண்டு வந்து விட முடியும் என வெளிப்படையாகச் சொல்லாமல் ஆனால் பிடிவாதத்தோடு நம்பிச் செயல்படும் மன்மோகன் சிங்கின் நம்பிக்கைக் கோடுகள் என்னிடமும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது என்பதை மட்டும் இப்போது உணர்கிறேன்.  


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை