: 69

வைரமுத்துவின் தோழிமார் கதை- ஒரு விமரிசனம்


 அவரே இந்த வரிகளைக் கவிதை எனச் சொல்லவில்லை.
வட்டார வழக்கில் ஒரு நாட்டுப் பாட்டு என்றுதான் தொடங்குகிறார். வைரமுத்து வாசிக்கும் வரிகளை படக் காட்சித் தொகுப்போடு முதலில் பாருங்கள். நாட்டுப் பாட்டை அதற்கான பாடகர்களைக் கொண்டு பாடச் செய்யாமல், தனது கவிதையை வாசிக்கும் தொனியில் அவரே வாசிக்க, அதற்கு உரையெழுதுவதுபோல ஒருவர் படக்காட்சிகளை அடுக்கித் தந்திருக்கிறார். படக்காட்சிகளும் வரிகளின் வாசிப்பும் முடிந்தபோது எனக்கொரு சந்தேகம் எழுந்தது. அதனைச் சந்தேகம் எனச் சொல்வதைவிட எல்லாவற்றையும் ’விமரிசனப்பார்வை’யோடு வாசித்துப் பழகியதால் தோன்றிய கேள்வி என்று சொல்வதுதான் சரி. தோழிமார் கதை எனத் தலைப்பு வைத்ததற்குப் பதிலாக ஒரு புங்கமரத்தின் கதை எனத் தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றியது.
மூன்று வருடங்களாக (2008 ஜூன் மாதம் 19 ந்தேதி இணையத்தின் ஒளிக்காட்சி வடிவமான யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு புகுத்தப்பட்டுள்ளது).இது இணையத்தில் இருக்கிறது நான் முதன் முதலில் பார்த்த போது இருந்த எண்ணிக்கை 92 078 நீண்ட நாட்களாக மாற்றம் இல்லாமலேயே இருக்கிறது. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் அதனைத் திறந்து பார்க்கிறார்கள்.கேட்கிறார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் கோயில்களுக்கு ஒரு தலபுராணம் எழுதிய இடைக்காலத்துப் புலவர்கள் அந்தக் கோயிலோடு சேர்த்து ஒரு மரத்தையும் இணைத்துக் கடவுளின் பகுதியாக எழுதிக்காட்டியிருப்பார்கள். தலபுராணத்தின் தொடர்ச்சியை எண்பதுகளின் தமிழ்க் கவிதைக்குள்ளும் வாசித்திருக்கிறேன். இழப்பின் துயரத்தை நினைவின் அடுக்குகளாகத் தொகுத்துச் சொல்லி கழிவிரக்கத்தை உண்டாக்கும் தொனியில் அமைந்த கவிதைகள் அவை. தமிழின் நவீன கவிகளாக அறியப்பட்ட கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன் போன்றவர்களிடம் தன்னிலை நோக்கிய கேள்வியாகவும், பழமலய்யிடம் புறநிலை நோக்கிய அரசியல் கேள்வியைத் தூண்டும் தொனிக்காக நகரும் வரிகளாகவும் வெளிப்பட்டன. பழமலய்யை நகலெடுத்த கரிகாலன் போன்றவர்களிடம் மட்டுமல்லாமல் தலித் கவிகள் சிலரிடமும் இந்தத் தன்மையை வாசிக்கலாம். வைரமுத்துவும் இவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டியவர் என்றாலும் அவரது வரிகள் உருவாக்குவன நடப்பியல் விரிவுகள் அல்ல; புனைவியலின் விரிவுகள். அந்தப் புனைவியலின் வட்டார வேறுபாட்டைத் தமிழச்சி தங்கபாண்டியனின் வரிகளாகவும் வாசிக்கலாம்..
இந்தக் கவிகளின் இளமைக்காலம் என்பது கால்நூற்றாண்டுக்கும் முந்தியது. அவர்களின் சிறுவயதுப் பருவத்தில் இருந்த உற்றார் உறவினரின் வெளித் தோற்றத்தையும் வெகுளித்தனத்தையும் மட்டும் அவர்களின் இயல்பாகவும் கள்ளங்கபடமற்ற மனமாகவும் இந்தக் கவிகள் அந்தப் பால்ய வயதில் நினைத்துக் கொண்டார்கள் என்பது ஆச்சரியமானது அல்ல; இன்றும் நினைத்துக் கொண்டு அதனைக் கொண்டாடும் மன நிலையில் அசை போடுகிறார்கள் என்பதுதான் ஆச்சரியம். தங்கள் உற்றார் உறவினராகவும், அவர்களிடம் தங்கியிருந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்த அப்பாவி மக்களாகவும் இருந்த கிராமத்து மக்களைப் பற்றிய புனைவியல் சித்திரங்கள் முழுமையும் உண்மையானவை அல்ல. அச்சித்திரங்கள் கிராமத்து மனிதர்களை அவர்களின் உறவினர்களுக்குள் மட்டுமே நிறுத்திக் காட்டும் தன்மையிலானவை.பக்கத்து வீட்டுக்காரர்களோடும், பக்கத்துத் தெருக்காரர்களோடும், பக்கத்து ஊர்க்காரர் களோடும் மற்ற சாதி மனிதர்களோடும் கொண்ட பகைமுரண் சார்ந்த உறவுகளையும் வெளிப்படுத்திய வன்மங்களையும் காணத்தவறிய – காண மறுத்த - புனைவு வார்த்தைகளால் விரிந்து வைக்கப்பட்ட சித்திரங்கள் அவை.
வைரமுத்து வாசித்துக் காட்டும் இந்த நாட்டுப்பாட்டு எல்லாரையும் கடந்த காலத்திற்குள் இழுத்துச் செல்லும் என நான் நினைக்கவில்லை. வீழ்ந்து விட்ட புங்கமரத்தின் கதையை – இரண்டு தோழிகளின் கதையினூடாகச் சொல்ல வைரமுத்து தேடிப்பிடித்து அடுக்குத் தரும் இந்த வார்த்தைகளையும் அதன் வழி விரியும் காட்சிப்படிமங்களையும் எல்லாராலும் உள்வாங்கிக் கொள்ளவும் உருவாக்கிக் கொள்ளவும் இயலாது. ”பேண் பார்த்த சிறுவயசு, பாவாடை நாடா முடுச்சு அவிழ்வும் சிறுக்கி மகள்,  இறுக்கி முடி போடும் ஆத்தாக்கள், எண்ணெய் வைத்தும் மருதாணி தடவியும் சுருக்கா ஓடித் திரியும் தெருப்புழுதி, கருவாட்டுப்பானை, சிறுவாட்டுக்காசு, குச்சி ஐஸு, கண்ணாமூச்சி,, காணாமல் போன கால்கொலுசு, சூடு வைத்தும், நொக்கி எடுத்தும் மிரட்டும் ஆத்தாக்களால் வளர்க்கப்பட்டு, உலகம் என்னவென்றும், வாழ்க்கை என்னவென்றும் புரியாமல் வளர்ந்த இரண்டுபேர், நட்புக்காகச் சக்களத்தியாய் இருக்கத் திட்டமிட்ட அறியாமை, என விரியும் அந்தத் தோழிகள் நடப்பு வாழ்க்கைக்கான காரணங்களை அறியாமல் பிரிந்தவர்கள். தண்ணியில்லாக் காட்டுக்கும், வறட்டூருக்கும் தனித்தனியாய் வாக்கப்பட்டுப் போனவர்கள். திரும்பவும் சந்திக்கிறார்கள்; கடந்த போன தங்கள் இளம்பிராயத்தை அந்தப் புங்கமரத்தின் வீழ்ச்சியோடு இணைத்துப் பேசிக் கொள்கிறார்கள். இந்தக் காட்சிகளை நகரத்தில் பிறந்து நகரவாசியாகவே வளர்ந்துவிட்ட தமிழர்களால் உணர முடியாது. உணர வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் கிராமத்திலிருந்து பெயர்த்து எடுக்கப்பெற்று நகரத்தில் பதியம் போட்டுக் கொண்டுள்ள பரதேசிகளுக்கு இந்த அனுபவம் திரும்ப வேண்டும் என்ற ஏக்கமாக இருப்பது ஆச்சரியமல்ல. அதுவும் கிராமத்தில் கொஞ்சம் உடையவர்களாக இருந்து நகரத்துக்கு வந்து நடுத்தர வர்க்கமாக மாறிவிட்ட மனிதர்களுக்கு அந்தக் கிராமத்துக் காட்சிகள் கண்நிறையும் காட்சிகளாகவும், கண்களில் நீர்நிறைக்கும் காட்சிகளாகவும் விரியும் வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்பை உணர்ச்சிகரமான வைரமுத்துவின் குரலால் உருவாக்க முடியவில்லை என்பதும், இன்னொரு நிகழ்த்து முறை வடிவத்தால் அது சாத்தியமாகி இருக்கிறது என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று. அதன் மூலம் எழுத்துப் பிரதி நிகழ்த்துப் பிரதியாக மாற்றப்படும் போது உருவாகும் வெகுமக்கள் பங்கேற்பு எத்தகையது வீரியம் உடையதாக ஆகிறது என்பதையும் நாம் உணர வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இப்போது இன்னொரு வடிவம் - அதே வரிகளின் வேறு வடிவத்தைக் கேளுங்கள். பாருங்கள்
வரிகள் இசைக்கருவிகளின் பின்னணியில் நாலுமடங்கு நேரம் கூடுதலாக ஒலிக்கின்றன. மகதியும் சின்மயியும் அதே வரிகளை மேடையில் பாடுகிறார்கள். மேடையின் முன்னால் சில ஆயிரம் பேர் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக் கின்றனர். பாட்டு வரிகள் பதிவு வைரமுத்துவின் குரலில் பதிவுசெய்து இணையத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து (25-04-2010) ] யு-ட்யூப்பில் பதிவு செய்யப்பட்டு இணையத்திற்குள் ஏற்றியுள்ளனர். இதுவரை 1,12,518 க்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சில நூறுபேர் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். பார்ப்போர் எண்ணிக்கை மாற்றத்தில் இரண்டுக்குமான எண்ணிக்கை வேறுபாடு கவனிக்க வேண்டிய ஒன்று.. வைரமுத்துவின் தோழிமார் கதை வைரமுத்துவின் துல்லியமான உச்சரிப்பில் கேட்கப்படுவதை விடவும் பாடலாக ஒலிக்கும்போது கேட்கும் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது. இசைக்கப்படும்போது திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நானே பல தடவை கேட்டு விட்டேன். நான் கணிணியின் திரையில் கேட்பதை விடவும் கூடுதல் கவனத்தோடு அந்த மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கூட்டம் கட்டிப்போடப் பட்ட கூட்டமாக அமர்ந்திருக்கிறது. அப்படி அமரச் செய்வது எது? வைரமுத்து எழுதிய வரிகளா? அந்த வரிகளை முழுங்கிக் கொண்ட இசையா? இசையோடு இழையாடும் இரண்டு பாடகிகளின் குரலா? அந்தக் குரலில் குழைத்துத் தரப்படும் தாலாட்டும் ஒப்பாரியும் கலந்த பின்னோக்கிய நினைவுகளா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் ஒற்றைச் சொல் பதில் எதுவும் இல்லை. அதற்கு மாறாக ஒரு எழுத்துப் பிரதி நிகழ்த்துப் பிரதியாக ஆக்கப்படும்போது நடக்கும் மாற்றங்களின் விளைவுகள் தான் அதற்கான பதிலாக அமையக்கூடும்.
நிகழ்த்துப் பிரதியின் கலவை எப்போதும் வெகுமக்கள் திரள் பங்கேற்பதற்கான திறப்புகளைக் கொண்டனவாக இருக்கின்றன என்னும் அடிப்படை விதியை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது நிகழ்த்துப் பிரதியாக மாற்றும் நிகழ்த்துநர், பின்னணிக் கலைஞர்கள், மேடைத்தளம், முன்னே அமர்ந்திருக்கும் பார்வையாளத் திரள் என ஒவ்வொன்றிலும் உயிரூட்டம் பெற்றுக் கொண்டே இருக்கும் வாய்ப்பு கொண்டது. இங்கே வைரமுத்துவின் குரல் உண்டாக்காத மாயத்தை மகதியும் சின்மயியும் தங்கள் குரல் வழியே உருவாக்குகிறார்கள் என்று மட்டும் சொல்லி விட முடியாது. ஒருவர் உண்டாக்கும் ஏற்ற இறக்கத்தை இன்னொருவர் வாங்கி இன்னொரு தளத்திற்கு அல்லது வெளிக்குக் கொண்டு செல்வது மூலம் அது நடக்கிறது என்றும் சொல்லி விட முடியாது. அதேபோல் அவர்களின் குரலுக்குத் துணை நிற்கும் ஊதிசைக் கருவிகளும் தட்டொலிக் கருவிகளும் தான் இந்த மாயத்தைச் செய்கின்றன என்பதும் உண்மையாக இருக்க முடியாது. இவையெல்லாவற்றையும் தாண்டி மேடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் கூட்டமும் கூட அந்தப் பங்கேற்பை முழுமையாக்கும் காரணியாக இருக்கலாம்.
எல்லாம் சேர்ந்த மாயமே நிகழ்த்துக்கலையின் மாய விளைவு. உங்களுக்கு அந்த வரிகள் தரும் அனுபவத்தோடு உங்கள் சொந்த வாழ்க்கை சார்ந்து எந்தவிதத் தொடர்பும் இல்லை என்ற போதிலும் நிகழ்த்தப்படும் நிகழ்வின் ஏதோ ஒரு கூறு உங்களை உள்ளே உள்ளே இழுத்துக் கொண்டு போய்க் கட்டிப் போட்டு விடலாம். காணொளியில் கூட்டம் அசைவற்றுக் கிடப்பதை அதுதான் காட்டுகிறது.இல்லையென்றால் உங்கள் உடலை அங்கே கிடத்திக் கொண்டே நீங்கள் அலைபேசியில் உரையாடிக் கொண்டும் இருக்கலாம். தூரமாக விலக்கிக் கொண்டுபோய் நினைவைக் கொல்லும் மாயத்தையும் அது சாத்தியமாக்கும்..


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை