: 45

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை  அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.


திருப்பங்கள் ஏற்படுத்திய நிழற்படங்கள்.அது பதுங்கு குளியா? ராணுவ முகாமா? என உறுதியாகச் சொல்ல முடியாத இடத்தில் அடுத்து நடக்கப் போவது என்னவென்றே தெரியாமல் கொறித்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அடுத்தடுத்த படங்களில் துப்பாக்கி ரவைகளைத் தாங்கி வீழ்ந்து கிடைக்கிறான். இந்தப் படங்கள் எல்லாமே அருகிலிருந்து எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தான் கொல்லப் படப் போகிறோம்  என்பதைக் கண்டு பய உணர்வே, அச்சத்தின் பீதியோ கூட அந்த முகத்தில் இல்லை. இந்தப் படங்கள் வரிசையாகத் தரப்பட்டு இதில் உள்ள சிறுவனின் பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன் எனச் சொல்லப்பட்டது. இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் பெரும்பான்மைச் சிங்கள-பௌத்தச் சமூகத்திடமிருந்து பிரிந்து ஈழத்தமிழ்தேசம் ஒன்றை உருவாக்கும் போராட்டத்தின் –யுத்தத்தின் – அடையாளமாக மாறிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் தான் இந்த பாலச்சந்திரன் என்ற தகவல் தமிழகத் தமிழர்களின் மனசாட்சியை- உள்ளுணர்வை தட்டி எழுப்பி விட்டது. இப்போது காட்டுத் தீயெனப் பரவிக் கொண்டிருக்கிறது.

 தமிழக எல்லையைத் தாண்டி எங்கெல்லாம் தமிழர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள் இலங்கையென்னும் நாட்டில் மட்டுமே மதிக்கப்படாதவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பது உண்மையில்லை; இந்திய எல்லைக்குள்ளும் மதிக்கப்படாத தேசிய இனமாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட இந்தியாவைத் தக்க வைக்கும் நோக்கம் கொண்ட தேசியவாதிகளின் கொடுங்கனவாக மாறி விட்ட மாணவர்களின்  போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன.  இந்தத் திசைமாற்றத்தை உருவாக்கிய பாலச்சந்திரன் பிரபாகரனின் நிழற்படத்தொகுப்பின் விளைவையொத்த விளைவை உருவாக்கும் சக்தி வாய்ந்த தொகுப்பு ஒன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இன்று உருவாகியுள்ள மனவெழுச்சியும் தன்னெழுச்சியான போராட்டங்களும் அந்தப் படத்தை முன் வைத்தே உருவாகியிருக்கக் கூடும். ஆனால் அன்று அந்தத் தொகுப்பின் மீது பிரபாகரனின் ஆதரவாளர்கள் எனச் சொல்லிக் கொண்ட நபர்களும் இயக்கங்களும் ஏற்படுத்திய சந்தேக ரேகைகள்  பொதுப்புத்தியின்  மனவெழுச்சியைத் தணித்தன; திசை திருப்பின..
இந்தியாவின் மைய, மாநில அரசுகள் அடங்கிய உலக சமுதாயத்தின் நெருக்கடிகளால் முள்ளி வாய்க்கால் பகுதிக்குள் தள்ளப்பட்ட இலங்கைத் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் கடும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப் பெற்றனர். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர்; எஞ்சியவர்கள் சரண் அடையத் தயாரானார்கள்; சரண் அடையும் அடையாளமாக வெள்ளைக் கொடிகளோடு வந்தவர்களும் கொல்லப்பட்டனர் என்ற உண்மை அல்லது பொய் இதுவரை மயக்கமாகவே இருக்கிறது.
அப்படி வந்த போதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் நெற்றியில் துப்பாக்கி ரவை செலுத்தப் பெற்று கொல்லப்பெற்றார் என்பதும் மயக்கமாக ஆக்கப்பெற்றது. அவரை மையப்படுத்திய நிழற்படத் தொகுப்பை இலங்கை அரசே வெளியிட்டது. ஆனால்  மாவீரர்களுக்கு மரணம் இல்லை என்ற அரூப வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கப் பார்த்ததின் விளைவால், வீழ்த்தப் பெற்ற பிரபாகரனின் நிழற்படத் தொகுப்பு குறியீட்டுக் கதையின் கோடுகளாக மாறிப்போயின. அவரது படங்களின் விளைவுகள் திசைமாற்றம் செய்யப்பெற்ற பாதையை அவரது மகன் பாலச்சந்திரனின் படத்தொகுப்பு நேர்செய்து கொண்டிருக்கிறது. 
இந்தப் படங்களின் விளைவுகளையும் திசைமாற்றங்களையும் போலத்தான் தமிழ்நாட்டில் அந்தப் படத்தொகுப்பு பெரும் விளைவை உருவாக்கியது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். 1991, மே மாதம் 21 இல், சென்னையை அடுத்த  ஸ்ரீ பெரும்புதூருக்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. ரகசியப் புலனாய்வு அமைப்புகளும் காவல்துறையினரும் கொடுத்திருந்த ஆபத்து எச்சரிக்கைகளையும் மீறி மக்களைச் சந்தித்தார். அவருக்கு ஆபத்து உண்டாக்கக் கூடியவர்கள் எனச் சொல்லப்பட்ட புலிகளுக்கு அவர் மீது நியாயமான கோபங்கள் இருந்தன. அந்தக் கோபத்துக்குக் காரணம் இலங்கைக்கு அவர் அனுப்பி வைத்த இந்திய ராணுவம். இலங்கையில் அமைதி காக்கச் சென்ற ராணுவம் எனச் சொல்லப்ப்ட்டாலும், ராணுவம் ராணுவமாகவே இருக்கும்; இருந்தது என்பதை இந்திய ராணுவம் இலங்கையில் உறுதி செய்தது. போராட்டங்களை அடக்குவதாகச் சொல்லி சாதாரண குடிமக்களிடம் நடந்து கொண்ட செயல்கள், வன்முறைகள் பற்றி ஏராளமான புனைகதைகள் அதன் பின் வெளியாகின; எழுதப்பெற்றன.  குறிப்பாகப் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் நடந்து கொண்ட விதம் கோபத்தின் உச்சத்தை அடைந்த போது பழிவாங்கும் எண்ணமும் உச்சத்தை அடைந்தது. உச்சத்தை அடைந்த அந்த எண்ணம் தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிரைப் பறிக்கும் கண்மூடித்தனமான காரியத்தைச் செய்ய வைத்தது என்பதையும் ஈழத் எழுத்தாளர்களின் கதைகளும் கவிதைகளும் கட்டுரைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.
ராஜீவ்காந்தியின் உடல் தமிழ் மண்ணில் சிதறடிக்கப் பட்ட காட்சிகள் தான் இந்தியத் தமிழர்களின் மனவெளி யிலிருந்து இலங்கைத் தமிழர்களின் சோகத்தை விலக்கி வைத்தது. இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் இலங்கைத் தமிழர்களின் பால் தங்கள் உணர்வு பூர்வமான நேசத்தையும் உதவ வேண்டும் என்ற கரிசனத்தையும் காட்டி வந்த தமிழ் நாட்டுத் தமிழ் மனம் பொதுப் புத்தி-  தேசப் பற்று என்ற கருத்துருவின் பால் நகர்த்தப் பட்ட வரலாறு தொண்ணூறுகளின் வரலாறாக ஆகி விட்டது.அத்தகைய வரலாற்றை உருவாக்கிய அந்த நிழற்படத் தொகுப்பையும் இப்போது பாலச்சந்திரனின் நிழற்படத் தொகுப்பு இடம் பெயர்த்துவிட்டது.

ஈழத்தமிழர்களின் பிரச்சினைத் தமிழ் நாட்டுத் தமிழர்கள் உணர்வுடன் கலந்துள்ள ஒன்றாகவே இருக்கிறது. அப்படித் தொடர்வதற்கு தமிழக அரசியல் தலைமைகள் பெரிதும் மாறிவிடவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்களை  மொழி ஒன்று மட்டுமே உறவுடையவர்களாக நினைத்துவிடச் செய்யாது. மொழியுணர்வைத் தாண்டியதாகச் சமயஞ்சார்ந்த பண்பாட்டு நடைமுறைகளும்  அன்றாட வாழ்க்கைப் போக்கு களுமே மனிதக் கூட்டத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது என்பது நிகழ்கால உண்மைகளாக இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வரலாற்று ரீதியாக சமய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனை முறைகள், மொழிப்பயன்பாடு என ஒற்றுமைப் பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்த ஒற்றுமைகளே இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் பால் திரும்பத் திரும்ப தமிழ் நாட்டுத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இருக்கும் இந்தப் பின்னணியை-  பண்பாட்டுத் தொடர்பை  இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதைச் செய்யாவிட்டால், இந்திய அரசின் இலங்கை பற்றிய கருத்துருவை மாற்ற முடியாது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை அணுகிய காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பக்கத்து நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறது என்றும் கூடச் சொல்ல முடியாது. சமீப காலங்களில் வளர்ந்து வரும் உலகமயப் பொருளாதாரத்தின் வியாபாரப் பெருக்கத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சந்தையாக இந்திய அரசும் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளைத் தொடங்கியுள்ள இந்தியப் பெருமுதலாளிகளும் கருதுகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. ராணுவத் தொழில் நுட்பம் சார்ந்த உதவிகளுக்கு அப்பால், இந்தியக் கம்பெனிகள் எண்ணெய் உற்பத்தி மின்சார உற்பத்தி, ஊடக வலைப்பின்னல்களை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழில் என இலங்கையில் தொழில் கூட்டுகளைத் தொடங்கியுள்ளன.
அந்தப் போக்கைப் பயன்படுத்தித் தமிழ்ப் பெருமுதலாளிகளும் தங்களின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சிந்தனையைச் செலுத்தி விடாமல் இலங்கைத் தமிழர்களோடு  இந்தியத் தமிழர்களுக்கு உள்ள தொப்புள் கொடி உறவு எனச் சொல்லத்தக்க உறவை இந்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்கும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும். மறக்கடித்து விடலாம் – அணைத்து விடலாம் என நம்பப்பெற்ற ஒரு ஆழ்மன நினைவுப்பொறியைத் திரும்பவும் மிதப்பு நிலைக்குக் கொண்டு வந்து கொதிநிலை ஆக்கியிருக்கிறது இந்தச் சிறுவனின் படத்தொகுப்பு. நினைவுகள் ஆழப் புதைவன மட்டுமல்ல; மிதக்கும் குமிழிகளும் கூட. தொட்டுப் பார்த்தால் குமிழிகள் உடைந்து போகும் என்ற மட்டும் நினைக்க வேண்டியதில்லை; கொப்புளங்களாக மாறவும் கூடும்.

 நன்றி: உயிர்மை,ஏப்ரல்,2013


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை