: 85

பழைய படம்; புதிய அனுபவம்: பூர்ணமை நாளில் ஒரு மரணம்
11-07-2014 வெள்ளிக்கிழமை பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவர் ஒருவரின் வேலைகளை மதிப்பீடு செய்யும் பணி. அன்றே முடித்து அன்றே திரும்பியிருக்கலாம். பாண்டிச்சேரியில் சுற்றித் திரிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நாட்கள் என்று சொல்வதைவிட ஆண்டுகள் சில ஆகிவிட்டன எனது சினிமாப் பார்க்கும் வெறிக்குத் தீனி போட்ட நகரம் அது. அந்த நகரத்தின் மூலை முடுக்குகளில் இருந்த அரங்குகளில் எல்லாம் இரண்டாம் ஆட்டங்கள் பார்த்திருக்கிறேன்.
வார்சாவிற்குப் போவதற்கு முன்னால் நாடகத்துறையில் தேர்வுகளை நடத்தும் பொறுப்பில் வந்து 4 நாட்கள் தங்கியபோது கடைசியாக அங்கு இரண்டாம் ஆட்டம் பார்த்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின் கொஞ்சம் ஊர் சுற்றலும் ஒரு சினிமாப் பார்ப்பதும் எனத் திட்டமிட்டு ஒருநாள் கழித்தே பயணச்சீட்டுக்குப் பதிவு செய்திருந்தேன். 
இடையில் வந்த அந்தத் தகவல் எல்லாவற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. “13 -07-2014, ஞாயிறு முற்பகல் பனுவல் புத்தகக் கடை மாடியில்  ‘வித் யு வித் அவுட் யு’ படத்தின் இயக்குநர் பிரசந்ந விதனகெயின் இன்னொரு படம் திரையிடப்படுகிறது என்று தகவல் சொன்னது. படத்தின் பெயர் பூர்ணமை நாளன்று ஒரு மரணம் எனத் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் ‘ டெத் ஆன் அ ஃபுல்மூன் டே’ (Death on a fullmoon day ) என இருந்தது. திரையிடலுக்குப் பிறகு  திரையிடலை ஏற்பாடு செய்யும் அமுதனோடு உரையாடலாம் என்றும் சொன்னது அந்தக் குறிப்பு. அமுதனை மதுரையில் சந்தித்துப் பத்தாண்டுகளாவது இருக்கும். ஆனால் அவரது ஆவணப்படங்களை அதற்கும் பிறகும் பார்த்திருக்கிறேன்.
அமுதனைப் பார்க்கலாம்; பேசலாம் என்பதைவிடப் பிரசந்ந விதனகேயின் இன்னொரு படம் பார்க்கலாம் என்ற ஈர்ப்பே பயணத்திட்டத்தை மாற்றியது. நெல்லை நோக்கிய பயணம் சென்னையை நோக்கித் திரும்பியது. அதிகாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேருந்தின் ஓரத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வதை அனுபவிக்க வேண்டும். பலதடவை பயணம் செய்த பாதைதான் என்றாலும், சூரியன் வருவதற்கான நேரத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பயணம் சுகமானது. ஒவ்வொருமுறையும் விதம்விதமான மனநிலையை உருவாக்கக் கூடியது.
பயணங்களைப் போல, மனதிற்குப் பிடித்த ஒரு படைப்பைத் தந்த ஒரு படைப்பாளியின் மற்ற படைப்புகளும் புதுப்புது உலகத்தைக் காட்டிவிடும் என்று எதிர்பார்ப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. அதிலும் தமிழ்ச் சினிமாக்காரர்கள் ஒருபட அதிசயக்காரர்களாகவே அதிகம் இருக்கிறார்கள். முதல் படத்தில் தமிழர்களுக்கான சினிமாவைத் தரப்போகிறவர் என்ற  நம்பிக்கையளிக்கும் ஒரு இயக்குநர் அடுத்தடுத்த படங்களில் அடையாளம் தெரியாமல் போவதையே தமிழ்ச் சினிமா வரலாறாகக் கொண்டிருக்கிறது.


இரண்டு பூர்ணமை நாட்களுக்கு இடையில் நடக்கும் நிகழ்வுகள் படத்தின் நிகழ்வுகள். இலங்கை ராணுவத்தில் பணியாற்றி மரணம் அடைந்த சிப்பாயின் தந்தை, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற மறுத்துவிடுவதன் தொடர்விளைவுகள்  படக் காட்சிகளாக விரிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளோடு தேசத்தின் ராணுவம் நடத்தும் யுத்தகளத்திலிருந்து அரசாங்க முத்திரையோடு திறந்து பார்க்கக் கூடாது என்ற உத்தரவையும் தாங்கி வந்திறங்குகிறது சவப்பெட்டி. சவப்பெட்டியில் இருக்கும் உடலுக்கானவன் என நம்பப்படும் மனிதனின் சின்னப் படம் பெரியபடமாக ஆக்கப்பட்டு ஊரே கொண்டாடுகிறது. தங்கள் ஊர்க்காரன் தேசத்தைக் காக்கும் போரில் உயிர்விட்டான் என்பதால் உண்டாகும் மனநிலை சார்ந்த கொண்டாட்டங்கள். ஆனால் அவனது தந்தை அதை ஏற்கவில்லை. சவப்பெட்டியில் இருப்பது தன் மகனின் உயிரற்ற உடலாக இருக்க முடியாது என்று நம்பும் தந்தைக்குத் தன் மகன் சொல்லிச் சென்ற குரலில் நம்பிக்கை இருக்கிறது.  தனக்கு வாக்களித்துச் சென்றபடி, கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் இந்தச் சிறிய வீட்டைக் கட்டி முடிக்கவும், கல்யாணமாகாமல் இருக்கும் தங்கையின் திருமணத்தை நடத்தி முடிக்கவும் தேவையான பணத்துடன் தன் மகன் வருவான் எனக் காத்திருக்கவே விரும்புகிறார் அந்தக் கண் தெரியாத வயோதிகர்.

இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அனுப்பப் பட்ட அரசாங்கப் படிவத்தை வாங்கிப் பெட்டிக்குள் வைத்துவிட்டு அதன் மேல் தன் மகனுக்காகச் சந்தை யில் புதுப் பனியனை வாங்கி வைத்துக் காத்திருக்கிறார். அவரின் பிடிவாதத்தையொட்டிக் குடும்பத்தினரும், அந்த எளிய கிராமத்தின் அரசுத் தொடர்பு நபர்களும் சமூக அமைப்புகளும் எடுக்கும் நடவடிக்கைகளுமே படத்தின் காட்சிகளாக விரிகின்றன. மூத்தமகள், அவளின் கணவனான மருமகன், திருமணமாகாமல் இருக்கும் இளையமகள், அவளைக் கட்டிக்கக் காத்திருக்கும் உறவுக்கார இளைஞன் என எல்லோரும் இழப்பீட்டுத் தொகையை வாங்கிக் கொள்ள விரும்பினாலும் கையொப்பமிட வேண்டியவர் தந்தை. அவரது பிடிவாதத்தால் அரசின் ஆணையை நிறைவேற்றாத அதிகாரி எனத் தன்னைத் தண்டிக்கக் கூடும் என நினைக்கும் கிராம அதிகாரிக்கு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தருவதன் மூலம் லஞ்சமாகக் கொஞ்சம் பணம் வாங்கலாம்;  அவருக்குத் தான் வட்டிக்குக் கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற நினைப்பு இருக்கிறது. அந்த ஊரின் பெருமைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பொறுப்புடைய சமயத்தலைவர்களுக்குத் தங்கள் ஊரிலிருந்து ஒரு தியாகி நாட்டிற்காக உயிர் கொடுத்தான்; அவனுக்காக ஒரு பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதையெல்லாம் ஏற்க மறுக்கும் அந்த வயோதிகரின் மனத்திற்குள் தன் மகனின் உடலை ஒருமுறைத் தொட்டுப் பார்த்துவிட வேண்டும்; அதன்பின் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு இருக்கிறது. தன்னந்தனியாகச் சவப்பெட்டியைப் புதைத்த இடத்தில் தோண்டத் தொடங்குகிறார். அவரின் மனநிலையை ஏற்றுக் கொண்ட குடும்பத்தாரும் ஊர்க்காரர்களும் சேர்ந்து தோண்டுகிறார்கள். திறந்து பார்க்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறித் திறந்து பார்க்கிறார்கள். உள்ளே இருப்பது மனித உடல் அல்ல; வாழை மரம். அதன் மட்டை. திறந்து பார்த்ததால் அரசின் இழப்பீடு கிடைப்பது சாத்தியமில்லை. அதைப் பற்றிய கவலை இல்லாமல் பெரியவர் திரும்பிப் போகிறார். படம் முடிந்துவிடுகிறது.

பூர்ணமை நாளன்று ஒரு மரணம், பிரசந்ந விதனகேயின் புதிய படம் அல்ல. “ வித் யு வித் அவுட் யு” வருவதற்கு 10 ஆண்டு களுக்கு முன் வந்த படம். 1997 இல் இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிகா குமாரதுங்க இருந்தபோது எடுக்கப்பட்டு அவரது அரசால் தடைசெய்யப்பட்ட படம் என இலங்கையின் கலை இலக்கிய விமரிசகர் அ.யேசுராஜாவின்  குறிப்பொன்று சொன்னது. அந்தக் குறிப்பு, படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஈர்ப்பை அதிகமாக்கியது. ராணுவ அதிகாரத்தால் விடுதலை உணர்ச்சியைக் கட்டுப்படுத்திவிட முடியும் என நம்பும் ஒரு அரசை - அரசின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களை- மிகமிக எளிமையான ஒரு சினிமா திக்குமுக்காடச் செய்துவிடும் என்பதற்குச் சாட்சியாக இருந்திருக்கிறது விதனகேயின் இந்தப் படம். இழப்பீடு என்ற பொருள் தரும் சிங்கள மொழித் தலைப்பொன்றையும் இயக்குநர் வைத்திருப்பார் என்றே படம் பார்த்து முடித்த பின் தோன்றியது. 
நடக்கும் யுத்தம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக நடக்கும்  யுத்தம் என்ற உண்மையை மறைத்துப் பயங்கரவாதிகளோடு நடக்கும் யுத்தமாகக் காட்டி, அதில் சேர்ந்து பணியாற்றுவது ஒவ்வொருவரின் கடமை என நம்பச் செய்து வருகிறது என்ற விமரிசனத்தை வைக்கும் விதனகே,இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான வேலை வாய்ப்பு உத்தரவாதமாக இருப்பது ராணுவத்துறை மட்டுமே என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்பதாகப் புரிந்து கொண்டுள்ளது அரசாங்கம். அந்த வாய்ப்பு இல்லை என்று மறுக்க முடியாது ; ஆனால் அதைத் தான் முழுமையாகச் செய்திருக்கிறது படம் என்றும் சொல்ல முடியாது.
எளிய கதையை முழுமையான நம்பகத்தன்மை கொண்டதாக எடுத்ததன் மூலம் அரசாங்கத்தின் மனச்சாட்சியை உலுக்கிப் பார்த்துள்ளார். குறிப்பான காலம், குறிப்பான வெளி, குறிப்பான மனித அடையாளங்கள் என நடப்பியலின் அனைத்துச் சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ள இந்தப் படம் போர், ராணுவம், அதன் வழியாகத் தேசவெறியைத்தூண்டுதல் என்ற நோக்கம் கொண்ட எல்லா அரசாங்கங்களும் பயப்படக்கூடிய ஒரு சினிமா என்று புரிந்தது. கார்கில் போருக்குப் பின்னால் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள் இந்த விளையாட்டை- கொண்டாட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன என்ற பின்னணியில் விதனகேயின் சினிமா இந்தியாவுக்கும், உலகத்துக்குமான சினிமாவாக ஆகிவிட்டதை உணர முடிகிறது.

 தமிழில் மாற்றுச் சினிமா பற்றி யோசிக்கும் பலரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய படம். பார்த்துவிட்டு ஈழத்தமிழர் போராட்டம் அல்லது மும்பைக் கலவரம் அல்லது முல்லைப் பெரியாறு எனப் பேரடையாளங்களின் காட்சிகளாகப் படம் எடுக்க வேண்டும் என நினைத்துக் கொள்ளவேண்டியதில்லை. நமது தெருவில், நமது கிராமத்தில், நமது வீட்டிற்குள், நாம் பணிபுரியும் இடத்தில் நிகழும் நுண்ணரசியலைப் பேசுவதிலிருந்து உலக தேச அரசியலுக்கும், சர்வதேச அரசியலுக்கும் நகரும் கருத்தியல் கொண்ட படமாக மாற்ற முடியும் என்பதைப் புரிந்து கொண்டால் போதும்.
நன்றி: உயிர்மை. ஆகஸ்டு, 2014


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை