: 46

கண்டிக்கவே முடியாத நிலையில் தண்டனை

இதனை எதிர்பார்த்துத் தமிழகம் இருந்திருக்கவில்லை.குற்ற நிரூபணம், அதற்கான தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, இத்துடன்  அபராதத் தொகையாக ரூ 100 கோடி என்பதை நினைவுக்குள்கொண்டுவரவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் மனநிலையை அ இ அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள்தான் வெளிப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் நிச்சயம் தவறான நினைப்பு என்றே சொல்வேன். தமிழ்ப்பொதுமனமே அப்படித்தான் நினைக்கிறது. இப்படிச் சொன்னால் அந்தப் பொதுமனம் எங்கே இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.


18 ஆண்டுகளாக நடந்த ஒரு வழக்கில் இப்படியொரு தீர்ப்பு வரும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் எதிர்பார்க்கவில்லை,  என்பதைவிடக் குற்றஞ் சாட்டியவர்களாவது எதிர்பார்த்திருப்பார்களா? தமிழ்நாட்டின் அரசாங்கமும், அதனை நடத்தும் ஆளும் கட்சியினரும் மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளும் கூட எதிர்பார்க்கவில்லை என்பதையே இரண்டு நாட்களாகச் செய்தி அலைவரிசைகளில்  வாசிக்கப்பெற்ற செய்திகளும், முன் வைக்கப்பெற்ற விவாதங்களும் காட்டப்படும் காட்சிகளும் சொல்கின்றன; விளக்குகின்றன. பெங்களூரை நோக்கிய ஒட்டுமொத்தப்பயணங்கள், கொண்டாட்ட மனநிலைக் காத்திருப்புகள், எதிர்கொள்ள முடியாத சோகத்திரட்சி, கண்ணீர்க்காட்சிகள்,  கட்டுப்பாடற்ற கலவரங்கள், தொடர்பற்ற வசைபாடல்கள்என நீளும் நிகழ்வுகள்  சொல்வன சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தான்.
 
அரசு, ஊடகங்கள், கருத்துரைப்போர், ஊடகக்காரர்கள் போன்றோர் முழுமையாக நம்பிக்கையால் முடிவெடுக்காமல் கொஞ்சம் அறிவால் முடிவெடுப்பவர்கள்; அவர்களே எதிர்பார்க்கவில்லையென்றால், முழுமையாக நம்பிக்கைகளாலும், நடைமுறைகளாலும் முடிவெடுக்கும் வெகுமக்களின் பொதுமனம், அவரைத் தெய்வமாகவும் தாயாகவும் நம்பிய தொண்டர்களும் இப்படியொரு தீர்ப்பை நிச்சயம் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

எதிர்பார்க்காத தீர்ப்பு வந்தபோது உண்டான தவிப்பே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அலைவுற்று  எதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. ‘குற்றவாளி தண்டிக்கப் பெற்றிருக்கிறார்  என்பதற்கு மாறாக, எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டதில்லையே;இவர் மட்டும் ஏன் தண்டிக்கப்பட  வேண்டும்’ என்ற கேள்வியாக மாறிக் கொண்டிருக்கிறது.  தனது ஆழ்மன நம்பிக்கைக்காக எந்தப் புனிதத்தையும் தனது முந்திய நிலைபாடுகளையும் காவுகொடுக்கத் தயங்காத தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளரின் கூற்று உண்மையாகவே நிறைவேற வாய்ப்பிருக்கிறது. இத்தண்டனை அனுதாப அலையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அவர் பொதுமனத்தின் குரலாகவே ஒலிக்கிறார். அப்படியானால் பொதுமனத்தை யார்  உருவாக்குகிறார்கள்?

தொடர்ச்சியாக நடக்கின்ற- நடக்கப்போகும்- நிகழ்வுகள் அனுதாபத்தைத் தூண்டும் நிகழ்வுகளாகவே அமைய இருக்கின்றன. திட்டமிட்ட நல்திறக் கட்டமைப்புக் காட்சிகள் உருவாக்கப்பெற்று மொழியப்படுகின்றன. எல்லாவற்றையும் இரட்டை எதிர்வாகவே நிறுத்திப் பார்க்கப்பழக்கப் பட்டிருக்கும் பொதுமனம் மிகச் சுலபமாக எண்கள், கோடிகள், நபர்கள், சொத்துகள், பட்டியல்கள் என எல்லாவற்றையும் நிரல்படுத்திப்பார்த்தே எடைபோடத் தொடங்கியுள்ளது.

அரிசி, பருப்பு, எண்ணெய் என நியாயவிலையில் வழங்குவதற்கு அனுப்பப் பெற்ற பொருட்களைப் பதுக்கியவர்கள் - கள்ளச்சந்தையில் கூடுதல் விலையில் விற்றவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதை நேரில் பார்த்தவர்களிடம் தங்கியிருக்கிறது பொதுமனம். கடன் வாங்கிக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட பக்கத்துவீட்டுக்காரர் ஐந்தாண்டுக்குப் பின் காரில் பவனி வர உதவியக் காரணிகளைக் கண்டவர்களுக்குள் இருக்கிறது அந்தப் பொதுமனம். பத்திரப்பதிவு அலுவலகம், சாலைப்போக்குவரத்து அனுமதி அலுவலகம், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், வருவாய்ப்பிரிவு ஊழியர்கள், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் என்றில்லாமல் நகராட்சியின் சைக்கிள் நிறுத்துமிடம், கக்கூஸ் காண்ட்ராக்டுகள், டாஸ்மாக்கில் பாட்டில் எடுத்துக் கொடுப்பவர்கள்என எல்லாரும் லட்சத்திலும், சில ஆண்டுகளில் கோடிகளிலும் புரள உதவும் பொதுத்துறை நிறுவனங்களின் சட்டதிட்டங்கள், விதிகளின் தளர்வில் உருவாவது அந்தப் பொதுமனம். அப்பொதுமனம் கண்டனங்களைக்கூட நினைத்துப் பார்த்த தில்லை. அப்புறம் எப்படி தண்டனையை ஏற்றுக் கொள்ளும்?

இந்தியா என்னும் ஜனநாயக நாட்டின் அரசு மற்றும் பொதுத் துறைகள் இயங்கும் விதத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதற்குள்ளிருந்து கவனிக்கிறவன் என்ற நிலையில் என்னால் இந்தத் திசைமாற்றத்தைச் சுலபமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் நிலையை உயர்வாகச் சொல்ல வேண்டுமென்றால்  ‘கடவுள் நிலை’ என்று சொல்லலாம். தாழ்வாகச் சொல்லவேண்டுமென்றால்  ‘அடிமைநிலை’ என்று சொல்லலாம். ‘உயர்ச்சி- தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்று நினைத்தால்  ‘பித்துநிலை’ என்று கருதிக் கொள்ளலாம்.இப்போது பித்து நிலையை நோக்கிய பயணத்தையே பொதுமனம் அவாவிக் கொண்டிருக்கிறது.

தான் பொறுப்பேற்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் பொறுப்பு அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரிடம் தான் இருப்பதாக நம்பிக்கொள்ள வேண்டுமேயொழிய செயல்படக்கூடாது. இதுதான் கடந்த கால் நூற்றாண்டு நிலை. (எனது நேரடிஅனுபவக்காலம் இது) பல்வேறு திசைகளிலிருந்து வரும் உத்தரவுகளுக்குப் பணிந்து முடிவுகளை எடுக்க வேண்டும். உத்தரவிடும் இடத்தில் இருப்பது யார் என்பதே பல நேரங்களில் அவருக்குத்தெரியாது. அப்போது தான் தங்களின் நிலையைக் கடவுள் மனம் கொண்ட நிலையாகக் கருதிக்கொள்கிறார்கள்.அதனால் பாவிகளை ரட்சிப்பது அல்லது மன்னிப்பதை மட்டுமே முழுநேரப் பணியாகக் கொள்கிறார்கள். அதற்காக அவர்களின் உண்டியல்கள் அகண்ட வாய்களோடு பூட்டப்பட்டுள்ளன. எப்போதாவது கண்டனங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், அடிமை நிலையை நோக்கிப் பின்னகர நேரலாம்.அப்படி நகரும்போது உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நெருக்கடிகளால் பிதுங்கிப் போய்விடுவார்கள்.

கட்சியதிகாரம், தொழிற்சங்க அதிகாரம், நட்பதிகாரம், எதிர்ப்பதிகாரம், மிரட்டலதிகாரம் எனப் பல்வேறு அதிகாரங்களின் ஆவேசத்தையும் மௌனத்தையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.அதனால் தண்டனை களைக் கூட எச்சரிக்கை என்பதாக மடைமாற்றியே வழங்க முடியும். உறுதி செய்யப்பெற்ற குற்றங்களுக்கே எச்சரிக்கை மட்டுமே சாத்தியம் என்று நிர்வாக நடைமுறை அமுலில் இருக்கும் ஒருநாட்டில் தண்டனை வழங்கல் என்பதை - அதுவும் எல்லாச் சட்ட நியதிகளையும் உருவாக்கும் இடத்தில் இருப்பதாக நம்பப்பட்ட ஒருவருக்குத் தண்டனை வழங்குவதை எப்படிப் பொதுமனம் ஏற்கும்? ஏற்கவில்லை என்பதைத் தான் இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது; காட்டிக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நிறுவனத்துக்குமான தனிவிதிகளோடு மாதச் சம்பளக் கணக்கில் கட்டுப்பாடுகளை உறுதி செய்யும் அரசுத்துறை நிறுவனங்களிலேயே தண்டனைகளைக் கண்டனங்களாகத்தர முடியாது என்ற நிலை நிலவும் போது, எச்சரிக்கை மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்தநேரத்தில் தண்டனை உறுதி செய்யப்பெற்றால் பொது மனம் என்ன செய்யும்? இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அப்பொதுமனம் தண்டிக்கும் அமைப்புக்கே எச்சரிக்கைகளை  விடுக்கும்.அதை நோக்கி நகர்வுகள் நடக்கின்றன.

இந்த வழக்கும், அதன் விசாரணை முறையும், வழங்கப்பெற்ற தண்டனையும் தண்டிக்கும் அதிகாரம் கொண்டதாக நம்பப்பெற்ற நீதியமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் பொதுமனத்திடம் மண்டியிடப் போகிறது. பொதுமனத்தின் வெளிப்பாடுகள் பொதுத் தேர்தல்களாக வடிவமைக்கப் பெற்றுள்ள இந்த தேசத்தில் ஜனநாயகம் புதிய வடிவில் அமுலில் இருக்கிறது எனப் புரிந்துகொள்கிறேன்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை